உள்ளடக்கத்துக்குச் செல்

சுப்பிரமணிய பாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாரதியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மகாகவி
சி. சுப்பிரமணிய பாரதி
பாரதியார்
சுப்பிரமணிய பாரதி
பிறப்புசுப்பிரமணியன்
(1882-12-11)திசம்பர் 11, 1882
எட்டயபுரம், திருநெல்வேலி மாவட்டம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய தூத்துக்குடி மாவட்டம், இந்தியா)
இறப்புசெப்டம்பர் 11, 1921(1921-09-11) (அகவை 38)
சென்னை, பிரித்தானிய இந்தியா
இருப்பிடம்திருவல்லிக்கேணி, சென்னை
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்மகாகவி, பாரதியார், வீர கவி, சுப்பையா, முண்டாசுக் கவிஞன், சக்தி தாசன்
பணிசெய்தியாளர்
அறியப்படுவதுகவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி
குறிப்பிடத்தக்க படைப்புகள்
பின்பற்றுவோர்பாரதிதாசன்
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்
சமயம்இந்து சமயம்
பெற்றோர்சின்னசாமி ஐயர்
இலக்குமி அம்மாள்
வாழ்க்கைத்
துணை
செல்லம்மாள்
பிள்ளைகள்தங்கம்மாள் (பி: 1904)
சகுந்தலா (பி: 1908)
கையொப்பம்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் "மகாகவி" ("மகத்தான கவிஞர்") என்ற புனைபெயரைக் கொண்டு அறியப்படுகிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது தேசபக்தியைத் தூண்டும் பாடல்கள் இவரது படைப்புகளில் அடங்கும். பெண் விடுதலைக்காகவும், சாதி மறுப்பு மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு எதிராகவும் போராடினார்.

1882 இல் திருநெல்வேலி மாவட்டம் (இன்றைய தூத்துக்குடி) எட்டயபுரத்தில் பிறந்த பாரதி, தனது ஆரம்பக் கல்வியை திருநெல்வேலி மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் பயின்றார். இவர் சுதேசமித்திரன், தி இந்து, பால பாரதா, விஜயா, சக்ரவர்த்தினி, மற்றும் இந்தியா உள்ளிட்ட பல இதழ்கள் மற்றும் செய்தித்தாள்களில் எழுதி வந்தார். பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு, பதஞ்சலி யோகசூத்திரம் (தமிழ் மொழிபெயர்ப்பு), பகவத் கீதை (தமிழ் மொழிபெயர்ப்பு), சின்னஞ்சிறு கிளியே, விநாயகர் நான்மணிமாலை, விடுதலை பாடல்கள் மற்றும் புதிய ஆத்திசூடி உள்ளிட்ட பல நூல்கள் மற்றும் பாடல்களை இயற்றியுள்ளார். இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.

1908 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கம் பாரதியைக் கைது செய்ய ஆணை பிறப்பித்ததால், இவர் பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிச்சேரியில் 1918 வரை ஏறத்தாழ பத்து ஆண்டுகள் வாழ்ந்தார். இவர் தினமும் உணவளிக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானையானயால் தாக்கப்பட்ட பிறகு உடல் நலம் குன்றிய இவர், சில மாதங்களுக்குப் பிறகு 1921 செப்டம்பர் 11 அன்று அதிகாலை இறந்தார்.

இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.பல மொழிகளில் புலமை பெற்ற பாரதி தமிழ் மொழியின் மீது தீர பற்றுக் கொண்டிருந்தார். இவரது படைப்புகள் அரசியல், சமூக மற்றும் ஆன்மீகக் கருப்பொருள்களை உள்ளடக்கியதாக விளங்கின. பாரதி இயற்றிய பாடல்கள் மற்றும் கவிதைகள் தமிழின் இலக்கியம், இசை மற்றும் அன்றாட வாழ்க்கையில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆரம்ப வாழ்க்கை

எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு

சுப்பிரமணியன் 1882 திசம்பர் 11 இல், சென்னை மாகாணத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் (இன்றைய தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு) உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.[1][2] இவரது பெற்றோர் சின்னசாமி ஐயர் மற்றும் இலக்குமி அம்மாள் ஆவர். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887-ஆம் ஆண்டு, சுப்பிரமணிக்கு ஐந்து வயதாகும் போது, இவரது தாயார் இலக்குமி அம்மாள் மறைந்தார். இதனால், இவரின் தந்தை மற்றும் பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.[3] இவரது தந்தை, ஆங்கிலம் மற்றும் கணிதம் கற்று இவர் ஒரு பொறியியலாளராக வர வேண்டும் என விரும்பினார்.[4] தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும் பொழுதே கவிப் புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். இவரின் திறமையால் இவர் "பாரதி" (கல்விக் கடவுள் சரசுவதியின் அனுகிரகம் பெற்றவர்) என்று அழைக்கப்பட்டார்.[3]

மனைவி செல்லம்மாளுடன் பாரதி

1897-ஆம் ஆண்டு, தனது பதினைந்தாம் வயதில் செல்லம்மாளை மணந்தார்.[3] 1898-ஆம் ஆண்டு இவரின் தந்தையின் மறைவுக்கு பின் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்துப் பொருளுதவி வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து எட்டையபுரத்தில் சிறிது காலம் பணி செய்த பாரதி பின்னர் அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார்.[2] ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் காசியில் ஒரு மடத்தில் தங்கி இருந்தார். அங்கு தங்கியிருந்தக் காலத்தில், பாரதி இந்து ஆன்மீகம் மற்றும் தேசியவாதத்தைப் பற்றி அறிந்து கொண்டார். சமசுகிருதம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளைக் கற்றுக்கொண்டார். சிகை வளர்த்து தலைப்பாகை அணிவதை தொடங்கினர்.[4]

இலக்கிய வாழ்க்கையும் விடுதலைப் போராட்டமும்

1900 களில் சுப்பிரமணிய பாரதி

1901 ஆம் ஆண்டு திரும்பிய பாரதி, எட்டயபுரம் அரண்மனையில் கவிஞராகப் பணியாற்றினார். அதே ஆண்டு இவர் எழுதிய பாடல்கள் விவேகபானு இதழில் வெளியானது. பிறகு சுதேசமித்திரன் இதழில் இணை ஆசிரியராகச் சேர்ந்தார்.[2] 1905 திசம்பரில் காசியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய போது சுவாமி விவேகானந்தரின் ஆன்மீக வாரிசான சகோதரி நிவேதிதையைச் சந்தித்தார்.[2] பெண்களின் சுதந்திரம் மற்றும் பெண்களுக்கான உரிமைகளுக்காகப் போராட அவர் பாரதிக்கு ஊக்கமளித்தார். பெண்களின் விடுதலை பாரதியின் மனதை வெகுவாக பாதித்தது. நிவேதிதையை சக்தியின் வெளிப்பாடாகக் கருதிய பாரதி, அவரை தனது குருவாக ஏற்றுக்கொண்டார்.[5] இவர் பின்னர் தாதாபாய் நௌரோஜியின் கீழ் கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் கலந்து கொண்டார், அது இந்திய விடுதலைக்காக போராட மற்றும் பிரித்தானியப் பொருட்களைப் புறக்கணிக்கக் கோரியது.[4]

1907 இல் பாரதியாரால் தொகுக்கப்பட்ட வார இதழ்

ஏப்ரல் 1907 வாக்கில், இவர் தமிழ் வார இதழான இந்தியா மற்றும் ஆங்கில செய்தித்தாளான பால பாரதம் ஆகியவற்றில் பங்களிக்கத் தொடங்கினார்.[2] இந்தக் காலக்கட்டத்தில் பாரதியின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் சாதனமாக இந்தப் பத்திரிகைகள் இருந்தன. இதன் பதிப்புகளில் பாரதி தனது கவிதைகளைத் தொடர்ந்து வெளியிடத் தொடங்கினார். இவரது பாடல்கள் தேசியவாதம் முதல் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவைப் பற்றிய சிந்தனைகள் வரை பல கருத்துக்களை உள்ளடக்கியதாக இருந்தன. இவர் உருசியப் புரட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி பற்றியும் எழுதினார்.[6]

