இணைய ஆவணகம்
இணைய ஆவணகம் (Internet Archive) அல்லது இணைய ஆவணக் காப்பகம் என்பது இலவச, திறந்த கணினிவழி மின்னூலகம் மற்றும் உலகளாவிய இணைய தள ஆவணப்படுத்தல் ஆகியவற்றைக் கட்டமைத்து பேணும் ஓர் இலாப நோக்கமில்லா நிறுவனமாகும்.
இதன் அலுவலகம் ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலம், சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள பிரிசிடியோ எனுமிடத்தில் உள்ளது. இணைய ஆவணகத்தின் தகவல் தொகுப்பு மையங்கள் சான் பிரான்சிஸ்கோ, ரெட்வுட் நகரம், மவுன்டன் வியூ ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இணைய ஆவணகத்தில் உலகளாவிய இணையத்தின் கண நேரப் படிமங்கள் (Snapshots) (பல்வேறு நேரங்களில் எடுக்கப்பட்ட பக்கங்களின் படிம ஆவணம்), மென்பொருட்கள், திரைப்படங்கள், நூல்கள், ஒலிப்பேழைகள் ஆகியவை சேமிக்கப்படும்.
இணைய ஆவணகத்தின் நிலைத் தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு அதன் சேகரிப்புகள் அனைத்தும் எகிப்து நாட்டில் உள்ள பிபிலியோதெகா அலெக்சாண்டிரினா (Bibliotheca Alexandrina) எனும் நூலகத்தில் ஆடிவிம்பம் (mirror) [1] செய்யப்படுகிறது. உலகில் ஆடிவிம்பம் செய்யப்பட்ட ஒரே நூலகம் இதுவாகும்.
இணைய ஆவணகத்தின் சேகரிப்புகள் ஆய்வாளர்கள், வரலாற்றாசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த அமைப்பு அமெரிக்க நூலகக் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் உள்ளது. இணைய ஆவணகத்தை ஒரு நூலகம் என்று கலிஃபோர்னியா மாநிலம் அலுவல் நிலையில் அங்கீகரித்துள்ளது.[2]
வரலாறு
[தொகு]பிரெவஸ்டர் காலே (Brewster Kahle) என்பாரால் 1996-ஆம் ஆண்டு இணைய ஆவணகம் தொடங்கப்பட்டது. கலாச்சார, பண்பாட்டு படிவங்களைக் காப்பதற்கு உலகின் பெரும்பாலான சமூகங்கள் மிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. அந்த படிவங்கள் நினைவில் இல்லாவிட்டால் எந்தவொரு நாகரிகமும் தனது வெற்றி, தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ள முடியாது. நமது கலாச்சாரம் தற்போது மிக அதிகளவிலான கலாச்சாரப் படிவங்களை எண்ம வடிவில் உருவாக்குகிறது. அவ்வாறு உருவாக்கப்படும் படிவங்களைப் பாதுகாத்தலோடு, ஆய்வாளர்களுக்கும், வரலாற்றாசிரியர்களுக்கும், அறிஞர்களுக்கும் அளித்து உதவுவதே இணைய ஆவணகத்தின் நோக்கமாகும் என்று அந்த இணையத்தளம் தனது குறிக்கோள் பற்றிக் கூறுகிறது.
வந்தவழிப் பொறி
[தொகு]வந்தவழிப் பொறியில் உள்ள
ஆவணப்படுத்தல்களின்
எடுத்துக்காட்டுகள்:
வந்தவழிப் பொறி (Wayback Machine) என்பது இணைய ஆவணகத்தால் உருவாக்கப்பட்ட எண்முறைக் காலங்காட்டி ஆகும். இது அலெக்ஸா இணையத்தின் (Alexa Internet) உள்ளடக்கத்தால் பேணப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் ஆவணப்படுத்தப்பட்ட இணையப் பக்கங்களை பயனர்கள் பார்க்கும் வாய்ப்பை அளிக்கிறது. இதை முப்பரிமாண பொருளடக்கம் (3-D Index) என்று இணைய ஆவணகம் அழைக்கிறது. முன்னரே ஆணையிடப்பட்ட இணையதளங்களில் இருந்து கணநேரப் படிமங்கள் (Snapshots) ஆவணப்படுத்தப்பட்ட பிறகு 6 முதல் 18 மாதங்கள் வரை இதில் இருப்பிருக்கும். கணநேரப் படிம ஆவணப்படுத்தலானது வெவ்வேறுபட்ட கால நேரத்தில் எடுக்கப்படுவதால் இணையப் பக்கங்களில் செய்யப்படும் அனைத்து இற்றைப்படுத்தல்களும் சேமிக்கப்படுவதில்லை. சில நேரங்களில் பல வார இடைவெளி கூட ஏற்படுவது உண்டு.
