திருக்குறள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருக்குறள்
Thirukkural Madras 1812.JPG
1812 இல் முதன்முதலாக திருக்குறள் அச்சிடப்பட்டது.
நூலாசிரியர்திருவள்ளுவர்
உண்மையான தலைப்புமுப்பால்
செயற்பாட்டிலுள்ள தலைப்புதிருக்குறள்
நாடுதமிழ் நாடு, இந்தியா
மொழிதமிழ்
தொடர்பதினெண் கீழ்க்கணக்கு
பொருண்மைநன்னெறி, அறம்
வகைசெய்யுள்
வெளியிடப்பட்டதுசங்க காலத்தில் எழுத்தோலை (சுமார் கி.மு. 3 – 1 நூற்றாண்டுகள்)
வெளியிடப்பட்ட நாள்
1812 (முதலாவது அச்சிடப்பட்டது)
ஆங்கில வெளியீடு
1794
உரைதிருக்குறள் விக்கிமூலத்தில்
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
எட்டுத்தொகை பத்துப்பாட்டு
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

திருக்குறள், சுருக்கமாக குறள், ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுட்களைக் கொண்டது.[1] இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் (அல்லது காமம்) ஆகிய மூன்று புத்தகங்ளை அல்லது தொகுப்புக்களைக் கொண்டது.[2][3][4] இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. அறநெறி மற்றும் நெறிமுறைகள் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், பொதுத்தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கு பெயர் பெற்றது.[5] இதனை இயற்றியவர் பாரம்பரியமாக திருவள்ளுவர் என்று கருதப்படுகிறார். இந்நூலின் காலம் கி.மு. 300 முதல் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரை பலவாறு கணிக்கப்படுகிறது. பாரம்பரியயமாக இந்நூல் கடைச்சங்கத்தின் கடைசிப் படைப்பாகக் கருதப்பட்டாலும் மொழியியல் பகுப்பாய்வுகள் இந்நூல் கி.பி. 450 முதல் 500 வரையிலான கடைச்சங்க காலத்திற்குப் பிறகு இயற்றப்பட்டதாகக் குறிக்கின்றன.[6]

"உலகப்பொதுமறை", "பொய்யாமொழி", "வாயுறைவாழ்த்து", "முப்பால்", "உத்தரவேதம்", "தெய்வநூல்" எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.[7][8] இன்னா செய்யாமை மற்றும் கொல்லாமை ஆகிய அறங்களை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட இந்நூல், தனிநபர் அடிப்படை நல்லொழுக்கங்களாக அகிம்சை மற்றும் சாத்வீக சைவத்தை வலியுறுத்துகிறது.[9][a] இவற்றோடு வாய்மை, கருணை, அன்பு, பொறுமை, சுயகட்டுப்பாடு, நன்றியுணர்வு, கடமை, சான்றாண்மை, ஈகை, விருந்தோம்பல், இல்வாழ்க்கை நலம், மது உள்ளிட்ட போதைப்பொருட்களைத் தவிர்த்தல், கூடாஒழுக்கம் முதலிய அனைத்து தனிநபர் ஒழுக்கங்களையும் போதித்துக்[10] கூடுதலாக ஆட்சியாளர் மற்றும் அமைச்சர்களின் ஒழுக்கங்கள், சமூகநீதி, அரண், போர், கொடியோருக்கு தண்டனை, கல்வி, உழவு போன்ற பலவிதமான அரசியல் மற்றும் சமூகத் தலைப்புகளை உள்ளடக்கியது.[11][12][13] மேலும் நட்பு, காதல், தாம்பத்தியம் மற்றும் அகவாழ்க்கைப் பற்றிய அதிகாரங்களும் இதில் அடங்கும்.[10][14]

இயற்றப்பட்ட காலத்திலிருந்து குறள் அற, சமூக, அரசியல், பொருளாதார, மத, தத்துவ மற்றும் ஆன்மீகத் துறைகளைச் சார்ந்த அறிஞர்களாலும் தலைவர்களாலும் பரவலாகப் போற்றப்பட்டு வந்துள்ளது.[15] இவர்களில் இளங்கோவடிகள், கம்பர், லியோ டால்ஸ்டாய், மகாத்மா காந்தி, ஆல்பர்ட் சுவைட்சர், வீரமாமுனிவர், காரல் கிரவுல், ஜி. யு. போப், அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி மற்றும் யூ ஹ்சி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் அயல் நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூல் உலகின் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட பண்டைய படைப்புகளில் ஒன்றாகும். 1812 ஆம் ஆண்டு முதன்முறையாக அச்சுக்கு வந்ததிலிருந்து இடையறாது அச்சில் உள்ள நூலாகக் குறள் திகழ்கிறது.[16] திருக்குறள் ஒரு தலைசிறந்த படைப்பாகவும் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான நூல்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.[17] பண்டைய காலத்திலிருந்து தமிழக மக்களாலும் அரசாலும் பயபக்தியுடன் போற்றிப் பாதுகாத்து வரப்படும் நூலாகக் குறள் திகழ்கிறது.[18]

பெயர்க்காரணம்[தொகு]

திருக்குறள் என்ற சொல் "திரு" மற்றும் "குறள்" என்ற இரண்டு தனிப்பட்ட சொற்களாலான ஒரு கூட்டுச் சொல் ஆகும். "திரு" என்பது தமிழில் மரியாதையைக் குறிக்கும் ஒரு சொல். இது இந்திய அளவில் பொதுவான "புனித, புனிதமான, சிறந்த, கவுரவமான, மற்றும் அழகான" என்று பொருள்படும் வடமொழிச் சொல்லான "ஸ்ரீ" என்ற சொல்லுக்கு ஒத்த தமிழ்ச் சொல்லாகும்.[2] "திரு" என்ற சொல்லுக்கு 19 வெவ்வேறு பொருட்கள் உண்டு.[19] குறள் என்றால் "குறுகிய, சுருக்கமான, சுருக்கப்பட்ட" என்று பொருள்.[2] தொல்காப்பியம் கூறும் இரு பாவகைகளான குறுவெண்பாட்டு மற்றும் நெடுவெண்பாட்டு ஆகியவற்றில் குறுவெண்பாட்டுதான் சுறுங்கிக் "குறள் பாட்டு" என்றாகி பின்னர் "குறள்" என்றானது. அஃதாவது "குறுகிய செய்யுள்" என்பதே "குறள்".[20] இப்பாடல்கள் அனைத்துமே, குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய தமிழின் முதல் நூலும், ஒரே பழைய நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால், "குறள்" என்றும் அதன் உயர்வு கருதி "திரு" என்ற அடைமொழியுடன் "திருக்குறள்" என்றும் பெயர் பெறுகிறது. மிரான் வின்சுலோவின் கூற்றுப்படி, ஒரு இலக்கியச் சொல்லாகக் "குறள்" என்பது ஈரடி கொண்ட, முதலடியில் நான்கு சீர்களும் இரண்டாமடியில் மூன்று சீர்களுமுடைய ஒரு பாவகையைக் குறிக்கிறது.[21] சுறுங்கக் கூறின், திருக்குறள் என்பது "தெய்வீக ஈரடிப்பாக்கள்" என்று பொருட்படும்.[2]

எதுவித்திலும், ”குறள்” என்ற தமிழ்ச் சொல்லின் பொருள்கள் எவை என்பதை இன்றுவரை தமிழ் வித்தகர்கள் அறியவில்லை. இதற்குக் காரணம், முன்னைய, இன்றைய தமிழ் வித்தகர்கள் தொல்காப்பியன் உரியிலில் குறிப்பிட்ட ”மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” எனக் கூறிய சூத்திரத்தையும், அதற்கு நச்சினார்க்கினியர், சேனாவரையர் எழுதியிருந்த உரைகளையும் சரியாக விளங்கி, ஒரு தமிழ்ச் சொல் எப்படிப் பொருள் உணர்த்துகிறது என்பதைச் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை.

