பாளையக்காரர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாளையக்காரர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றபோது 1529 க்கும், 1564 க்கும் இடையில் மதுரை மண்டலத்தை விசுவநாத நாயக்கர் மதுரை நாயக்க அரசாக உருவாக்கினார்.விஜயநகரப் பேரரசின் விசுவாசியான இவர், அப்பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயங்கர நிர்வாக முறையைத் தழுவிப் பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தினார். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் படை நிலை கொண்டுள்ள ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார். உலகின் பல நாடுகளிலும் இது போன்ற படை மானிய(Fudel) முறை கடைபிடிக்கப்பட்டுள்ளது.

பாளையங்கள்[தொகு]

பார்க்க முதன்மைக் கட்டுரை: பாளையம் (ஆட்சி நிர்வாக முறை) "பாலாமு” என்கிற தெலுங்கு மொழிச் சொல்லிலிருந்து பாளையம் என்ற சொல் உருவானது. பாலாமு என்றால் படை முகாம் என்று பொருள்படும்.இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும்.

இன்றைய தெலங்கானாவில் இப்பொழுது வாரங்கல் என அழைக்கப்படும் ஓருகல்லைத் தலைநகராகக் கொண்ட காகதிய அரசால் பாளைய முறை ஏற்படுத்தப்பட்டது என்று ஒரு சில வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள் . விஜயநகர பேரரசர்களில் முக்கியமான அரசரான குமார கம்பனன் கி.பி 1336 -. கி.பி. 1378 மதுரையை பிடித்தார்.கேரளா , ஆந்திரா , கர்நாடகா , தமிழ்நாடு என்று துங்கபத்ரா ஆற்றுக்குத் தெற்கில் உள்ள அனைத்து பகுதியையும் தன் வசம் கொண்டு வந்து விரிந்த பேரரசை ஏற்படுத்தினார். விஜயநகர அரசு விரிந்து பரந்திருந்ததால் பேரரசை பாளையம் எனும் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து அரசாங்க வசதிக்காக அமைத்து கொண்டார். இம்முறையின்படியே பின்னாளில் விசுவநாத நாயக்கர் 72 பாளையங்களாக[1]நாட்டைப் பிரித்து மதுரையை தலைநகராக் கொண்டு மதுரை நாயக்க அரசை ஏற்படுத்தினார் . இது பின்னாளில் 200 பாளையங்கள் வரை பிரிக்கப்பட்டன

கடமையும், அதிகாரமும்[தொகு]

மண்டல அரசு, ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியான பாளையத்தை படைத் தளபதிகளான பாளையக்காரர்களின் நிர்வாகப் பொறுப்பில் விடும். இதற்குப் பதிலாகப் பாளையக்காரர்கள் படைகளைப் பலாமரித்து அரசின் பாதுகாப்புக்காகவுமம், போரின் போதும் தேவையான படை வீரர்களையும், பிற வளங்களையும் கொடுக்கவேண்டும். பாளையப்பட்டுகளுக்குள் அடங்கும் நிலங்களுள் ஒருபகுதியைத் தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளும் பாளையக்காரர்கள், மிகுதியை, இராணுவ வளங்களைத் திரட்ட உதவக்கூடிய செல்வாக்குள்ள குடிமக்களில் சிலருக்குப் பிரித்து வழங்கினர்.எனவே பாளைய முறையை இராணுவ ஆடசி முறை எனலாம்.

பாளையக்காரர்களின் நிர்வாகம்[தொகு]

தங்களுடைய நிர்வாகத்துக்குள் அடங்கிய பகுதியில் ஓரளவு சுயமான அதிகாரத்துடன்கூடிய ஆட்சியதிகாரம் பாளையக்காரர்களுக்கு இருந்தது. பாளையப்பட்டுகளுக்கெனத் தனியான நிர்வாக அமைப்பும் இருந்தது. இந்த அமைப்பிலே பாளையக்காரர்களின் கீழ் அமைச்சராகவும், படைத் தளபதியாகவும் செயற்படக்கூடிய தளவாய் ஒருவரும், பாளையப்பட்டுக்கு மேலுள்ள அரசு தொடர்பான விடயங்களைக் கவனிக்கத் தானாபதி ஒருவரும் இருந்தனர்.

