மங்கள் பாண்டே
மங்கள் பாண்டே Mangal Pandey | |
---|---|
![]() | |
பிறப்பு | 19 சூலை 1827 நாக்வா, பாலியா, உத்தரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | ஏப்ரல் 8, 1857 பராக்பூர், கல்கத்தா, இந்தியா | (அகவை 29)
பணி | சிப்பாய் வங்காளத்தின் வங்காளத்தின் 34வது பிரிவு, பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி |
அறியப்படுவது | இந்திய விடுதலைப் போராட்ட வீரர் |
சமயம் | இந்து |
மங்கள் பாண்டே (Mangal Pandey, இந்தி: मंगल पांडे, சூலை 19, 1827 – ஏப்ரல் 8, 1857) என்பவர் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காளத்தின் 34வது ரெஜிமெண்ட்டில் ஒரு படை வீரராக இருந்தவர். இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர்களில் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.
வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]
பாண்டே உத்தரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார். நாக்வா கிராம மக்கள் தங்கள் முன்னோராக மங்கல் பாண்டேயையே குறிப்பிடுவர்[1]. மிகவும் தீவிரமான இந்துவான பாண்டே 1849 இல் ஆங்கிலேயரின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில் தனது 22வது வயதில் இணைந்தார். அக்கம்பனியின் 34வது பிரிவில் பணிபுரிந்தார். இப்பிரிவினரே அதன் பிரித்தானிய அலுவலர்களைத் தாக்கி சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 அல்லது இந்திய விடுதலைப் போரை ஆரம்பித்து வைத்தவர்கள்.
1857 நிகழ்வு[தொகு]
கல்கத்தாவின் பரக்பூர் நகரில் மார்ச் 29, 1857 மாலையில் தனது பிரிவில் உள்ள பல சிப்பாய்கள் கிளர்ந்தெழுத்த நிலையில் உள்ளார்கள் என லெப்டினண்ட் போ (Baugh) என்பவன் அறிவித்தான். அத்துடன் அவர்களில் மங்கள் பாண்டே என்பவன் துப்பாக்கியுடன் மற்றைய சிப்பாய்களை கிளர்ச்சிக்கு வருமாறு அழைத்துக் கொண்டிருந்ததாகவும் முதலில் காணும் வெள்ளைக்காரரை சுட்டு விடுவதாகவும் பயமுறுத்திக் கொண்டிருப்பதாகவும் அறிவித்தான். போ உடனேயே தனது குதிரையில் ஏறி வாளையும் உருவிக்கொண்டு சிப்பாய்களை நோக்கிச் சென்றான். குதிரைச் சத்தத்தைக் கேட்ட பாண்டே அங்கிருந்த பீரங்கியின் பின்னால் மறைந்து கொண்டு போவை நோக்கிச் சுட்டான். எனினும் அது குறி தவறி குதிரையைத் தாக்கியது[2]. போ பாண்டேயை நோக்கிச் சுட ஆரம்பித்தான். பாண்டே தனது வாளை உருவி போவைத் தாக்கிக் காயப்படுத்தினான். அதன் பின்னரே ஷேக் பால்ட்டு என்ற வேறொரு சிப்பாய் பாண்டேயை மேலும் தாக்காதாவாறு தடுத்து நிறுத்தினான்[2]. பாண்டே பின்னர் கைது செய்யப்பட்டு ஒரு வார விசாரணைக்கு பின்னர் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏப்ரல் 8, 1857 இல் அவன் தூக்கிலிடப்பட்டான்[2]. 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக மே 6 ஆம் நாள் கலைக்கப்பட்டது[2].
பாண்டேயின் தாக்குதல் இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாகப் பலராலும் பார்க்கப்படுகிறது. மங்கள் பாண்டே "தியாகி" எனப் பின்னால் கருதப்பட்டான்.
திரைப்படம்[தொகு]
மங்கள் பாண்டேயின் வரலாற்றைச் சித்தரிக்கும் சில திரைப்படங்கள் வெளி வந்தன. The Rising என்ற திரைப்படம் 2005 இல் வெளிவந்தது[3]
நினைவுகள்[தொகு]
இந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக அக்டோபர் 5, 1984 இல் அஞ்சல் தலை ஒன்றையும் முதல்-நாள் உறையையும் வெளியிட்டது.