ஆலன் ஆக்டவியன் ஹியூம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (1829–1912)

ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (Allan Octavian Hume) (6 சூன் 1829 – 31 சூலை 1912), இங்கிலாந்தின் கென்ட் நகரில் ஜோசப் - மரியா தம்பதியின் எட்டாவது குழந்தையாக ஆலன் ஆக்டேவியன் ஹியூம் பிறந்தார். தந்தை ஜோசப் ஹியூம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஒரு தீவிர உறுப்பினராக இருந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்ததும் ஆலன் ஓர் ஐ.சி.எஸ். அதிகாரியாகத் தேர்வு பெற்று இந்தியாவில் 1850-ல் உத்தரப் பிரதேசத்தில் பணியைத் தொடங்கினார். இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை துவக்கக் காரணமானவர்களில் இவரும் ஒருவர்.[1]

எட்டாவா நகரில் 1856-ல் ஓர் ஆங்கிலப் பள்ளிக்கூடத்தை ஆலன் தொடங்கினார். ஆலன் ஆற்றிய பணியைப் போற்றும் வகையில் பிற்காலத்தில் அந்தப்பகுதி "ஹியூம் கஞ்ஜ்' என்று வழங்கப்பட்டு அது மருவி தற்பொழுது "ஹோம் கஞ்ஜ்' என அழைக்கப்படுகிறது.

1857-ல் சிப்பாய்க் கலகத்துக்குப் பிறகு ஆங்கில மேலதிகாரிகளின் 1859 ஜனவரி சுற்றறிக்கையின்படி இந்திய மாணவர்களுக்குக் கல்வி தரும் திட்டத்தை உடனடியாக நிறுத்திவிட வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அந்தச் சுற்றறிக்கைக்குப் பதிலாக 1859 மார்ச் 30-ம் தேதியிட்ட கடிதத்தில் ஆலன் பின்வரும் கருத்தை வலியுறுத்தினார்: ""இந்திய மாணவர்களுக்குக் கல்வி தரும் முயற்சி அதிகமாக வேண்டும் என்று இதற்கு முன் கிழக்கு இந்தியக் கம்பெனியின் இயக்குநர்கள் போட்ட உத்தரவு உள்ளது.

அதன்படி தொடர்ந்து கல்வி அறிவைப் பரப்புவது நல்லது. கல்வி அறிவு மூலம் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டால்தான் அது அரசுக்கு நன்மை பயக்கும். அறியாமையில் மக்களை அடக்கி வைப்பதால் கடைசியில் எதற்கும் அடங்காத ஆவேசம் மக்களுக்கு ஏற்பட்டு எதிர்ப்படும் எல்லாக் கட்டுப்பாடுகளையும் அவர்கள் உடைத்தெறிந்துவிடுவார்கள் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் இருக்கின்றன.

மக்களுடைய முன்னேற்றத்தில் அக்கறை காட்டி அவர்களுடைய மதிப்பையும், நம்பிக்கையையும் பெறுவதில்தான் அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

ஆங்கில அரசாங்கம் மேற்கொண்ட பற்பல சீர்கேடான நடவடிக்கைகளை ஆலன் வலுவாக எதிர்த்தார். எடுத்துக்காட்டாக, மதுக்கடைகளை ஆங்காங்கு விரிவுபடுத்தி அதனால் கிடைக்கும் ஏராளமான வருவாயை அரசாங்கம் ஆண்டுதோறும் பெருக்கிக் கொள்வதை ஆலன் கண்டித்தார். அதனால், குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஏழைகளின் குடும்பங்கள் படும் துன்பங்களைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கம் தனது வரி வசூலை மட்டும் கவனித்துக் கொண்டிராமல் மக்களின் நலன்களையும் கவனிக்க வேண்டும் என்று 1860 மே மாதத்தில் ஆலன் எழுதிய அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.

