மருது பாண்டியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மருது சகோதரர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
[[file:பெரியவைஜதைஸவ நவைஸவூநமபதவிவவூப மருதுவின் சிலை.jpg|200px|link=|alt=பெரிய மருதுவின் சிலை]]
சிறிய மருதுவின் சிலை
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் உள்ள பெரிய மருது, சிறிய மருது சிலைகள்.

மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கியவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

மருது பாண்டியர்கள்

இன்றைய விருதுநகர் மாவட்டம், நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த மொக்க பழநியப்பன் என்பவருக்கும், அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748 திசம்பர் 15 இல் மகனாகப் பிறந்தவர் பெரிய மருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753 ஏப்ரல் 20 இல் சின்ன மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவை விட உயரத்திற் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்று அனைவராலும் அழைக்கப்படலானார்.

இவ்விருவரும் சிவகங்கைச் சீமையின் அரசர் முத்து வடுகநாதரின் போர்ப்படையில் வீரர்களாகச் சேர்ந்து தமது திறமையை நிரூபித்தனர். இவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய மன்னர் முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புக்களில் நியமித்தார்.

சிவகங்கைச் சீமை மீட்பு[தொகு]

திருப்பத்தூரில் மருதிருவருக்கு அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூண்

ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்ட ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப் படை 1772 இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய பின் உடனடியாகச் சிவகங்கை மீது போர் தொடுத்தது. இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மருது சகோதரர்கள் ஆகியோர் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர்.

1772 இற்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779 இல் தொடங்கி ஆற்காட்டு நவாப், தொண்டைமான், கும்பினியார் ஆகியோரின் படைகளை வெற்றி கொண்டு 1780 இல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போர் சோழவந்தானில் தொடங்கி சிலைமான், மணலூர், திருப்புவனம், முத்தனேந்தல் என நடைபெற்று கடைசியாக மானாமதுரையில் போர் பயிற்சியே பெறாத சுதந்திர தாகமிக்க மக்களின் உதவியோடு போர் வெற்றி பெற்றது. மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலு நாச்சியாரை மீண்டும் ஆட்சியில் மருதுபாண்டிய சகோதரர்கள் அமர வைத்தனர்.

வழிபாட்டுத் தலங்களும் சமய ஒற்றுமையும்[தொகு]

மருது சகோதரர்களின் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. இவர்கள் முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர்.

இவர்கள் காளையார் கோவில் கோபுரத்தைக் கட்டியதுடன் குன்றக்குடி, திருமோகூர் கோயில்களுக்கும் திருப்பணி செய்தனர்.[1]

மானாமதுரை சோமேசர் கோயிலுக்கு கோபுரம் கட்டித் தேரும் செய்தளித்துள்ளனர். மருது பாண்டியர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இத்திருக்கோயிலின் பெருமை பற்றிப் சிவகங்கைக் கவிஞர் வேதாந்தம் சுப்பிரமணியம் வானர வீர மதுரைப் புராணத்தை இயற்றியுள்ளார். இந்நூலின் இறுதி பாடல் மருது சகோதரர்களை “யதுகுல மருது பூபன் மைந்தர்கள் ” என்று குறிப்பிடுகிறது.[2][3]

இளையவரான “சின்ன மருது” அரசியல் தந்திரம் மிக்கவராக விளங்கினார். இவர்கள் தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி வரை மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயருக்கு எதிரானப் போராட்டத்திற்கு வித்திட்டனர்.

சின்ன மருதுவின் ஜம்புத் தீவு பிரகடனம்[தொகு]

மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி ஊமத்துரை, சிவத்தையா தம்பி, மீனங்குடி முத்துக்கருப்பத்தேவர், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை, விருப்பாச்சி கோபாலர், தேளி யாதுலர், பழசி கேரள வர்மா, மறைந்த திப்புவின் தளபதி தூந்தாகி வாக் ஆகியோருடன் ஆங்கிலேயருக்கு எதிராக தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்கினர்.

1801 சூன் 12 ஆம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ஜம்புத் தீவு பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கையின் மூலம் எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.[4]

1857 சிப்பாய்க் கலகத்திற்கு அரை நூற்றாண்டிற்குமுன் நடந்த இந்திய தென்னிந்திய புரட்சியே முதல் ஒருங்கிணைந்த விடுதலைப் போராட்டமாக பல வரலாற்றாய்வாளர்களால் கருதப்படுகிறது.

மருது இருவர் நினைவிடக் காட்சி

உதயப்பெருமாள் கவுண்டர் (துப்பாக்கி கவுண்டர்)[தொகு]

இவர் மருதிருவர் கீழ் துப்பாக்கி படைப்பிரிவை உருவாக்கி அதற்கு தளபதியாக இருந்தவர். திருப்பாச்சேத்தி ஊரின் அம்பலக்காரராக மருதிருவர்களால் நியமிக்கப்பட்டவர். இவரின் இயற்பெயர் உதயப்பெருமாள் கவுண்டர் ஆகும். இவரின் துப்பாக்கி சுடும் திறமையை பார்த்து இவரை துப்பாக்கி கவுண்டர் என அழைக்கத்தொடங்கினர்.

