பாகலூர் பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாகலூர் பாளையம் எனபது தற்கால கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாகலூரை மையமாகக் கொண்டு இருந்த ஒரு பாளையப்பட்டு ஆகும். இந்த பாளையத்துக்கு உட்பட்டு 89 கிராமங்கள் இருந்தன.

பாளையத்தின் தோற்றம்[தொகு]

கி.பி. 1207 இல் போசளப் பேரரசுக்கும் யாதவர்களுக்கும் நடந்த போரில் இரண்டாம் வீர வல்லாலனை குப்பல்ல குர்ரப்ப நாயக்கன் என்பவர் காப்பாற்றினார். தன்னுயிரைக் காத்த இந்த குப்பல்லகுர்ரப்ப நாயக்கனுக்கு பரிசாக இந்த பாகலூர் பாளையத்தையும், ஒரு வாளையும் அளித்தார். பாகலூர் பாளையத்தின் அரச சின்னமாக புலியின் தலையைக் கொண்டிருந்தனர், தங்களுக்கென்று தனியாக படையை கொண்டிருக்கவும், போசள மன்னருக்கு தேவைப்படும்பொழுது தங்கள் படையை அனுப்ப அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

வரலாறு[தொகு]

ஒசூர் மலைமீது சந்திரசூடேசுவரர் கோயிலும் அதன் அடிவாரத்தில் செவிடப்பாடி என்ற ஊர் முன்பே இருந்த நிலையில், செவிடப்பாடிக்குப் பக்கத்தில் புதியதாக ஒசூர் நகரத்தை குப்பல்ல குர்ரப்ப நாயக்கன் உருவாக்கி,[1] பாளையத்தின் தலைநகரை ஒசூருக்கு மாற்றினார். பாகலூர் பாளையமானது. குப்பல்லகுர்ரப்ப நாயக்கனுக்குப் பின்னர் ஸ்ரீராமவர்ம நாயக்கன் பாளையக்காரரானார். அலாவுதீன் கில்ஜியின் படைகளால் போசளப் பேரரசு சரிவடைந்தபிறகு உருவான விசயநகரப் பேரரசை பாளையக்காரர்கள் ஆதரித்தனர். தலைக்கோட்டைப் போரின்போது விசயநகரப் பேரரசுக்கு ஆதரவாக அப்போது பாகலூர் பாளையக்காரரராக இருந்த ஸ்ரீராமலிங்கப்பா நாயக்கனின் தலைமையில் 6000 படைகள் போரிட்டன, ஆனால் போரில் பாமினி சுல்தான்கள் வென்றனர். இதன் பிறகும் விசயநகர மன்னர்களின் ஆதரவாளர்களாக பாளையக்காரர்கள் இருந்து வந்தனர். 1636 இல் மைசூர் அரசின் தளபதி பாகலூர் பாளையத்தின் தலைநகரான ஒசூரைக் கைப்பற்ற முயன்றார். அதை அப்போதைய பாளையக்காரரான ராமநாயக்கன் முறியடித்தார். இந்த வெற்றியின் நினைவாக ஒசூரில் ஒரு ஏரியை வெட்டினார். இந்த ஏரி ராமநாயக்கன் ஏரி என அழைக்கப்படுகிறது. கர்நாடகத்தின் ஸ்ரீரங்கபட்டிணத்தில் ஆண்டுவந்த விசயநகர மன்னர் இறந்ததை அடுத்து பாகலூர் பாளையம் மைசூர் படைகளால் வெல்லப்பட்டது.[2]

மைசூரின் மேலாட்சியின் கீழ்[தொகு]

1655 இல் மைசூர் மன்னர் முதலாம் நரசராச உடையார் பாகலூர் பாளையத்துக்கு வந்தார். அப்போது பாளையக்காரர் மைசூரின் மேலாட்சியை ஏற்றுக்கொள்வதாக கூறி 6000 பகோடாக்களை வழங்க ஒப்புக்கொண்டார். நரசராச உடையாரின் மறைவையடுத்து பாகலூர் பாளையம் மைசூருக்கு செலுத்திவந்த கப்பத்தை நிறுத்திக்கொண்டது. இதனால் புதிய மன்னரான தொட்ட தேவராச உடையார் 1667 இல் பாகலூர் பாளையத்தை நோக்கி தன் படைகளை அனுப்பினார். இதன் பிறகு ஒசூர் மைசூர் பேரரசின் ஒரு பகுதியாக ஆனது. இக்காலகட்டத்தில் பாளையக்காராக இருந்த எர்ரப்ப நாயக்கன் ஒசூரிலிருந்து வெளியேறி பாகலூருக்கு சென்றுவிட்டார். பாகலூர் பாளையத்தை தன் பேரரசுடன் இணைக்கும் நோக்கத்துடன் மராத்திய மன்னரின் படைகள் தாக்கின, இதை எதிர்த்து போர்புரிந்த பாளையக்கார் சந்திரசேகர நாயக்கன் மராத்திய தளபதியான வெங்கேஜி ராவால் கொல்லப்பட்டார். பாளையக்காரர் கொல்லப்பட்டதை அடுத்து புதிய பாளையக்காரராக எர்ரப்ப நாயக்கன் முடிசூட்டப்பட்டார் புதிய பாளையக்காரர் மராத்தியருக்கு 2000 பகோடாக்களை கப்பமாக செலுத்த ஒப்புக்கொண்டார். இதன் பிறகான காலகட்டத்தில் பாளையம் மைசூரின் மேலாட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. எர்ரப்ப நாயக்கனுக்கப்பிறகு நஞ்சப்ப நாயக்கன் பாளையக்காரராக பொறுப்பேற்றார். ஆனால் இவரின் தாயாதிகளான ராமலிங்கப்பா நாயக்கன், சொக்கநாத நாயக்கன் ஆகியோர் கவிழ்த்து பாளையத்தைக் கைப்பற்றினர்.

