உள்ளடக்கத்துக்குச் செல்

அய்யன்காளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அய்யன் காளி

அய்யன் காளி திருவிதாங்கூர் மாகாணத்தில் பட்டியல் சமூகத்தினரின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர். இவர் 28 ஆகத்து, 1863ல் திருவிதாங்கூரில் (கேரளா) திருவனந்தபுரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெங்கனூரில், பெருங்காட்டுவிளா என்ற ஊரில் 7 பிள்ளைகளில் ஒன்றாக கூலி விவசாய குடும்பத்தில் அய்யன் என்பவருக்கு மகனாக பிறந்தார் அய்யன்காளி. இளவயதில் கட்டுடலும், அழகும், வலிமையும் நிறைந்தவராகவே வளர்ந்தார். அய்யன்காளி சிறுவனாக இருக்கும் போது தனது குடும்பத்தினரும், உறவினர்களும் உரிமை மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுவதை உணர்ந்தார். புலையர் சாதியில் பிறந்த அவர்களுக்கு சாலையில் நடக்க அனுமதியில்லை. உடலை மறைக்க நல்ல உடையணிய அனுமதி மறுக்கப்பட்டது. செருப்பு போட அனுமதியில்லை. தலைப்பாகை கட்டக்கூடாது என பல அடக்குமுறைகளை அனுபவித்தனர். பிராமணீய வர்ணாசிரம அடுக்கில் கீழே இருந்ததால் புலையர்களை ஏரில் பூட்டி வயலை உழக் கட்டாயப்படுத்தினர். நாயர்களும், நம்பூதிரிகளும் இவர்களை அடிமைகளாக நடத்தினர். அக்கால கட்டத்தில் பட்டியல் சாதியினர் மீது கல்வி உரிமை மறுப்பு, பொதுத் தெருவில் நடமாடும் சுதந்திரம் இல்லாமை,பெண்கள் மேலாடை அணிய அனுமதிக்கப்படாமை போன்ற கொடுமைகள் நாயர் மற்றும் நம்பூதிரி சாதி மக்களால் நிகழ்த்தப்பட்டது.

இளமைப் பருவம்

[தொகு]
திருவனந்தபுரத்தில் உள்ள அய்யன் காளியின் உருவ சிலை

நிலங்களை சீர் படுத்தியதற்காக ஐயன் காளியின் தந்தை அய்யனுக்கு ஒரு சிறிய நிலத்தை அவரது நாயர் முதலாளி கோவிந்தபிள்ளை வழங்கினார். இது அன்றைய நாயர் சமுதாயத்தில் சலசலப்பான எதிர்ப்பை ஏற்படுத்தியது. ஐயன் காளி இளமைப் பருவத்தில் நல்ல உயரத்துடன் கட்டுடலுடன் காணப்பட்டார். தன் நண்பர்களுடன் தன் வீட்டில் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது பந்து அடிக்கடி பக்கத்திலிருக்கும் நாயர் வீட்டின் கூரையில் விழுந்தது. அதைக் கண்ட அந்த நாயர் அவரிடம் இனிமேல் நாயர் இளைஞர்களுடன் விளையாடக்கூடாது என்று எச்சரித்தார். இது அவரிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் இனிமேல் நாயர்களுடன் விளையாடுவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டார். அன்று முதல் விளையாடுவதை விட்டுவிட்ட ஐயன் காளி ஆழமான மௌன சிந்தனையில் மூழ்கினார். தாழ்த்தப்பட்டு சுரண்டப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து சமுதாய விடுதலை பெறும் போராளியாக உருவெடுத்தார் அய்யன் காளி. இதற்காகவே அவர் பல நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். இவை இந்து புராணங்களை ஆராய்ந்து அதில் சமுதாய விடுதலைக்கான தரவுகளை வடித்தெடுத்து உருவாக்கப் பட்டதாகும். உதாரணமாக கக்கல ரிஷி நாடகம், அரிச்சந்திர நாடகம், வள்ளி சுப்பிரமணியர் திருமணம் ஆகிய நாடகங்கள் இவற்றில் அடங்கும். இவற்றினை நாடெங்கும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே நடத்தி கட்டுக்கடங்காத விழிப்புணர்வை ஏற்படுத்தினார் ஐயன் காளி. 1888 ல் செல்லம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. தங்கம்மா என்ற பெயரில் அறியபடுகின்ற ஒரே மகள் கேசவன் சாத்திரி என்பவருடன் மணமுடிக்கப்பட்டர். கேசவன் சாத்திரி பின்பு கேரள சட்டசபையின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போராட்டங்கள்

