உள்ளடக்கத்துக்குச் செல்

முழு தன்னாட்சி சாற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முழு தன்னாட்சி சாற்றல் (Purna Swaraj Declaration) என்பது இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது இந்திய தேசிய காங்கிரசு வெளியிட்ட ஒரு அறிவிப்பு. ஜனவரி 26, 1930 அன்று வெளியிடப்பட்ட இவ்வறிவிப்பில் இந்தியா பிரித்தானியப் பேரரசிடமிருந்து விடுதலை பெற்று முழு சுயாட்சி பெறுவதே காங்கிரசின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.

பின்புலம்

[தொகு]

1920களின் இறுதி வரை, இந்திய விடுதலை இயக்கத்தில் பெரும்பகுதியினர் பிரித்தானியப் பேரரசிடமிருந்து முழு விடுதலை வேண்டுமென்று கோரவில்லை. வரையறுக்கப்பட்ட சுயாட்சி, மேலாட்சி போன்ற அதிகாரங்களையே வேண்டிப் போராடி வந்தனர். பிரித்தனில் மேற்பார்வையில் இந்தியர்களுக்கு படிப்படியாக அதிக அதிகாரங்களும் ஆளும் உரிமைகளும் வழங்கப்படும் என அவர்கள் எதிர்பார்த்தனர். அவர்களுக்கு 1928-29 ஆண்டுகளில் வெளியான சைமன் குழு அறிக்கை பெரும் ஏமாற்றமாக இருந்தது. இந்தியர்களுக்கு அதிக அளவில் ஆட்சி உரிமைகளை வழங்க பிரிட்டன் தயாராக இல்லை என்பதை சைமன் குழுவின் பரிந்துரைகள் அவர்களுக்கு உணர்த்தின. இதனால் காங்கிரசு உட்பட்ட தேசியவாத அமைப்புகளின் போக்கு கடுமையானது. காங்கிரசு கட்சிக்குள் சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான ஒரு குழு, பிரிட்டனிடமிருந்து உடனடியாக முழு விடுதலை அடைவது கட்சியின் குறிக்கோளாக வேண்டுமென்று விரும்பினர். மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் உடனடியாக கடுமையான போக்கினை மேற்கொள்ள விரும்பவில்லை. மோதிலால் நேரு போன்ற மிதவாதிகள், ஒட்டுமொத்தமாக பிரிட்டனிடமிருந்து பிளவு வேண்டாம், பிரித்தானிய முடியின் மேற்பார்வையில் மேலாட்சி முறை வேண்டலாம் எனக் கருதினர்.

1928ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரசின் கல்கத்தா மாநாட்டில் இக்கருத்து வேறுபாடு வெளிப்படையாகப் பூசலாக வெடித்தது. காந்தி மற்றும் நேருவின் ஆதரவாளர்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றனர். உடனடியாக முழு விடுதலை வேண்டும் என்ற போசின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனினும், மேலாட்சி உரிமை போதாது முழு சுயாட்சி நிலை வேண்டுமென்று காங்கிரசு உறுப்பினர்கள் எண்ணத் தொடங்கினர். அக்டோபர் 1929ல் இந்திய வைசுராய் இர்வின் பிரபு, லண்டனில் நடைபெற இருந்த வட்ட மேசை மாநாட்டில் பங்கு பெறும்படி காந்தி, முகமது அலி ஜின்னா ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் மேலாட்சி அல்லது முழு தன்னாட்சி வழங்குவது குறித்து மாநாட்டில் பேசப்படுமா எனபது குறித்து உறுதியளிக்க முடியாதென்று கைவிரித்துவிட்டார்.

முழு தன்னாட்சி

[தொகு]

மேலாட்சி குறித்து பேச்சுவார்த்தை நிகழ்த்த காலனிய அரசு மறுத்ததால், காங்கிரசில் தேசியவாதக் குரல்கள் தீவிரமடைந்தன. டிசம்பர் 1929 இறுதியில் லாகூரில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலாட்சி போதாதென்றும் பிரித்தானியப் பிடியிலிருந்து மீண்டு முழு தன்னாட்சி பெற வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. 1930 ஜனவரி 26 லாகூரில் ராவி நதியின் கரையில் இந்திய மூவர்ணக் கொடியை ஜவகர்லால் நேரு ஏற்றினார். அவரைப் பின்பற்றி இந்தியாவெங்கும் காங்கிரசு உறுப்பினர்கள் மூவர்ணக் கொடியினை ஏற்றினர். பின் இந்திய விடுதலை அல்லது முழு தன்னாட்சிக்கான சாற்றுதல் காந்தியால் உருவாக்கப்பட்டது:

பிரிட்டனின் காலனிய அரசு இந்திய மக்களின் விடுதலையைப் பறித்ததொடு மட்டும் நில்லாமல், அவர்களைச் சுரண்டுவதையே தனது அடிப்படைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. தனது செயல்களால் இந்தியாவைப் பொருளியல், பண்பாடு, அரசியல், ஆன்மிக என பல துறைகளிலும் நாசமாக்கியுள்ளது. ...எனவே இந்தியா பிரிட்டனுடனான உறவை அறவே துண்டிக்க வேண்டும்; முழு தன்னாட்சி அல்லது விடுதலை பெற வேண்டும்

என்று அச்சாற்றலில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்திய மக்களை காலனிய அரசுக்கு வரி கொடுக்க வேண்டாமென்றும் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மாநில மற்றும் நடுவண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினர். ஜனவரி 27, 1930ல் இந்த தன்னாட்சி சாற்றுதல், காங்கிரசு கட்சியால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. காங்கிரசின் இந்த புதிய நிலைபாடு காலனிய அரசுடனான அடுத்த கட்ட மோதலுக்கு வழிவகுத்தது - மார்ச் 1930ல் உப்புச் சத்தியாகிரகம் தொடங்கப்பட்டது.

1950ல் இந்தியா குடியரசான போது இந்த சாற்றலின் நினைவாக ஜனவரி 26ம் தேதியைக் குடியரசாகும் நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முழு_தன்னாட்சி_சாற்றல்&oldid=3716672" இலிருந்து மீள்விக்கப்பட்டது