சுதேசி இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுதேசி இயக்கம் என்பது சொந்த நாட்டில் தயாராகும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் முன்னுரிமை அளித்து அந்நிய நாட்டுப் பொருட்களை புறக்கணிக்கும் இயக்கம் ஆகும். இது இந்திய விடுதலை இயக்கத்தின் போது விடுதலைப் போராட்ட வீரர்களால் பிரிட்டானிய அரசை எதிர்க்கப் பயன்படுத்தப்பட்ட போராட்ட உத்திகளில் ஒன்றாக விளங்கியது.

தோற்றமும் வரலாறும்[தொகு]

இந்திய விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான இந்திய தேசிய காங்கிரஸ் இந்த இயக்கத்தைத் தொடங்கியது. ஆங்கில ஆட்சியின்பால் கொண்ட அதிருப்தியின் காரணமாக, காங்கிரசை சேர்ந்த பலரும் வெறும் விண்ணப்பங்களையும் வேண்டுகோள்களையும் அரசுக்குச் சமர்ப்பிப்பதால் பெரிய மாறுதல் எதுவும் ஏற்படப் போவதில்லையென்றும், இதர பல நேரடி நடவடிக்கைளில் ஈடுபட்டுப் போராடுதல் அவசியம் என்றும் கருதிக்கொண்டிருந்தனர். அவ்வெண்ணப் போக்கின் பிரதிபலிப்பாக 1906-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுயராஜ்யம், சுதேசி, தேசியக்கல்வி, அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுவே சுதேசி இயக்கம் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது.

மகாத்மா காந்தி காங்கிஸ் கட்சியின் தலைவரான பின், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் புதியதோர் திருப்பு முனை ஏற்பட்டது. காந்தியடிகள் அந்நியராட்சியை எதிர்க்கப் பொது மக்களை ஒன்று திரட்டி, அவர்கள் ஆதரவோடு பல போராட்டங்களை நடத்தினார். தனி நபர் சத்தியாக்கிரகம், உப்புச் சத்தியாக்கிரகம், உண்ணா நிலை அறப்போர் என்று அவர் நடத்திய போராட்டங்களில் ஒன்று சுதேசி இயக்கம்.

தமிழ்நாட்டில்[தொகு]

பொதுமக்கள் அந்நிய நாட்டுப் பொருள்களை வாங்கக் கூடாது, அந்நியத் துணிகளைப் அழிக்க வேண்டும். உள்நாட்டின் உற்பத்திப் பொருள்களையே வாங்கி உபயோகிக்க வேண்டும் என்பது சுதேசி இயக்கத்தின் நோக்கம். இவ்வியக்கம் இந்தியா முழுவதும் சுதேசி இயக்கம் பரவியது; பொதுமக்களும் காங்கிரஸ்காரர்களும், தங்கள் வீட்டில் இருந்த அந்நிய நாட்டுத் துணிகளை வீதியிலே கொண்டு வந்து போட்டுக் கொளுத்தினார்கள்.

அப்போது தமிழகத்திலும் அந்தப் போராட்டம் வெகுஜன இயக்கமாக மாறியது. ஆனால், சுதேசி இயக்கம் தமிழ்நாட்டில் பெருத்த ஆதரவை பெறவில்லை என பிரிட்டிஷ் அரசின் அறிக்கைகள் கூறினாலும், அதே அரசின் ரகசிய அறிக்கைகள் இதற்கு நேர்மாறாக இயக்கம் மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றிருப்பதாகக் கூறின. குடிசைத் தொழில்களையும், கதர் துணியையும் ஊக்குவிக்கும் இயக்கமாக மட்டுமே சுதேசி இயக்கம் இன்று அறியப்பட்டுள்ளது. ஆனால், தூத்துக்குடியில் ஒரு நவீன தொழில் முயற்சியையும் (சுதேசிக் கப்பல் கம்பெனி), சுதேசி பண்டகசாலையையும் இந்த இயக்கம் ஏற்படுத்தியது. அதைப்போல திருநெல்வேலி, தூத்துக்குடியில் மக்கள் இயக்கங்களை உருவாக்கியது. வ. உ. சிதம்பரம் பிள்ளை சுதேசி என்ற அடிப்படையில் அந்நியர்களுக்குப் போட்டியாக உற்பத்தி மண்டலங்களை உருவாக்குதல், அந்நியர்களுக்குப் போட்டியாக வர்த்தக நிறுவனங்களை நடத்துதல் என்று நாட்டு மக்களுக்கு அந்த இயக்கத்தின் இன்னொரு பக்கத்தையும் அணுகுமுறையையும் அடையாளம் காட்ட முயற்சித்தார். தனது சொத்தையே பணயம் வைத்து பிரிட்டானிய கப்பல் கம்பெனிகளுக்குப் போட்டியாக, சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றினை உருவாக்கினார். இதனால் பிரிட்டானிய அரசின் ராஜத் துரோகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பெற்றார். சுதேசி கப்பல் நிறுவனத்தை வர்த்தக்ப் போர்முறைகளைக் கொண்டு பிரிட்டானிய ஆட்சியாளர்கள் நஷ்டமேற்படுத்தி மூடச் செய்தனர்.

தற்காலத்தில்[தொகு]

இந்தியா விடுலை பெற்ற பின்னர், உள்நாட்டு உற்பத்திகளுக்கு முன்னுரிமை அளித்து வெளிநாட்டு இறக்குமதிப் பண்டங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கொள்கையை வலது சாரி சங்கப் பரிவார் அமைப்பின் பொருளாதாரப் பிரிவான சுதேசி ஜாக்ரன் மன்ச் வலியுறுத்தி வருகிறது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதேசி_இயக்கம்&oldid=3845008" இலிருந்து மீள்விக்கப்பட்டது