[தொகு]

அய்யன்காளி முறையாக கல்வி கற்றவரல்ல. ஆனால் தன் சாதிக்குரிய அடிமுறைகளை கற்றிருந்தார். திருவனந்தபுரத்தில் அன்று இருந்த தைக்காடு அய்யாவு சாமிகள் என்ற ஹடயோகியிடம் இவர் அடிமுறைகளையும் சில யோக முறைகளையும் கற்றார். இந்த அய்யாவு துறவி அல்ல. வணிகம்செய்துவந்தார். இவர் சம்ஸ்கிருதம், ஆங்கிலம் கற்றவர். இவரிடம் சட்டம்பி சாமிகள் போன்றவர்கள் மாணவர்களாக இருந்தார்கள். மூத்த மாணவர்கள் என்றமுறையில் சட்டம்பிசாமிகள், நாராயணகுரு ஆகியோரிடம் அய்யன்காளிக்கு கடைசிவரை நெருக்கமான தொடர்பு இருந்தது

1883ல் அய்யன்காளி புலையர்கள் நடுவே சேவை செய்வதற்காக வந்த அத்வைதியான சதானந்த சுவாமிகளை சந்தித்தார். அவரது மாணவரானார். அவரின் தலைமையில் அய்யன்காளி புலையர் மக்களுக்கு வழிநடக்கும் உரிமை, கல்விகற்கும் உரிமை ஆகியவற்றைப் பெற்றுத்தர போராட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அய்யன்காளி உருவாக்கிய அய்யன்காளிப்படை வன்முறையை கையாள ஆரம்பித்தபோது சதானந்த சுவாமிகளிடம் இருந்து விலகினார். ஆனால் பின்னர் அய்யன்காளி வன்முறையைக் கைவிட்டு அமைதியான மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்க ஆரம்பித்தார்.

மாட்டுவண்டிப் போராட்டம்

[தொகு]

காளி இரண்டு வெள்ளை மாடுகளை வாங்கி மாட்டுவண்டியாக பூட்டி மாடுகளின் கழுத்தில் மணியை கட்டி தனியாளாக வீதியில் ஓட்டினார். தினமும் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட தெருக்களில் மணிச்சத்தத்துடன் மாட்டுவண்டியில் பயணம் செய்தார். மாட்டு வண்டி பயணத்தின் போது அவர் வெள்ளை வேட்டி கட்டி, அங்கவத்திரம் உடுத்தி, தலைப்பாகையுடன் அருகில் உள்ள சந்தைக்கு மாட்டு வண்டியை ஓட்டினார். இவையனைத்தும் அன்றைய திருவிதாங்கூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தடை செய்யப்பட்டிருந்த காரியங்களாகும். சந்தையிலிருந்து திரும்பி வரும் போது பல நம்பூதிரி மற்றும் நாயர் சாதி ஆண்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர். அவர் தன்னுடைய கனத்த குரலில் தன்னிடமிருந்த கத்தியைக் காட்டி மிரட்டி விரட்டினார்.

