தாதாபாய் நௌரோஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாண்புமிகு
தாதாபாய் நௌரோஜி
Dadabhai Naoroji 1889.jpg
தாதாபாய் நௌரோஜி c. 1889
ஐக்கிய இராச்சியத்தின், நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1892–1895
முன்னவர் பிரடெரிக் தாமஸ் பெண்டன்
பின்வந்தவர் வில்லியம் மாஸ்ஸி-மெயின்வேரிங்
தொகுதி பின்ஸ்புரி
பெரும்பான்மை 5
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 4, 1825(1825-09-04)
நவ்சாரி, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு 30 சூன் 1917(1917-06-30) (வயது 91)
பம்பாய், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி லிபரல் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
இந்திய தேசிய காங்கிரஸின் இணை நிறுவனர்
வாழ்க்கை துணைவர்(கள்) குல்பாய்
இருப்பிடம் இலண்டன்
படித்த கல்வி நிறுவனங்கள் மும்பை பல்கலைக்கழகம்
பணி கல்வியாளர், அரசியல்வாதி, வர்த்தகர்
கையொப்பம்

தாதாபாய் நௌரோஜி (Dadabhai Naoroji, செப்டம்பர் 4, 1825ஜூன் 30, 1917) இந்தியாவின், அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். 1886, 1893, 1906 ஆகிய கால கட்டங்களில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகச் செயல்பட்டார். 1892 முதல் 1895 வரை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும், இந்தியாவின் வறுமையும் (Poverty and Un-British Rule in India) என்கிற நூல் பிரித்தானிய அரசின் கொடுங்கோன்மையைப் பற்றிய உண்மைகளை உலகிற்கு உணர்த்தியது.[1][2]

தாதாபாய் நௌரோஜியின் "பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும், இந்தியாவின் வறுமையும்" (Poverty and Un British Rule in India) என்ற நூல் விளக்கும் கருத்துக்கள்

பெருந்தலைவர்களாகப் போற்றப்பட்ட பால கங்காதர திலகர், காந்தி உட்பட முன்னணித் தலைவர்கள் பலர் தங்களுக்கு வழிகாட்டியாக தாதாபாய் நௌரோஜியை குறிப்பிட்டுள்ளனர். காரணம், தாதாபாய் நௌரோஜியின் பொருளாதாரக் கருத்துகள் இன்றளவும் எண்ணிப் போற்றுகின்ற அளவிற்கு மிகவும் ஆழமான, அறிவு செறிந்த அணுகுமுறைகளைக் கொண்ட கருத்துகளாகும். இந்தியாவின் வள ஆதாரங்களையும், வரிவிதிப்பு, கடன் போன்ற முக்கிய நிதியியல் ஆதாரங்களையும், வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதைப் புள்ளியியல் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினார் தாதாபாய். 1870 ஆம் ஆண்டு, இந்தியாவின் தலா வருமானத்தைக் கணக்கிட்டு ரூ.20தான் என்று சுட்டினார். இந்தியாவிற்குள் இருவிதமான பொருளாதார அமைப்புகள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இராணுவத்தினர், முதலாளிகள், வணிகர்கள் ஆகியோர் தங்களுடைய மூலதனம், ஊதிய வருமானம், வரி வருவாய், இலாபம், வட்டி, ஓய்வூதியத் தொகை ஆகியவற்றை இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்று செல்வத்தைக் குவிக்கிறார்கள் என்றும் கூறினார். இந்தியாவின் பொருளாதார வள ஆதாரங்கள் சுரண்டப்படுகின்றன என்று முதன் முதலில் பட்டியலிட்டார். இந்தியாவின் பொருளாதாரத்தின் மற்றொரு பிரிவில் ஏழைகள், விவசாயிகள் என்று சுரண்டப்பட்ட பெரும்பான்மை மக்கள் பெரும் துன்பத்திலும், வறுமையிலும் வாழ்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் பேரியக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய பெருந்தலைவர் பால கங்காதர திலகர், தாதாபாய்தான் தனக்குத் தலைவர் என்றும் வழிகாட்டி என்றும் குறிப்பிட்டார். தாதாபாய் நௌரோஜி காலத்திலிருந்து நேரு காலம் வரை காங்கிரஸ் பேரியக்கத்தில் தீவிரவாத, மிதவாத மற்றும் பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் ஈடுபட்டுப் பல்வேறு மாறுபட்ட கொள்கை, அணுகுமுறை வேறுபாடுகளுக்கு இடையிலும் இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு தியாகங்களைப் புரிந்தனர். நீண்ட இந்திய விடுதலைப் போராட்டத்தின் விளைவாகத்தான் இந்தியாவின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அந்நிய நாடுகளின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத ஒரு சுயசார்பான பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து அனைவர் மத்தியிலும் உருவாயிற்று.

