சியாமா பிரசாத் முகர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சியாமா பிரசாத் முகர்ஜி
Syama Prasad Mookerjee.jpg
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 6, 1901(1901-07-06)
கொல்கத்தா, வங்காளம், பிரிட்டிஷ் இந்தியா
இறப்பு 23 சூன் 1953(1953-06-23) (அகவை 51)
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி இந்து மகாசபை, பாரதீய ஜனசங்கம்
வாழ்க்கை துணைவர்(கள்) சுதா தேவி
சமயம் இந்து சமயம்

சியாமா பிரசாத் முகர்ஜி (Syama Prasad Mukherjee), (6 சூலை 1901 – 23 சூன் 1953), இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்த கல்வியாளர், வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவர். சுதந்திர இந்தியாவின் முதல் நடுவண் அரசில் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக, ஜவகர்லால் நேருவின் அமைச்சரவையில் 15 ஆகஸ்டு 1947 முதல் 6 ஏப்ரல் 1950 வரை இருந்தவர். ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, 1951ஆம் ஆண்டில் பாரதிய ஜனசங்கம் கட்சியை நிறுவினார். பின் இக்கட்சியின் பெயர் பாரதிய ஜனதா கட்சி என மாறியது.

இளமை வாழ்க்கை[தொகு]

சியாமா பிரசாத் முகர்ஜி மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கல்கத்தாவில், உயர்நீதிமன்ற நீதியரசரும், கொல்கத்தா பல்கலைக் கழக துணைவேந்தருமான சர் அசுதோசு முகர்சி - ஜோகமாயா தம்பதியருக்கு 6 சூலை 1901இல் பிறந்தார். மனைவி சுதா தேவி, இளமையில் மறைந்தபின், இறுதி வரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளவில்லை.

முகர்ஜி கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியிலும், வங்க மொழியிலும் பட்டம் பெற்றவர். 1926இல் இங்கிலாந்து சென்று சட்டம் பயின்று, 1927இல் பாரிஸ்டர் ஆனார். தனது இளம் வயதில் (33 வயதில்) கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1934 முதல் 1938 முடிய துணை வேந்தராக இருந்தவர்.[1]

முகர்ஜி தனது மனைவி சுதா தேவியுடன் 11 ஆண்டுகள் குடும்பம் நடத்தி, ஐந்து குழந்தைகளைப் பெற்றவர். பின்னர் மனைவி சுதா தேவி விஷக் காய்ச்சலால் இறந்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

சியாமா பிரசாத் முகர்ஜி 1929ஆம் ஆண்டில் மேற்கு வங்காள மாகாண சட்ட இய்மேலவைக்கு கல்கத்தா பல்கலைக்கழகம் சார்பில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] அடுத்த ஆண்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, மேற்கு வங்க மாகாண சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வென்றார். 1941 – 1942 ஆண்டில் அம்மாநில நிதி அமைச்சராக பணி செய்தார்.

1937 – 1941 காலகட்டத்தில் விவசாய-மக்கள் கட்சி மற்றும், முஸ்லிம் லீக் கட்சிகளின் கூட்டணி அரசின் போது, எதிர்கட்சித் தலைவரானார். பின்னர் இந்து மகாசபையில் இணைது, இந்து மக்களுக்காக குரல் கொடுத்தார். 1944ஆம் ஆண்டில் இந்து மகாசபையின் தலைவரானார். [3]

இந்திய விடுதலைக்குப் பின்[தொகு]

ஜவகர்லால் தலைமையிலான இடைக்கால இந்திய நடுவண் அமைச்சரவையில் பங்கேற்ற அமைச்சர்கள்; (இடமிருந்து வலம் ) அம்பேத்கர், ரபி அகமது கித்வாய், சர்தார் பல்தேவ் சிங், மௌலானா அபுல் கலாம் ஆசாத், ஜவகர்லால் நேரு. இராஜேந்திர பிரசாத், வல்லபாய் படேல், ஜான் மத்தாய், ஜெகசீவன்ராம், அம்ருத் கௌர், சியாமா பிரசாத் முகர்ஜி, (நிற்பவர்கள் - இடமிருந்து வலம்) குர்சேத் லால், ஆர். ஆர். திவாகர், மோகன்லால், என். கோபால்சாமி அய்யங்கார், என். வி. காட்கில், கே. சி. நியோகி, ஜெய்ராம் தாஸ் தௌலத்ராம், கே. சந்தானம், சத்திய நாராயணன் சின்கா மற்றும் பி. வி. கேஸ்கர்.