பிற பெயர்கள்[தொகு]

தமிழ்க் கலாச்சாரத்தில் மிகவும் மதிக்கப்படும் ஒரு நூல் திருக்குறள். இவ்வுண்மை இந்நூலின் பன்னிரு பாரம்பரியப் பெயர்களான "திருக்குறள்" (புனிதமான குறள்), "உத்தரவேதம்" (இறுதி வேதம்), "திருவள்ளுவர்" (ஆசிரியரின் பெயர்), "பொய்யாமொழி" (பொய்க்காத சொற்கள்), "வாயுறை வாழ்த்து" (சத்தியமான பாராட்டு), "தெய்வநூல்" (தெய்வீகப் புத்தகம்), "வள்ளுவமாலை" (ஆசிரியர் கோர்த்த மாலை), "முப்பால்" (மூன்று பாதை), "தமிழ்மறை" (தமிழ் வேதம்), "தமிழ்மனு நூல்" (தமிழ் நீதிநூல்), "திருவள்ளுவப் பயன்" (ஆசிரியரால் விளைந்த பயன்), மற்றும் "பொதுமறை" (பொதுவான வேதம்), ஆகியவற்றால் பிரதிபலிக்கப்படுகிறது.[22] குறளானது, ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும், பொருந்தும் வகையில் அமைந்தமையால், இது வான்மறை என்றும் உலகப் பொதுமறை என்றும் அழைக்கப்படுகிறது.

இலக்கிய மரபில் திருக்குறள் சங்க நூல்கள் வாரிசையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக தொகுக்கப்படுகிறது.

காலம்[தொகு]

இயற்றப்பட்ட காலம், இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல், ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில், ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப்படுகின்றது. இதன் அடிப்படையில், "திருவள்ளுவர் ஆண்டு" என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.[23][c]

நூலாசிாியா்[தொகு]

எதுவிதத்திலும், திருக்குறளை இயற்றியவர் பற்றியும், அது என்ன நூல் என்பது பற்றியும், ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் நல்வழி என்பதன் இறுதிப்பாட்டுப் பின்வருமாறு கூறுகிறது:

தேவர் குறளும் திரு நான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர்.

இதில் 'தேவர் குறள்' எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், குறள், திருநான்மறை, ஏனையவைகளும் 'ஒரு வாசகம்' எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், தமிழ் வித்தகர்கள் தெளிவான விளக்கத்தைக் கொடுக்காத நிலை தொடர்கிறது.

திருநான்மறை - நான்கு வேதங்கள்; மூவர் தமிழ் - அப்பர், சம்பந்தர், சுந்தரர் இயற்றியவை; முனிமொழி - அகத்தியர் அருளிய அகத்தியம்; திருமூலர் அருளிய திருமந்திரம்; இவை அனைத்தும், சமூக நலன் கருத்துக்களை உணர்த்துவன.

திருக்குறள் நூலானது, திருவள்ளுவரின் தற்சிந்தனை அடிப்படையில் தமிழ் மொழியில் இயற்றப்பட்டது . மேலும், திருக்குறளில் கூறப்பட்டிருப்பவை, பாரதத்தின் பல்வேறு சமயங்கள் வலியுறுத்துபவையுடன் ஒப்பிடப்பட்டு, அது பல்வேறு சமயங்களுடனும் பொருந்துவதாகப் பல்வேறு சமயத்தாராலும் கருதப்பட்டு வருகிறது.

உள்ளடக்கம்[தொகு]

திருக்குறள் 133 அதிகாரங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதிகாரத்திற்குப் பத்து குறட்பாக்கள் வீதம் மொத்தம் 1,330 குறட்பாக்களைக் கொண்டது.[24][d] அனைத்து பாக்களும் குறள் வெண்பா வகையில் அமைக்கப்பட்டதாகும். மேலும் ஒவ்வொரு அதிகாரத்தின் பத்துப் பாக்களும் அவ்வதிகாரத்தின் கருப்பொருளாக விளங்கும் அறநெறியினை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. இந்நூல் மூன்று பகுதிகளாக அல்லது "பால்களாகப்" பகுக்கப்பட்டுள்ளது:[24][25]

 • முதற் பால்—அறம்: ஒருவர் தன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய அறங்களைப் பற்றியும் யோக தத்துவத்தைப் பற்றியும் கூறுவது (அதிகாரங்கள் 1–38)
 • இரண்டாம் பால்—பொருள்: ஒருவர் தன் சமூக வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய அறங்களை, அதாவது சமூகம், பொருளாதாரம், அரசியல், மற்றும் நிர்வாகம் ஆகிய விழுமியங்களைப் பற்றிக் கூறுவது (அதிகாரங்கள் 39–108)
 • மூன்றாம் பால்—காமம்/இன்பம்: ஒருவர் தன் அகவாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய அறங்களைப் பற்றிக் கூறுவது (அதிகாரங்கள் 109–133)

அறத்துப்பாலில் 380 பாக்களும், பொருட்பாலில் 700 பாக்களும், காமம் அல்லது இன்பத்துப்பாலில் 250 பாக்களும் உள்ளன. ஒவ்வொரு பா அல்லது குறளும் சரியாக ஏழு சொற்களைக் கொண்டது. இச்சொற்கள் சீர்கள் என அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு குறளும் முதல் வரியில் நான்கு சீர்களும் இரண்டாவது வரியில் மூன்று சீர்களும் பெற்றிருக்கும். ஒரு சீர் என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் சொற்களின் கூட்டுச்சொல். எடுத்துக்காட்டாக, "திருக்குறள்" என்ற சொல் "திரு" மற்றும் "குறள்" என்ற இரண்டு சொற்களை இணைப்பதன் மூலம் உருவாகும் ஒரு சீராகும்.[24] திருக்குறளை மொத்தம் 9310 சீர்கள் அல்லது 14000 சொற்களைக் கொண்டு வள்ளுவர் பாடியுள்ளார்.

இந்நூலிலுள்ள 1,330 குறள்களில் முதல் 40 குறள்கள் கடவுள், மழை, சான்றோரது பெருமை மற்றும் அறத்தின் பெருமை ஆகியவற்றையும், அடுத்த 340 குறள்கள் அன்றாட தனிமனித அடிப்படை நல்லொழுக்க அறங்களைப் பற்றியும், அடுத்த 250 குறள்கள் ஆட்சியாளரின் ஒழுக்கங்கள் குறித்த அறங்களைப் பற்றியும்; அடுத்த 100 குறள்கள் அமைச்சர்களின் அறங்களைப் பற்றியும், அடுத்த 220 குறள்கள் நிர்வாக அறங்களைப் பற்றியும், அடுத்த 130 குறள்கள் நேர்மறை மற்றும் எதிர்மறையான சமூக ஒழுக்கங்கள் குறித்த அறங்களைப் பற்றியும், கடைசி 250 குறள்கள் இன்ப வாழ்வு குறித்த அறங்களைப் பற்றியும் பேசுகின்றன.[14]

குறளின் பகுப்பு முறை தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகிய நான்கு வாழ்வியல் நோக்கங்களை உள்ளடக்கிய பண்டைய இந்திய தத்துவமான "புருஷார்த்தத் தத்துவத்தின்" முதல் மூன்றினை முறையே அறம், பொருள், இன்பம் எனப் பிரதிபலிப்பதாக உள்ளது.[2][26][27][28] நான்காவது நோக்கமான மோட்சம் குறளில் வெளிப்படையாகக் கூறப்படாமல் அறத்துப்பாலின் கடைசி ஐந்து அதிகாரங்களில் உள்ளார்ந்து வைக்கப்பட்டுள்ளது.[29][g] அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் கூறுகள் தமிழ் இலக்கிய மரபின் அகம், புறம் என இருவகைகளின் பாற்படும் என்பது தொல்காப்பியத்தின் கூற்று.[30] ஷர்மாவின் கூற்றுப்படி, தர்மம் அல்லது அறம் என்பது ஒரு முழுமையான வாழ்க்கைக்குத் தேவையான நெறிமுறைகளையும், அர்த்தம் அல்லது பொருள் என்பது அறத்தால் வழிநடத்தப்பட்ட முறையில் பெறப்படும் செல்வத்தையும், காமம் அல்லது இன்பம் என்பது அறத்தின் வழிநடத்தலால் நிறைவேற்றப்படும் ஆசைகளையும் குறிக்கின்றன.[31] அருணாதேவியின் கூற்றுப்படி பொருளும் இன்பமும் நாடப்பட வேண்டியவைதான் என்றாலும் இவை இரண்டும் அறத்தின் வாயிலாக மட்டுமே நாடப்படுபவையாக இருத்தல் வேண்டும்.[32] இந்தியத் தத்துவ மரபின்படி, செல்வமும் உடமைகளும் முற்றிலுமாகத் துறக்கப்படவோ அல்லது பற்றற்ற விழிப்புணர்வோடு நாடப்படவோ வேண்டும்.[31] அப்படி நாடப்படும் பட்சத்தில் ஒருவர் அவற்றோடு பிணைப்பின்றி இருக்க வேண்டும்.[31] இன்பமானது உணர்வுப்பூர்வமாகவும் யாருக்கும் தீங்கு விளைவிக்காத வண்ணமும் நாடப்படுதல் வேண்டும்.[31] பொருளிற்கும் இன்பத்திற்கும் இடையில் இயல்பாகவே ஒரு உள்ளார்ந்த பதற்றம் இருப்பதாக இந்திய தத்துவங்கள் கூறுகின்றன.[31] ஆகவே, இந்தப் பதற்றத்தைத் தணிக்கும் பொருட்டு பொருளும் இன்பமும் "பற்றற்ற மனதுடன்" (நிஷ்காம கர்மா) அவற்றிற்கு ஏங்காது அடையப்படுதல் வேண்டும்.[31][h] அறத்துப்பாலின் கடைசி ஐந்து அதிகாரங்கள் இவற்றை வலியுறுத்துவதாக உள்ளன.

