கதைசொல்லிகள் சந்தை படுகொலை
கதைசொல்லிகள் சந்தை படுகொலை அல்லது கிஸ்ஸா காவானி பசார் படுகொலை (Qissa Khwani Bazaar massacre) என்பது பிரித்தானிய இந்தியாவின் பெஷாவர் நகரில் ஏப்ரல் 23, 1930 அன்று நடைபெற்ற ஒரு படுகொலை. பிரித்தானிய படைவீரர்களுக்கும், அறவழிப் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், படைவீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் நூற்றுக்கணகான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.
கான் அப்துல் கப்பார் கான் புஷ்தூன் இன மக்களிடையே குதை கித்மத்கர் ("இறைவனின் தொண்டர்கள்") என்ற போராட்ட இயக்கத்தைத் தொடங்கினார். அதன் மூலம் இந்தியாவின் காலனிய அரசை அறவழிப்போராட்டங்கள் மூலம் எதிர்த்துவந்தார். ஏப்ரல் 23, 1930 அன்று அரசுக்கு எதிராகப் பேசியதற்காக கப்பார் கான் கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து பெஷாவர் நகரில் கித்மத்கர் இயக்கத் தொண்டர்கள் கதைசொல்லிகள் சந்தையில் திரண்டனர். கானை விடுதலை செய்யக் கோரி அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். கூட்டத்தைக் கலைக்க வந்த பிரித்தானிய தரைப்படையின் கவச வண்டிகள் கூட்டத்துள் ஓடி சில போராட்டக்காரர்களைக் கொன்றன. இதனால் நிலை தீவிரமடைந்தது. படைவீரர்கள் சந்தையை விட்டுப் போகும் வரை தாங்கள் கலைந்து செல்ல மாட்டோமென்று இறந்தவர்களின் உடல்களுடன் போராட்டக்காரர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அவர்களைக் கலைக்க படைவீரர்கள் எந்திரத்துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். காலை 11 மணிக்கு ஆரம்பமான துப்பாக்கிச் சூடு மாலை 5 மணி வரை நீடித்தது. இதில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். எனினும் இறுதிவரை அவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை.
இப்படுகொலை இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரித்தானிய அரசு இதுகுறித்து ஒரு நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டது. நீதி விசாரணைக்குப்பின் வெளியிடப்பட்ட அறிக்கை இப்படுகொலைக்கு பிரித்தானிய படையினரே காரணம் என தெரிவித்தது.