அர்த்தநாரீசுவர வர்மா
அர்த்தநாரீசுவர வர்மா | |
|---|---|
| பிறப்பு | 27 சூலை 1874 சேலம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா) |
| இறப்பு | 7 திசம்பர் 1964 (அகவை 90) திருவண்ணாமலை, மதராசு மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா |
| மற்ற பெயர்கள் | கவிச்சிங்கம், இராஜரிஷி, நாயகர் |
| பணி | இதழாளர், கவிஞர், எழுத்தாளர், விடுதலைப் போராளி |
| அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
ராஜரிசி அர்த்தநாரீசுவர வர்மா இந்திய சுதந்திர போராட்ட வீரரும்[1] கவிஞரும் பத்திரிகையாளரும் ஆவார்.[2] இவர் சேலத்தில், சுகவனம் கவுண்டர் - இலட்சுமி தம்பதியருக்கு மகனாக 1874 சூலை 27-ல் மகனாகப் பிறந்தார். திருப்பூந்துருத்தி மடத்தில் குருகுல கல்வியை முடித்த இவர், தமிழ், ஆங்கிலம், சமசுகிருதத்தில் புலமை பெற்றவர். இவர் அர்தநாரிஸ்வர கவுண்டர், ராஜரிசி என்றும் அழைக்கப்படுகிறார்.[3]
பாரதியார் மீதான பற்று
[தொகு]1911-ல் சேலத்தில் இயங்கிய சுதேசாபிமானி அச்சுக்கூடத்தில் மேலாராக பணிபுரிந்தார் வர்மா. அப்போது பாரதியின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டவர், சுதந்திரப் போராட்டங்களில் தன்னையும் இணைத்துக் கொண்டார். இதனால் வர்மா, கவிதைகளையும் கருத்துக்களையும் எழுதி வெளியிட்டார். அடுத்த சில ஆண்டுகளில் பாரதியாரின் மரணம் நிகழ்கிறது. அந்த துக்க நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட வர்மா, பாரதிக்காக பதினாறு வரிகளில் இரங்கற்பா எழுதினார். இதை சுதேசமித்திரன் பத்திரிகை வெளியிட்டது.[3]
பத்திரிகை துறையில்
[தொகு]வர்மாவும் அவரது நண்பர் கோவை பூபதி பழனியப்பாவும் சுதந்திரக் கருத்துக்களை பரப்புவதற்காக சத்திரியன் என்ற பத்திரிகையை தொடங்க இருந்தார்கள். ஆனால், அம்முயற்சி முழுவடிவம் பெறுவதற்குள் பழனியப்பா காலமாகிவிட்டார். இதையடுத்து நண்பனுக்காக சத்திரியன் பத்திரிகையை 1923-ல், பி. மாணிக்கம்பிள்ளை என்பவரை பதிப்பாளராக கொண்டு தொடங்கினார் வர்மா. 1931-ல் வீரபாரதி என்ற பத்திரிகையின் ஆசிரியரானார் வர்மா. இந்தப் பத்திரிகைக்கான நிதி ஆதாரத்தை காங்கிரசு கட்சி தந்தது.
இந்திய மொழி பத்திரிகைகளுக்கான தணிக்கைச் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவந்த அன்றைய ஆங்கிலேய அரசு, அரசுக்கு எதிரான வன்முறைகளை தூண்டிவிடும் பத்திரிகைகளைப் பட்டியலிடப்பட்டது. இதில், தமிழகத்திலிருந்து வெளிவந்த வீரபாரதி, விசுவ கர்நாடகா, காங்கிரசு பத்திரிகைகளும் இருந்தன. வீரபாரதியுடன், முன்பு நின்றுபோன சத்திரியன், சத்திரிய சிகாமணி, தமிழ் மன்னன் உள்ளிட்ட பத்திரிகைகளையும் நடத்தி வந்த வர்மா, பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதி இருக்கிறார். இலக்கியத் தளத்திலும் தனக்கான இடத்தைத் தக்கவைத்தவர் வர்மா.[3]
திரு. வி. க. பாராட்டு
[தொகு]சுதந்திரப் போராட்டத்தில் தீவிர போக்கை ஆதரித்தவர் என்றபோதும் காந்தியை கடவுளுக்குச் சமமாக மதித்தவர் வர்மா. 1920-ல் நடந்த வட ஆற்காடு அரசியல் மாநாட்டில் பேசிய திரு. வி. க. ‘சுப்பிரமணிய பாரதியின் பாடல்களும் அர்த்தநாரீச வர்மாவின் பாடல்களும் மக்கட்கு தேசபக்தியை ஊட்டுவது போல் கற்றை கற்றையாக அரசியல் நூல்களை ஓதியவரின் சொற்பெருக்குகள் ஊட்டா’ என புகழ்ந்திருக்கிறார்.
மறைவு
[தொகு]அர்த்தநாரீச வர்மா தனது இறுதி நாட்களை திருவண்ணாமலையில் தங்கிக் கழித்தார். 1964-ல் தனது 90-வது வயதில் மரணத்தை தழுவிய வர்மாவுக்கு திருவண்ணாமலையிலேயே சமாதியும் எழுப்பப்பட்டது.[3] இவரை நினைவூட்டும் விதத்தில் ஆண்டுதோறும் குடந்தை, சேலம் மற்றும் திருவண்ணாமலையில் கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகிறது.[4]
பரவலர் பண்பாட்டில்
[தொகு]பைசன் காளமாடன் (2025) திரைப்படத்தில், கதைத் தலைவர் "வனத்தி" கிட்டான் (துருவ் விக்ரம்), காண்டீபன் (அழகம்பெருமாள்) ஆகியோருக்கு இடையிலான உரையாடல் காட்சி ஒன்றில் அர்த்தநாரீச வர்மாவின் உருவப்படம் பின்னணியில் தோன்றுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "விடுதலைப் போராட்ட வீரர் அர்த்தநாரீச வர்மா பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்: ராமதாஸ்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/tamilnadu/136602-.html. பார்த்த நாள்: 23 June 2024.
- ↑ "விடுதலை வீரர் அர்த்தநாரீச வர்மா பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுக". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2018/Jul/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2968262.html. பார்த்த நாள்: 23 June 2024.
- 1 2 3 4 "பாரதிக்கு இரங்கற்பா பாடிய அர்த்தநாரீசவர்மாவை தெரியுமா?". தி இந்து.
- ↑ "கருத்தரங்கம்". தினமலர்.
- ↑ "பதிவு - MooknayakDr (@sathisshzdoc)".