திருக்குறள் நூற் பிரிவு அட்டவணை

அறத்துப்பால் (1-38)

1. கடவுள் வாழ்த்து
2. வான் சிறப்பு
3. நீத்தார் பெருமை
4. அறன் வலியுறுத்தல்
5. இல்வாழ்க்கை
6. வாழ்க்கைத் துணைநலம்
7. மக்கட்பேறு
8. அன்புடைமை
9. விருந்தோம்பல்
10. இனியவை கூறல்
11. செய்ந்நன்றி அறிதல்
12. நடுவுநிலைமை
13. அடக்கம் உடைமை
14. ஒழுக்கம் உடைமை
15. பிறன் இல் விழையாமை
16. பொறை உடைமை
17. அழுக்காறாமை
18. வெஃகாமை
19. புறங்கூறாமை
20. பயனில சொல்லாமை
21. தீவினை அச்சம்
22. ஒப்புரவு அறிதல்
23. ஈகை
24. புகழ்
25. அருள் உடைமை
26. புலால் மறுத்தல்
27. தவம்
28. கூடா ஒழுக்கம்
29. கள்ளாமை
30. வாய்மை
31. வெகுளாமை
32. இன்னா செய்யாமை
33. கொல்லாமை
34. நிலையாமை
35. துறவு
36. மெய் உணர்தல்
37. அவா அறுத்தல்
38. ஊழ்

பொருட்பால் (39-108)

39. இறைமாட்சி
40. கல்வி
41. கல்லாமை
42. கேள்வி
43. அறிவுடைமை
44. குற்றம் கடிதல்
45. பெரியாரைத் துணைக்கோடல்
46. சிற்றினம் சேராமை
47. தெரிந்து செயல்வகை
48. வலி அறிதல்
49. காலம் அறிதல்
50. இடன் அறிதல்
51. தெரிந்து தெளிதல்
52. தெரிந்து வினையாடல்
53. சுற்றம் தழால்
54. பொச்சாவாமை
55. செங்கோன்மை
56. கொடுங்கோன்மை
57. வெருவந்த செய்யாமை
58. கண்ணோட்டம்
59. ஒற்றாடல்
60. ஊக்கம் உடைமை
61. மடி இன்மை
62. ஆள்வினை உடைமை
63. இடுக்கண் அழியாமை
64. அமைச்சு
65. சொல்வன்மை
66. வினைத்தூய்மை
67. வினைத்திட்பம்
68. வினை செயல்வகை
69. தூது
70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
71. குறிப்பு அறிதல்
72. அவை அறிதல்
73. அவை அஞ்சாமை
74. நாடு
75. அரண்
76. பொருள் செயல்வகை
77. படைமாட்சி
78. படைச்செருக்கு
79. நட்பு
80. நட்பு ஆராய்தல்
81. பழைமை
82. தீ நட்பு
83. கூடா நட்பு
84. பேதைமை
85. புல்லறிவாண்மை
86. இகல்
87. பகை மாட்சி
88. பகைத்திறம் தெரிதல்
89. உட்பகை
90. பெரியாரைப் பிழையாமை
91. பெண்வழிச் சேறல்
92. வரைவில் மகளிர்
93. கள் உண்ணாமை
94. சூது
95. மருந்து
96. குடிமை
97. மானம்
98. பெருமை
99. சான்றாண்மை
100. பண்புடைமை
101. நன்றியில் செல்வம்
102. நாண் உடைமை
103. குடி செயல்வகை
104. உழவு
105. நல்குரவு
106. இரவு
107. இரவச்சம்
108. கயமை

இன்பத்துப்பால் (109-133)

109. தகையணங்குறுத்தல்
110. குறிப்பறிதல்
111. புணர்ச்சி மகிழ்தல்
112. நலம் புனைந்து உரைத்தல்
113. காதற் சிறப்பு உரைத்தல்
114. நாணுத் துறவு உரைத்தல்
115. அலர் அறிவுறுத்தல்
116. பிரிவாற்றாமை
117. படர் மெலிந்து இரங்கல்
118. கண் விதுப்பு அழிதல்
119. பசப்பு உறு பருவரல்
120. தனிப்படர் மிகுதி
121. நினைந்தவர் புலம்பல்
122. கனவு நிலை உரைத்தல்
123. பொழுது கண்டு இரங்கல்
124. உறுப்பு நலன் அழிதல்
125. நெஞ்சொடு கிளத்தல்
126. நிறை அழிதல்
127. அவர் வயின் விதும்பல்
128. குறிப்பு அறிவுறுத்தல்
129. புணர்ச்சி விதும்பல்
130. நெஞ்சொடு புலத்தல்
131. புலவி
132. புலவி நுணுக்கம்
133. ஊடல் உவகை

நூலின் கட்டமைப்பு[தொகு]

திருக்குறள் ஒரு தனி ஆசிரியரின் படைப்பாகும். இக்கூற்றை நிரூபிக்கும் வகையில் இந்நூலானது “ஒரு நிலையான மொழியமைப்பையும் முறையான கட்டமைப்பையும் சீரான பொருளமைப்பையும் கொண்டுள்ளது” என்று ஸ்வெலெபில் கூறுகிறார்.[33] குறள் பலரால் இயற்றப்பட்ட ஒரு தொகுப்பு நூலல்ல என்றும் அதன் உள்ளடக்கத்தில் எந்த ஒரு பிற்சேர்க்கைகளும் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.[33] இந்நூலினை மூன்று பால்களாகப் பகுத்தது இதன் ஆசிரியரே ஆகும். ஆனால் குறளின் உரைகளில் காணப்படும் துணைப்பிரிவுகளான "இயல்" பாகுபாடுகள் பின்னர் வந்த உரையாசிரியர்களால் செய்யப்பட்டவை.[34][35] குறளுரைகளில் இயல் பாகுபாடுகள் உரைக்கு உரை வேறுபட்டிருப்பதும் அதிகாரங்கள் இயல் விட்டு இயல் மாறி அமைந்துள்ளதுமே இதற்குச் சான்றுகளாகும்.[34][35][36] எடுத்துக்காட்டாக, பரிமேலழகரின் உரையில் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ள இயல் பிரிவுகள் மணக்குடவரின் உரையிலிருந்து பெரிதும் மாறுபடுகிறது:[36]

 • அதிகாரங்கள் 1–4: பாயிரம்
 • அதிகாரங்கள் 5–24: இல்லறவியல்
 • அதிகாரங்கள் 25–38: துறவறவியல்
 • அதிகாரங்கள் 39–63: அரசியல்
 • அதிகாரங்கள் 64–95: அங்கவியல்
 • அதிகாரங்கள் 96–108: ஒழிபியல்
 • அதிகாரங்கள் 109–115: களவியல்
 • அதிகாரங்கள் 116–133: கற்பியல்