பாண்டிச்சேரியில் பாரதியார் வாழ்ந்த இல்லம்

1907 ஆம் ஆண்டில் சூரத் நகரில் நடந்த காங்கிரசு மாநாட்டில் வ. உ. சிதம்பரம்பிள்ளை மற்றும் மண்டயம் சீனிவாச்சாரியார் ஆகியோருடன் பாரதி பங்கேற்றார்.[2] காங்கிரசில் ஒரு பிரிவினர் ஆயுதமேந்திய எதிர்ப்பை விரும்பினர். பால கங்காதர திலகர் தலைமையில் அணிவகுத்த இந்த பிரிவினருக்கு ஆதரவாக சிதம்பரனார், வரதாச்சாரியார் மற்றும் பாரதியார் இருந்தனர்.[4] 1908 இல், பிரித்தானியர்கள் சிதம்பரனாரைக் கைது செய்தனர். பின்னர் பாரதி எழுதி வந்த "இந்தியா" நாளிதழின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.[2] தானும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதை அறிந்த பாரதி, பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த பாண்டிச்சேரிக்குத் தப்பிச் சென்றார்.[7][8]

பாரதி வெளியிட்ட விஜயா இதழ்

பாண்டிச்சேரியில் வாழ்ந்த காலத்தில், அங்கிருந்து இந்தியா மற்றும் விஜயா என்ற தமிழ் நாளிதழ்கள், பால பாரதம் என்ற ஆங்கில மாத இதழ் மற்றும் உள்ளூர் வார இதழான சூர்யோதயம் ஆகியவற்றைத் தொகுத்து வெளியிட்டார். பிரித்தானியர்கள் இந்த இதழ்களின் வெளியீட்டை தடுக்க முயன்றனர். இந்தியா மற்றும் விஜயா இரண்டும் 1909 இல் பிரித்தானிய இந்தியாவில் தடை செய்யப்பட்டன.[4] பாண்டிச்சேரியில் சுதந்திர இயக்கத்தின் புரட்சிகரப் பிரிவின் அரவிந்தர், லாலா லஜபதி ராய் போன்ற பல தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு பாரதிக்குக் கிடைத்தது.[2] பாரதி ஆர்யா மற்றும் கர்ம யோகி போன்ற இதழ்களின் வெளியீட்டிற்கு அரவிந்தருக்கு உதவினார்.[6] இவர் வேத இலக்கியங்களைக் கற்கத் தொடங்கிய காலமும் இதுவே. 1912 ஆம் ஆண்டு இவரது பிரபலமான படைப்புகளான குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் மற்றும் கண்ணன் பாட்டு ஆகியவை இயற்றப்பட்டன. இவர் பதஞ்சலியின் யோக சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகியவற்றை தமிழுக்கு மொழிபெயர்த்தார்.[4]

நவம்பர் 1918 இல் கடலூர் அருகே பிரித்தானிய இந்தியாவுக்குள் நுழைந்த உடன் பாரதி கைது செய்யப்பட்டார்.[2] நவம்பர் 20 முதல் திசம்பர் 14 வரை மூன்று வாரங்கள் கடலூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அன்னி பெசன்ட் மற்றும் ராமசாமி ஐயர் ஆகியோரது முயற்சியால் விடுவிக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் வறுமையால் வாடிய இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். 1919 ஆம் ஆண்டு பாரதி முதன் முறையாக மகாத்மா காந்தியைச் சந்தித்தார். 1920 ஆம் ஆண்டு முதல் சுதேசிமித்திரன் இதழின் பதிப்பை மீண்டும் தொடங்கினார்.[9]

