தூத்துக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தூத்துக்குடி
தூத்துக்குடி
இருப்பிடம்: தூத்துக்குடி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°43′12″N 78°07′23″E / 8.72°N 78.123°E / 8.72; 78.123ஆள்கூறுகள்: 8°43′12″N 78°07′23″E / 8.72°N 78.123°E / 8.72; 78.123
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1][2]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[3]
மாவட்ட ஆட்சியர் திரு எம்.ரவிகுமார் இ.ஆ.ப [4]
மாநகராட்சித் தலைவர் அந்தோனி கிரேஸ்
சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி
சட்டமன்ற உறுப்பினர்

ஏ. பால் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

2 (2001)

46.75/km2 (121/sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

13.47 சதுர கிலோமீற்றர்கள் (5.20 sq mi)

60 மீற்றர்கள் (200 ft)

இணையதளம் www.municipality.tn.gov.in/Thoothukudi/


தூத்துக்குடி இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10ஆவது மாநகராட்சியாக ஆகஸ்ட் 5, 2008 இல் அப்போதைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது[5]. இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்று ரீதியில் முத்துக் குளிப்புக்குப் பெயர் பெற்ற இடமாகும். தூத்துக்குடியில் ஒரு அனல் மின் நிலையமும் ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன.

பொருளடக்கம்

சங்க காலம்[தொகு]

 • சங்கக் காலத்தைச் சேர்ந்த வேள்விக்குடி சாசனம் தூத்துக்குடியைப் பற்றி குறிப்பிடுகிறது.
 • இரும்பு, செம்பு காலங்களைச் சேர்ந்த நாகரிகங்களை வளர்த்தெடுத்த ஆதிச்சநல்லூர் ஒரு புராதன பண்பாட்டுச் சின்னமாகும்.

வரலாற்றுக் குறிப்புகள்[தொகு]

தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன.

 • கி.மு.123ல் தாலமி என்ற கிரேக்க பயணி தனது பயண நூலில் "சோஷிக் குரி'(சிறு குடி) சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான் தூத்துக்குடி என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.
 • அகஸ்டஸ் சீசரின் பியூட்டிஸ்கர் அட்டவணை ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடம் என்று தூத்துக்குடியைக் குறிப்பிடுகின்றது. "சோல்சியம் இண்டோரம்' என்ற பெயரில் குறிப்பிடப்படுவது தூத்துக்குடியாகும்.
 • கிபி.80ல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் தூத்துக்குடி என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • மார்க்கோ போலோ எனும் இத்தாலியப் பயணி முத்துக்குளித்தல் மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
 • ஜேம்ஸ் கர்னல் மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்துறையை பற்றி சென்னை அரசாங்கத்திற்கு தான் சமர்ப்பித்த அறிக்கையில் தோத்துக்குரையாக மாறி இறுதியில் தூத்துக்குடி என்ற பெயர் பிறந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.
 • தூத்துக்குடி என்ற பெயர் ஐரோப்பியர்களின் உச்சரிப்பில் மாற்றம் பெற்று டூட்டிகொரின் ("Tuticorin") என்று வந்துள்ளதென்று கால்டுவெல் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

போர்ச்சுக்கீசியர்களும், டச்சுக்காரர்களும்[தொகு]

கி.பி. 1532-இல் முதன் முதலாக போர்ச்சுக்கீசியர்கள் இம்மாவட்டத்தில் கால் வைத்தனர். 1658-இல் டச்சுக்காரர்கள் வந்ததனால் போர்ச்சுகல் ஆதிக்கம் அகன்றது. பாளையக்காரர் களின் அழைப்பின் பேரிலும், திருவாங்கூர் மன்னரின் படை உதவியுடனும், டச்சுக்காரர் கள் முன்னேறத் தொடங்கினர். முகம்மது யூசுப் படைதிரட்டுவதை கேள்விப்பட்டதும் டச்சுக்காரர்கள் மணப்பாட்டை காலி செய்து விட்டு, தூத்துக்குடி வழியாக தாய்நாடு சென்று விட்டனர். நாயக்கர் ஆட்சி சந்தாசாகிப்பினால் முடிவுற்றது. கர்நாடகம் ஆற்காடு நவாப் கையில் விழுந்தது. முகம்மதலி திருநெல்வேலியைக் கைப்பற்ற ஒரு படையை அனுப்பினார். 1755-இல் ஹெரான் தலைமையில் ஆங்கிலேயர் படை கிளம்பியது. பாளையக்காரர்கள் கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் இரண்டையும் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் ஒப்படைத்தனர். இக்காலத்தில் நவாப்பிற்குக் கப்பங்கட்ட மறுத்தவர்களில் தலையானவர் பூலித்தேவர் ஆவார்.