இவ்வாறு இயல் பாகுபாடுகள் பிற்காலச் சேர்க்கைகளாகவே அறியப்பட்டாலும், குறட்பாக்கள் அனைத்தும் பலதரப்பட்ட உரைகளுக்கிடையிலும் பிற்சேர்க்கைகள் ஏதுமின்றி அவற்றின் உண்மை வடிவம் மாறாது பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.[33][36] அறத்துப்பாலிலுள்ள அதிகாரங்கள் இல்லறம், துறவறம் என இரு இயல்களாக இடைக்கால உரையாசிரியர்களால் பகுக்கப்பட்டாலும், இவை நூலாசிரியரது பகுப்பன்று என்பதால் அவற்றில் இருக்கும் அனைத்துமே நூலாசிரியரால் இல்லறத்தானுக்கு அல்லது சாமானியனுக்குச் சொல்லப்பட்டவை தான் என்பது புலப்படுகிறது.[37] ஏ. கோபாலகிருட்டிணனின் கூற்றுப்படி, குறளில் உள்ள "துறவறம்" என்பது இல்லற வாழ்க்கையைக் கைவிட்டுத் துறவறம் மேற்கொள்வதைக் குறிப்பதோ அல்லது துறவிகளுக்காகக் கூறப்பட்டவையோ அல்ல. மாறாக, தனிநபர் ஒவ்வொருவரும் தனது அளவற்ற ஆசைகளைக் கைவிடுவதையும் அறநெறி பிறழாது சுயக்கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதையுமே "துறவற" அதிகாரங்கள் கூறுகின்றன.[37][e]

முப்பால்ப் பகுப்பைப் போல் குறள்களை அதிகாரங்களாகத் தொகுத்ததும் நூலாசிரியர் தான். இயல் பகுப்பு மற்றும் அதிகார வைப்புமுறையினை மட்டுமே உரையாசிரியர்கள் மாற்றியுள்ளனர். ஒவ்வொரு அறத்தையும் பத்துக் குறட்பாக்களாகப் பாடி அவற்றின் தொகுப்பினை அதிகாரம் என்று பெயரிட்டாளும் மரபு வள்ளுவரிடம் காணப்படுவதாகவும் ஒவ்வோரதிகாரத்திற்கும் தலைப்பினை அவரே வழங்கியுள்ளார் என்றும் சோ. ந. கந்தசாமி கூறுகிறார்.[38] மேலும் அந்தந்த அதிகாரத்தில் பொதிந்துள்ள குறட்பாக்களில் பயின்றுவரும் தொடரினையே பெரிதும் பேணி அதிகாரத் தலைப்பாக வள்ளுவர் அமைத்துள்ளதாகவும் அவர் உரைக்கிறார்.[38] இதற்கு விதிவிலக்காக ஒவ்வொரு பால்களிலும் ஒரு அதிகாரம் உண்டு: அறத்துப்பாலில் வரும் "கடவுள் வாழ்த்து" அதிகாரமும் (முதல் அதிகாரம்), பொருட்பாலில் வரும் "படைச் செருக்கு" அதிகாரமும் (78ஆம் அதிகாரம்), காமத்துப்பாலில் வரும் "படர்மெலிந்திரங்கல்" அதிகாரமும் (117வது அதிகாரம்) அவற்றில் வரும் குறள்களில் பயின்றுவராத சொல்லை அதிகாரத் தலைப்பாகக் கொண்டுள்ளன.[39] இவ்வாறு முரணாக இருப்பினும் இவையனைத்துமே வள்ளுவரால் சூட்டப்பட்ட பெயர்களேயாம்.[40] குறளின் முதலதிகாரத்தின் தலைப்பு தொல்காப்பிய மரபின் வழியே சூட்டப்பட்டதென்றே கந்தசாமி துணிகிறார்.[40]

ஸ்வெலெபிலின் கூற்றுப்படி குறளானது ஐயத்திற்கிடமின்றி சீரான அமைப்போடும் கவனத்தோடும் இயற்றப்பட்ட ஒரு நூலாகும்.[41] கருத்துக்களில் இடைவெளியோ வெற்றிடமோ இன்றிக் குறட்பாக்கள் ஒவ்வொன்றும் தத்தம் அதிகாரத்தினின்று பிரித்தெடுக்க இயலா வண்ணம் கோர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.[34] ஒவ்வொறு குறட்பாக்களும் அமைவுப் பொருள், மூதுரைப் பொருள் என இரு வகையான பொருட்களைத் தரவல்லது.[34] குறட்பாக்களை அவை பயின்றுவரும் அதிகாரத்திலிருந்து தனியே நீக்கிப் பார்த்தால் அவை தங்களது அமைவுப் பொருளை இழந்து, தங்களுக்கே உரிய மூதுரைப் பொருளை மட்டும் தந்து ஒரு தனிப் பழமொழி போல் ஒலிக்கவல்லவை.[34] தனித்து நிற்கையில் குறட்பாக்கள் ஒவ்வொன்றும் குறுகிய வெண்பாக்களுக்கே உரிய அனைத்து இலக்கணங்களையும் வெவ்வேறு வகைகளில் கொண்ட நன்னெறிப் பாக்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றன.[34] அதிகாரங்களுக்குள் பயின்று வருகையில் குறட்பாக்கள் தங்களது இயல்பான மூதுரைப் பொருளோடு தாங்களிருக்கும் அதிகார அமைப்பின் வழி வரும் அமைவுப் பொருளையும் சேர்த்து உரைத்து நூலாசிரியரின் உள்ளப்பாங்கினை வெளிப்படுத்துவதாய் உள்ளன.[34] இவ்வகையில் குறள்கள் வெறும் நீதிக்கருத்துக்களைக் கூறும் தனிப்பாக்களாக மட்டும் இருந்துவிடாமல் நூல்முழுதும் இழைந்தோடும் அடிப்படை அறத்தின் ஆழ்பொருளை முழுமையாக அகழ்ந்தெடுத்துத் தரும் பாக்களாக உருமாறுகின்றன.[34] இவ்வகையில் நூலின் நடையானது ஒரு முழுமையற்ற மனிதனை அறங்கள் கொண்டு செதுக்கி அவனை உணர்வு, சிந்தனை, சொல், செயல் என அனைத்து அளவிலும் அகவாழ்வில் அறம் பிறழாத நல்ல இல்லறத்தானாகவும் புற வாழ்வில் சிறந்த குடிமகனாகவும் மாற்றுகிறது என்கிறார் ஸ்வெலெபில்.[42]

இலக்கிய அளவில், திருக்குறள் நடைமுறை அறநெறிக் கருத்துக்களைச் செய்யுள் வடிவில் சுறுக்கமாகவும், நேர்த்தியாகவும், தெளிவாகவும், வலுவுடனும் அனைவரும் ஏற்குமாறு தரும் ஒரு நூல். இந்நூல் முழுவதும் வள்ளுவர் செய்யுளின் அழகு, ஓசைநயம், கூறல் முறை போன்றவற்றில் கவனம் செலுத்தாது கூறவந்த அறத்திற்கே முழுமையாக முக்கியத்துவம் தந்திருப்பது நோக்கத்தக்கது.[43]

இயல் பாகுபாடுகள்[தொகு]

திருக்குறள் ஓலைச் சுவடி.

வள்ளுவர் முப்பாலாக இயற்றிய நூலினை உரையாசிரியர்கள் இயல்களாகப் பல்வேறு வகையில் பகுத்துள்ளனர். இதன் விளைவாகக் குறளின் அதிகாரங்களின் வாிசை உரையாசிரியர்களால் பலவாறு மாற்றப்பட்டுள்ளன.[44] அறத்துப்பாலினை பரிமேலழகர் முதலானோர் "பாயிரம்," "இல்லறம்," "துறவறம்" என மூன்று இயல்களாகவும் ஏனையோர் "பாயிரம்," "இல்லறம்," "துறவறம்," "ஊழ்" என நான்கு இயல்களாகவும் பிரித்துள்ளனர்.[45][46] பொருட்பாலினை உரையாசிரியர்கள் மூன்று முதல் ஆறு இயல்களாகப் பிரித்துள்ளனர். பரிமேலழகர் "அரசியல்," "அங்கவியல்," "ஒழிபியல்" என மூன்றாகப் பகுக்கையில் ஏனையோர் ஆறு இயல்கள் வரைப் பகுத்துள்ளனர்.[47][48][49] காமத்துப்பாலினை உரையாசிரியர்கள் இரண்டு முதல் ஐந்து இயல்களாகப் பகுத்துள்ளனர்.[50][45] பரிமேலழகர் "களவியல்," "கற்பியல்" என இரண்டாகவும், காலிங்கர், பரிப்பெருமாள், மோசிகீரனார் முதலானோர் "ஆண்பால் கூற்று," "பெண்பால் கூற்று," "இருபாலர் கூற்று" என மூன்றாகவும், மணக்குடவர் "குறிஞ்சி," "முல்லை," "மருதம்," "நெய்தல்," "பாலை" என ஐந்தாகவும் பகுத்துள்ளனர்.[51] இப்பகுப்புகள் நூலாசிரியரதன்று என்பதால் இவை உரைக்கு உரை பெரிதும் மாறுபட்ட வகையில் அமைந்திருக்கின்றன. இன்றைய அறிஞர்களும் பதிப்பகத்தார்களும் பெரும்பாலும் பரிமேலழகரின் பகுப்பு முறையினைத் தழுவியே உரைகளை வெளியிடுவதால் அதிகார அமைப்பும், இயல் பாகுபாடும், குறள் வரிசைகளும் பரிமேலழகரைத் தழுவியே பெரிதும் பின்பற்றப்படுகிறது.