இறுதிக் காலம்

சிறைவாசதிற்கு பிறகு மிகவும் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட இவருக்கு 1920 வாக்கில் ஒரு பொது மன்னிப்பு ஆணை வழங்கப்பட்டது. இறுதியாக இவர் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியபோது, ​​பாரதி உடல்நலக்குறைவு மற்றும் ஏழ்மையுடன் போராடிக்கொண்டிருந்தார்.[2] இவர் வழக்கமாக உணவளிக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலின் லாவண்யா என்ற யானை, ஒரு நாள் இவர் தேங்காய் வழங்கியபோது, இவரைத் தாக்கியது. இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த போதிலும், இதன் விளைவாக சில மாதங்களில் இவரது உடல்நிலை மோசமடைந்தது.[2] இவர் தனது கடைசி உரையை ஈரோடு கருங்கல்பாளையம் நூலகத்தில் மனிதன் அழியாதவன் என்ற தலைப்பில் நிகழ்த்தினார்.[10] 1921 செப்டம்பர் 11 அன்று அதிகாலை 1 மணியளவில், பாரதியார் இயற்கை எய்தினார். மக்கள் கவிஞராகவும், தேசியவாதியாகவும் இருந்த பாரதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள 14 பேர் மட்டுமே இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.[2]

பாரதியாரின் இறப்புக்கு பின்னரும் இவரின் பாடல்கள் பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இருந்த இந்தியாவில் தடைசெய்யப்பட்டு, புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச் சட்ட அவையில் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற விரிவான விவாதம் 1928-ஆம் ஆண்டு அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்தது.[11]

இலக்கியப் படைப்புகள்

பாரதி நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[12] இவர் "மகாகவி" ("மகத்தான கவிஞர்") என்ற புனைபெயரைக் கொண்டு அறியப்படுகிறார். [13] முந்தைய நூற்றாண்டுப் படைப்புகளைப் போலல்லாமல் பாரதி பெரும்பாலும் எளிமையான சொற்களைப் பயன்படுத்தினார். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக்கவிதை எனப் புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசனக்கவிதையைத் தமிழுக்குத் தந்தார். இவர் தனது கவிதைகளில் புதுமையான யோசனைகளையும் நுட்பங்களையும் வெளிப்படுத்தினார்.[14] இவர் தனது பெரும்பாலான படைப்புகளில், முன்பு கோபாலகிருசுண பாரதியார் பயன்படுத்திய நொண்டி சிந்து என்ற நடையைப் பயன்படுத்தினார்.[15]

பாரதியின் கவிதை முற்போக்கான, சீர்திருத்தவாத இலட்சியத்தை வெளிப்படுத்தியது. இந்திய தேசியம், காதல், குழந்தைப் பருவம், இயற்கை, தமிழ் மொழியின் மகிமை போன்ற பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான படலைகளி எழுதினார். பாரதியின் பல இந்து தெய்வப் பாடல்களை பாடினார். அரவிந்தர், பால கங்காதர திலகர் மற்றும் சுவாமி விவேகானந்தர் போன்ற இந்திய தேசிய சீர்திருத்தத் தலைவர்களின் உரைகளையும் மொழிபெயர்த்தார்.[9] தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்ட இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார். விடுதலைப் போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி "தேசியக் கவி" எனப் போற்றப்படுகிறார். பெண் விடுதலைக்காகவும், சாதி மறுப்பு மற்றும் குழந்தை திருமணத்திற்கு எதிராகவும் போராடினார்.[16][17] இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.[18]

இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியைப் பாரத மாதாவாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். வியாசரின் மகாபாரதத்தைத் தழுவி எழுதப் பெற்ற இந்நூலானது ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது. இவரது பிரபலமான படைப்புகளில் குயில் பாட்டு, பாப்பா‌ பாட்டு, சின்னஞ்சிறு கிளியே, புதிய ஆத்திசூடி, விநாயகர் நான்மணிமாலை மற்றும் கண்ணன் பாட்டு ஆகியவை அடங்கும். இவர் பதஞ்சலியின் யோக சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகியவற்றை தமிழுக்கு மொழிபெயர்த்தார்.[4] இதை தவிர இவர் பல தேசிய கீதங்கள், விடுதலைப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள், ஞானப் பாடல்கள் மற்றும் கதைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.[19] பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்று கல்வியின் மகிமையைக் கூறினார். "வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும்" என நதிநீர் இணைப்பிற்கு முன்பே கனவுகண்டவர்.