2009-ஆம் ஆண்டு கணக்கின்படி வந்தவழிப் பொறியில் 3 பெடாபைட் அளவு தகவல்கள் உள்ளன. இது மாதத்துக்கு 100 டெராபைட் அளவுக்கு வளர்ந்து வருகிறது.[3] அதே வேளை, 2003-ஆம் ஆண்டு மாதத்துக்கு 12 டெராபைட் தகவல்களே சேமிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதக் கணக்கின்படி 150 பில்லியன் பக்கங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகவல்கள் அனைத்தும் கேப்ரிகார்ன் டெக்னாலசிசு நிறுவன உருவாக்கமான பெடாபாக்சு (Petabox) எனும் ஒருங்கியத்தில் சேகரம் செய்யப்படுகின்றன.[4]
2009-ஆம் ஆண்டு இணைய ஆவணகம் தன்னுடைய தகவல் சேமிப்பு ஒருங்கியத்தைக் கலிஃபோர்னியாவில் சன் மைக்ரோ சிச்டம்சு (Sun Microsystems) வளாகத்தில் உள்ள சன் மாடுலர் டேட்டா சென்டர் என்ற புதிய தகவல் மையத்துக்கு மாற்றியது.[5] ஜனவரி 1, 1996-ஆம் ஆண்டு முதல் வந்தவழிப் பொறியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தவரை இத் தேடல் பொறியில் 2003-ஆம் ஆண்டு முதல்தான் ஆவணப்படுத்தப்படுகிறது. இதில் 2003-ல் இரண்டு பக்கங்களும், 2004-ல் ஒன்பது பக்கங்களும், 2005-ல் 15 பக்கங்களும், 2006-ல் 28 பக்கங்களும், 2007-ல் 6 பக்கங்களும் உள்ளன. 2008, 2009-ஆம் ஆண்டுகளுக்கான ஆவணத் தரவுகள் அதில் இல்லை.
பெயர்க் காரணம்
[தொகு]தி ராக்கி அன்டு புல்வின்கில் சோ (The Rocky and Bullwinkle Show) எனும் நாடகத்தில் பீபாடி மற்றும் செர்மான் ஆகியோர் பயன்படுத்தும் காலப் பொறியின் பெயர் WABAC machine என்பதாகும். வரலாற்றில் நிகழும் இன்றியமையாத நிகழ்வுகளினை ஒரு சான்றாளனாக இருந்து அவற்றை மாற்றாமல் காப்பது என்பது இதன் பொருள். அதிலிருந்தே வந்தவழிப் பொறி (Wayback Machine) என்ற பெயரை இணைய ஆவணகம் உருவாக்கியது.[6]
இதை-ஆவணமாக்கு
[தொகு]தகவல்களை நிலையாகவும் உடனடியாகவும் ஆவணப்படுத்த விரும்பும் பயனர்கள் கட்டண அடிப்படையில் செயல்படும் இதை-ஆவணமாக்கு (Archive-It) ஒருங்கியத்தைப் பயன்படுத்தலாம்.[7] இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் அவ்வப்போது வந்தவழிப் பொறியில் திருப்பல் (Indexed) செய்யப்படும். 2009-ஆம் ஆண்டு அக்டோபர் 2 வரை, 905 அரசு அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், கலாசார நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களினது சார்பாக 1,165,398,781 வலைதள முகவரிகளில் இருந்து பக்கங்களை இதை-ஆவணமாக்கு ஆவணப்படுத்தி உள்ளது. மின்னிலக்கிய அமைப்பு (Electronic Literature Organization), வட கரோலினா மாநில ஆவணகம், டெக்சஸ் மாநில நூலகம் மற்றும் ஆவணக ஆணையம், இசுடான்ஃபர்ட் பல்கலைக்கழகம் (Stanford University), ஆஸ்திரேலிய நாட்டு நூலகம், ஆய்வு நூலகக் குழு (Research Libraries Group) உள்ளிட்டவை இதை-ஆவணமாக்கு திட்டத்தில் பங்குபெறும் அமைப்புகளில் சிலவாகும்.
