உள்ளடக்கத்துக்குச் செல்

வ. உ. சிதம்பரம்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வ. உ. சிதம்பரம்பிள்ளை
வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை
வ. உ. சிதம்பரம்பிள்ளை
பிறப்பு5 செப்டெம்பர் 1872
ஓட்டப்பிடாரம், திருநெல்வேலி மாவட்டம், மெட்ராஸ் மாகாணம், பிரித்தானியாவின் இந்தியா
இறப்பு18 நவம்பர் 1936(1936-11-18) (அகவை 64)
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்வ. உ. சி, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்
அமைப்பு(கள்)சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம்
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்
பெற்றோர்உலகநாத பிள்ளை
பரமாயி அம்மாள்
வாழ்க்கைத்
துணை
வள்ளி அம்மையார்(1885–1900)
மீனாட்சி அம்மையார்
பிள்ளைகள்உலகநாதன்
ஆறுமுகம்
சுப்பிரமணியன்
வாலேசுவரன்
ஞானம்பிகை
வேதவல்லி
ஆனந்தவல்லி
மரகதவல்லி[1]

வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை[2](V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872நவம்பர் 18 1936)[3] ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.

தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார், ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.

இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.

இளமைப் பருவம்

[தொகு]

பிறப்பு

[தொகு]

வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டம். ஓட்டப்பிடாரம் என்ற ஊரில் சைவ வெள்ளாளர் மரபில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.[4]

கல்வி

[தொகு]

ஆறு வயதில் வீரப் பெருமாள் அண்ணாவி என்ற தமிழாசிரியரிடம் தமிழ் கற்றுக் கொண்டார். அரசாங்க அலுவலரான திரு. கிருஷ்ணன் வ.உ.சி.க்கு ஆங்கிலம் கற்பித்தார். பதினான்கு வயதில் திருநெல்வேலியில் இந்துக் கல்லூரியிலும் சேர்ந்து கல்வி கற்றார்.

வழக்கறிஞர் தொழில்

[தொகு]

வ.உ.சி. சில காலம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்தார். பின்னர் அவரது தந்தை அவரை சட்டக் கல்வி பெற திருச்சிக்கு அனுப்பி வைத்தார். கணபதி ஐயர், அரிகரன் ஆகியோர் அவருக்கு சட்டம் கற்பித்தனர். அவர் சட்டத் தேர்வை 1894-ஆம் ஆண்டு எழுதித் தேர்ச்சி பெற்றார். 1895ல் ஓட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் துவங்கினார். அவர் உரிமையியல் மற்றும் குற்றவியல் என இரு வகை வழக்குகளைக் கையாண்டாலும் குற்றவியல் வழக்குகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடினார். வழக்குகளுக்காக இடைத்தரகர்களுக்குப் பணம் கொடுப்பதை ஆதரிக்கவில்லை. வ.உ.சி. பெரும்பாலான வழக்குகளில் வெற்றி பெற்றார். சில வழக்குகளில் இரு கட்சியினரும் சமாதானமாகப் போகும்படி செய்தார். அவருடைய தகுதி, திறமை, நேர்மை இவற்றிற்காக நீதிபதிகளின் மதிப்புக்குரியவராக இருந்தார்.

காவல் துறையினரால் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வ.உ.சி. யினால் விடுதலையானதால் காவல் துறையினரின் கோபத்திற்கு ஆளானார். இச்சூழ்நிலையை விரும்பாத அவரது தந்தை வ.உ.சி.யை 1900-ஆம் ஆண்டு தூத்துக்குடிக்குச் சென்று பணியாற்றும்படி அனுப்பி வைத்தார். வ.உ.சி. தூத்துக்குடியிலும் புகழ் பெற்ற வழக்கறிஞரானார்.

திருமணம்

[தொகு]

வ. உ. சி. யின் திருமணம் 1895 ஆம் ஆண்டு வள்ளி அம்மையார் உடன் நடைபெற்றது. வள்ளி அம்மையார் 1900 ஆம் ஆண்டு தலை பிரசவத்தில் இறந்து விட்டார்.

வ. உ. சிதம்பரம் அவர்களின் திருமண அழைப்பிதழ்

பின்னர் வ. உ. சிதம்பரத்தின் திருமணம் மீனாட்சி அம்மாளுடன் 8 செப்டம்பர் 1901 அன்று தூத்துக்குடியில் நடந்தது.

பாரதியாருடன் நட்பு

[தொகு]

வ.உ.சி. சென்னைக்குச் செல்லும் போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார். பாரதியார் ஒரு பெரும் புலவர். வ.உ.சி.யும் பாரதியாரும் அருகருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரின் தந்தையரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சந்தித்துக் கொண்ட பொழுது இருவரின் கருத்துகளும் ஒன்றாக இருப்பதை அறிந்தனர். இருவரும் எப்பொழுதும் நாட்டைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பாரதியார் தனது உணர்ச்சி மிக்க பாடல்களால் நாட்டு மக்களைத் தட்டி எழுப்பினார். வ.உ.சி.யும் பாரதியாரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

சுவாமி ராமகிருட்டிணானந்தரின் தாக்கம்

[தொகு]

தென்னிந்தியாவில் ராமகிருட்டிண இயக்கத்திற்கு வித்திட்ட, சிரீராமகிருட்டிண பரமகம்சரின் நேரடி சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியுமான சிரீராமகிருட்டிண மடத்தின் துறவியான ’சுவாமி ராமகிருட்டிணானந்தருடனான’(சசி மகராசு) சந்திப்பு வ.உ.சி யின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரை வ.உ.சி. சென்னை ஐசு அவுசில் தான் சந்தித்திருக்க வேண்டும். ’சசி மகராசு என்னிடம், "சுதேச எண்ணங்கள் பல நன்மைகளைத் தரக் கூடியது, இது என் கருத்து" என்று கூறினார். அவர் சொன்னது ஒரு விதையாக என்னுள் விழுந்தது. என் உள்ளம் அதனைப் போற்றிக் காத்தது’ என்று அந்த சந்திப்பைப் பற்றிக் கூறுகிறார் வ.உ.சி. இந்த ’விதை'யின் இரு தளிர்களே ’தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்’ மற்றும் ’தரும சங்கம்’ என்று தமது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார் வ.உ.சி[5]

சமுதாயப் பணி

[தொகு]

தொடங்கப்பட்ட தேசிய நிறுவனங்கள்

[தொகு]

வ.உ.சி. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கினார். அவர் ஆளுமை மிக்க மனிதர். அவர் "சுதேசி பிரச்சார சபை", "தர்ம சங்க நெசவு சாலை", "தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்", "சுதேசிய பண்டக சாலை", "வேளாண் சங்கம்" போன்றவற்றை ஏற்படுத்தினார்.

கப்பல் நிறுவனம் சுதேசிய நாவாய் சங்கம்-1906

[தொகு]

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். "பிரிட்டிசு இந்திய சுடீம் நேவிகேசன் கம்பெனி", இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்.

