உள்ளடக்கத்துக்குச் செல்

தீரன் சின்னமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீரன் சின்னமலை
மாவீரர் தீரன் சின்னமலை கவுண்டர்
தீரன் சின்னமலை கவுண்டரின் சிலை
முன்னிருந்தவர்1756-1799 மைசூர் அரசு,
1799-1804 பாளையக்காரர் சுய ஆட்சி
பின்வந்தவர்பிரித்தானியப் பேரரசு
தந்தைஇரத்னசாமி கவுண்டர்
தாய்பெரியாத்தா
பிறப்புதீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார்
(1756-04-17)17 ஏப்ரல் 1756
செ. மேலப்பாளையம், காங்கயம், தமிழ்நாடு (முந்தைய மைசூர் இராச்சியம்)
இறப்பு31 சூலை 1805(1805-07-31) (அகவை 49)
சங்ககிரி, சேலம் மாவட்டம், தமிழ்நாடு அல்லது கருமலை, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு (சென்னை மாகாணம்)
அடக்கம்03 ஆகத்து, 1805
ஓடாநிலை, அரச்சலூர், ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு
சமயம்இந்து - சைவம்

தீரன் சின்னமலை (Dheeran Chinnamalai, ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில், பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து கருப்ப சேர்வையுடன் இணைந்து போரிட்டவர்களுள் ஒருவர். கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்டவர்.

வரலாறு

இவர் இன்றைய திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், சென்னிமலை அருகிலுள்ள செ. மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தார்.[1] இவரின் தந்தையார் ரத்னசாமி கவுண்டர் (பயிரன் கூட்டம்), மற்றும் தாயார் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்) ஆகியோர் ஆவர். இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர் ஆகும். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூறப்படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார்.

தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார். கொங்கு நாடு, அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று என்ற கருத்து பரவலாக உள்ளது.

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும், கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். டிசம்பர் 7, 1782இல், ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில், சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசு வெளியிட்டுள்ள தீரன் சின்னமலை நினைவு தபால் தலை

நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து அரச்சலூர் அருகே ஓடாநிலைக் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கனவே ஏப்ரல் 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு, கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார். போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் கவுண்டர், தேவர், வன்னியர், வேட்டுவர், நாயக்கர், நாடார், தாழ்த்தப்பட்டோர் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். கருப்பசேர்வை, ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், ஃபத்தே முகம்மது உசேன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.

வெற்றி

1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.

தூக்கிலிடப்படல்

போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். அவருடன் சின்னமலையின் தம்பியர்களும், படைத்தலைவர் கருப்பசேர்வையையும் தூக்கிலிட்டனர்.

கௌரவிப்பு

முன்பு தீரன் சின்னமலை நினைவாக திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாக கொண்டு போக்குவரத்துக் கழகமும், கரூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத், தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்ததுள்ளது. தமிழக அரசின் சார்பில், ஓடாநிலைக் கோட்டையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர். இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை, 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு தமிழக அரசால், இவர் தூக்கிலிடப்பட்ட ஊரான சங்ககிரியில், இவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டது. அவ்வாறே கட்டி முடிக்கப்பட்ட மண்டபம் டிசம்பர் 23, 2013 அன்று திறக்கப்பட்டது. அதே நாளில், கிண்டியிலுள்ள இவரது உருவச்சிலையும் புதுப்பிக்கப்பட்டு, இவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் வெளியிடப்பட்டது.[2]

பெயர்க் காரணம்

தீர்த்தகிரி கவுண்டரின் பிறப்பிடமான கொங்கு நாடு, மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால், அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும். ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத் தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது, “சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்” என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல், அவர் ‘தீரன் சின்னமலை’ என்று அழைக்கப்பட்டார்.[மேற்கோள் தேவை]

இதனையும் காண்க

உசாத்துணை

  1. "Dheeran Chinnamalai statue to be installed in Odanilai soon". தி இந்து. Archived from the original on 2007-12-01. பார்க்கப்பட்ட நாள் 18 ஆகத்து 2017.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. Ramakrishnan, T. (2013-12-23). "Jayalalithaa opens Vanchinathan memorial in Shencottah". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-08-03.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீரன்_சின்னமலை&oldid=3878626" இலிருந்து மீள்விக்கப்பட்டது