புகழ் மற்றும் நினைவு சின்னங்கள்

காசியில் பாரதியாருக்கு அமைக்கபட்டுள்ள சிலை

பாரதி தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு வீட்டில் கழித்தார். 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் வாங்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட இந்த வீடு "பாரதி இல்லம்" (பாரதியின் இல்லம்) எனப் பெயரிடப்பட்டது.[20] எட்டயபுரத்தில் இவர் பிறந்த இல்லம் மற்றும் புதுச்சேரியில் இவர் வாழ்ந்த இல்லம் ஆகியவை நினைவு இல்லங்களாகப் பேணப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை, மணிமண்டபம் மற்றும் இவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு எழுத்தாளர்களுக்கான உயர்ந்த தேசிய விருதான சுப்ரமணிய பாரதி விருது நிறுவப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் இலக்கியத்தில் சிறந்த படைப்புகளை எழுதுபவர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகின்றது. பாரதியார் பல்கலைக்கழகம் 1982 இல் கோயம்புத்தூரில் நிறுவப்பட்டது. தில்லி இந்திய நாடாளுமன்றம், சென்னை மெரினா கடற்கரை உட்பட பல இடங்களில் இவரின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.[21] கோயம்புத்தூரில் உள்ள "பாரதியார் சாலை" மற்றும் புது தில்லியிலுள்ள "சுப்பிரமணியம் பாரதி மார்க்" உட்பட பல சாலைகளுக்கு இவர் பெயரிடப்பட்டுள்ளது.[22][23] இவரது பெயரில் பல பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன.[24]