தாதாபாய் நௌரோஜியின் சிலை

இளமைக் காலம்[தொகு]

தாதாபாய் நௌரோஜி 1825 ஆம் ஆண்டு, செப்டம்பர் 4 ஆம் நாள் மும்பையில், பார்சி குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தையார் நௌரோஜி பலஞ்சி டோர்ஜி ஆவார். அவர் சொராஷ்டிர சமய பூஜாரி ஆவார். இவர்கள் பார்சி இனத்தைச் சேர்ந்தவர்கள். அவரது தாயார் மேனக் பாய். அவரது இளம் வயதிலேயே தந்தை இறந்துவிட்டதால் அவரை அவரது தாயார் வளர்த்தார். அவரது 11-ஆம் வயதில் அவருக்கு குல்பாய் என்ற சிறுமியுடன் திருமணம் செய்து வைத்தனர். அவர் மும்பை எல்பின்ஸ்டன் கல்வி நிலையத்தில் தனது படிப்பை முடித்தார்.

மும்பையில் பணி[தொகு]

அவர் தனது 25 வயதில் 1850இல், எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்கைத் தத்துவ உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1851இல், இவர் ஜொராஸ்ற்றியன் மதத்தைப் புனிதப்படுத்த ஒரு சபையை ஏற்படுத்தினார். 1854இல் Truth Teller என்ற மாதமிருமுறை இதழையும் ஆரம்பித்தார். மும்பையில் ஞானப்பிரச்சார சபை, அறிவியல் மற்றும் இலக்கிய சங்கம், பார்ஸி உடற்பயிற்சிப் பள்ளி, விதவையர் சங்கம் போன்றவற்றை ஏற்படுத்தினார்.

லண்டனில் பணி[தொகு]

1855-ல் அவர் பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்ட முதல் இந்தியக் கம்பனியான காமா&கோவின் பங்குதாரராக லண்டன் சென்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அந்த கம்பெனியைவிட்டு விலகினார். பின்னர் நௌரோஜி&கோ என்ற சொந்தக் கம்பெனி துவக்கினார். லண்டன் பல்கலைக்கழகத்தில் குஜராத்தி பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

அரசியல் பணி[தொகு]

1866இல் லண்டனில் கிழக்கு இந்திய சங்கம் தோற்றுவித்தார். அதில் இந்தியாவைச் சேர்ந்த உயர் உத்தியோகஸ்தர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அவர் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இந்தியர்களின் துயரத்தை லண்டனில் வெளிப்படுத்தினார். 1873இல் பரோடா அரசரின், திவானாகப் பொறுப்பேற்றார். பின்னர் அந்தப் பதவியில் இருந்து விலகி மீண்டும் லண்டன் சென்றார். கல்கத்தாவில், இந்திய தேசிய காங்கிரஸின் முன்னோடியான, இந்திய தேசிய சங்கத்தை, சுரேந்திரநாத் பானர்ஜியுடன் சேர்ந்து உருவாக்கினார்.

இந்திய தேசிய காங்கிரஸ்[தொகு]

தாதாபாய் நௌரோஜி, 1885இல் ஆலன் ஆக்டவியன் ஹியூம் மற்றும் உமேஷ் சந்திர பானர்ஜியுடன் சேர்ந்து, இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கினார். 1886, 1893, 1906 ஆகிய மூன்று ஆண்டுகளில் நடத்தப்பட்ட கூட்டங்களில், இந்திய தேசிய காங்கிரசிற்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1885இல் இருந்து 1888 வரை மும்பை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்[தொகு]

1892இல், பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் ஃபின்ஸ்புரியில் இருந்து லிபரல் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆசியர் இவரே. 1895 வரை உறுப்பினராக இருந்தார். அவர் கிறிஸ்தவராக இல்லாததால், பைபிள் மீது சத்தியப் பிரமாணம் செய்யவில்லை. ஜொராஸ்ற்றியன் மதத்தினரின் வேதமான 'அவெஸ்டா' என்ற நூலின் மீது சத்தியப் பிரமாணம் செய்ய அனுமதிக்கப்பட்டார். அவர் பிரிட்டன் பாராளுமன்றத்தில் இந்தியர்களின் துயரத்தை வெளிப்படுத்தினார். அவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், பணியாற்றுவதற்கும் முகம்மது அலி ஜின்னா உதவினார். முகம்மது அலி ஜின்னா, பின்னர் இந்தியப் பிரிவினைக்குக் காரணமாக இருந்தார். 1907இல் காங்கிரஸ் மிதவாதிகள், அமிதவாதிகள் என்று இரண்டு பிரிவாகப் பிரிந்தபோது, மிதவாதிகள் பக்கம் இருந்தார். அன்னி பெசண்ட்] அம்மையாரின், ஹோம் ரூல் இயக்கத்தில் ஆர்வமுடையவராக இருந்தார்.

இறுதி அஞ்சலி[தொகு]

தாதாபாய் நௌரோஜி 1917 ஆம் ஆண்டு, சூன் 30 ஆம் நாள் தனது 92 ஆவது வயதில் மும்பையில் காலமானார். இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மும்பை, கராச்சி(பாகிஸ்தான்), ஃபின்ஸ்புரி(லண்டன்) ஆகிய இடங்களில் முக்கிய சாலைகளுக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள ஒரு மத்திய அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புப் பகுதிக்கு, நௌரொஜி நகர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதாபாய்_நௌரோஜி&oldid=3029476" இருந்து மீள்விக்கப்பட்டது