பல்லூடகத் தொகுப்புகள்
[தொகு]வலைதளப் பக்கங்களைக் காப்பதோடு அல்லாமல், அமெரிக்காவில் பொது டொமைன் என்று அறிவிக்கப்பட்ட அல்லது கிரியேட்டிவ் காமன்ஸ் போன்ற அளிப்புரிமை அளிக்கப்பட்ட பல்லூடகப் படிமம், நகர்படம், ஒலி, ஒளிக் குறிப்புகள் ஆகிய எண்ம உள்ளடக்கங்களையும் இணைய ஆவணகம் சேகரிக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் சேமிக்கப்படும் உள்ளடக்கங்கள் திறமூல வகையைச் சேர்ந்தவை ஆதலால் பொதுமக்களும் தங்கள் பங்களிப்புகளைச் செய்வதன் மூலம் அதில் மேலும் பல எண்ம உள்ளடக்கங்களைச் சேர்க்க முடியும்.
நகர்படிமத் தொகுப்பு
[தொகு]திரைப்படங்கள் மட்டுமின்றி, செய்தித் தொகுப்புகள், பழமையான கேலிச்சித்திரங்கள் (Cartoon) போருக்கு ஆதரவான, எதிர்ப்பான பரப்புரைகள், விளம்பரப் படங்கள், கல்வி, தொழில் தொடர்பான நகர்படங்கள், வீட்டில் எடுக்கப்பட்ட குறும்படங்கள் ஆகியவையும் இணைய ஆவணகம் தன்னகத்தே கொண்டுள்ளது. 2004-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த நகர்படம் இந்த ஆவணகத்தில் இருந்து அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டது. அதே போல 2004-ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் பற்றிய விளக்கப்படம் அதிகளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டது. உலக வர்த்தக மையம் அமைந்த இரட்டைக் கோபுரங்கள் மீது செப்டம்பர் 11, 2001-ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்தது குறித்து உலகின் மிகக் கவனம் பெறக்கூடிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு படங்கள் செப்டம்பர் 11 தொலைக்காட்சி ஆவணம் எனும் தலைப்பின் கீழ் சேமிக்கப்பட்டுள்ளது.
ஒலித் தொகுப்பு
[தொகு]இதில் இசை, ஒலி நூல்கள், செய்தி ஒலிபரப்புகள், பழைய வானொலி ஒலிபரப்புத் தொகுப்புகள் உட்பட பல்வேறு ஒலித் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு நிகழிசை ஆவணகம் (Live Music Archive) என்று பெயர். இதில் தனிப்பட்ட கலைஞர்களின் 50 ஆயிரத்திற்கும் அதிகமான இசை நிகழ்வுகளின் தொகுப்புகள் அடங்கியுள்ளன. இவை தவிர, அனுமதி பெற்றுச் சேர்க்கப்பட்ட பல்வேறு இசைத் தொகுப்புகளும் உள்ளன.