உரிமைகள்[தொகு]

பாளையங்களின் பாதுகாப்பு, நிருவாகம், சட்டம் ஒழுங்குப் பராமரிப்பு, வரி வசூலிப்பு போன்ற விடயங்களில் பாளையக்காரர்களுக்கு உரிமைகள் இருந்தன. படை திரட்டி அவற்றைப் பாராமரிக்கவும், பாளயத்தின் பாதுகாப்புக்காகக் கோட்டைகளைக் கட்டிக்கொள்ளவும், நீதி விசாரணைகளை நடத்தித் தீர்ப்பு மற்றும் தண்டனைகள் வழங்கவும் பாளையக்காரர் அதிகாரம் பெற்றிருந்தனர். தங்களுடைய அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் குடிமக்களிடம் வரி அறவிடும் உரிமை இவர்களுக்கு இருந்தது. இவ்வாறு அறவிடப்படும் வரி, மன்னருக்கான கொடுப்பனவு, பாளையக்காரர்களின் சொந்தச் செலவு மற்றும் பாளையத்து நிர்வாகச் செலவு என்பவற்றுக்காகச் சமமாகப் பங்கிடப்பட்டது.

பாளையக்காரரின் பங்களிப்புகள்[தொகு]

முழு நாட்டின் பாதுகாப்புக்காகவும், வலிமைப் பெருக்கத்துக்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும், நாட்டின் மன்னர்கள் ஈடுபடும் போர்களில் உதவியாக நின்று போர்புரிந்து வெற்றி தோல்விகளைப் பாளையக்காரர்கள் தீர்மானித்துள்ளார்கள். அரசுரிமைப் போட்டி, உள்நாட்டுக் கலகங்கள் போன்றவற்றிலும் பாளையக்காரர்களின் பங்கு பல சந்தர்ப்பங்களில் முக்கியமானதாக இருந்ததுண்டு. பிற்காலங்களில் மன்னர்கள் அந்நியர் ஆதிக்கங்களுக்குப் பணிந்த பின்னரும், பாளையக்காரர்கள் அவர்களை எதிர்த்து நின்ற வரலாறுகளும் உண்டு.

பாளைய முறையின் விளைவுகள்[தொகு]

பாளைய முறையால் தமிழகத்தின் பூர்வ குடிகளின் நிலங்களின் பெரும்பகுதி விஜயநகர தளபதிகளுக்கு வழங்கப்பட்டது.பொதுவாக விளைச்சலில் பாதி வரியாக வசூலிக்கப்பட்டதால் உழவர்கள் இன்னலடைந்தனர்.

மதுரையின் 72 பாளையங்களின் பட்டியல்[தொகு]

அம்மையநாயக்கனூர்,அத்திப்பட்டி,அழகாபுரி,ஆய்க்குடி,ஆற்றங்கரை,இளசை, இரசக்கயனூர், இலக்கையனூர், இடையக்கோட்டை,இராமகரி, உதயப்பனூர், ஊற்றுமலை, ஊர்க்காடு,எட்டையபுரம், ஏழுமலை, ஏழாயிரம்பண்ணை,கடலூர்,கல்போது, கன்னிவாடி,கம்பம்,கண்டமனூர்,கவுண்டன்பட்டி, கடம்பூர், காமநாயக்கனூர், காசையூர்,காடல்குடி, குமரவாடி,குளத்தூர்,குருவிகுளம்,கூடலூர்,கொல்லப்பட்டி,கொல்லங்கொண்டான்,கோலார்பட்டி,கோட்டையூர்,கோம்பை,சந்தையுர்,சக்கந்தி,சமுத்தூர்,சேத்தூர்,சிவகிரி,சிங்கம்பட்டி,சுரண்டை,சொக்கம்பட்டி,தலைவன்கோட்டை,தேவாரம்,தொட்டப்பநாயக்கனூர்,தோகைமலை,தும்பிச்சிநாயக்கனூர்,படமாத்தூர்,பாஞ்சாலங்குறிச்சி,பாவாலி,பெரியகுளம்,போடிநாயக்கனூர்,ரோசலைப்பட்டி,வடகரை,வாராப்பூர்,விருப்பாட்சி,வெள்ளிக்குன்றம்,விரமலை,நத்தம்,நடுவக்குறிச்சி,நாகலாபுரம்,நிலக்கோட்டை,நெற்கட்டும் செவல்,மணியாச்சி,மருங்காபுரி,மன்னார்கோட்டை,மலைப்பட்டி,மருதவானையூர்,முதுவார்பட்டி,முல்லையூர்,மேல்மாந்தை

இவற்றையும் காண்க[தொகு]

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. டாக்டர் ஜே. தியாகராஜன் எழுதிய “தமிழக வரலாறு” பக்கம்-61.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாளையக்காரர்கள்&oldid=2535963" இருந்து மீள்விக்கப்பட்டது