நூலின் சாரம்[தொகு]

குறள் ஒரு நடைமுறை அறவழி வாழ்வுக்கான படைப்பாகும்.[52] அது ஒரு மனிதனுக்கு இந்த உலகோடும் அதில் வாழும் பல்லுயிரோடும் உள்ள அறவழித் தொடர்பினைக் கூறும் நோக்குடன் எழுதப்பட்ட ஒரு நூல்.[53] ஒரு சிறந்த செய்யுள் நூலாகவோ படைப்பிலக்கியமாகவோ திகழும் நோக்கோடு இந்நூல் எழுதப்படவில்லை என்றும் இந்நூலில் கவிரசம் ததும்பும் இடங்கள் ஏதேனும் உண்டென்றால் அவற்றைக் காமத்துப்பாலில் மட்டுமே பார்க்கமுடியும் என்றும் ஸ்வெலெபில் கூறுகிறார்.[54] இவ்வாறு நூலின் அழகையோ பாநயத்தையோ விடுத்து அறங்களை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டும் வழக்கிலிருந்தே வள்ளுவரின் நோக்கம் ஒரு சிறந்த அறநூலினைப் படைப்பது தானேயன்றி சிறந்த இலக்கியப் படைப்பினை நல்குவதல்ல என்பது புலப்படுகிறது.[54]

தமிழ் மரபிற்கிணங்க கடவுள் வாழ்த்தைக் கொண்டு நூலினைத் துவங்கும் வள்ளுவர், அதன் பின்னர் அனைத்துயிருக்கும் அமிழ்தமாய்த் திகழும் மழையின் பெருமையையும் சான்றாண்மையும் அறமும் பிறழாத சான்றோரது பெருமையையும் கூறிவிட்டு[55][56] அதன் பின் நூலின் மையக் கருத்தான அறத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பின்னரே தனிமனித அறங்களை ஒன்றன்பின் ஒன்றாக போதிக்கத் துவங்குகிறார்.[55][57] மானிட சமூகத்தின் மிக அடிப்படைத் தொழிலாக உழவினை பொருட்பாலில் வலியுறுத்தும் வள்ளுவர், இதன் காரணமாகவே உழவிற்கு அச்சாணியாகத் திகழும் மழையினை கடவுளுக்கு அடுத்தபடியாக வைத்துத் தொழுவது இங்கு நோக்கத்தக்க ஒன்றாகும்.[55][58]

முழுவதும் அறத்தை மையமாக வைத்தே இயற்றப்பட்டதால்[59][60] திருக்குறள் "அறம்" என்ற பெயராலும் வழங்கப்படுகிறது.[38][61][62][63] தனது காலத்தில் காணப்பட்ட மற்ற நூல்கள் இன்னவர்க்கு இன்ன அறம் என்று அறத்தைப் பிரித்துக் கூற முற்படுகையில், வள்ளுவர் மட்டும் "அறம் அனைவருக்கும் பொது" என்று மாறுபாடின்றிக் கூறுகிறார்.[64] அவரைப் பொறுத்தவரை பல்லக்கினைச் சுமப்பவனாயினும் அதில் அமர்ந்து பயணிப்பவனாயினும் இருவருக்கும் அறம் ஒன்றே.[65][64] பலனுக்காக அன்றி அறம் செய்யும் நோக்குடன் மட்டுமே அறம் செய்தல் வேண்டும் என்று தனது நூல் முழுவதும் வள்ளுவர் வலியுறுத்துவதாக சுவைட்சர் கூறுகிறார்.[66] இந்த நோக்குடனேயே குறளானது அடிப்படை அறங்களை முதற்பாலிலும், சமூக அரசியல் அறங்களை இரண்டாம் பாலிலும், அக உணர்வுகளைக் கவிதைகளாக மூன்றாம் பாலிலும் கொண்டு திகழ்கிறது.[67][68] அளவில் முதற்பாலைவிட இரு மடங்காகவும், மூன்றாமதை விட மும்மடங்காகவும் இயற்றப்பட்டுள்ள இந்நூலின் இரண்டாம் பாலானது இராஜதந்திரங்களை உரைக்கும் சமயங்களிலும் சற்றும் அறம் பிறழாது அவற்றை உரைப்பது அறத்திற்கு இந்நூலாசிரியர் தரும் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுவதாக உள்ளது.[69][70]

"குறள் கொல்லாமையையும் இன்னா செய்யாமையையும் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறது" என்று சுவைட்சர் தனது நூலில் குறிப்பிடுகிறார்.[66] குறள் கூறும் தனிநபர் அடிப்படை அறங்களில் மிக முக்கியமானவையாக கொல்லாமையும் வாய்மையும் திகழ்கின்றன.[71][72][73] வள்ளுவர் எதிர்க்கும் ஒழுக்கக்கேடுகளில் செய்நன்றி மறத்தலும் புலால் உண்ணுதலும் முதன்மையானவை ஆகும்.[72][74][75] பி. எஸ். சுந்தரம் தனது நூலின் அறிமுகப் பகுதியில் "மற்ற மறங்களிலிருந்து தப்பித்தாலும் 'நன்றி மறந்தல்' என்ற மறத்திலிருந்து யாரும் தப்பிவிட முடியாது" என்றும், "'பிற விலங்கின் ஊனை உண்டு தனது ஊனை வளர்க்க ஒரு மனிதனுக்கு எப்படி மனம் வரும்?' என்பதே வள்ளுவரது வினா" என்றும் விளக்குகிறார்.[74] தலைவன்–தலைவிக்கு இடையே காணப்படும் அகப்பொருளைக் கூறும் காமத்துப்பாலில் கூட வள்ளுவரது அறம் இழைந்தோடுவது மிகவும் தெய்வீகத் தன்மை வாய்ந்தது என்றும் இதுபோன்ற தன்மையே குறளை மற்ற அறநூல்களிலிருந்து வேறுபடுத்துகிறது என்றும் நல்லசாமி பிள்ளை கருதுகிறார்.[76] அறத்துப்பாலில் "பிறன்மனை நோக்காமை" என்ற அறத்தையுரைத்த வள்ளுவர் காமத்துப்பாலில் ஆசை நாயகிகள் எவரையும் நாடாது "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற மரபின் வழி நின்று தலைவியை மட்டும் நாடும் ஒரு தலைவனைச் சித்தரிப்பதன் வாயிலாக "காமத்துப்பாலைப் போன்ற கவிச்சுதந்திரம் மிக்க இடங்களில் கூட வள்ளுவரது அறம் தொய்வடையாமல் ஒலிப்பதே அவரது அறச்சிந்தனைக்கு ஒரு சான்று" என்று கோபாலகிருஷ்ண காந்தி நிறுவுகிறார்.[77] புறவாழ்வின் ஒழுக்கங்களைக் கூறும் பொருட்பாலில் போர்களத்து வெற்றியையும் வீரத்தின் பெருமையையும் போற்றும் நூலாசிரியர் அறத்தையும் நீதியையும் நிலைநாட்டும் பொருட்டு மட்டுமே மரணதண்டனையை விதிக்கும் உரிமையினை ஆட்சியாளனுக்கு வழங்குகிறார்.[9][78][79]