இப்பகுதியில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் தொடர்ந்து கலகம் செய்து வந்தனர். பாளையக்காரர்களுக்கு ஆதரவாக சந்தாசாகிப், பிரஞ்சு படைகள் இருந்தன. 1761-இல் புதுச்சேரியை ஆங்கிலேயர் கைப்பற்றியதால் பிரஞ்சுகாரர்கள் பாளையக்காரர்களுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டனர். 1764-ஆம் ஆண்டு பாளையங்கோட்டை ஆங்கிலேயர் வசம் வந்தது. காளக்காடு, பணகுடி பகுதிகள் நவாப்பிற்கும், செங்கோட்டை திருவாங்கூர் அரசருக்கும் விட்டுக் கொடுக்கப்பட்டன. 1767 மேஜர் பிளிண்ட் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தான். 1783-ஆம் வருடம் புல்லர்டன் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி சூறையாடப்பட்டது. அங்கிருந்த 40,000 பொன் நாணயங்களை ஆங்கிலேயர்கள் பங்கு போட்டுகொண்டனர்.

1785-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நவாப்பின் அமில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1797-ஆம் ஆண்டு கலெக்டர் ஜாக்சனை கட்டபொம்மன் பேட்டி காண்பதற்கு, இராமநாதபுரத்திலுள்ள இராமலிங்க விலாசத்திற்கு சென்ற போது குழப்பம் வரவே, ஆங்கிலத் தளபதி கிளார்க் கொலை செய்யப்பட்டான். இதன் பின்னர் சிலகாலம் கழித்து பாஞ்சாலங்குறிச்சி பானர்மேனால் வெற்றிகொள்ளப்பட்டது. படிப்படியாக எதிர்த்த பாளையக்காரர்கள் அனைவரையும் ஒடுக்கி, நவாப்பையும் செல்லாக்காசாக்கி விட்டு ஆங்கிலேயர் 1801-ஆம் வருடம் திருநெல்வேலியை எடுத்துக் கொண்டனர். 1910-ஆம் ஆண்டிற்கு பிறகு இராமநாதபுர மாவட்டத்தை உண்டாக்கினர். 1986-ஆம் ஆண்டு நிர்வாக வசதி கருதி கடற்கரையோரப் பகுதிகளை பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உண்டாக்கப்பட்டது.

சிறப்புப் பெயர்கள்[தொகு]

தூத்துக்குடி நகருக்கு திருமந்திர நகர் என்றும் முத்துநகர் என்றும் வேறு சிறப்புப் பெயர்களும் இருக்கின்றன.

திருமந்திர நகர்[தொகு]

தூத்துக்குடிக்கு திருமந்திர நகர் என்ற பெயர் வந்ததற்கு ஒரு தனிக் கதை உண்டு. இந்தக் கடற்கரை மிகப்பெரும் காடாக இருந்ததாம். இராவணன் சீதையைக் கடத்திச் சென்ற பின்பு அவளைத் தேடி வர அனுமனை அனுப்பி விட்டு ராமன் இந்தப் பகுதியில் மந்திரங்களை உச்சரித்தபடி தவம் செய்யத் துவங்கினாராம். அவருடைய தவத்திற்குக் கடலலைகளின் பேரிரைச்சல் இடையூறாக இருக்க ராமன் கடலலைகளைச் சப்தமெழுப்பாமல் இருக்க சபித்து விட்டாராம். அன்றிலிருந்து இப்பகுதியில் கடலலைகள் அடங்கி சப்தமில்லாமல் போய்விட்டது. இன்றும் கடலலைகளோ, சப்தமோ இங்கிருப்பதில்லை. ராமன் திருமந்திரங்களை உச்சரித்த இடம் என்பதால் திருமந்திர நகர் என்று பெயர் வந்துவிட்டது என்று ஒரு சிலர் கருத்து சொல்கின்றனர்.

முத்துநகர்[தொகு]

தூத்துக்குடி கடலில் ஆண்டுக்கு ஒரு முறை முத்துக்குளிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. முத்துக்கள் அதிகம் கிடைத்த நகரம் என்பதால் முத்து நகர் என்று பெயர் ஏற்பட்டது. பாண்டிய நாட்டின் துறைமுக நகரமாக விளங்கிய நகரம். பாண்டிய நாட்டின் ஆளுகை உடைய பரதவர்கள் நேரிடையாக முத்துக்குளித்தலில் ஈடுபட்ட துறைமுக நகரம் ஆதலால் இது முத்துக்குளித்துறை என்று பெயர் பெற்றது. பின்னாட்களில் முத்து நகர் என்று அழைக்கப்படுகிறது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் ரயிலுக்கு முத்து நகர் எக்ஸ்பிரஸ் என்று பெயர்.

துறைமுகம்[தொகு]

டச்சுக்காரர்களின் காலத்தில் தூத்துக்குடி துறைமுகம்- வரைபடம், 1752இல்
தூத்துக்குடியின் பண்டைய துறைமுகம்- வரைபடம்
ஆங்கிலேயர் ஆட்சியில் தூத்துக்குடி துறைமுகம், 1913இல்

மன்னார் வளைகுடா அருகே அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகம் ஒரு இயற்கைத் துறைமுகம். இப்பகுதி புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது. இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது. 600 அடி முகத்துவாரத்தோடும், ஆறு பக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம் சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும், 4 பிரம்மாண்டமான சரக்கு லாரிகளும், 4 ரயில் என்ஜின்களும், சுமார் 50 ஆயிரம் டன்கள் சரக்குகள் வைப்பதற்குரிய பாதுகாப்புக் கிட்டங்கிகளும் கொண்டுள்ளது.