ஐதர் அலி, திப்பு சுல்தான்களின் காலம்[தொகு]

மைசூரின் ஆட்சியாளனான ஐதர் அலி பாகலூர் பாளையத்தை மைசூருடன் இணைத்துக்கொண்டார். அக்கால கட்டத்தில் பாகலூர் பாளையத்தின் திவானாக இருந்த வெங்கடராவ் சிராவின் முஸ்லீம் ஆட்சியாளரை அணுகி உதவிகோரினார், இதனையடுத்து சிரா ஆட்சியாளர் தன் படைகளை 1763 இல் தன் படைகளால் மைசூர் படைகளைத் துரத்தி, பாளையத்தைப் பாதுகாத்தார். மேலும் பாளையத்துக்குப் பாதுகாப்பாக 3000 படைவீரர்களை நிறுத்திவைத்தார்.

கிழக்கிந்திய கம்பெனியுடனான நட்பு[தொகு]

சிரா அட்சியாளர் இறந்ததையடுத்து மீண்டும் மைசூர் படைகள் பாகலூர் பாளையத்தினுள் நுழைந்தன. இதன்பிறகு பாகலூர் பாளையக்காரர் தன் பாளையத்துக்குள் நுழைய இயலமல் போனது. பாளையக்காரர் கிழக்கிந்திய கம்பெனியுடன் நட்புறவு கொண்டார். கர்னல் ஸ்மிதுடன் 1768 சூன் 23 இல் ஒப்பந்தம் மேற்கொண்டார். இதைத் நொடர்ந்து கர்னல் ஊட் உதவியுடன் பாளையக்காரர் சூடப்ப நாயக்கன் தலைமையிலான படைகள் 1768 சூலை 3 அன்று ஒசூரைக் கைப்பற்றினார். தொடர்ந்து 1768 சூலை 7 அன்று தேன்கனிக்கோட்டையைக் கைப்பற்றினார். இந்த நிலையில் 1768 நவம்பர் 16 அன்று கர்னல் உட்டின் தலைமையிலான கிழக்கிந்தியப் படைகள் ஐதரலியிடன் சரண்டைந்தன. அப்போது 200 ஆட்களும், விலங்குகளும் ஐதர் அலியின் படைகளால் கொல்லப்பட்டன. பெங்களூர் திரும்பிய ஐதர் அலி தன் படைத்தளபதியான இப்ராகிம் கானிடம் பாகலூரைக் கைப்பற்ற உத்தரவிட்டார். இப்ராகிம் கான் பாகலூரைக் கைப்பற்றி, உடன் சூடப்ப நாயக்கனையும் கைதுசெய்தார். பின்னர் 15000 பகோடா பணத்தைக் வாங்கிக்கொண்டு பாளையக்காரர் விடுவிக்கப்பட்டார். 1782 இல் ஐதர் அலி இறந்ததை அடுத்து பாளையக்காரர் மீண்டும் பிரித்தானியரை அணுகி ஆதவைப் பெற்றார். பாளையத்தை மீண்டும் சூடப்ப நாயக்கனிடம் ஒப்படைக்க திப்பு சுல்தானை காரன்வாலிஸ் பிரபு வலியுறுத்தியதையடுத்து மீண்டும் பாளையக்காரரானார் சூடப்ப நாயக்கன். சிறிது காலத்துக்குப்பின் திப்பு சுல்தான் மீண்டும் பாகலூர் பாளையத்தைக் கைப்பற்றிக்கொண்டார். இதனால் பாளையக்காரர் சூடப்ப நாயக்கன் தன் மூன்று மகன்களான நஞ்சப்ப நாயக்கன், முத்துவீரபத்திரப்ப நாயக்கன், வீரசூடப்ப நாயக்கன் ஆகியோருடன் பாகலூரை விடுத்து வெளியேற்றி இராயக்கோட்டைக்கு சென்று தங்கிவிட்டார் தன் பாளையத்தை இழந்த நிலையிலும் மகன்களை 23வது பாளையக்காரர், 24வது பாளையக்காரர், 25வது பாளையக்காரர் என பாளையத்துக்கு வெளியிலேயே முடிசூட்டிவிட்டார். இதில் 23வது பாளையக்காரரான முத்துவீரபத்திர நாயக்கன் 1799இல் இலங்கையின் கண்டிக்குச் சென்றுவிட்டார். 1799 இல் திப்பு சுல்தான் போரில் கொல்லப்பட்டதை அடுத்து சூடப்ப நாயக்கன் பாளையக்காரராக ஆனார். அவருக்கப்பின் நஞ்சப்ப நாயக்கன் பாளையக்காரராக ஆனார். 1822 க்குப் பிறகு பிரித்தானியர்கள் பாகலூர் பாளையத்தின் அதிகாரத்தைக் குறைத்தனர். 21.10.1904இல் ரெவின்யு போர்டு உத்தரவுப்படி பாளையத்தினிடமிருந்து கிராமங்கள் விடுதலைப் பெற்றன. [3]

மேறகோள்கள்[தொகு]

  1. தேனிரா பாண்டியன் (2002). ஆயிரம் ஆண்டுகளில் ஓசூர். ஒசூர்: தேனிரா பாண்டியன். பக். 4. 
  2. Histry of bagaiur palayam poligars (2009). தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்டக் கருத்தரங்க மலர். தருமபுரி: ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை. பக். 165-158. 
  3. புலவர் கோவிந்தன்.. கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுச் சுவடுகள். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையம். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகலூர்_பாளையம்&oldid=2978108" இருந்து மீள்விக்கப்பட்டது