குறள் வெறும் இரகசியம் மிகுந்த தத்துவங்களை போதிக்கும் நூலன்று என்றும் அது உலகியல் சார்ந்த நடைமுறைக் கோட்பாடுகளை நிறுவும் மெய்யியல் நூல் என்றும் கெளசிக் இராய் உரைக்கிறார்.[80] வள்ளுவர் தனது அரசியல் கோட்பாட்டினை படை, குடிமக்கள் (குடி), கையிருப்புப் பொருளாதாரம் (கூழ்), அமைச்சர்கள், நட்புவட்டம், அரண் ஆகிய ஆறு கருக்களைக் கொண்டு நிறுவுகிறார்.[80] பாதுகாப்பு அரண்களின் முக்கியத்துவத்தில் தொடங்கி எதிரியின் அரணைப் பற்றத் தேவையான முன்னேற்பாடுகள் வரை வள்ளுவரது பரிந்துரைகள நீள்கின்றன.[80][81] நாடாளும் ஒருவன் தனது படைகளோடு எப்பொழுதும் போருக்கு ஆயத்த நிலையில் இருக்கவேண்டுமென்பதையும் இடம், காலம், சூழல் ஆகியற்றை ஆராய்ந்து அறம் தாழ்ந்த எதிரி நாட்டை வீழ்த்தவேண்டுமென்பதையும் உரைக்கும் குறள், அறம் தவறாத நாடாயின் அது அரண் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டியது என்பதையும் வலியுறுத்துகிறது. படையின் சிறப்பினைக் கூறும் அதிகாரங்கள் அச்சம் தவிர்த்து அறத்தைக் காக்கும் பொருட்டு உயிர்த்துறக்கவும் முற்படும் படைவீரர்களைக் கொண்ட ஒழுங்குடன் நிறுவப்பட்ட படையே சிறந்த படை என்ற இந்துதர்மப் போராயத்த முறையினைப் பிரதிபலிப்பதாக உள்ளது.[82][83]

தனிமனிதருக்கு ஒழுக்கங்களை போதிக்கும் குறளானது மக்களாட்சியை வலியுறுத்தவில்லை.[84] மாறாக ஆட்சியாளர் ஒருவர் தம் அமைச்சர்களோடு கலந்தாய்ந்து அறவழியில் நீதியினை நிலைநிறுத்தும் வகையில் நாடாள்வதன் மூலக்கூறுகளை உரைக்கிறது.[84] நாடாள்பவர் ஒருவருக்கு சட்டங்களை இயற்றல், செல்வங்களை ஈட்டல், மக்களையும் வளங்களையும் காத்தல், பொருளாதாரத்தை முறையாகப் பங்கீடு செய்தல் ஆகியவையே பிரதானத் தொழில்கள் எனக் குறள் கூறுகிறது என்பதைச் சுட்டுகிறார் கே. வி. நாகராஜன்.[80][84] நீதி தவறாத ஆட்சி, நடுநிலை தவறாத நிலைப்பாடு, குடிகளைக் காக்கும் திறன், நீதியும் தண்டனையையும் தவறாது வழங்கும் மாண்பு முதலியன நாடாள்வோரின் கடமைகளாகும் என்கிறது வள்ளுவம்.[84] இதன் காரணமாகவே அறத்துப்பாலில் ஒவ்வொரு தனிமனிதனும் இடையறாது கடைபிடிக்க வேண்டிய அடிப்படை அறமாகக் கொல்லாமையை முதலில் வலியுறுத்திய பின்னரே பொருட்பாலில் மரணதண்டனை வழங்கும் அதிகாரத்தை நீதியினை நிலைநாட்டும் பொருட்டு மட்டும் அரசனுக்கு அளிக்கிறார் என்பது சிந்திக்கத்தக்கது.[84] கூடவே கொடுங்கோண்மை, வெருவந்த செய்தல், அற்றாரைத் தேறுதல் போன்ற தீய செயல்களை நாடாள்வோர் தவிர்க்காவிடில் அவை அனைவருக்கும் துன்பத்தைத் தந்து செல்வத்தைக் கரைத்து அரசையே கலைத்துவிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்.[85]

நூல் முழுவதும் அறங்களை குறிப்பாகக் கூறாது பொதுப்படையாகவே கூறுவதை வள்ளுவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.[86] ஒவ்வொரு மனிதனுக்கும் அறங்களின் அடிப்படையினை அறியவைப்பதன் வாயிலாக குறிப்பிட்ட சூழ்நிலை ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட தீர்வை நல்காது அனைத்து சூழ்நிலைகளையும் அந்நபரால் கையாள இயலுமாறு பொதுப்படையாகவே போதிக்கிறார்.[86] குறள் முழுதும் வள்ளுவரது இந்த நிலைப்பாட்டைக் காணலாம்.[86] எடுத்துக்காட்டாக, கடவுளை வழிபடுமாறு கூறும் வள்ளுவர், வழிபாட்டு முறையைப் பற்றிக் கூறுவதில்லை; கடவுளை "வாலறிவன்", "அந்தணன்", "ஆதிபகவன்", "எண்குணத்தான்", "தனக்குவமை இல்லாதான்", "பொறிவாயில் ஐந்தவித்தான்", "வேண்டுதல் வேண்டாமை இலான்", "மலர்மிசை ஏகினான்" என்றெல்லாம் அழைக்கும் ஆசிரியர், கடவுளின் பெயரை எங்கும் குறிப்பிடுவதில்லை; அறநூல்களையும் மறைநூல்களையும் குறிப்பிடும் வள்ளுவர், அவற்றை அவற்றின் பெயர் கொண்டு அழைப்பதில்லை; ஈகை வேண்டும் என்று வலியுறுத்தும் அவர், எவற்றையெல்லாம் தானமாகக் கொடுக்கவேண்டும் என்று உரைப்பதில்லை; கற்றல் வேண்டும் என்று கூறும் அவர், எவற்றைக் கற்க வேண்டும் என்று பட்டியலிடுவதில்லை; வரிகளைப் பரிந்துரைக்கும் அவர், மன்னன் மக்களிடமிருந்து எவ்வளவு தொகையை வரிப்பணமாகப் பெறவேண்டும் என்று குறிப்பிடுவதில்லை; அரசன், நிலம், நாடு எனக் குறிக்கும் அவர், எந்த அரசனின் பெயரையோ நாட்டின் பெயரையோ குறிப்பதி்ல்லை.[86] குறள் "உலகப் பொதுமறை" என்றும் வள்ளுவர் "பொதுப்புலவர்" என்றும் அழைக்கப்படுவதற்கு இதுவே காரணமாக அமைகிறது.[86]

உரைகள்[தொகு]

பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் பரிமேலழகர் உரைதான்.

தருமர் மணக்கும் தாமத்தார் நச்சர்

பரிதி பரிமே லழகர்-மல்லர்

பரிப்பெருமாள் காலிங்கர், வள்ளுவர்நூற்கு

எல்லையுரை செய்தா ரிவர்.

என்கிறது பழைய வெண்பா .

தற்காலத்திலும் திருக்குறளுக்கு மு. வரதராசன், மு. கருணாநிதி, சாலமன் பாப்பையா உட்பட பலர் விளக்க உரைகளை எழுதியுள்ளனர். இவற்றுள் சிறப்பாகக் கருதப்படுவது டாக்டர் மு.வரதராசனார் அவர்களது நூலாகும். திருக்குறள் பாடல்களுக்கு அதிகாரம் ஒன்றுக்கு இரண்டு பாடல்கள் அல்லது கலிப்பா ஒன்று என்ற முறையில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் பாவுரை என்னும் நூலும் உள்ளது

உலக மொழிகளில் திருக்குறள்[தொகு]

ஐரோப்பிய மக்களுக்கு லத்தீன் மொழியில் 1730 இல் திருக்குறளை அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர் ஆவார்.[87] திருக்குறள் கருத்துக்களை (Extracts from “Ocean of Wisdom”) 1794ஆம் ஆண்டு முதன் முறையாக ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்தியவர் கின்டெர்ஸ்லே[88][89]

இந்திய மொழிகள்[தொகு]

குஜராத்தி, இந்தி, வங்காள மொழி, கன்னடம், கொங்கணி மொழி, மலையாளம், மராத்தி, மணிப்புரியம், ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமற்கிருதம், சௌராட்டிர மொழி, தெலுங்கு போன்ற 14 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

ஆசிய மொழிகள்[தொகு]

அரபி, பருமிய மொழி, சீனம், விசிய மொழி, இந்தோனேசிய மொழி, யப்பானியம், கொரிய மொழி, மலாய், சிங்களம், உருது போன்ற 10 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மொழிகள்[தொகு]