வ.உ.சி.,1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விசயராகவாச்சாரியார்). நிறுவனத்தின் மூலதனம் ரூ.10,00,000. ரூ.25 மதிப்புள்ள 40,000 பங்குகள் கொண்டது. ஆசியர்கள் அனைவரும் இதில் பங்குதாரர்கள் ஆகலாம். 4 வக்கீல்களும் 13 வங்கியரும் இருந்தனர். கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தவுடன் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் வ.உ.சி. இறங்கினார். ஆனால் நிறுவனத்திற்குச் சொந்தமாகக் கப்பல் இல்லை. "சாலேன் சுடீமர்சு கம்பெனி"யிடமிருந்து கப்பல்களை வாடகைக்கு எடுக்க வேண்டியதாக இருந்தது. "பிரிட்டிசு இந்திய சுடீம் நேவிகேசன் கம்பெனி" இந்தப் புதிய போட்டியை விரும்பாததால் அது "சாலேன் சுடீமர்சு கம்பெனி" யை அச்சுறுத்தியது. அதனால் இது கப்பல்களை வாடகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்திய கப்பல் நிறுவனத்திற்கென்று சொந்தமாகக் கப்பல் இல்லாததால் இந்திய வணிகர்கள் திகைத்துப் போயினர். ஆனால் வ.உ.சி. அஞ்சவில்லை. உடனடியாக கொழும்பு சென்று ஒரு கப்பல் வாடகைக்கு எடுத்து வந்து கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடக்கும்படி செய்தார்.

ஆனால் சொந்த கப்பல்கள் இல்லாமல் கப்பல் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த இயலாது என்பதை அறிந்து கொண்டார். அதனால் சொந்த கப்பல்கள் வாங்க முடிவு செய்தார். தூத்துக்குடி வணிகர்கள் உதவி செய்தனர். ஆனால் அது போதுமானதாக இல்லை. அதனால் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்றார். அங்குள்ள வணிகர்கள் அவரது பேச்சாற்றலால் கவரப்பட்டு கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள். வ.உ.சி. வட இந்தியாவிற்குக் கிளம்பும் போது "திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்", என்று சூளுரைத்துச் சென்றார். வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார். "எசு.எசு. காலியோ" என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். கப்பல் 42 முதல் வகுப்பு இருக்கைகள், 24 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் மற்றும் 1300 சாதாரண இருக்கைகள் இவற்றைக் கொண்டிருந்தது. மேலும் 4000 சாக்கு மூட்டைகளை ஏற்றிச் செல்ல இயலும். திரு. எசு வேதமூர்த்தி பிரான்சு தேசம் சென்று "எசு. எசு. லாவோ" என்ற கப்பலை வாங்கி வந்தார். நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட இரு படகுகளும் வாங்கினர். [6]

இந்திய செய்தித் தாள்கள் அனைத்தும் இது குறித்து கட்டுரைகள் வெளியிட்டு வ.உ.சி. அவர்களைப் பாராட்டின. கப்பல் நிறுவனம் மெதுவாக வளர்ந்தது. மக்கள் சுதேசிக் கப்பலிலேயே பயணம் செய்தனர். வணிகர்கள் தங்கள் சரக்குகளை சுதேசிக் கப்பலிலேயே அனுப்பினர். பிரிட்டிசு கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. கடைசியில் இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. பிரிட்டிசு கப்பல் நிறுவனத்தின் தந்திரம் குறித்து வ.உ.சி. மக்களிடையே விளக்கினார். சுதேசி கப்பல் நிறுவனத்தை அழித்த பிறகு அவர்கள் தங்கள் கட்டணத்தை விருப்பம் போல் ஏற்றிவிடுவார்கள். அப்போது இந்தியர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போகும். அதனால் இந்தியர்கள் இலவசப் பயணத்தை மறுத்துவிட்டனர். உடனே வ.உ.சி.க்கு கையூட்டு கொடுக்க முயற்சி செய்தனர். சுதேசி கப்பல் நிறுவனத்தை விட்டு விலகினால் ரூ.1,00,000 கொடுப்பதாகக் கூறினர். வ.உ.சி. மறுத்துவிட்டார்.

ஆங்கில அரசு பிரிட்டிசு கப்பல் நிறுவனத்திற்கு பலவிதங்களிலும் உதவி செய்தது. அது ஆங்கிலேயர்களின் கப்பலில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசு அதிகாரிகளுக்கு இரகசிய கடிதம் அனுப்பியது. சுங்க அதிகாரிகள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் பல விதமான தொல்லைகள் ஏற்படுத்தினர். இந்திய கப்பல் ஆங்கிலேயர்களின் கப்பலுடன் மோத வந்தது என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. வ.உ.சி. அது பொய்க் குற்றச்சாட்டு என்று நிரூபித்து இந்திய கப்பல் செல்ல அனுமதி பெற்றார். ஆனால் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை அவர்களால் தடுக்க இயலவில்லை.

அரசியல் பணி

[தொகு]

தூத்துக்குடி நூற்பாலை நிறுத்தம்

[தொகு]

சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றியுடன் வ.உ.சி. திருப்தியடையவில்லை. அவர் மக்களிடையே விடுதலைப் போராட்ட உணர்வைத் தூண்ட நினைத்தார். இந்திய தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட வ.உ.சி.க்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. லார்டு. ராய் இந்தியாவில் இருந்த ஆங்கில அரசு அதிகாரி. அவர் 1905-ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஆங்கிலேய வணிகப் பெருமக்களின் கூட்டத்தில், "இந்தியாவில் முதலீடு செய்யலாம். ஏனெனில் அங்கே தொழிற்சங்கம் இல்லை. அதனால் தொழிலாளர்களின் கூலி மிகக் குறைவு" என்று பேசினார். இந்த வகையான பேச்சிலிருந்து இந்தியாவில் அந்த கால கட்டத்தில் தொழிலாளர்களின் நிலையை நாம் அறியலாம். தூத்துக்குடியில் கோரல் நூற்பாலை என்று ஒரு தொழிற்சாலை இருந்தது. அங்கே தொழிலாளர்களுக்குக் கூலி மிகக் குறைவு.ஆனால் அவர்கள் நாள் முழுவதும் இடைவேளை இல்லாமல் பன்னிரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக கடினமாக உழைக்க வேண்டும். அவர்களுக்கு விடுமுறை கிடையாது. தொழிலாளர்கள் ஏதேனும் தவறு செய்தால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

தொழிலாளர்களின் அவல நிலையைப் பார்த்து வ.உ.சி. மிகவும் வருந்தினார். நூற்பாலை தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்யும்படி தூண்டினார். வ.உ.சி.யும் சுப்ரமணிய சிவாவும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்தனர். 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள் வ.உ.சி. தூத்துக்குடியில் சொற்பொழிவு ஆற்றினார். 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள் நூற்பாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வ.உ.சி.யும் சுப்ரமணிய சிவாவும் வேலை நிறுத்தத்திற்குத் தலைமை தாங்கினர். அவர்கள் கோரிக்கைகள் பின்வருமாறு: 1. கூலி உயர்வு 2. வாரத்தில் ஒரு நாள் விடுமுறை 3. மற்ற விடுமுறை நாட்கள்

மாவட்ட ஆட்சியர் திருநெல்வேலியில் இருந்து இரண்டு அதிகாரிகளையும் சிவகாசியில் இருந்து 30 காவலர்களையும் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தார். குற்றவியல் நடுவர் பொதுக்கூட்டங்களைத் தடை செய்தார். மறுநாள் மாவட்ட ஆட்சியர் திரு.விஞ்ச் தூத்துக்குடிக்கு வந்தார். தன்னைச் சந்திக்கும்படி வ.உ.சி.க்குச் சொல்லி அனுப்பினார். அந்த சந்திப்புக்குப் பிறகு வ.உ.சி. தொழிலாளர்களிடையே பேசினார். இந்தப் பொதுக்கூட்டம் ஒரு தனியாரின் இடத்தில் நடைபெற்றது. நூற்பாலை நிருவாகத்தின் கொடூரமான நடவடிக்கைகளே இந்த வேலை நிறுத்தத்திற்குக் காரணம் என்று மாவட்ட ஆட்சியரிடம் தான் கூறியதாகத் தொழிலாளர்களிடம் கூறினார். வ.உ.சி. தொழிலாளர்களுக்குப் பொதுமக்களின் துணையுடனும் தனது சொந்த சொத்துக்களில் மூலமாகவும் உதவினார். இதன் காரணமாக அவர் தனது சொந்த சொத்தில் பெரும் பகுதியை இழந்தார்.