சாலியர் வீதிக் கலகம்

[தொகு]

அய்யன்காளி பெற்ற இவ் வெற்றி ஒடுக்கப்பட்ட மக்களை விழிப்புணர்வு பெற செய்தது மட்டுமல்லாமல் ஆதிக்கசாதியினரை ஆத்திரமடைய வைத்தது. அய்யன்காளி மாட்டுவண்டி ஓட்ட முடிந்தாலும், மற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் தெருவில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. தனது விடுதலை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலையே உண்மையான விடுதலையாக இருக்க முடியுமென்பதை அய்யன்காளி உணர்ந்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி எந்த தெருக்களில் நடக்க உரிமை மறுக்கப்பட்டதோ அதே தெருக்களின் வழியாக புத்தன் சந்தைக்கு 'விடுதலை ஊர்வலம்' போனார். ஊர்வலம் பாலராமபுரத்தில் சாலியர் தெருவை அடைந்ததும் மறைந்திருந்த ஆதிக்கசாதி கும்பல் ஒடுக்கப்பட்ட மக்களை தாக்கியது. ஒடுக்கப்பட்ட மக்களும் தங்களது மேல் தொடுக்கப்பட்ட தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதலை தொடுத்தனர். திருவிதாங்கூரின் ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் ஆயுதப்போராட்டத்தில் இருதரப்பிலும் காயம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள் காயமடைந்தனர். தளராமல் அய்யன்காளி தலைமையில் போராடி ஆதிக்க சாதியினருக்கு பயத்தை ஏற்படுத்தினார்கள் ஒடுக்கப்பட்ட மக்கள். சாலியர் வீதி கலகம் பற்றிய செய்திகள் மணக்காடு, கழக்கூட்டம், கன்னியாபுரம் போன்ற பகுதியில் தீயாக பரவ இளைஞர்கள் தெருக்களில் இறங்கி உரிமைகக்காக போராட துவங்கினர். ஒடுக்கப்பட்ட இளைஞர்களின் கலகத்தை அடக்க ஆதிக்க சக்திகள் எடுத்த முயற்சி பலனளிக்காமல் மேலும் கலவரத்தை பரவச்செய்தது. விவசாய வேலைகளை புறக்கணித்து மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக ஒடுக்கப்பட்ட மக்கள் போராடத் துவங்கினர். போராடிய மக்களை பயமுறுத்த ஆதிக்கசாதியினர் தாக்குதலை தொடுத்தனர். அதன் விளைவு போராட்டத்தை மீண்டும் வலுவடைய செய்தது. தாக்குதலிலிருந்து காப்பற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் சிறு ஆயுதக்குழுக்களை உருவாக்கினர்.

பள்ளி நுழைவுப் போராட்டம்

[தொகு]

புலையர்கள் பள்ளிக்கூடத்தில் நுழையக்கூடாது என்ற நிலையைத் தகர்க்க 1904 ம் ஆண்டு ஐயன் காளியின் தலைமையில் கல்வி நிலையம் ஒன்றை அமைத்தனர். அக்காலகட்டத்தில் புலையர்களுக்கு அரசாங்க கல்வி நிலையங்களில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கரும்பலகைகள் எதுவுமின்றி மணலில் பாடம் சொல்லிகொடுக்கும விதமாக இப்பள்ளி செயல்பட்டது. இதன் மூலம் மறைமுகமாகக்கூட புலையர்கள் கல்வி கற்கக் கூடாது என்ற நிலை அகற்றப்பட்டது. வெங்கனூரில் அமைக்கப்பட்ட இக் கல்வி நிலையமே பட்டியல் வகுப்பினருக்காக முதன் முதலில் அமைக்கப்பட்ட கல்வி நிலையமாகும். 1914 இல் கல்வித்துறை தான் வெளியிட்ட பட்டியல் மக்களுக்கான உத்தரவு செயல்படுத்தப் படுகிறதா என பார்க்கலாயிற்று. புலையக்குழந்தைகள் நுழையும் பள்ளிகளில் பிறசாதிக் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து மிச்சல் குழந்தைகள் வெளியேறுவதற்குக் தக்க காரணங்கள் தரப்பட்டு இருந்தால் அவற்றை ஆவணப் படுத்துமாறு தலைமை ஆசிரியர்களைப் பணித்தார். இந்நிலையில் 1905 இல் அவர் ஏற்கனவே நிறுவிய பள்ளிக்கு இப்போது அரசு அங்கீகாரம் தரப் பட்டது. பரமேஸ்வரன் பிள்ளை என்பவர் ஆசிரியராக இருக்க முன்வந்தார். ‘ஹரி ஸ்ரீ ஓம்’ எனச் சொல்லிப் பாடம் நடத்தத் தொடங்கியது போது, பிற சாதியினர் பள்ளியைத் தாக்கின. அன்று இரவு பள்ளி தீக்கிரையானது. இதன் பிறகு ஒரு மாபெரும் இயக்கமாக மாறி, அனைவருக்குமான பள்ளிகள் பல இடங்களில் எழுந்தன.