இணைய ஆவணகத்தில் தமிழ் விக்கிப்பீடியா
[தொகு]சென்னையில், கிழக்கு மொட்டைமாடி உரையாடலில் விக்கிப்பீடியா ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் விக்கி நிர்வாகி ரவிசங்கர் ஆற்றிய உரையின் ஒலித் தொகுப்பு இணைய ஆவணகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.[8]
நூல் தொகுப்பு
[தொகு]உலகின் பல்வேறு நூலகங்களிலிருந்து பெறப்பட்ட எண்மயமாக்கப்பட்ட நூல்களின் தொகுப்பும் இதில் உள்ளன. 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதக் கணக்கீட்டின்படி இணைய ஆவணகத்துக்கு ஐந்து நாடுகளில் பதினெட்டு மேவுதல் (scanning) மையங்கள் உள்ளன. இதில் நாளொன்றுக்கு ஆயிரம் நூல்கள் மேவுதல் மூலம் எண்மயப்படுத்தப்படுகின்றன. இவை பல்வேறு நூலக, தன்னார்வ நிறுவனங்களின் நிதியுதவியால் செயல்படுகின்றன.[9] 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதக் கணக்கீட்டின்படி 10 இலட்சம் நூல்கள் இணைய ஆவணகத்தில் இருந்தன. இவை 0.5 பெடாபைட்டுகள் அளவிற்கு உள்ளன. இதில் ஒளிப்படிமங்கள், வெட்டப்பட்ட படிமங்கள், பிடிஎஃப் படிவங்கள், முதன்மைத் தகவல்கள் ஆகியவை உள்ளடங்கும்.[10] 2006 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது நிகழ் நூல் தேடி (Live Search Books) திட்டத்துக்காக இணைய ஆவணகத்துடன் தொடர்பேற்படுத்தியது. பொருளுதவி, கருவியுதவி வழங்கியதன் மூலம் மூன்று இலட்சம் நூல்கள் எண்மயப்படுத்தப்பட்டன. 2008-ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி தனது திட்டத்தை நிறுத்திக் கொள்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்தது.[11]
2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதவாக்கில் கூகிள் நூல் தேடி இடமிருந்து நூல்களைப் பெற்றது.[12] இணைய ஆவணகத்தில் 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருந்த மொத்த நூற்தொகுப்புகளில் பாதியளவு கூகிள் நூல் தேடியிலிருந்து பெறப்பட்டவையாக இருந்தன. கூகிளில் உள்ளது போன்றே இணைய ஆவணகத்தில் உள்ள நூல்களும் உள்ளன.[13]
நடமாடும் இணைய ஆவணகம்
[தொகு]இணைய ஆவணகத்தை பயனர்களின் இடங்களுக்கே நேரடியாகக் கொண்டு செல்ல செப்டெம்பர் 30, 2002-ஆம் ஆண்டு துவங்கப்பட்டதே நடமாடும் இணைய ஆவணகம் (Internet Archive Bookmobile) ஆகும்.
அமெரிக்கா முழுவதும் பயணம் மேற்கொள்ளும் இவ்வாகனம், பொது மக்கள் கூடும் இடங்களான நூலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் நிறுத்தப்படும். இணைய ஆவணகத்தில் உள்ள நூல்களை இந்த வாகனத்தில் இருந்தபடி தேர்ந்தெடுத்து படிக்கலாம். அதை வேண்டுதல்களின் அடிப்படையில் அச்சடித்தும் நூல்களாகவும் பெறலாம். இதற்காக இதில் செயற்கைக்கோள் தொடர்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அச்சடிக்கப்படும் நூல்களின் பட்டியல் மூலம் மக்களுக்கு மிகத் தேவையான நூல்கள், ஆவணங்கள் எவை என்பதை அறிய இயலும். அதன் மூலம் அது தொடர்பான உள்ளடக்கங்களை இணைய ஆவணகத்தில் மேலும் அதிகமாக்க முடியும்.
திறந்த நூலகம்
[தொகு]இணைய ஆவணகத்தின் மற்றொரு திட்டம் திறந்த நூலகம் (Open Library) ஆகும். பீட்டா நிலையில் உள்ள இத்திட்டத்தில், உலகில் வெளியான நூல்களின் பட்டியல், தகவல் தொகுப்புகள் இடம்பெறும். திறமூல அமைப்பில் உள்ள இது உலகப் பட்டியல் (WorldCat) எனப்படும். இதில் ஏறத்தாழ இரண்டு கோடி நூல்களின் பட்டியலும், பத்து இலட்சம் முழுமையான நூல்களின் தேடத்தகுந்த பட்டியலும் இடம்பெற்றுள்ளது.[14][15] திறமூல மென்பொருள் (Open Source Software) திட்டமான இதன் மூல நிரல் திறந்த நூலகத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- The Internet Archive in California, United States
- Internet Archive Mirror at the Bibliotheca Alexandrina, Egypt
இவற்றையும் பார்க்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ The Internet Archive at the New Library of Alexandria.