நூற்பாலை நிருவாகம், தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்து விரைவில் வேலைக்குத் திரும்பிவிடுவார்கள் என்று நினைத்தது. ஆங்கில அரசு நூற்பாலை நிருவாகத்திற்கு உறுதுணையாக இருந்தது. ஆனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தது. நூற்பாலை நிருவாகத்தின் பாடு திண்டாட்டமாகிவிட்டது. சிலரை அச்சுறுத்தியது. சிலரை வேலையைவிட்டு நீக்கியது. சிலருக்கு ஆசை காட்டியது. எல்லாம் வீணானது. வேலை நிறுத்தம் இந்திய நாட்டில் உள்ள அனைவரின் கவனத்தை ஈர்த்தது. வ.உ.சி. பொதுமக்களிடையே தினமும் தொழிலாளர்களின் நிலை குறித்துப் பேசினார். அதனால் பொதுமக்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளித்தனர். வேலை நிறுத்தம் மேலும் மேலும் தீவிரமடைந்தது.மாவட்ட துணை ஆட்சியர் வ.உ.சி.யை அச்சுறுத்தினார். ஆனால் வ.உ.சி. அந்த அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்தினார். தொழிலாளர்கள் தினமும் ஊர்வலம் சென்றனர். வணிகர்கள் ஆங்கிலயர்களுக்குப் பொருட்களை விற்க மறுத்தனர். அதனால் அவர்கள் இலங்கையிலிருந்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். அவர்கள் தூத்துக்குடியில் தங்க அஞ்சி நடுக்கடலில் கப்பலில் தங்கினார்கள்.

இறுதியில் நூற்பாலை நிருவாகம் அவர்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தது. 1908-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் நாள் திரு. சுப்ரமண்ய பிள்ளை, நூற்பாலை நிருவாக அலுவலர், வ.உ.சி.யைச் சந்தித்தார். வ.உ.சி.தொழிலாளர்கள் 50 பேருடன் நூற்பாலை நிருவாக இயக்குனரைச் சந்தித்தார். அவர்கள் கூலியை உயர்த்தவும் வேலை நேரத்தைக் குறைக்கவும் ஞாயிற்றுக் கிழமையன்று வார விடுமுறை அளிக்கவும் சம்மதித்தனர். 9 நாள் வேலை நிறுத்தத்திற்குப் பிறகு தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர். வேலை நிறுத்தம் பெரும் வெற்றி பெற்றது. அது தொழிற்சங்கங்கள் இல்லாத ஒரு காலம். இந்தியாவில் முதல் தொழிற்சங்கமே 1920-ஆண்டுதான் தொடங்கப்பட்டது. சோவியத்புரட்சி 1917-ஆம் ஆண்டு நடைபெற்றது. வ.உ.சி. 1908-ஆம் ஆண்டே தொழிற்சங்கங்கள் இல்லாமல் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் பங்கு பெறச் செய்து அவர்களை வழி நடத்தி வேலை நிறுத்தத்தைப் பெரும் வெற்றி பெறச் செய்தார். வ.உ.சி. எல்லோருக்கும் முன்னோடியாக வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். இந்த வேலை நிறுத்தத்தின் பயனாக மற்ற ஆங்கில நிறுவனங்களின் தொழிலாளர்களும் பயன் பெற்றனர். அவர்கள் கூலியை அதிகரித்ததுடன் கொடூரமாக நடத்துவதையும் நிறுத்தினர். சிரீ அரவிந்தர் இந்த வேலை நிறுத்தம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது என்று பாராட்டி வந்தே மாதரம் என்ற இதழில் எழுதினார்.

கைது-1908

[தொகு]

சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி ஆங்கிலயர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றி அவர்களை அச்சுறுத்தியது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று உணர்ந்தார்கள். அவர்கள் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்கள்.

வ.உ.சி. வெளி நாட்டுப் பொருட்களைப் புறக்கணித்தார். மக்களும் புறக்கணித்தார்கள். அந்த காலகட்டத்தில் வின்ச் தான் மாவட்ட ஆட்சியர். ஆனால் மக்கள் வ.உ.சி. யின் சொற்களைக் கட்டளையாக ஏற்றனர். மக்கள் வ.உ.சி.யை அவ்வளவு மதித்தனர். அவருக்குப் பின்னால் தொழிலாளர்கள் அனைவரும் இருந்தனர். சுதந்திரப் போராட்ட உணர்ச்சி மக்களிடையே கொழுந்துவிட்டு எரிந்தது. வ.உ.சி. சொல்லும் எதையும் செய்ய மக்கள் தயாராக இருந்தார்கள். வ.உ.சி.காலத்திற்கு முன்பு படித்தவர்கள் மட்டுமே சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் தொழிலாளர்கள், உழைப்பாளிகள் என அனைவரையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடச் செய்த பெருமை வ.உ.சி.க்கே உரியது. அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்டனர். அவர்கள் ஆங்கிலேயர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் வேலை பார்க்க மறுத்துவிட்டனர்.ஆங்கிலேயர்கள் மிகுந்த சிரமப்பட்டார்கள். வ.உ.சி. யின் செல்வாக்கு அளப்பரியது. .

வ.உ.சி. சுதேசி கப்பல் நிறுவனத்தை ஆரம்பித்தது பணத்துக்காகவோ புகழுக்காகவோ அல்ல. ஆனால் பங்குதாரர்கள் பலர் பணம் ஈட்டவே விரும்பினர். அவர்கள் வ.உ.சி. சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விரும்பவில்லை. ஆனால் வ.உ.சி. அவர்கள் கருத்தை ஏற்க மறுத்துவிட்டார்.

வங்கத்தின் சுதந்திரப் போராட்டத் தலைவரான பிபின் சந்திர பால் 1908-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் விடுதலையாக இருந்தார். வ.உ.சி. அதை ஒரு விழாவாக கொண்டாட எண்ணினார். அந்த விழா நடந்தால் வ.உ.சி. மக்களிடையே பேசுவார். அதை ஆங்கில அரசு விரும்பவில்லை. அதனால் வ.உ.சி.யைக் கைது செய்ய முடிவு செய்தனர். ஆனால் அவரைத் தூத்துக்குடியில் கைது செய்தால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படும். அதனால் வ.உ.சி.யைத் திருநெல்வேலி வந்து தன்னைச் சந்திக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஒரு ஆணை அனுப்பினார். வ.உ.சி. அந்த ஆணையை ஏற்றுத் திருநெல்வேலி செல்லத் தயாரானார். அவர் கைது செய்யப்படுவார் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் எல்லோரும் அவரைச் செல்ல வேண்டாம் என்று தடுத்தனர். ஆனால் வ.உ.சி. அனைவரையும் சமாதானப்படுத்தி திருநெல்வேலிக்கு அவரது ஆப்த நண்பர் சுப்ரமண்ய சிவாவுடன் சென்றார்.