செக் மொழி, டச்சு, ஆங்கிலம், பின்னிய மொழி, பிரெஞ்சு_மொழி, செருமன், அங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, இலத்தீன், நார்வே மொழி, போலிய மொழி, ரஷிய மொழி, எசுப்பானியம், சுவீடிய மொழி ஆகிய 14 ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[90]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

இதுவரை, திருவள்ளுவர் இயற்றிய "திருக்குறள்" 43 மொழிகளில்: அரபிக் (4 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), பெங்காலி (4 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), பர்மீஸ் (1), சைனீஸ் (2 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), செக் (1), டச் (1), ஆங்கிலம் (66 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), பிஜியன் (2 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), பினிஷ் (1), பிரெஞ்சு (9 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), காரோ (1), ஜெர்மன் (5 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), கிரீக் (1), குஜராத்தி (3 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), இந்தி (11 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), இந்தோனேசியன் (1), இத்தாலியன் (1), ஜப்பானிய (2 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), கன்னடம் (7 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), கொங்கனி (2 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), கொரியன் (2 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), லத்தீன் (2 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), மலாய் (4 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), மலையாளம் (14 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), மணிப்புரி (1), மராத்தி (2 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), நார்வேஜியன் (1), ஒடியா (6 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), பஞ்சாபி (2 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), போலிஷ் (2 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), போர்துகீஷ் (1), ராஜஸ்தானி (1), ரஷ்யன் (3 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), சமஸ்கிருதம் (8 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), சன்டாலி (1), சவுராஷ்ட்ரா (1), சிங்களம் (2 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), ஸ்பானிஷ் (1), ஸ்வீடிஷ் (1), தெலுங்கு (11 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), தாய் (1), உருது (3 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), வாகிரிபோலி (1) மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. [91][92]

திருக்குறள் நூலாராய்வு[தொகு]

நூலின் அமைப்பு முறை[தொகு]

முதலாவது அதிகாரமான ”கடவுள் வாழ்த்து”[தொகு]

இந்த அதிகாரத்தில் போற்றப்பட்டிருப்பவன் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான், இறைவன் என்பவைகளால் விபரிக்கப்பட்டுள்ளான்.

வெவ்வேறு சாரார் இந்த விபரிப்புக்களுள் ஒருசிலவற்றை மாத்திரம் எடுத்து, அவை இன்ன இன்ன கடவுள்களுடன், அல்லது போதனையாளனுடன் ஒன்றுவதால், திருக்குறள் இன்ன சமயம் சார்ந்தது என்ற கருத்தினை முன்வைத்து, திருக்குறளானது ஜைனம், சைவம், வைணவம், வைதீகம் எனச் சகல சமயங்களுடனும் இணைக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஆதிபகவன், வாலறிவன்,இறைவன் என்பவைகளின் பொருள்களைச் சரியாக அறிய, தமிழ் எழுத்து மொழியின் தொல்காப்பியன் குறிப்பிட்ட‘மொழிப் பொருட் காரணம்‘ அறிந்திருக்கப்படவேண்டும் என்ற வாதமும் அச்சாராரரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இச்சாரார் தமிழ் எழுத்து மொழியில், மூலத்தனியொலிகள் ஒவ்வொன்றும் 'தன்மை' (nature) அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு விபரிப்பினைச் செய்கிறது எனவும்; குறிப்பிட்டவொரு ஒழுங்கில் அமைக்கப்பட்ட பல்வேறு மூலத்தனியொலிகளின் இணைவால் உண்டாகும் பூரண விபரிப்பினைச் செய்யும் இணையொலியே ‘சொல்‘ எனவும்; குறிப்பிட்டவொரு பூரண விபரிப்பானது நாம் வாழும் சுற்றத்திலும், பிரபஞ்சத்திலும் என்னனென்ன பொருட்களில் அடையாளங்காணப்படுகிறதோ, அவைகள் எல்லாம் அச்சொல்லின் ‘பொருள்கள்‘ ஆகமுடியும் எனவும்; இவற்றுள் எவையெவைகளைப் பொருள்களாகக் கொள்ளும் ‘மரபு‘ இருந்து வந்துள்ளதோ, அதற்கேற்ப அவைகள் பொருள்களாகக் கொள்ளப்படும் என்ற முடிவையும் கொண்டுள்ளனர்.

திருக்குறள் என்ன நூல் என்பதை இதுவரை காலமும் ஆராய்ந்தறியாத நிலையில், அதனை வெளியிட்டவர்கள் அதன் ஆரம்பத்தில் வைக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் ஒழுங்கினைக் கடவுள் வாழ்தது, வான் சிறப்பு, நீத்தார் பெருமை,அறன் வலியுறுத்தல் என்ற ஒழுங்கில் அமைத்து வந்தமை பிழையானது எனவும், இந்த அதிகாரங்களினது ஒழுங்கானது கடவுள் வாழ்த்து, அறன் வலியுறுத்தல், நீத்தார் பெருமை, வான் சிறப்பு என எதிர்கால வெளியீடுகளில் திருத்தி அமைக்கப்படவேண்டும் என்பதும் இச்சாராரின் முடிவாகும்.

திருக்குறளும் எண் குறித்த தகவல்களும்[தொகு]

திருக்குறளின் மூன்று பால்களும், ஒவ்வொன்றிலும் 38 (பாயிரவியல் நீக்கி) , 70, 25 என்ற எண்ணிக்கையான அதிகாரங்கள் உள்ளதாக அமைக்கப்பட்டு, அந்த எண்களின் இலக்கங்களைக் கூட்டினால் 7 என்ற கூட்டெண் வரும் விதத்திலும் நூல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டு மொத்த அதிகாரங்களான 133 இன் எண்களைக் கூட்டினாலும், மொத்த பாடல்கள் 1330 இன் இலக்கங்களைக் கூட்டினாலும் , கூட்டெண் 7ஆக வரும் விதத்திலேயே நூல் அமைக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தத்தில், திருக்குறளின் நூலமைப்பானது 7 என்ற எண்ணுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், திருக்குறளின் நூலமைப்பானது 3, 4, 9, 10 என்ற எண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அமைக்கப்பட்டுள்ளது. இவை தற்செயலாக நடைபெற்றதா? இல்லையா? என்பது பற்றியும், இவ்வெண்கள் எங்கேனும் தமிழரின் வாழ்வியலில் நெறிமுறைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளனவா? இல்லையா? என்பது பற்றியும், இந்த எண்கள் ஒரு குறிப்பிட்ட போதனையில் முக்கியத்துவம் பெறுவதாக இருந்தால், அது எது ? என்பதையும் இன்றுவரை ஆய்வாளர்கள் ஆராய்ந்து, எதனையும் கூறவில்லை.

மற்றைய புறத்தில், திருக்குறளின் ஆரம்பத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களும், என்ன அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளன? அவைகள் ஏதாவது போதனை அடிப்படையில்தான் வைக்கப்பட்டுள்ளனவா? இல்லையா? என்பது பற்றியும் ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு, சரியான முடிவுக்கு வரப்படவில்லை.

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

a. ^ குறள் "தார்மீக சைவ" அல்லது "சாத்வீக சைவ" வாழ்க்கை முறையினை,[18][74] அதாவது மனிதர்கள் இறைச்சி உண்ணாமலும் வலியுணர் உயிர்களுக்குத் தீங்கு விளைவிக்காமலும் வாழ தார்மீக ரீதியாகக் கடமைப்பட்டுள்ளனர் என்ற கோட்பாட்டை,[93][94] ஆழமாக வலியுறுத்துகிறது.[95] சைவ மற்றும் நனிசைவ வாழ்க்கை முறைகளின் தார்மீக அடித்தளமாக இருக்கும் அகிம்சை என்ற கருத்து, குறளின் இன்னா செய்யாமை அதிகாரத்தில் (அதிகாரம் 32) விவரிக்கப்பட்டுள்ளது.[93][96] இக்கோட்பாட்டைப் பற்றிய இன்றைய அறிஞர்களின் சிந்தனைகளைப் பற்றி மேலும் அறிய இங்கலின் “The Immorality of Eating Meat" ["இறைச்சியை உண்ணும் ஒழுக்கக்கேடு"] (2000) என்ற கட்டுரையைப் பார்க்கவும்.[94]

b. ^ குறளில் வடமொழிச் சொற்களின் எடுத்துக்காட்டுகளுக்கு ஸ்வெலெபிலின் The Smile of Murugan ["முருகனின் சிரிப்பு"] நூலினைப் பார்க்கவும்.[97]

c. ^ தற்போதைய கிரிகோரியன் ஆண்டில் 31 ஆண்டுகளைச் சேர்ப்பதன் மூலம் வள்ளுவர் ஆண்டு பெறப்படுகிறது.[98][99]

d. ^ 1,330 குறள்களும் பொதுவாக மூன்று பால்களிலும் ஒரே தொடர்ச்சியாக நேரியல் பாணியில் எண்ணப்படுகின்றன. குறள்களை அவற்றின் அதிகார எண் மற்றும் அதிகாரத்திற்குள் அவற்றின் பாவரிசை எண் ஆகியவற்றைக் கொண்டும் குறிக்கலாம். எடுத்துக்காட்டாக, 104 ஆம் அதிகாரத்தில் (உழவு) மூன்றாவது குறளை “குறள் 1033” என்றோ “குறள் 104:3” என்றோ குறிப்பிடப்படலாம்.