பிரபலமான கலாச்சாரத்தில்

பாரதி என்ற தலைப்பில் 2000 ஆம் ஆண்டில் கவிஞரின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு தமிழ்த் திரைப்படம் உருவாக்கப்பட்டது.[25] வ. உ. சிதம்பரனாரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் பாரதியின் வரலாறு காண்பிக்கப்படுகின்றது. பாரதி எழுதிய பல கவிதைகள் பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் பாடல்களாகப் பயன்படுத்தப்பட்டன.[26] பல திரைப்படத் தலைப்புகள் இவரது கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்டவை.[27][28][29]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Why we're so turned off by Bharathiyar's saffron turban: Did the orange fall too far from the tree". Edex Live (in ஆங்கிலம்). Archived from the original on 28 December 2023. பார்க்கப்பட்ட நாள் 22 June 2022.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 "பாரதியார் நினைவு தினம்". பிபிசி தமிழ். Archived from the original on 30 November 2022. பார்க்கப்பட்ட நாள் 30 November 2022.
  3. 3.0 3.1 3.2 "சுப்ரமணிய பாரதியின் வாழ்க்கை வரலாறு". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். Archived from the original on 12 October 2022. பார்க்கப்பட்ட நாள் 30 November 2022.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 Bharati, Subramania; Rajagopalan, Usha (2013). Panchali's Pledge. Hachette UK. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-350-09530-0. Archived from the original on 28 December 2023. பார்க்கப்பட்ட நாள் 8 December 2018.
  5. "சகோதரி நிவேதிதா பாரதியாரின் குரு". ஸ்ரீராமகிருஷ்ண விஜயம். March 2014.
  6. 6.0 6.1 Indian Literature: An Introduction. Pearson Education India. 2005. pp. 125–126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131705209. Archived from the original on 28 December 2023. பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.
  7. "On the streets where Bharati walked". The Hindu. Archived from the original on 25 June 2020. பார்க்கப்பட்ட நாள் 22 June 2020.
  8. "Bharati's Tamil daily Vijaya traced in Paris". The Hindu. 5 December 2004 இம் மூலத்தில் இருந்து 21 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161121180131/http://www.thehindu.com/2004/12/05/stories/2004120500201100.htm. 
  9. 9.0 9.1 Lal, Mohan (1992). Encyclopaedia of Indian Literature: sasay to zorgot. Sahitya Akademi. pp. 4191–3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-126-01221-3.
  10. "Last speech delivered in Erode". The Hindu. 15 April 2008. Archived from the original on 15 April 2008. பார்க்கப்பட்ட நாள் 20 December 2013.
  11. "சட்ட சபையில் இலக்கிய விவாதம்". தீக்கதிர். 9 ஏப்பிரல் 2012. Archived from the original on 6 March 2016. பார்க்கப்பட்ட நாள் 25 April 2014.
  12. Annamalai, E. (1968). "Changing society and modern Tamil literature". Tamil Issue 4 (3/4): 21–36. 
  13. "Congress Veteran reenacts Bharathis escape to Pondy". The Times of India. Archived from the original on 2 April 2021. பார்க்கப்பட்ட நாள் 29 January 2021.
  14. Natarajan, Nalini; Nelson, Emmanuel Sampath, eds. (1996). Handbook of Twentieth-century Literatures of India. Greenwood Publishing Group. p. 290. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-28778-7.
  15. George, K.M., ed. (1992). Modern Indian Literature, an Anthology: Plays and prose. New Delhi: Sahitya Akademi. p. 379. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7201-324-0. Archived from the original on 28 December 2023. பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.
  16. "Knowing Subramania Bharati beyond his turban colour". www.telegraphindia.com. Archived from the original on 26 February 2021. பார்க்கப்பட்ட நாள் 2020-12-11.
  17. Raman, Aroon (2009-12-21). "All too human at the core". The Hindu (in ஆங்கிலம்). பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X. Archived from the original on 10 February 2021. பார்க்கப்பட்ட நாள் 2020-12-11.
  18. "Bharathi, the first poet whose works were nationalised". தி இந்து. 2 August 2015. பார்க்கப்பட்ட நாள் 23 August 2015.
  19. "மகாகவி பாரதியார் புதிய புத்தகம் பேசுது". Keetru. 10 June 2010. பார்க்கப்பட்ட நாள் 1 December 2023.
  20. Rangarajan (11 January 2021). A Madras Mystery. Notion Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781637147573. Archived from the original on 3 September 2023. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
  21. Gupta, Ameeta; Kumar, Ashish (2006). Handbook of Universities, Volume 1. Atlantic Publishers & Dist. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-126-90607-9.
  22. "Free helmet distribution". The Times of India. 6 October 2015. Archived from the original on 10 August 2017. பார்க்கப்பட்ட நாள் 8 October 2015.
  23. "Subramaniam Bharti Marg". The Indian Express. 3 October 2015. Archived from the original on 6 October 2015. பார்க்கப்பட்ட நாள் 8 October 2015.
  24. "Activities: School". Sevalaya. Archived from the original on 5 December 2013. பார்க்கப்பட்ட நாள் 23 December 2013.
  25. "SA women 'swoon' over Sanjay". Sunday Tribune. South Africa. 30 March 2008. Archived from the original on 10 June 2014. பார்க்கப்பட்ட நாள் 30 November 2013.
  26. "Filmy Ripples – Mahakavi Bharathiyar's works in Tamil Film Music". 7 August 2017. Archived from the original on 23 December 2018. பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
  27. "Ner Konda Paarvai : Subramania Bharati's line from a poem becomes the title of Ajith-starrer". nternational Business Times. 5 March 2019. Archived from the original on 9 July 2021. பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
  28. "Suriya 38 Title Has Bharathiyar Touch!". Archived from the original on 9 July 2021. பார்க்கப்பட்ட நாள் 9 July 2021.
  29. "'நேர்கொண்ட பார்வை', 'சூரரைப் போற்று', 'புதுமைப் பெண்'... தமிழ் சினிமாவும் பாரதியார் ரெஃபரென்ஸும்!". Archived from the original on 15 March 2020. பார்க்கப்பட்ட நாள் 30 November 2021.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பாரதியார்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்பிரமணிய_பாரதி&oldid=4098016" இலிருந்து மீள்விக்கப்பட்டது