சுப்பிரமணிய சிவா, மதுரைக்கு அருகில் உள்ள வத்தலகுண்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். அவர் அந்த கிராமத் தலைவரின் மகன். அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிக்க புலமை வாய்ந்தவர். அவர் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே தாய் நாட்டின் சுதந்திரம் குறித்துப் பேசுவார். அவர் 1907-ஆண்டு தூத்துக்குடிக்கு வந்து சொற்பொழிவாற்றினார். வ.உ.சி.கடற்கரையில் நடந்த அந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரது பேச்சாற்றலும் தாய் நாட்டுப் பற்றும் வ.உ.சி.யை மிகவும் கவர்ந்தது. அவர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். வ.உ.சி.யும் சிவாவும் மக்களிடையே சுதந்திரப் போராட்ட உணர்ச்சியைத் தூண்டினர். ஆங்கில அரசு அவர்களது நடவடிக்கைகளை நிறுத்த நினைத்தது.

இருவரும் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க சென்ற போது இருவரையும் திருநெல்வேலியைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்றும் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்றும் கூறினார். வ.உ.சி. அவரது நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டார். அதனால் வ.உ.சி.யும் சிவாவும் 1908-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டதன் விளைவுகள்-1908

[தொகு]

வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் கொந்தளித்தனர். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பள்ளிகளும் கல்லூரிகளும் சேதப்படுத்தப்பட்டன. மண்ணெண்ணெய்க் கிடங்கு தீ வைக்கப்பட்டது. இரண்டு நாட்கள் இந்த நிலை நீடித்தது. அஞ்சல் நிலையமும் தீ வைக்கப்பட்டது. காவல் நிலையமும் நகராட்சி அலுவலகமும் தாக்கப்பட்டது. தூத்துக்குடியில் வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் இரவு முழுவதும் தூங்கவில்லை. கடைகள் மூடப்பட்டன. கோரல் நூற்பாலை மற்றும் "பெசுட் அண்ட் கம்பெனி" தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். நகராட்சி ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி ஓட்டுபவர்கள் போன்றோரும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். இதுவே இந்தியாவில் முதல் அரசியல் வேலை நிறுத்தம்.1908-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் நாள் முதல் மார்ச் 19-ஆம் நாள் வரை நடைபெற்றது. பொதுமக்களும் அதில் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன. காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள். இந்த நிகழ்வை திருநெல்வேலி எழுச்சி என்று கூறுகிறார்கள்.

வ.உ.சி. சிறையிலிருந்தபோது அவரது நண்பர்கள் அவரை பிணையில் வெளிவரும்படிக் கேட்டுக் கொண்டனர். சிவாவும் பத்மநாப ஐயங்காரும் அவருடன் சிறையில் இருந்தனர். அவர் தனது நண்பர்களை விட்டுவிட்டுத் தனியாக வெளி வர விரும்பவில்லை. இந்நிகழ்ச்சியில் இருந்து அவரது தைரியத்தையும் நேர்மையையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

நீதிமன்றத் தீர்ப்பும் சிறைத் தண்டனையும்-1908

[தொகு]

காவல் துறையினர் வ.உ.சி.க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

  • 1. வ.உ.சி. ஆங்கில அரசுக்கு எதிராக சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.(பிரிவு 123-அ)
  • 2. வ.உ.சி. சுப்ரமண்ய சிவாவிற்கு அடைக்கலம் கொடுத்தார்.(பிரிவு 153-அ)

வழக்கு நேர்மையாக நடைபெறாததால் வ.உ.சி. அதில் பங்கேற்க மறுத்துவிட்டார். இரண்டு மாதங்கள் நடந்த இந்த வழக்கு விவரங்களை இந்தியா முழுவதும் மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர்.

நீதிபதி திரு. பின்கே தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு விவரம் பின்வரமாறு:

  • 1. ஆங்கில அரசுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும்படி மக்களைத் தூண்டிவிட்டதற்காக 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனை.
  • சிவாவுக்கு ஆதரவு அளித்ததற்காக மற்றுமொரு 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனை.
  • 2. சிவாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை.

40 ஆண்டு தீவாந்திரத் தண்டனை! யாருக்கும் கொடுக்கப்படாத கொடுமையான தண்டனை. ஆங்கில அரசுக்கு வ.உ.சி.யிடத்தில் அளவு கடந்த பயம். இந்தக் கொடுமையான தண்டனைக்கு அந்த பயமே காரணம். அவரைச் சிறையில் அடைத்தால்தான் அவர்களால் தொடர்ந்து இந்தியாவில் ஆட்சி செய்ய முடியும். வ.உ.சி.க்கு அப்பொழுது 36 வயது தான்.

இந்தக் கொடிய தீர்ப்பைக் கேட்டு இந்திய மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். வங்காளி, "அமிர்த பசார்", "சுதேசமித்திரன்" "இந்தியா", "சுவராச்சியா" மற்றும் பல செய்தித்தாள்கள் இத்தீர்ப்பைக் கண்டித்தன. ஆங்கில இதழான "சுடேட்சு மேன்" இத்தீர்ப்பு நியாயமற்றது என்றும் வ.உ.சி.யின் தியாகம் போற்றத்தக்கது என்றும் குறிப்பிட்டது. ஆங்கில அரசை ஆதரிப்பவர்கள் கூட இந்தக் கொடிய தண்டனையை ஏற்றுக் கொள்ளவில்லை. லார்டு மார்லி, இந்தியாவுக்கான ஆங்கில அமைச்சர், இக்கொடூரமான தண்டனையை ஏற்றுக் கொள்ள இயலாது என லார்டு மன்றோவுக்கு எழுதினார். அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீடு செய்ததில் 10 ஆண்டு தீவாந்திரத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார் . அவரது நண்பர்கள் லண்டனில் உள்ள மன்னர் அவையில் (பிரிவியூ கௌன்சிலில்) முறையீடு செய்ததில் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைந்தது.

சிறைத்தண்டனை 1908–1912

[தொகு]

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்குத் சிறைத்தண்டனை தரக் காரணமாக இருந்ததால் ஆட்சியர் ஆசு என்பாரை வாஞ்சி சுட்டுக் கொன்றதாகத் தகவல் தரப்பட்டுள்ளது.

வ.உ.சி. முதலில் கோயம்புத்தூர் சிறையிலும் பின்னர் கண்ணனூர் சிறையிலும் அடைக்கப்பட்டார். இப்பொழுதெல்லாம் அரசியல் கைதிகள் நல்ல முறையில் நடத்தப்படுகின்றனர். அக்காலத்தில் அவர்கள் மற்ற ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளைப் போலவே நடத்தப்பட்டனர். கடுமையான வேலைகள் செய்ய வேண்டும். வ.உ.சி. செல்வந்தர். நல்ல ஆரோக்கியமான சுவையான உணவு உண்ணும் வழக்கம் உடையவர். ஆனால் சிறையில் கல்லும் மண்ணும் இருக்கும் கூழைக் குடிக்க வேண்டியிருந்தது. சிறை ஆடைகள் முரடானவை. தலையை மொட்டையடித்து கை, கால்களில் விலங்கிட்டிருப்பர்.