e. ^ துறவறவியல் விளக்கம்: "அவாக்களை அடக்கிக் கட்டுப்படுத்தி, ஒழுக்க நெறி பிறழாது வாழ்வதே துறவறமாகும். அஃதாவது, ஐம்புலன்கள் வழி ஏற்படக் கூடிய நெறி பிறழும் செயல்களை எந்நிலையிலும் துறந்து வாழ்தலே துறவறமாகும் (துறவு நெறியாகும்). இத்துறவறம் இல்லறத்திற்கு மாறுபட்டதோ, இல்லறத்தையே துறப்பதோ இல்லை."[37]

மேற்கோள்கள்[தொகு]

 1. Pillai, 1994.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 Sundaram 1987, பக். 7–16.
 3. Blackburn 2000, பக். 449–482.
 4. Zvelebil 1973, பக். 157–158.
 5. Lal, 1992, பக். 4333–4334, 4341.
 6. Zvelebil 1975, பக். 124.
 7. Zvelebil 1973, பக். 156.
 8. Cutler, 1992.
 9. 9.0 9.1 Das 1997, பக். 11–12.
 10. 10.0 10.1 Zvelebil 1973, பக். 160–163.
 11. Hikosaka & Samuel 1990, பக். 200.
 12. Ananthanathan, 1994, பக். 151–154.
 13. Kaushik Roy 2012, பக். 151–154.
 14. 14.0 14.1 Lal, 1992, பக். 4333–4334.
 15. Sundaramurthi, 2000, பக். 624.
 16. Kovaimani and Nagarajan, 2013, பக். 29.
 17. Manavalan, 2009, பக். 24.
 18. 18.0 18.1 Zvelebil 1973, பக். 156–171.
 19. Nedunchezhiyan, 1991, பக். vii.
 20. Kowmareeshwari, 2012a, பக். iv–vi.
 21. Winslow, 1862.
 22. Zvelebil 1973, பக். 155–156.
 23. திருவள்ளுவர் ஆண்டுமுறை
 24. 24.0 24.1 24.2 Kumar, 1999, பக். 91–92.
 25. Mukherjee, 1999, பக். 392–393.
 26. Johnson, 2009.
 27. K.V. Nagarajan 2005, பக். 123–124.
 28. Lal, 1992, பக். 4333, 4341.
 29. Pillai, 1972, பக். 5–7.
 30. Kandasamy, 2017, பக். 9.
 31. 31.0 31.1 31.2 31.3 31.4 31.5 Sharma, 2018, பக். 119–121.
 32. Kovaimani and Nagarajan, 2013, பக். 19.
 33. 33.0 33.1 33.2 Zvelebil 1973, பக். 158–160.
 34. 34.0 34.1 34.2 34.3 34.4 34.5 34.6 34.7 Zvelebil 1973, பக். 158–163.
 35. 35.0 35.1 Desikar, 1969, பக். 73.
 36. 36.0 36.1 36.2 Aravindan, 2018, பக். 346–348.
 37. 37.0 37.1 37.2 Gopalakrishnan, 2012, பக். 144.
 38. 38.0 38.1 38.2 Kandasamy, 2017, பக். 12.
 39. Kandasamy, 2017, பக். 12–13.
 40. 40.0 40.1 Kandasamy, 2017, பக். 13.
 41. Zvelebil 1973, பக். 163.
 42. Zvelebil 1973, பக். 159.
 43. Mahadevan, 1985, பக். 187.
 44. Aravindan, 2018, பக். 105, 346–348.
 45. 45.0 45.1 Zvelebil, 1973, பக். 158.
 46. M. V. Aravindan 2018, பக். 342.
 47. R. Kumaravelan (Ed.) 2008, பக். 4–17.
 48. M. V. Aravindan 2018, பக். 342–343.
 49. Kandasamy, 2020, பக். 16.
 50. Kumaravelan, 2008, பக். 4–17.
 51. M. V. Aravindan 2018, பக். 344–345.
 52. Lal, 1992, பக். 4333.
 53. Lal, 1992, பக். 4341.
 54. 54.0 54.1 Zvelebil 1973, பக். 168.
 55. 55.0 55.1 55.2 Hajela, 2008, பக். 895.
 56. Gopalakrishnan, 2012, பக். 29–31, 44.
 57. Gopalakrishnan, 2012, பக். 49, 54.
 58. Manavalan, 2009, பக். 27.
 59. Kandasamy, 2017, பக். 10–12.
 60. Desikar, 1969, பக். 42.
 61. Alathur Kilar, பக். Verse 34.
 62. Kowmareeshwari, 2012b, பக். 46–47.
 63. Velusamy and Faraday, 2017, பக். 55.
 64. 64.0 64.1 Visveswaran, 2016, பக். ix–xi.
 65. Valluvar, பக். குறள் 37.
 66. 66.0 66.1 Schweitzer, 2013, பக். 200–205.
 67. Kumar, 1999, பக். 92.
 68. K.V. Nagarajan 2005, பக். 124–130.
 69. Ananthanathan, 1994, பக். 316.
 70. Kaushik Roy 2012, பக். 152–154, 144–151.
 71. Lal, 1992, பக். 4341–4342.
 72. 72.0 72.1 Sethupillai, 1956, பக். 34–36.
 73. Kovaimani and Nagarajan, 2013, பக். 556.
 74. 74.0 74.1 74.2 Sundaram, 1990, பக். 13.
 75. Jagannathan, 1963, பக். 162–163.
 76. Manavalan, 2009, பக். 26.
 77. Parthasarathy, The Hindu, 12 December 2015.
 78. K.V. Nagarajan 2005, பக். 125–127.
 79. Subramaniam 1963, பக். 162–174.
 80. 80.0 80.1 80.2 80.3 Kaushik Roy 2012, பக். 144–151, 152–154.
 81. Sensarma, 1981, பக். 40–42.
 82. K.V. Nagarajan 2005, பக். 126–127.
 83. Pandey, Times Now, 1 February 2020.
 84. 84.0 84.1 84.2 84.3 84.4 K.V. Nagarajan 2005, பக். 124–125.
 85. K.V. Nagarajan 2005, பக். 124–126.
 86. 86.0 86.1 86.2 86.3 86.4 Kovaimani and Nagarajan, 2013, பக். 489.
 87. The Tamil Plutach: containing a summary account of the lives of the poets and poetesses of southern India and Ceylon from the earliest to the present times, with select specimens of their compositions, Simon Casie Chitty – January 1, 1859. Ripley & Strong, printers – Publisher
 88. திருக்குறள் பரிமேலழகருரையுடன், திருக்குறள் பதிப்பு நிதி வெளியீடு; ஸ்ரீ காசிமடம் ; திருப்பனந்தாள்; 1968
 89. http://www.oocities.org/nvkashraf/kur-trans/translations.htm
 90. Thirukkural translations in different languages of the world
 91. "ஆதாரம்".
 92. "ஆதாரம்".
 93. 93.0 93.1 Manavalan, 2009, பக். 127–129.
 94. 94.0 94.1 Engel, 2000, பக். 856–889.
 95. Parimelalhagar, 2009, பக். 256–266, 314–336.
 96. Parimelalhagar, 2009, பக். 314–324.
 97. Zvelebil 1973, பக். 169–171.
 98. Thiruvalluvar Ninaivu Malar, 1935, பக். 117.
 99. Iraikkuruvanar, 2009, பக். 72.

மேற்கோள் தரவுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்குறள்&oldid=3209183" இருந்து மீள்விக்கப்பட்டது