சாது சன் பரிபாலன சங்கம்

[தொகு]

தீண்டாமைக் கொடுமையின் காரணமாக பல புலையர்கள் கிறித்தவ மதத்திற்கு மதம் மாறினர். இவர்கள் மதம் மாறாமல் இந்து மதத்திலேயே இருந்த புலையர்களை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அவர்களை ஒதுக்கினர். இதனால் கிறித்தவ புலையர்கள் என்றும் புலையர்கள் என்றும் மக்கள் பிளவுபட்டனர். இதனைக் கண்டு வேதனையுற்ற ஐயன் காளி இரு பிரிவினரையும இணைக்கும் விதமாகத சாது ஜன பரிபாலன சங்கம் 1907ம் ஆண்டு தொடங்கினார். அதன் தலைவராக ஐயன் காளியே தேர்ந்தெடுக்கப் பட்டார். விவசாயத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வேண்டும் என்றும், அந்த விடுமுறை நாளில் சங்க சேவையில் மக்கள் ஈடுபட வேண்டும் என்றும் கூறினார் ஐயன் காளி. இந்த கூட்டங்களில் கலந்து கொள்ள ஆண்களிடமிருந்து அரைச் சக்கரமும், பெண்களிடமிருந்து கால் சக்கரமும் வசூலிக்கப்பட்டது.(14.5 சக்கரம்= 1 ரூபாய்)

கேரளாவின் முதல் தொழிலாளர் வேலைநிறுத்தம்

[தொகு]

SJPS பட்டியல் வகுப்பினரை பள்ளியில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்று அரசிற்கு பல மனுக்கள் அளித்தது. அதன் காரணமாக 1907ம் ஆண்டு அரசு பட்டியல் வகுப்பினரை பள்ளியில் சேர்க்கலாம் என்று அனுமதி வழங்கியது. ஆனால் நடைமுறையில் பள்ளிகளை அணுகிய போது நிலையோ வேறாக இருந்தது. ‘புலையர் குழந்தைகள் படித்தால் எங்கள் வயல்களில் யார் வேலை செய்வார்கள்?’ என்று இறுமாப்புடன் கேட்டனர் பிற சாதியினர். ‘எங்கள் குழந்தைகள் கல்வி கற்க முடியாதென்றால் உங்கள் வயல்களில் நாங்கள் வேலை பார்க்க முடியாது’ என்றார் அய்யன் காளி. நில உடமையாளர்கள் வேலை செய்ய மறுத்து அறப்போராட்டம் நடத்திய விவசாய தொழிலாளர்களைத் தண்டித்தனர். கொடூரமாக தண்டித்தனர். பற்களை உடைப்பது முதல் சாட்டையடிகள், சூடு போடுதல் எனப் பல கொடுமைகள் அரங்கேறின. நாயர் நம்பூதிரி சாதியினர் வேலை நிறுத்தம் செய்யும் விவசாயத் தொழிலாளர் மீது நடவடிக்கை எடுக்க திவானை அணுகியது. ஆனால் திவான் பி.ராஜ கோபாலாச்சாரியார் மறுத்துவிட்டார்.ஆனால் நில உடைமையாளர்களே நடத்தி வந்த பள்ளிகளில் பட்டியல் வகுப்பினர் குழந்தைகளை சேர்த்துக் கொள்ள அனுமதிக்கவில்லை. இதனால் கொதிப்படைந்த ஐயன் காளி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புலையர்களையும் பிற விவசாயிகளையும் ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்தினார். அவர்கள் கோரிக்கைகள்