செக்கிழுத்த செம்மல்

சிறையில் வ.உ.சி. கடுமையான வேலைகளைச் செய்தார். சணல் நூற்றார். அப்பொழுது அவரது உள்ளங்கைகளில் இருந்து ரத்தம் கசிந்தது. கல் உடைத்தார். மாடுகள் இழுக்கும் செக்கினை இழுத்தார். அந்தப் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஒரு மாடு போல உழைத்தார். அவரது எடை மிகவும் குறைந்தது. மருத்துவர் சிறையதிகாரியை எச்சரித்தார். உடனே அரிசி உணவு வழங்கப்பட்டது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் அவர் சொந்த உணவை உண்ணலாம் என்று கூறியது.

வ. உ. சி. இழுத்த செக்கு சென்னை காந்தி மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் வடுகுராமன் என்ற கைதி வ.உ.சி.யை வணங்கினார். அதைப் பார்த்த சிறை அதிகாரி கோபமடைந்து வடுகுராமனிடம் இனிமேல் வ.உ.சி.யை வணங்கினால் செருப்பால் அடி கிடைக்கும் என்று கூறினார். வடுகுராமன் சிறை அதிகாரியைக் கொலை செய்ய முடிவு செய்தான். வ.உ.சி. கொலை செய்வதைத் தடுத்துவிட்டார். ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம் சிறைக் கைதிகள் கலவரம் செய்தனர். சிறை அதிகாரி கடுமையாகத் தாக்கப்பட்டார். சிறைக் கைதிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைத்தது. வ.உ.சி. அவரது நண்பர்களுக்கு எழுதி மேல்முறையீடு செய்து தண்டனைக் காலத்தைக் குறைத்தார். வ.உ.சி. கைதிகள் பக்கம் சாட்சி கூறினார். அவர், சிறை அதிகாரி மிக மோசமான உணவை வழங்கியும் கடுமையாக அடித்தும் கைதிகளைக் கொடுமைப்படுத்தியும் கொடூரமாக நடந்து கொண்டதே கலவரத்திற்கான காரணம் என்று கூறினார்.

சிறை இயக்குநர் ஒரு நாள் வ.உ.சி.யிடம் சிறை அலுவலராக பணியேற்றுக் கொண்டால் தண்டனைக் காலம் குறையும் என்றும் இன்னும் பல நன்மைகள் கிட்டும் என்றும் கூறினார். வ.உ.சி. அப்பதவியை மறுத்துவிட்டார். வ.உ.சி. கேரளாவில் உள்ள கண்ணனூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே சிறைக்கைதிகளுக்கு ஒரு வித்தியாசமான தண்டனை கொடுக்கப்பட்டது. அவர்கள் கம்பளியால் போர்த்தப்பட்டு அடிக்கப்பட்டார்கள். வ.உ.சி.யை அச்சுறுத்த சிறை அதிகாரி ஒரு கொடூரமான சிறைக்கைதியை வ.உ.சி.யின் அறைக்கு வெளியே தூங்கும்படி செய்தார். வழக்கமாக அவன்தான் எல்லோரையும் அடிப்பான். ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் அவன் வ.உ.சி.யின் சீடனாகிவிட்டான்.

வ.உ.சி. சிறையிலிருந்த போது சுதேசி கப்பல் நிறுவனம் மூழ்கிப் போனது. அவரில்லாமல் மற்றவர்களால் நிறுவனத்தை நடத்த இயலவில்லை. அவர்கள் கப்பலை விற்றுவிட்டனர். அதுவும் "எசு.எசு.காலியோ" என்ற கப்பலை ஆங்கில கப்பல் நிறுவனத்திற்கே விற்றுவிட்டார்கள். அது வ.உ.சி.யை மிகவும் பாதித்தது. அந்தக் கப்பலை வாங்க வ.உ.சி.என்ன பாடுபட்டார்?

1912-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் வ.உ.சி. விடுதலை அடைந்தார். அப்பொழுது அரசியல் சூழ் நிலை முற்றிலும் மாறி இருந்தது. சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது கொள்கையைத் தொடர்ந்தால் அது சுதந்திரப் போராட்டத்திற்கு இடையூறாகிவிடும். ஒரு தனிக்கட்சி ஆரம்பிக்கும் அளவு செல்வாக்கும் புகழும் இருந்த போதும் அவர் அப்படிச் செய்யவில்லை. அதன் மூலம் அவரது நாட்டுப்பற்றையும் மேன்மையான குணத்தையும் அறிந்து கொள்ளலாம்

விடுதலைக்குப் பின்னர் (1913–1936)

[தொகு]

வ.உ.சி. விடுதலைக்குப் பின்னர் சென்னை, கோயம்பத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் வசித்தார்.

சென்னை வாழ்க்கை(1913–1920)

[தொகு]

வ.உ.சி. விடுதலைக்குப் பின்னர் சென்னைக்குச் சென்றார். அவர் ஒரு மண்ணெண்ணெய்க் கடையொன்றை ஆரம்பித்தார். ஆனால் ஒரு வணிகராக அவரால் வெற்றி பெற இயலவில்லை. அவர் அன்புள்ளமும் தாராள மனமும் கொண்டவர். அவரால் எப்படி வாணிகத்தில் வெற்றி பெற முடியும்? 1920-ஆம் ஆண்டு கல்கத்தாவில் காங்கிரசு மாநாடு நடைபெற்றது. வ.உ.சி.ஒரு பிரதிநிதியாக அதில் கலந்து கொண்டார். வ.உ.சி. லோக மான்ய பால கங்காதர திலகரின் சீடர். திலகர் செயல் வீரர். காந்தி மிதவாதி. வ.உ.சி.க்கு காந்தியின் வழிமுறைகளில் விருப்பமில்லை. வ.உ.சி. சிந்தித்தார். காந்தியின் வழிமுறைகளைப் பின்பற்றுவதா? மனசாட்சிப்படி நடப்பதா? வ.உ.சி. மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார். ஆனால் வ.உ.சி.யும் காந்தியும் ஒருவரை ஒருவர் மதித்தனர். காந்தி வ.உ.சி.யின் சுய நலமற்ற சேவையை அறிவார்.வ.உ.சி. காந்தியின் எளிமையும் தூய்மையும் மிக்க வாழ்க்கையை மதித்தார்.

வ.உ.சி. சென்னையில் தொழிற்சங்கங்கள் தொடங்கி அதற்காகத் தீவிரமாகப் பணியாற்றினார். வ.உ.சி.யின் பெரும்பான்மையான தமிழ் நூல்கள் அவர் சென்னையில் வசிக்கும் போதே வெளியாகின. வ.உ.சி. சிறை சென்றதால் வழக்கறிஞர் பணி செய்வதற்கான உரிமையை இழந்தார். அவரால் வழக்கறிஞராகப் பணியாற்ற இயலவில்லை. திலகர் மாதம் ரூ.50 அனுப்பி வைத்தார்.