ஆலன் தந்த ஆலோசனைகளையும், முற்போக்கான திட்டங்களையும் அப்பொழுது இருந்த ஆங்கில மேலதிகாரிகள் பலர் புறக்கணித்தாலும், வைஸ்ராய் பதவிக்கு வந்த மேயோ பிரபு, ரிப்பன் பிரபு போன்றோர் ஆலனின் ஆலோசனைகளை வரவேற்றார்கள். விவசாயத் துறையை மேம்படுத்த ஆலன் அளித்த ஆய்வறிக்கைகளைப் பார்த்த மேயோ பிரபு, அவற்றை நிறைவேற்ற ஆலன்தான் பொருத்தமானவர் என்று முடிவெடுத்து 1870-ல் ஆங்கில அரசின் வைஸ்ராய் தலைமையகத்தில் விவசாயம், வருவாய், வணிகம் உள்ளிட்ட துறையில் செயலாளராக ஆலன் நியமிக்கப்பட்டார்.

1876-ல் வைஸ்ராயாக வந்த லிட்டன் பிரபுவுடன் ஆலனால் பல பிரச்னைகளில் ஒத்துப்போக இயலவில்லை. குறிப்பாக, வெளிநாட்டு வணிக ஒப்பந்தங்களில் இந்தியாவுக்கு ஏற்படவிருந்த பெரும் இழப்புகளை ஆலன் சுட்டிக்காட்டினார்.

மேலும், 1876-78-ல் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஒரு கோடி மக்கள் மாண்டனர். அதற்கான தீர்வு ஆலன் தந்த பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவை லிட்டன் பிரபுவுக்குப் பிடிக்கவில்லை. உடனே, ஆலன் செயலாளர் பணியிலிருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டு அப்பொழுது இருந்த வடமேற்கு மாகாணத்தின் (தற்கால உத்தரப்பிரதேசம்) வருவாய்த் துறை வாரியத்தின் இளநிலை உறுப்பினராக அனுப்பப்பட்டார். அப்பொழுது இருந்த பத்திரிகைகள் அனைத்தும் கடுமையான முறையில்மிக நேர்மையான ஓர் அதிகாரி ஆட்சியாளர்களால் மிக மோசமாக நடத்தப்பட்டார் என்று கண்டித்தன.

1882 ஜனவரி முதல் நாளில் தமது அரசாங்கப் பதவியை ஆலன் துறந்துவிட்டார். அதன் பிறகு இந்திய மக்களுக்குத் தாம் செய்ய வேண்டிய கடமை ஒன்று அவருக்கு இருந்தது. அது, ஆங்கில அரசாங்கம் இந்தியர்களுக்குச் செய்து வரும் அநீதிகளை வெளிப்படுத்தி தக்க முன்னேற்றத்தைத் தர வேண்டும் என்பதை வலியுறுத்த இங்கிலாந்து சென்று, அங்கு இந்தியா பற்றிய ஓர் அமைப்பை உண்டாக்க அவர் திட்டமிட்டார். ஆனால், வில்லியம் வெட்டர்பர்ன் போன்று இருந்த நண்பர்கள் இங்கிலாந்துக்குச் செல்வதைவிட இந்தியாவிலேயே இந்திய மக்களுக்காக ஓர் அமைப்பை உருவாக்குவது நல்லது என்று ஆலோசனை கூறினார்கள்.

இந்தியாவின் உரிமைகளை நிலைநாட்டவும், இந்தியாவை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்லவும் தக்கதொரு அமைப்பை உருவாக்க ஆலன் எடுத்த முதல் முயற்சி, கோல்கத்தா பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளுக்கு 1883, மார்ச் 1-ல் சிறந்ததொரு வெளிப்படையான வேண்டுகோளை வெளியிட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Allan-Octavian-Hume

வெளி இணைப்புகள்[தொகு]

Works
Biographical sources
தாவரவியல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்_ஆக்டவியன்_ஹியூம்&oldid=2454301" இருந்து மீள்விக்கப்பட்டது