- ↑ " Internet Archive officially a library", May 2, 2007.
- ↑ Mearian, Lucas (19 March 2009). "Internet Archive to unveil massive Wayback Machine data center". Computerworld.com. http://www.computerworld.com/action/article.do?command=viewArticleBasic&taxonomyName=hardware&articleId=9130081&taxonomyId=12&intsrc=kc_top. பார்த்த நாள்: 2009-03-22.
- ↑ Kanellos, Michael (29 July 2005). "Big storage on the cheap". CNET News.com. http://news.zdnet.com/2100-9584_22-5808754.html. பார்த்த நாள்: 2007-07-29.
- ↑ "Internet Archive and Sun Microsystems Create Living History of the Internet". [[Sun
Microsystems]]. 25 March 2009. Archived from the original on 2009-03-26. பார்க்கப்பட்ட நாள் 2009-03-27.
{{cite web}}
: line feed character in|publisher=
at position 6 (help); line feed character in|title=
at position 25 (help) - ↑ Green, Heather (28 February 2002). [http://www.businessweek.com/technology/content/feb2002/tc20020228_1080.htm "A Library as Big as the World"]. BusinessWeek. http://www.businessweek.com/technology/content/feb2002/tc20020228_1080.htm. பார்த்த நாள்: 2007-07-29.
- ↑ Stefanie Olsen,"Preserving the Webone group at a time"[தொடர்பிழந்த இணைப்பு], CNet News.com, May 1, 2006.
- ↑ http://www.archive.org/details/BadriSeshadriAnIntroductiontoTamilWikipediabyRavisankar_KizhakkuMottaimaadi/
- ↑ "Books Scanning to be Publicly Funded", announcement by Brewster Khale, May 23, 2008.
- ↑ "Bulk Access to OCR for 1 Million Books", via Open Library Blog, by raj, November 24, 2008.
- ↑ "Book search winding down" பரணிடப்பட்டது 2008-08-20 at the வந்தவழி இயந்திரம், Live Search Blog. Official announcement from Microsoft. Last accessed May 23, 2008.
- ↑ Google Books at Internet Archive.
- ↑ Books imported from Google have a metadata tag of scanner:google for searching purposes. The archive links back to Google for PDF copies, but also maintains a local PDF copy, which is viewable under the "All Files: HTTP" link.
- ↑ Gonsalves, Antone (20 December 2006). [https://web.archive.org/web/20071014174528/http://informationweek.com/story/showArticle.jhtml?articleID=196701339 "Internet Archive Claims Progress Against Google Library Initiative"]. InformationWeek இம் மூலத்தில் இருந்து 2007-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071014174528/http://informationweek.com/story/showArticle.jhtml?articleID=196701339. பார்த்த நாள்: 2007-01-05.
- ↑ [http://chronicle.com/wiredcampus/index.php?id=2235?=atwc "The Open Library Makes Its Online Debut"]. Chronicle of Higher Education, The Wired Campus. 19 July 2007. http://chronicle.com/wiredcampus/index.php?id=2235?=atwc. பார்த்த நாள்: 2007-07-30.
வெளி இணைப்புகள்
[தொகு]- BLOG - What's New at theInternet Archive
- Internet Archive - Web Archiving Blog[தொடர்பிழந்த இணைப்பு]
- The Other Minds Archive –New Music Resource from radiom.org
- Pictures and descriptions ofthe Wayback Machine hardware in 2003 (prior to the Petabox), with costinformation
- Erik Ringmar,"Liberate and Disseminate," Times Higher Education Supplement,April 10, 2008.
- Earliest known website of Internet Archive (www.archive.org) from 1997
- Early websites from 1996
- 'இதை-ஆவணமாக்கு' இணையதளம்