கோயம்புத்தூர் வாழ்க்கை (1920–1924)

[தொகு]

கோயம்புத்தூரில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றார். அங்கே ஒரு வங்கி இயக்குனராகவும் பணியாற்றினார். இந்த வருமானம் அவருக்கு வாழ்க்கைக்குப் போதுமானதாக இல்லை. வ.உ.சி. தான் சிறையில் இருந்தாலும் அரசியல் கைதியாக மட்டுமே இருந்தமையால் வழக்கறிஞராகப் பணியாற்ற அனுமதிக்கும்படி அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். திரு. ஈ. எச். வாலசு 1908-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பணியாற்றியிருந்ததால் அவர் வ.உ.சி.யின் நேர்மையும் திறமையும் அறிந்திருந்தார். அதனால் அவர் அனுமதி அளித்தார். அவரது அச்செயலுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர் தனது கடைசி மகனுக்கு "வாலேசுவரன்" என்று பெயரிட்டார்.

கோவில்பட்டி வாழ்க்கை (1924–1932)

[தொகு]

கோவில்பட்டியில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அங்கேயும் அவர் வசதியற்றவர்களுக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் இலவசமாக வாதாடினார். 1927-ஆம் ஆண்டு அவர் காங்கிரசு கட்சியில் மீண்டும் இணைந்தார். சேலத்தில் நடந்த மூன்றாவது கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். கட்சி செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். ஆனால் சேலம் மாநாட்டிற்குப் பிறகு மீண்டும் ஒதுங்கியே இருந்தார். அவர் கட்சியில் இருந்து விலகி இருந்தாலும் அவர் கடைசி வரை திலகரின் சீடராகவே இருந்தார். கடைசி மூச்சு வரை ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து வந்தார்.

தூத்துக்குடி வாழ்க்கை (1932–1936)

[தொகு]

1932-ல் தூத்துக்குடி வந்தார். தமிழ் நூல்களை எழுதுவதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்து வந்தார். தமிழ் இலக்கியங்கள் குறித்து நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பினார். இரண்டாம் உலகப் போர் மூண்டால் இந்தியா சுதந்திரம் பெறுவது உறுதி என்று அவர் கூறியிருந்தார். அதே போல் இந்தியா இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1947-ஆம் ஆண்டு ஆகத்து 15-ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. வ.உ.சி. 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் மறைந்தார்.

தமிழறிஞர் வ.உ.சி.

[தொகு]

நூல்கள்

[தொகு]

வ.உ.சி. இயற்றிய நான்கு நூல்களுமே கவிதைகளால் ஆனவைதான். அவை 1.மெய்யறம் 2.மெய்யறிவு 3.பாடல் திரட்டு 4.சுயசரிதை

மெய்யறம்-1914

மெய்யறம் 125 அதிகாரங்களை உடையது. ஒவ்வொரு அதிகாரமும் 10 பாடல்களைக் கொண்டது. ஒரு பாடல் என்பது ஒரு வரி மட்டுமே உடையது. மெய்யறம் 5 பகுதிகளை உடையது. முதல் பகுதி மாணவர்களுக்கானது. அதில் 30 அதிகாரங்கள் உள்ளன. இரண்டாவது பகுதி இல்லறத்தார்களுக்கானது. அதுவும் 30 அதிகாரங்கள் உடையது. மூன்றாவது பகுதியில் ஓர் அரசன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று 50 அதிகாரங்களில் வ.உ.சி. விளக்குகிறார். நான்காவது பகுதி 10 அதிகாரங்களுடன் நன்னெறி குறித்து விளக்குகிறது. கடைசிப் பகுதியில் உண்மையை அடைவது எப்படி என்று 5 அதிகாரங்களில் வ.உ.சி. விளக்குகிறார்.

மெய்யறிவு-1915

வ.உ.சி. கண்ணணூர் சிறையில் இருக்கும் போது மற்ற கைதிகளுக்கு நீதி, நெறிகளை விளக்குவார். அக்கைதிகள் இந்த அறிவுரைகள் செய்யுள் வடிவில் இருந்தால் மனனம் செய்ய எளிதாக இருக்கும் என்று வ.உ.சி. யிடம் கூறினார்கள். அவ்வாறு இயற்றப்பட்ட செய்யுள்களே மெய்யறிவு என்ற நூலாகும். அது 10 அதிகாரங்கள் உடையது. ஒவ்வொரு அதிகாரமும் 10 செய்யுள்கள் உடையது. ஒவ்வொருசெய்யுளும் 4 வரிகள் உடையது. இந்த நூலில் வ.உ.சி தன்னை அறிந்து கொள்வது எப்படி, நம் விதியைத் தீர்மானிப்பது எவ்வாறு, ஆரோக்கியத்தைப் பேணும் முறைகள், மனதை ஆளுவது எங்ஙனம், நம் மனத்தில் தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை ஏற்படுத்துவது எப்படி, உண்மை நிலையை என்ன செய்ய வேண்டும் என்று விளக்குகிறார்.

பாடல் திரட்டு-1915

இந்நூல் பல சந்தர்ப்பங்களில் வ.உ.சி. எழுதிய பாடல்களின் தொகுப்பாகும். இது அவரது தலை சிறந்த படைப்பாகும்.

சுயசரிதை-1946

இது இரு பகுதிகளை உடையது. முதல் பகுதி 1916-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் அவர் தனது குழந்தைப் பருவம், ஆசிரியர்கள், குடும்பம், சட்டக்கல்வி இவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இரண்டாவது பகுதி 1930-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் கோயம்பத்தூர் சிறை வாழ்க்கை, சிறை அதிகாரி மீது தாக்குதல், சிறையில் ஏற்பட்ட கலவரம், கண்ணணூர் சிறை வாழ்க்கை, ஆசு கொலை, விடுதலை இவை குறித்து விளக்குகிறார். அவர் இறந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1946- ஆம் ஆண்டு இரண்டு பகுதிகளும் சேர்ந்து ஒரே நூலாக வெளி வந்தது.

உரை எழுதிய நூல்கள்

[தொகு]

வ.உ.சி. இன்னிலை, சிவஞான போதம், திருக்குறள் ஆகிய நூல்களுக்கு உரை எழுதி உள்ளார்.

இன்னிலை-1917

வ.உ.சி. ரத்தினக் கவிராயர் எழுதிய இன்னிலை என்ற நூலுக்கு விளக்க உரை எழுதினார். அந்த நூலைப் படிக்கும் போது அவரது இலக்கணப் புலமையை நாம் அறிந்து கொள்ளலாம்.

சிவஞான போதம்-1935

சிவஞான போதம் ஒரு பக்தி நூலாகும். வ.உ.சி. இந்நூலுக்கு மிகச் சிறந்த விளக்க உரை எழுதியுள்ளார். இந்நூலினை ஆழமாக ஆராய்ச்சி செய்ததில் தத்துவம் மற்றும் பக்தியில் சிறந்தவர் ஆனார். மத வேற்றுமை காண்பவர்கள் "யான், எனது" என்னும் மத வெறி பிடித்தவர்களென்றும் நாடு இருக்கும் ஒற்றுமையற்ற நிலையில் மதவேற்றுமை காண்பது நாட்டு ஒற்றுமைக்குத் தீங்கு ஏற்படுத்தக் கூடியது என்றும் வ.உ.சி. இந்நூலில் கூறுகிறார். அவர் இந்நூலில் மதங்களின் பொய்யான உயர்வு, தாழ்வு குறித்து ஒன்றும் எழுதவில்லை.

