உள்ளடக்கத்துக்குச் செல்

உடையார் பாளையம் (பாளையம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டில் உள்ள பழைய பாளைய ஆட்சிகளுள் உடையார் பாளையம் பாளையமும் ஒன்று. இதன் ஆட்சியாளர்களாகிய 'காலாட்கள் தோழ உடையார்கள்' தங்கள் படைகளுடன் தங்கிய இடமாதலின் இதற்கு உடையார் பாளையம் என்னும் பெயருண்டாயிற்று. பல்லவர்களின் வழித்தோன்றல்களான "காலாட்கள் தோழ உடையார்" என்ற பட்டப் பெயருடன் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் ஆட்சி செய்து வந்தனர். அதன் அடையாளமாக 30 ஏக்கர் பரப்பில் அரண்மனையும், பீரங்கி, துப்பாக்கி, வாள்கள், வேல் கம்புகள், அம்பாரி, பல்லக்கு உள்ளிட்ட பொருட்கள் அங்கு உள்ளன. உ. வே. சாமிநாத ஐயர் உள்ளிட்ட அறிஞர்களை உடையார் பாளையம் ஆட்சியாளர்கள் ஆதரித்தனர்.

பாளைய வரலாறு

[தொகு]

வடதமிழகத்தின் மிகப்பெரிய 'பாளையம்' உடையார் பாளையம். நாயக்க மன்னர்கள் பற்றிய வரலாறுகளில் உடையார் பாளையம் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன.காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்களை பிரம்ம சத்திரியர்கள் என்று விளந்தை கல்வெட்டு (கி.பி. 18-ஆம் நூற்றாண்டு) கூறுகிறது.காஞ்சிபுரத்தை பல படையெடுப்புகளில் இருந்து காத்தவர்கள்.இதனைப் போற்றும் வகையில் காஞ்சி திரு வரதராஜப்பெருமாள் கோயிலில் இன்று வரை 'உடையார் பாளையம் உற்சவம்' கொண்டாடப்படுகிறது. கங்கைகொண்டசோழபுரம் திரு பிரகதீசுவரர் ஆலயம் சுமார் 400 ஆண்டுகளாக இவர்களது ஆளுகையில் இருந்து வந்தது. அக்கோயிலின் கோபுரக் கலசங்கள் மற்றும் சிங்கமுகக் கிணறு ஆகியவை உடையார் பாளையம் ஆட்சியர்களின் கொடையாகும். இவர்கள் பழைமையான கோயில்கள் பலவற்றை புதுப்பித்ததுடன் புதிய ஆலயங்களையும் எழுப்பியுள்ளனர். [1]

பாளையக்காரர்கள் அரண்மனை

[தொகு]

தமிழ்நாட்டில் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்றும் இருந்துவரும் ஒரே அரண்மனை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரண்மனை மட்டுமே. கி.பி.1500-களின் தொடக்கத்தில் இந்த அரண்மனை கட்டப்பட்டது. அழகிய கலைநயமிக்க கட்டிடக்கலையுடன் கூடிய இந்த அரண்மனை 30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனைச் சுற்றிலும் அகழி, கோட்டைச்சுவர் ஆகியவை கி.பி.1802 ஆண்டு வரை கட்டப்பட்டது. 64 அறைகள் இருந்த இந்த அரண்மனையில் 25 அறைகள் நன்றாக இருந்தன. சில அறைகள் தாஜ்மஹாலை போல் சிறந்த வேலைப்பாடுகளுடன் விளங்கின. அரண்மனையின் தர்பார் ஹால் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை போன்று காணப்பட்டன. இச்செய்திகள் திரு கச்சி சின்ன நல்லப்ப காலாட்கள் தோழ உடையார்கள் காலத்தில் வெளியிடப்பட்ட 'உடையார்பாளையம் ஜமீன் சரித்திரம்' நூலில் கூறப்பட்டுள்ளன. இவரது தந்தை திரு கச்சி யுவரங்கப்ப காலாட்கள் தோழ உடையார் காலத்தில் (கிபி.1869-1918) இந்த அரண்மனை இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் பழுதுபார்க்கப்பட்டது. பழைமையும்,பெருமையும் மிகுந்த இந்த அரண்மனை தமிழக அரசின் ஆதரவின்றி தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது.

கைலாச மகால்

[தொகு]

உடையார்பாளையம் 24-வது அரசரான திரு.கச்சி சின்ன நல்லப்ப காலாட்கள் தோழ உடையார் கல்வியறிவும்,தொலைநோக்குப் பார்வையும் கொண்டவர். கி.பி.20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர் அரசராக முடிசூட்டிக்கொண்டபின் அரண்மனையில் தர்பார் கூடியபோது, சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் அருளாசி வழங்கியிருக்கிறார். சுமார் 600 ஆண்டுகள் பழைமையான கலைநயமிக்க உடையார்பாளையம் அரண்மனை இவரது தந்தையார் திரு கச்சி யுவரங்கப்ப காலாட்கள் தோழ உடையார் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. அரும்பெரும் செயல்கள் செய்த தனது தந்தையார் நினைவாக 'கைலாச மஹால்' என்னும் கோயிலை சின்ன நல்லப்பர் எழுப்பினார். அரியலூர் மழவராயரின் மகளான ஒப்பாயாள் என்பவரை மணந்துகொண்டார். சின்ன நல்லப்பர் காலத்தில் தான் 'உடையார்பாளையம் சமஸ்தானத்தின் வரலாறு' ஆங்கிலத்தில் எழுதப்பட்டு நூலாக வெளியிடப்பட்டது. உடையார்பாளையம் அரசர்கள் விளந்தையை ஆட்சி செய்தனர் என்று கி.பி.18-ஆம் நூற்றாண்டின் விளந்தை கல்வெட்டு குறிப்பிடுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "உடையார்பாளையம் சமஸ்தானம் வரலாறு". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-04-25.

வெளி இணைப்புகள்

[தொகு]