உள்ளடக்கத்துக்குச் செல்

சம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகங்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தியால் தூண்டப்பட்டு நடைபெற்ற முதல் சத்தியாக்கிரங்கள் (அறப்போர்). குஜராத் மாநிலத்தின் கேடா மாவட்டத்திலும், பீகார் மாநிலத்தின் சம்பரண் மாவட்டத்திலும் 1918-19 காலகட்டத்தில் இவை நடைபெற்றன. வரிகொடாப் போராட்டங்களான இவை அறபோர் முறையில் நடத்தப்பட்டாலும், “சத்தியாகிரகம்” என்ற சொல் இவற்றுக்கு அடுத்து நிகழ்ந்த ரெளலட் சத்தியாகிரகத்தின் போது பயன்பாட்டுக்கு வந்தது.

சம்பரண் சத்தியாகிரகம்[தொகு]

சம்பரண் மாவட்டத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளும், ஒப்பந்தத் தொழிலாளர்களும் உணவுப் பயிர்களைப் பயிரடாமல், காலனிய அரசின் கட்டாயத்தின் பேரில் அவுரி (Indigofera tinctoria) முதலான பணப்பயிர்களை பயிரிட்டு வந்தனர். இதனால் அவர்களுக்குத் தேவையான உணவு கிட்டவில்லை. மேலும் அவுரிப் பயிரினை மிகக் குறைந்த விலையில் அரசு ஆதரவு பெற்ற பண்ணையார்களுக்கு விற்க கட்டாயப்படுத்தப்பட்டனர்.[1] 1910களில் இம்மாவட்டத்தில் பஞ்சம் எற்படும் நிலை உருவானது. விவசாயிகளில் துன்பங்களைப் பொருட்படுத்தாத காலனிய அரசு அவர்கள் விற்கும் அவுரி மீது ஒரு புதிய வரியொன்றை விதித்தது; அடிக்கடி அவ்வரி விகிதத்தை அதிகரித்தும் வந்தது. இதனால் 1910களில் ஆங்காங்கே அரசுக்கு எதிராக கலகங்கள் மூண்டு வந்தன. 1917ல் சம்பரண் விவசாயிகளின் நிலை காந்தியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரஜகிஷோர் பிரசாத், ராஜேந்திர பிரசாத், அனுக்கிர நாராயண் சின்கா போன்ற வழக்கறிஞர்களுடன் சம்பரண் வந்த காந்தி சம்பரண் போராட்டத்தை வரிகொடா இயக்கமாக மாற்றி அமைத்தார். மேலும் இது தேசியவாத, விடுதலைப் போராட்டம் இல்லையென்பதால் இந்திய தேசிய காங்கிரசு இதில் தலையிடாமல் தடுத்துவிட்டார்.

சம்பரணில் ஆசிரமம் ஒன்றை நிறுவிய காந்தி, அப்பகுதியில் இருந்த கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் சென்று மக்களின் குறைகளை விரிவாகக் கேட்டறிந்து ஆவணப்படுத்தினார். அப்பகுதி மக்களை அரசுக்கு வரி கொடாமல் அறவழியில் தங்கள் எதிர்ப்பைக் காட்டுமாறு ஊக்குவித்தார். மேலும் அவ்வூர்களை சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளிலும் காந்தியின் ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் மீது நம்பிக்கை கொண்ட சம்பரண் மக்கள், காந்தியின் வழிகாட்டுதலின் படி வரி கொடுக்க மறுத்தனர். மக்களிடையே கலகத்தைத் தூண்டினார் என்று குற்றம் சாட்டிய அரசு காந்தியினை சிறையில் அடைத்தது. ஆனால் வரிகொடாப் போராட்டம் மேலும் வலுவடைந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். போராட்டக்காரர்களின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட பண்ணையார்கள் அவர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். அதன்படி பஞ்ச காலம் முடியும் வரை வரி வசூலும், வரி விகித உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டன. அவுரி பயிரிடுவோருக்கு அதிக விலையும் வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இப்போராட்டத்தின் போதுதான் காந்தி முதன்முதலில் “பாபூ” என்றும் “மகாத்மா” என்றும் அழைக்கப்பட்டார்.

கேடா சத்தியாகிரகம்[தொகு]

கேடா போராட்டத்தின் போது காந்தி

இதே காலகட்டத்தில் குஜராத் மாநிலத்தின் கேடா மாவட்டத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அங்குள்ள விவசாயிகள் நில உரிமையாளர்களாக இருந்தாலும், பஞ்சத்தினால் ஏற்பட்ட பயிரிழப்பினை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. மும்பை மாகாண பிரித்தானிய அரசு வரித்தள்ளுபடி வேண்டிய அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்து, அவ்வாண்டு முழு வரியினையும் கட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. மேலும் அவ்வாண்டே வரியினை 23 விழுக்காடு உயர்த்தியது. இங்கும் காந்தியின் தலைமையில் ஒரு வரிகொடா போராட்டம் வெடித்தது.

இப்போராட்டத்தில் காந்தி நேரடியாக ஈடுபடவில்லை; அவரது வழிகாட்டுதலின் படி வல்லபாய் படேல், நர்ஹரி பாரிக், மோகன்லால் பாண்டியா, ரவிசங்கர் வியாஸ் போன்ற தலைவர்கள் கேடா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளை ஒன்று திரட்டினர். கேடா விவசாயிகளுக்கு ஆதரவாக குஜராத்தின் பிற பகுதிகளிலிருந்து வந்த தன்னார்வலர்கள் போராட்டங்களில் கலந்து கொண்டனர். அவ்வாண்டுக்கான வரியினைக் கட்டாத விவசாயிகளின் நிலங்களை அரசு கையகப்படுத்தியது. ஆனால் அதனால் தளர்வடையாத விவசாயிகளின் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. இறுதியில் அரசு இணங்கியது. அவ்வாண்டுக்குரிய மற்றும் அதற்கு அடுத்த ஆண்டுக்கான வரி தள்ளுபடி செய்யப்பட்டது. வரிவிகித உயர்வும் திருப்பிப் பெறப்பட்டது. பற்றுகையான நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. MD. Afroz Alam. "CHAMPARAN : MANTRA FOR NON-VIOLENCE". press information bureau. பார்க்கப்பட்ட நாள் May 13, 2012.