திருக்குறள்-1935

பழந்தமிழ் இலக்கியங்களான திருக்குறள், தொல்காப்பியம் இவற்றின் மீது வ.உ.சி.க்கு அளவு கடந்த பற்று உண்டு. அவரது உரை அவரது ஆழ்ந்த இலக்கண அறிவை வெளிப்படுத்துகிறது. அவர் பொருள் கூறும் விதம், பல் வேறு உரைகளை ஒப்பிடும் விதம், அவர் தரும் இலக்கணக் குறிப்புகள் இவற்றின் மூலம் அவர் எவ்வளவு பெரிய மேதை என நாம் அறியலாம்.

வ.உ.சி. யால் பதிப்பிக்கப்பட்ட நூல்கள்

  • 1.திருக்குறள் (மணக்குடவர் உரையுடன்)-1917
  • 2.தொல்காப்பியம் (இளம்பூரனார் உரையுடன்)-1928

கட்டுரைகள்

[தொகு]

வ.உ.சி பல்வேறு செய்திகளைப் பற்றி வெவ்வேறு பத்திரிக்கைகளில் நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார். வ.உ.சி. எழுதிய நூல்கள் பல போதிய நிதி வசதி இல்லாததால் பதிப்பிக்கபடவில்லை. ஆனால் இப்பொழுது அக்கையெழுத்துப் பிரதிகள் கிடைக்கவில்லை. அவை காணாமல் போய்விட்டன. அவற்றுள் சில நமக்குக் கிடைத்துள்ளன.

  • கடவுளும் பக்தியும்
  • கடவுள் ஒருவரே
  • மனிதனும் அறிவும்
  • மனமும் உடம்பும்
  • வினையும் விதியும்
  • விதி அல்லது ஊழ்

வ.உ.சி.யின் அரசியல் சொற்பொழிவு

வ.உ.சி.தலை சிறந்த மேடைப் பேச்சாளர்.சேலத்தில் நடந்த மூன்றாவது காங்கரசு மாநாட்டில் அவர் நிகழ்த்திய தலைமையுரை "எனது அரசியல் பெருஞ்சொல்" என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது.

பத்திரிக்கை ஆசிரியராக வ.உ.சி.

வ.உ.சி. விவேகபானு, இந்து நேசன், தி நேசனல் போன்ற பத்திரக்கைகளுக்கு ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

மொழி பெயர்ப்பாளராக வ.உ.சி.

[தொகு]

வ.உ.சி.4 நூல்களை மொழிபெயர்த்துள்ளார். அவையனைத்தும் ஜேம்ஸ் ஆலன் என்பவரால் எழுதப்பட்டது. மொழிபெயர்ப்புப் பணி அவ்வளவு எளிதானதல்ல. எளிதாகப் புரிந்து கொள்வதற்காக சில வார்த்தைகளைச் சேர்த்தும் சில வார்த்தைகளைச் தவிர்த்தும் மொழிபெயர்த்துள்ளதாக வ.உ.சி.கூறுகிறார். வ.உ.சி.யின் மொழிபெயர்ப்பு நிறைவானதாகவும் மதிப்பு மிக்கதாகவும் அவரது திறமையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. அவை அனைத்துமே அறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய நூல்களாகும்.

மனம் போல் வாழ்வு-1909

ஜேம்ஸ் ஆலனின் "As a man Thinketh" என்ற நூலை வ.உ.சி. "மனம் போல் வாழ்வு" என்று மொழி பெயர்த்தார். மனிதர்களின் எண்ணங்களே அவர்களது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. எண்ணங்களே விதைகள். செயல்களே மலர்கள். இன்பங்களும் துன்பங்களும் கனிகள். எண்ணங்களே சொற்களாகவும் செயல்களாவும் பழக்கமாகவும் மாறுகின்றன. பழக்கமே ஒரு மனிதனின் ஒழுக்கமாக மாறுகிறது. வ.உ.சி. நூல் திரட்டு. பக்க எண் 615.

அகமே புறம்- 1914

ஜேம்ஸ் ஆலனின் "Out from the heart" என்ற நூலை வ.உ.சி. "அகமே புறம்" என்று மொழி பெயர்த்தார்.இந்நூல் மனோ நிலைமையின் வலிமையை விளக்குகிறது. நம் மனம் அளவு கடந்த வலிமை உடையது. மனதால் ஒரு மனிதனை ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். அதனால் மனிதன் நல்லவற்றைச் சிந்திக்கும்படி மனதைப் பழக்கப்படுத்த வேண்டும். அறச் செயல்களே செய்ய வேண்டும். நமது சொற்களைக் கட்டுப்படுத்த வேண்டும். நல்ல மன நிலையிலிருந்து சுகமும் தீய மன நிலையிலிருந்து துக்கமும் ஏற்படுகின்றன. நாம் அறிவுடையவர்களாக இருந்தால் தீய செயல்களைச் செய்யமாட்டோம். வ.உ.சி. நூல் திரட்டு. பக்க எண் 602.

வலிமைக்கு மார்க்கம்- 1916

ஜேம்ஸ் ஆலன் எழுதிய "From Poverty to Power"என்ற நூலின் முதல் பகுதி "The part of prosperity" ஆகும். அதனை வ.உ.சி. "வலிமைக்கு மார்க்கம்" என்று மொழி பெயர்த்தார். ஒவ்வொரு துன்பமும் ஒரு அனுபவத்தைக் கொடுத்துவிட்டு விரைவில் மறைந்துவிடுகிறது. ஆனால் அது ஒரு நல்ல ஆசிரியர். நாம் கற்றுக்கொள்ளத் தயாராக இருந்தால் அது நமக்கு நல்வழிகளைக் கற்பிக்கும். வலிமை என்பது மகிழ்ச்சி போன்று புற அனுபவம் இல்லை. அது ஓர் உள் அனுபவம். நாம் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் நாமே எதையும் செய்யும் வலிமையுடையவர்களாக இருக்க வேண்டும். ஒருவன் தன்னைத் தானே கட்டுப்படுத்த முடிந்தால் அவனால் மற்றவர்களையும் கட்டுப்படுத்த முடியும். வ.உ.சி. நூல் திரட்டு. பக்க எண் 615; பக்க எண் 652-653.

சாந்திக்கு மார்க்கம்- 1934

ஜேம்ஸ் ஆலன் எழுதிய "From Poverty to Power"என்ற நூலின் இரண்டாம் பகுதி "The way to peace" ஆகும். அதனை வ.உ.சி. "சாந்திக்கு மார்க்கம்" என்று மொழி பெயர்த்தார். ஆத்ம தியானம் கடவுளை அடைவதற்குரிய வழியாகும். தியானமென்பது ஒரு கொள்கையை அல்லது ஒரு விஷயத்தை முற்றிலும் அறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆழ்ந்து சிந்தித்தல் ஆகும். அன்பு எல்லாவற்றையும் ஆளக் கூடியது. அடக்கம் கடவுள் தன்மை ஆகும். எவன் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொறுமையானவனாகவும், இனிமையானவனாகவும், அன்பானவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறானோ அவன் தான் மெய்ப்பொருளை உணர்கிறான். சுய நலத்தைத் துறத்தலும் இறை நம்பிக்கையும் கடவுள் தன்மையை அடைவதற்கு உரிய வழிகளாகும். அன்பே நிரந்தரமானது. வ.உ.சி. நூல் திரட்டு. பக்க எண் 715; 740; 760; 766.

சான்றிதழ்

[தொகு]

"சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்"

1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை. வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும் வேகத்துக்கும் இதனை விடச் சிறந்த அங்கீகாரத்தை வேறு எவரும் தந்துவிட முடியாது.