பிரதம மந்திரி ஜவகர்லால் நேருவின் தலைமையிலான, விடுதலை இந்தியாவின் இடைக்கால நடுவண் அரசில், சியாமா பிரசாத் முகர்ஜி வணிகம் மற்றும் தொழில் அமைச்சரானார்.

1950ஆம் ஆண்டில்,லியாகத்-நேரு ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சை காரணமாக, முகர்ஜி 6 ஏப்ரல் 1950ஆம் ஆண்டில் நேருவின் அமைச்சரவையிலிருந்து விலகியதால், முகர்ஜி மேற்கு வங்க மக்களின் நாயகன் ஆனார்.

ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் தலைவர் எம். எஸ். கோல்வால்கருடன் கலந்தாய்வு செய்த பின், 21 அக்டோபர் 1951ஆம் ஆண்டில் பாரதிய ஜனசங்கம் கட்சியை தில்லியில் தோற்றுவித்து, அக்கட்சியின் முதல் அகில இந்தியத் தலைவரானார். 1952ஆம் ஆண்டில் நடந்த முதல் இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனசங்கம் கட்சி மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் ஒரு தொகுதியில் முகர்ஜி வெற்றி பெற்றவர். [3][4]

ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்புத் தகுதி குறித்து முகர்ஜியின் கருத்து[தொகு]

ஜம்மு காஷ்மீர் மாநில அரசிற்கு தனிக் கொடி, தனிச் சின்னம், தனி பிரதம மந்திரி இருப்பதை முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். ஒரு நாட்டில் இரண்டு அரசியல் அமைப்பு சட்டமும், தேசிய சின்னமும் இருக்க இயலாது என வாதிட்டார். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநில பிரதமரின் அனுமதியின்றி, இந்திய நாட்டுக் குடியரசுத் தலைவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் செல்ல இயலாது என்ற விதியை முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனிக் கொடி, தனி பிரதம மந்திரி போன்ற சிறப்பு தகுதிகள் வழங்கும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 370ஐ நீக்கக் கோரி, முகர்ஜி தலைமையிலான பாரதிய ஜனசங்கம், இந்து மகாசபை மற்றும் ராம ராஜ்ஜிய சபையுடன் இணைந்து குரல் கொடுத்து, சத்தியாகிரகப் போராட்டங்களில் ஈடுபட்டது.

காஷ்மீர் அரசின் அனுமதி அடையாள அட்டையின்றி காஷ்மீரில் உள்ள லக்கன்பூர் என்ற ஊரில் நுழைந்த சியாமா பிரசாத் முகர்ஜியை, ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறையினரால், 11 மே 1953இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 23 சூன் 1953இல் விஷக்காய்ச்சலால் மரணமடைந்தார் என காவல் துறை அறிவித்தது.[3]. [5] .[6]

காவல் துறையினரின் காவலில் இருந்த சியாமா பிரசாத் முகர்ஜியின் மரண இரகசியம் குறித்து விசாரிக்க, தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற முகர்ஜியின் தாயாரின் கோரிக்கையை பிரதம அமைச்சர் ஜவகர்லால் நேரு ஏற்கவில்லை. இதனால் இன்று வரை முகர்ஜியின் மரண சர்ச்சை தீரவில்லை.[7]

சியாமா பிரசாத் முகர்ஜியின் கைது, ஜவகர்லால் நேருவின் சதித் திட்டம் என அடல் பிகாரி வாஜ்பாய் 2004இல் குறிப்பிட்டுள்ளார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Graham, B. D. (1968). "Syama Prasad Mookerjee and the communalist alternative". in D. A. Low. Soundings in Modern South Asian History. University of California Press. 
  • Graham, B. D. (1990). Hindu Nationalism and Indian Politics: The Origins and Development of the Bharatiya Jana Sangh. Cambridge University Press. ISBN 0-521-38348X. 

வெளி இணைப்புகள்[தொகு]