  1. தொழிலாளர்களை மனம்போனபோக்கில் பலிகடா ஆக்குவதை நிறுத்தவேண்டும்
  2. தொழிலாளர்கள் மேல் பொய் வழக்குகள் போடுவதை நிறுத்த வேண்டும்
  3. தொழிலாளர்களை அடிப்பதை நிறுத்த வேண்டும்
  4. தொழிலாளர்கள் எல்லா இடத்திலும் நடமாட அனுமதி
  5. குழந்தைகளை கல்வி நிலையங்களில் அனுமதிக்க வேண்டும்

போராட்டம் தீவிரமடைந்தது. தொழிலாளர் மீதான வன்முறை நின்றது. பட்டியல் வகுப்பினரும் மீனவர்களும் கை கோர்த்தனர். போராட்டம் வெற்றி பெற்றது. இதன் காரணமாக புலையருக்கு சாதகமாக ஒரு கல்வி அறிக்கையை 1910 மார்ச் முதல் நாள் டாக்டர் மிச்சேலும் ராஜகோபாலாச்சாரியாரும் இணைந்து வெளியிட்டனர்.

மக்கள் சபை உறுப்பினராக நியமிக்கப்படல்

[தொகு]

1911 டிசம்பர் 5 அன்று சாது ஜனபரிபாலன சங்கத்தைச் சேர்ந்த அய்யன்காளி திருவிதாங்கூர் திருமூலம் மக்கள் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என அரசாங்க கெசட்டில் அறிக்கை வெளியானது. பின்பு அதன் மூலம் ஐயன் காளி தம் சமுதாய மக்களின் நலன்களுக்காக குரல் கொடுத்தார். 1913, 1914 ஆம் ஆண்டுகளில் அய்யன் காளியைத் தவிர சரதன் சாலமன், வெள்ளிக்கர சோதி ஆகியோரும் ஐயன்காளியின் முயற்சியால் புலையர்களின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டனர்.

நெடுமங்காடு சந்தைப் போராட்டம்

[தொகு]

1912 இல் பட்டியல் வகுப்பு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நெடுமங்காடு சந்தையில் ஐயன்காளி நுழைந்தார். போராட்டத்திற்க பிறகு அனைவரும் சந்தையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