வ.உ.சிதம்பரனார் குறித்து மு.வரதராசனார் எழுதிய பாடல்

ஒழுக்கத்தின் உரவோய் நாட்டின்
உரிமைப்போர் நடந்த காலை
எழுச்சியின் தலைமை ஏற்றே
இணையிலாத் தியாகம் செய்தோய்
மொழிப் பற்றும் நாட்டுப் பற்றும்
முற்றிலும் ஒன்றி நிற்க
விழிப் பொறி இரண்டும் போல
விழுப்பமாய்க் கொண்டாய் அய்யா
பாரதி பெற்ற நண்ப
பழியிலா வீர வாழ்க்கை
பாரெல்லாம் ஏத்தும் வண்ணம்
பண்புடன் நடத்தி நின்றோய்
வேருடன் நைந்து வாடி
வெள்ளையர் ஆட்சி வீழ
நேரிலாப் போர்கள் செய் தாய்
நித்தமும் நின் பேர் வாழி"

[7]ம. பொ. சிவஞானம் கிராமணியார்

சிதம்பரனார் செய்த தியாகங்களை உலகறிய செய்தவர் ம.பொ.சி. அவர்கள். வ. உ. சி. பற்றி ம.பொ.சி எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூல் பெருமை வாய்ந்தது. இதன் காரணமாக பின்னாளில் வ.உ.சி, 'கப்பலோட்டிய தமிழன்' என்றே தமிழ்நாடு முழுவதும் போற்றப்பட்டார். நாடக மேதை ஔவை சண்முகம் அவர்கள் ம.பொ.சியின் நூலை தழுவி கப்பலோட்டிய தமிழன் என்னும் என்னும் நாடகத்தை இயக்கினார். அந்த நாடகத்தைப் பார்த்த பி. ஆர். பந்துலு அவர்கள் கப்பலோட்டிய தமிழன் என்னும் திரைப்படத்தை இயக்கினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வ. உ. சிதம்பரம் பிள்ளையாகவே வாழ்ந்து காட்டி இருந்தார்கள்.

சிதம்பரனார் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்:

  • கப்பலோட்டிய தமிழன் [1944]
  • தளபதி சிதம்பரனார் [1950]
  • கப்பலோட்டிய சிதம்பரனார் (விரிவான பதிப்பு) [1972]

வ.உ.சி சிலைஅமைத்தல்

[தொகு]

ம. பொ. சிவஞானம் அவர்கள்1939 ஆம் ஆண்டு சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், வ.உ.சிதம்பரனாருக்கு சிலை வைக்க முயன்று அச்செலவிற்கு பணம் படைத்தோரின் உதவி நாடி அம்முயற்சி தோல்வியுற்றதால் மனம் வருந்தி, ஹாமில்டன் வாராவதியருகிலுள்ள கட்டைத் தொட்டிக் கடைக்காரர்களிடம் சென்று கடைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கையேந்தி பணம் பெற்றும் டிராம்வே தொழிலாளர் சங்கம், ராயபுரம் அலுமினியம் தொழிலாளர் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் உதவியோடும் சிலை வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.[8]

முக்கியமான நினைவுச் சின்னங்கள்

[தொகு]

சிலைகள்

[தொகு]
  1. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரியில் முழுதிருஉருவச்சிலை வ. உ. சி இளைய தலைமுறைகள் சதிஸ்குமார் என்பவரால் நிறுவப்பட்டது.
  2. சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலக முகப்பு.(1939)
  3. திருநெல்வேலி பாளையங்கோட்டை நுழைவாயில்.
  4. சென்னை மெரீனா கடற்கரை.
  5. தூத்துக்குடி துறைமுகம்.(முன்னாள் பிரதம மந்திரி திருமதி. இந்திரா காந்தி அம்மையாரால் திறந்து வைக்கப்பட்டது.)
  6. மதுரை சிம்மக்கல் (முன்னாள் முதல் அமைச்சர் திரு. எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.)
  7. திருநெல்வேலி வ.உ.சி. நினைவு இல்லம். (முதல் அமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இன்னும் பல இடங்களில் வ.உ.சி. சிலைகள் உள்ளன. தெருக்கள், பள்ளிகள், குடியிருப்புகள் ஆகியவற்றிற்கு வ.உ.சி. பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நினைவு இல்லங்கள்

[தொகு]
  • ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி. யின் இல்லம்.[9]

தமிழ்நாடு அரசு வ.உ.சிதம்பரனார் பிறந்த தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊரில் வ.உ.சிதம்பரனார் இல்லம் அமைத்துள்ளது. இதில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இங்கு வ.உ.சி. அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

  • திருநெல்வேலி வ.உ.சி. நினைவு இல்லம்.

அஞ்சல் தலை

[தொகு]
வ. உ. சிதம்பரம் பிள்ளை நினைவு அஞ்சல் தலை, ஆண்டு 1972

வ.உ.சி. யின் நூற்றாண்டு விழாவின் போது முன்னாள் பிரதம மந்திரி திருமதி. இந்திரா காந்தி அம்மையாரால் 5 செப்டம்பர் 1972 அன்று வெளியிடப்பட்டது.[10]

திரைப்படம்

[தொகு]

வ.உ.சி. யின் வாழ்க்கை வரலாறு கப்பலோட்டிய தமிழன் என்ற பெயரில் வெளியானது. நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் வ.உ.சி. யாகத் தோன்றினார். திரு. டி. ஆர். பந்துலு அவர்கள் படத்தைத் தயாரித்து இயக்கினார்.

செக்கு

[தொகு]

கோயம்புத்தூர் மத்தியசிறையில் வ.உ.சி. இழுத்த செக்கு சென்னை காந்தி நினைவு மண்டபத்தில் நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது.

துறைமுகம்

[தொகு]

தூத்துக்குடி துறைமுகம் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடியைத் தலைநகராகக் கொண்டு 1986-ல் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது இவருடைய பெயர் அந்த மாவட்டத்துக்கு வைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. வ.உ.சி.யின் கடைசி மகன் வாலேஸ்வரன் சென்னையில் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு. இந்து தமிழ் திசை. 26 சூலை 2015.
  2. அ.வெண்ணிலா, ed. (31 மே 2018). மரணம் ஒரு கலை 14: சுதந்திர போராட்டத்தின் கலங்கரை விளக்கம். தி ஹிந்து தமிழ் இதழ்.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-06. பார்க்கப்பட்ட நாள் 2012-09-09.
  4. Dyen of Swadeshi shipping பரணிடப்பட்டது 2014-11-26 at Archive.today 'The Hindu' 22 September 2001 Retrieved 2 March 2012
  5. சுவாமி ராமகிருஷ்ணானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 236
  6. வ. உ. சி., கப்பலோட்டிய இந்தியர்
  7. தினமணி ; 1. செப்டம்பர் 2013
  8. தினமணி கதிர்; 9. மார்ச்சு 2014; பக்கம் 6,7; (கட்டுரைக்களஞ்சியம் நூலில் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்)
  9. http://www.tn.gov.in/tamiltngov/memorial/voc.htm
  10. வ. உ. சி அஞ்சல் தலை வெளியிடு

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._உ._சிதம்பரம்பிள்ளை&oldid=4087665" இலிருந்து மீள்விக்கப்பட்டது