மறைவு

இவர் 1801-ல் அக்டோபர் 1 -இல் காளையார் கோவிலில் வெள்ளையருக்கும் சிவகங்கை சீமை படைக்கும் நடந்த போரில் தனது மார்பில் பீரங்கி குண்டுகளைத் தாங்கி இவர் வீரமரணம் அடைந்தார்

தூக்குத் தண்டனை[தொகு]

வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததாகக் காரணம் கூறி 1801 மே 28 இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடைவிடாமல் நடந்தது.[1]

காளையார்கோவில் காடுகளில் கொரில்லா முறையில் போர் நடந்தது. புதுக்கோட்டை தொண்டைமான், ஆங்கிலேயருக்கு படை அனுப்பி உதவி செய்தார்.

மருது சகோதரர்கள் மற்றும் பிற விடுதலை வீரர்களைப் பிடித்துக் கொடுப்போர்க்கு வெகுமதி அறிவிக்கப்பட்டது. காளையார்கோவில் காட்டினை அழிப்பவர்க்கு, அழிக்கப்படும் நிலம் 20 வருடத்திற்கு இலவச குத்தகையாக வழங்கப்படும் என ஆங்கிலேயர் அறிவித்தனர்.

ஒக்கூர் காட்டில் பதுங்கியிருந்தபோது, தன் உதவியாளன் கருத்தானால் சின்ன மருது சுடப்பட்டார். இதற்காக கருத்தானுக்கு ஆங்கிலேயர் வெகுமதி அளித்தனர்.

காளையார்கோவிலில் களோனல் அக்னியூ மருது சகோதரர்களை கைதுசெய்தார். கௌரிவல்லப பெரியஉடையத்தேவரை சிவகங்கையின் இஸ்திமிராக நியமித்தார். சிவகங்கையின் சுதந்திர ஆட்சி முடிவுக்கு வந்தது. சிவகங்கை அரசர் வெங்கம் உடையனத்தேவர் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். பாகனேரி அரசர் வாளுக்கு வேலி அம்பலம் மருது சகோதரர்களை மீட்க செய்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

மருது சகோதரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் 24-10-1801 அன்று தூக்கில் போடப்பட்டு வீர மரணம் அடைந்தனர். மருதுக்களுடன் அவர்கள் ஆண் வாரிசுகள் அனைவரும் ( "துரைச்சாமி" சின்ன மருதுவின் மகன் ஒருவரைத் தவிர ) தூக்கிலிடப்பட்டனர். 500க்கும் மேற்பட்ட விடுதலை வீரர்கள் முறையான விசாரணையின்றி தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்களின் விருப்பப்படி அவர்களது தலையை காளையார் கோவில் முன்பு புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

வெள்ளையர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் மகன் துரைச்சாமியும் மருதுவின் தளபதிகளும் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் (இன்றைய பினாங்கு) நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர்.[5]

நினைவு[தொகு]

மருது சகோதரர்களின் மறைவு மற்றும் ஒட்டுமொத்த குடும்ப அழிப்பு சிவகங்கை மக்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சிவகங்கை சரித்திரக் கும்மி, சிவகங்கை சரித்திர அம்மானை, நாட்டுப்புறப் பாடல்களின் வழியாக இதனை அறியமுடிகிறது.

நினைவிடம்[தொகு]

மருது சகோதரர்களின் முழு உருவ கற்சிலைகள் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் காளீஸ்வரர் கோயிலின் உட்புறமும், மருது சகோதரர்களின் சமாதி காளீஸ்வரர் கோயிலின் எதிர்ப்புறமும் அமைக்கப்பட்டுள்ளன.[6]

சினிமா[தொகு]

மருது சகோதரர்களின் வாழ்கை வரலாற்றை மையமாக கொண்டு கவியரசர் கண்ணதாசன் 1959இல் சிவகங்கை சீமை எனும் பெயரில் ஒரு திரைப்படத்தை தயாரித்தார்.

நினைவுத் தபால் தலை[தொகு]

மருது சகோதரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் பெருமைப்படுத்தும் வகையில் இவர்களது நினைவுத் தபால் தலையை இந்திய அஞ்சல் துறை 2004 அக்டோபர் 23 இல் மதுரையிலும், சென்னையிலும் வெளியிட்டது.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தகநிலையம்; பக்கம் 79
  2. 'மருதுபாண்டிய மன்னர்கள் வரலாறு' - புலமை வேங்கடாச்சலம். பக்கம் 18, 19
  3. 'இந்துநன் னகரம் வாழி எந்தைசோ மேசன் வாழி வந்துஅளி முரல்பூங் கோதை ஆனந்த வல்லி வாழி ஐந்தரு அனைய வண்கை யதுகுல மருது பூபன் மைந்தர்கள் கிளைகள் சார்ந்தோர் தம்மோடு வாழி வாழி!' - கவிஞர் வேதாந்தம் சுப்பிரமணியம். நூல்: வானர வீர மதுரைப் புராணம்.
  4. திருச்சி பிரகடனம்
  5. எஸ். ராமகிருஷ்ணன். எனது இந்தியா. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8476-482-6. 
  6. மருதுபாண்டியர் நினைவிடம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருது_பாண்டியர்&oldid=3816469" இருந்து மீள்விக்கப்பட்டது