பங்களிப்பு

[தொகு]
  • 1889 முதல் அய்யன் காளி பொதுவழி உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்தார். 1889ல் அவர் வெங்ஙானூர் முதல் பாலராமபுரம் வரை நடத்திய புலையர் ஊர்வலம் பெரிய சமூக அசைவை உருவாக்கியது. 1890ல் அவரது குழு ராஜபாதைவழியாக வெங்ஙானூரில் இருந்து ஆறன்முளை வரை ஒரு நீண்ட பயணத்தை நிகழ்த்தியது. அன்றைய முக்கியமான தலைவர்கள் அதற்கு ஆதரவளித்தனர். அய்யன்காளி ஒரு மக்கள்தலைவராக அறியலானார்.
  • 1904ல் பட்டியல் வகுப்பு மக்களுக்காக ஒரு பள்ளிக்கூடத்தை வெங்ஙானூரில் ஆரம்பித்தார். இந்த பள்ளிக்கு எதிராகவும் அவரது ஊர்வலங்களுக்கு எதிராகவும் வன்முறைத் தாக்குதல்கள் நிகழ்ந்தன. அவற்றை அய்யன்காளி வன்முறை மூலம் எதிர்கொண்டார்.
  • 1904ல் புலையர்களுக்கு அடிப்படைக்கூலி நிச்சயிக்கப்படுவதற்காக திருவிதாங்கூர் முழுக்க ஒரு வேலைநிறுத்தப் போராட்டத்தை அய்யன்காளி ஆரம்பித்தார். 1905 ல் இந்தபோராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.
  • 1905ல் அய்யன்காளி சதானந்த சாமிகளின் உதவியுடன் சாதுஜன பரிபாலன சங்கம் என்ற பேரில் ஓர் அமைப்பை உருவாக்கினார். இதன் மூலம் தன் மக்களுக்கான கல்வி முயற்சிகளை ஒருங்கிணைத்தார். இதில் அன்றைய முக்கியமான அறிவுஜீவிகளின் ஆதரவைப் பெற்றார். குறிப்பாக நாராயணகுருவின் பேரியக்கம் அவருக்கு பக்கபலமாக இருந்தது. 1907ல் புலையர்களுக்கு பொதுக்கல்விக்கான உரிமையை அளித்து திருவிதாங்கூர் அரசு ஆணையிட்டது. ஆனால் அந்த உத்தரவு 1910 வரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதை அமல்படுத்த தொடர்போராட்டம் தேவைப்பட்டது. ஆனால் நடைமுறையில் பிள்ளைகள் பொதுக்கல்விச்சாலைகளில் தடையில்லாமல் சேர்க்கப்பட 1915 வரை போராடவேண்டியிருந்தது.
  • 1910ல் திருவிதாங்கூர் மன்னருக்கு அளிக்கப்பட்ட மலையாளி மெம்மோரியல் என்ற மிகப்பெரிய கூட்டு மனு முக்கியமான ஒரு சமூக நிகழ்வாகும். இதில் புலையர்களுக்காக அய்யன்காளி கையெழுத்திட்டிருந்தார். முற்போக்கு எண்ணமுள்ள மலையாளிகள், ஒடுக்கப்பட்டோர் அனைவரும் இணைந்து உருவாக்கி அளித்த இந்த மனு முதலில் நிராகரிக்கப்பட்டாலும் மெல்ல மெல்ல அதை அமலாக்காமலிருக்கமுடியாது என்ற நிலை வந்தது
  • மலையாளி மெம்மோரியல் அளித்த கோரிக்கையின்படி திருவிதாங்கூர் சட்ட சபையான ஸ்ரீமூலம் பிரஜா சபையில் ஈழவர், புலையர் போன்றோருக்கு இடமளிக்கப்பட்டது. 1911 டிசம்பர் ஐந்தாம் தேதி அய்யன்காளி பிரஜாசபையில் உறுப்பினராக ஆனார். இது ஒரு பெரும் சமூகநிகழ்வாக சொல்லப்படுகிறது. 1941ல் இறப்பது வரை அங்கே அவர் பணியாற்றினார்.
  • 1915ல் கொல்லம் பெரிநாடு என்ற ஊரில் ஒரு கலவரம் நிகழ்ந்தது. அன்று புலையர்கள் மேலாடை அணிய அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கல்லும்மாலையும் என்ற ஒரு அணி மட்டுமே அணிய வேண்டும். அது கற்களால் ஆனது. அந்த அவமதிப்பை எதிர்த்து அய்யன்காளி 1915 அக்டோபர் 14ல் பெரிநாடு சந்தையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை கூட்டினார். அதை பிற சாதியினர் தாக்கினர். சற்றும் பின்வாங்காமல் 1915 டிசம்பர் 19 அன்று அதே இடத்தில் இரண்டாவது மாநாட்டைக்கூட்டி அந்த வெற்றியை அறிவித்தார்
  • அரசுப்பணிகளில் புலையர்களுக்கான ஒதுக்கீடுக்காக 1916ல் அய்யன்காளி குரலெழுப்பினார். 1916ல் இதற்காக சாதுஜனபரிபாலினி என்ற இதழை வெளியிட ஆரம்பித்தார்.
  • ஆரம்பத்தில் இவரை சாதிய நோக்கில் மிகக்கடுமையாக விமர்சனம் செய்த தேசாபிமானி ராமகிருஷ்ணபிள்ளை என்ற எழுத்தாளரை தொடர்ந்துசென்று கண்டு பேசி தன் தரப்புக்குத் திருப்பினார். அவர் பின்னாளில் அய்யன்காளியின் முக்கியமான ஆதரவாளராக இருந்தார். கேசவன் வைத்தியர், வி.ஜெ.தாமஸ் ஆகியோருடன் இணைந்து இந்தபோராட்டங்களில் ஈடுபட்டார்
  • 1924ல் நாராயணகுருவின் இயக்கமும் காங்கிரஸும் இணைந்து டி கெ மாதவன் தலைமையில் நிகழ்த்தப்பட்ட வைக்கம் சத்தியாக்கிரகத்தில் அய்யன்காளி முக்கியமான பங்கு வகித்தார். வைக்கம் போராட்டத்தின் இறுதிவெற்றியாக 1936ல் ஆலயப்பிரவேச சட்டம் அமலானபோது வெற்றிவிழாவில் காந்தியுடன் அய்யன்காளியும் கலந்துகொண்டார்
  • 1937 ல் வெங்கானூரில் அய்யன்காளியை கௌரவிப்பதற்காக நாராயணகுருவின் இயக்கமும் காங்கிரஸும் சேர்ந்து அமைத்த மாபெரும் கூட்டத்தில் காந்தி அய்யன்காளியை பாராட்டி பேசினார். அவரை ஒரு சமூகப்போராளி மட்டுமல்ல ஆன்மஞானியும்கூட என்று சொன்னார்.

முக்கிய நிகழ்வுகள்

[தொகு]

1933 : கோவில் நுழைவு பிரகடனம்.
1937 : ஜனவரி 14 வெங்ஙானூர் வந்து மகாத்மா காந்தி அய்யன் காளியை சந்தித்தது.
1939 : அய்யன் காளிக்கு கொடுப்புனா ஊர் மக்கள் கொடுத்த வரவேற்பு.

சிறப்புகள்

[தொகு]

அய்யன்காளி 1940ல் புலையர் மகாசபை என்ற அரசியல் அமைப்பை உருவாக்கினார். அவ்வியக்கம் இன்றும் உள்ளது. 1980 ஆகஸ்ட் 10 ல் பிரதமர் இந்திராகாந்தி அய்யன்காளியின் சிலையை திருவனந்தபுரத்தில் திறந்து வைத்தார்

மறைவு

[தொகு]

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட ஐயன் காளி 1941 சூன் 18 அன்று மறைந்தார். அவரது சமாதியிடம் வெங்ஙானூரில் உள்ளது

நூல்கள்

[தொகு]

அய்யன்காளியின் மகள் வயிற்றுப்பேரன் அபிமன்யூ அவரைப்பற்றி அதிகாரபூர்வ வரலாற்று நூலை கேரள அரசு வெளியீட்டுதுறைக்காக எழுதியிருக்கிறார். இந்நூலை ஆதாரமாகக் கொண்டு நிர்மால்யா கேரளத்தின் முதல் தலித் போராளி: அய்யன் காளி என்ற தமிழ் நூலை எழுதினார். இது தமிழினி பிரசுர வெளியீடாக வந்துள்ளது

வெளி இணைப்புக்கள்

[தொகு]

ஆதாரம், கேரள அரசு இணையதளம்[தொடர்பிழந்த இணைப்பு] [1] [2] [3] [4] [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.ambedkar.org/books/AYYAN-KALI.htm
  2. http://www.india9.com/i9show/Ayyankali-27087.htm
  3. http://drkanam1.tripod.com/sivarajayoga/index.blog/35311/ayyankali-18631914/
  4. http://books.google.co.in/books?id=fuvZAAAAMAAJ&q=ayyankali&dq=ayyankali&hl=en&ei=4S1uTYfWKMf4rQfl6_nqDg&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CC8Q6AEwAQ
  5. http://books.google.co.in/books?id=jAIR983RvW4C&printsec=frontcover&dq=ayyankali&hl=en&ei=4S1uTYfWKMf4rQfl6_nqDg&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CCkQ6AEwAA#v=onepage&q&f=false

பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-903887-6-2

"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யன்காளி&oldid=3704375" இலிருந்து மீள்விக்கப்பட்டது