1974 ஆம் ஆண்டு இந்நகரிலுள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலையின் அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்ய 125 இலட்ச ரூபாய் செலவில் எண்ணெய்த் துறை ஒன்று தனியாக இங்கே ஏற்படுத்தப்பட்டது. இங்கு 6 கப்பல்கள் தங்குவதற்கான தளங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கென்று தனியாக நிலக்கரி துறையும், மணிக்கு 2000 டன் நிலக்கரி இறக்கும் வசதியுடைய தானியங்கியும் 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மணிக்கு 700 லிட்டர் பெட்ரோலிய எண்ணெப் பொருள்களை இறக்குமதி செய்யத் தேவையான சிறப்புக் கருவிகள் இத்துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

வர்த்தகம்[தொகு]

 • ஏற்றுமதி/இறக்குமதி கையாளும் நிறுவனங்கள்.
 • உப்பளங்கள்.
 • ஸ்பிக் உரத்தொழிற்சாலை.
 • ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை.
 • தூத்துக்குடி அல்காலி ரசாயன நிறுவனம்.
 • தேங்காய் எண்ணை ஆலைகள்.
 • கடல் சார் உணவு தயாரிப்பு நிறுவனங்கள்

பள்ளிகள்[தொகு]

எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி

இங்கு பல ஆண்டுகள் பழைமை வாய்ந்த பள்ளிக்கூடங்கள் பல இருக்கின்றன.

 • எஸ். ஏ. வி. மேல்நிலைப் பள்ளி
 • கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி
 • புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி
 • புனித இன்னாசியஸ் மேல்நிலைப்பள்ளி
 • விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி
 • சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி
 • புனித மேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
 • புனித லசாலி மேல்நிலைப்பள்ளி
 • டேஸ் நெவிஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
 • புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி.
 • சி.எம். மேல்நிலைப்பள்ளி
 • சக்தி வினாயகர் மேல்நிலைப்பள்ளி
 • ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி
 • விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி
 • காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி
 • கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
 • ஏ. எம். எம். சின்னமணி நாடார் உயர்நிலைப் பள்ளி
 • புனித தோமையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

கல்லூரிகள்[தொகு]

 • வ.உ.சி. கல்லூரி
 • காமராசர் கல்லூரி
 • புனித மேரி கல்லூரி
 • சாமுவேல் பாலிடெக்னிக் கல்லூரி
 • அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி (மகளிர்)[6]

பொழுதுபோக்கு இடங்கள்[தொகு]

 • ரோச் பூங்கா.
 • துறைமுக கடற்கரை.
 • நேரு பூங்கா.

பொது விபரங்கள்[தொகு]

பெயர்க் காரணம்[தொகு]

நீர் நிறைந்த நிலத்தைத் தூத்துத் துறைமுகமும் குடியிருப்பும் தோன்றிய ஊர் என்பதால் தூத்துக்குடி என்றாயிற்று. வாகைக்குளம், கங்கைக்கொண்டான் கல்வெட்டுக்களில் இவ்வூர் 'தூற்றிக்குடி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

 • மழையளவு: 662 மி.மீ
 • சாலை நீளம்: 3,839 கி.மீ
 • பதிவுபெற்ற வாகனங்கள்: 31,504
 • காவல் நிலையங்கள் 44
 • வங்கிகள்: 164
 • அஞ்சலகங்கள் : 418
 • அரசு மருத்துவமனைகள் 10
 • தொடக்க மருத்துவ நல நிலையங்கள் 47
 • திரையரங்கங்கள் 62

உள்ளாட்சி அமைப்பு[தொகு]

 • மாநகராட்சி-1
 • நகராட்சி-1
 • ஊராட்சி ஒன்றியம்-12
 • பேரூராட்சிகள்-20
 • பஞ்சாயத்துக்கள்-408
 • குக்கிராமங்கள் - 1,0121.

சட்டசபை தொகுதிகள்[தொகு]

இது ஏழு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.

பாராளுமன்றத் தொகுதி[தொகு]

 • [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி|தூத்துக்குடி]

ஆற்று வளம்[தொகு]

தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஆறுகள் எதுவுமில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஆறுகள் தூத்துக்குடி மாவட்டம் வழியாக பாய்ந்து கிழக்கிலுள்ள கடலில் போய்ச் சேருகின்றன.

ஸ்ரீவைகுண்டம் வட்டம்[தொகு]

முதன்மைக் கட்டுரை: ஸ்ரீவைகுண்டம் வட்டம்

பொருநைப் பாசனத்தால் சிறப்பு பெறுகிறது. மருதூர் அணைக்கட்டிலிருந்து மேலக்கால், கீழக்கால் ஆகிய இரு கால்வாய்களும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து தெற்கு வடக்குப் பிரதான வாய்க்கால்களும் பாசனத்துக்கு நீர் வழங்குகின்றன.

கோவில்பட்டி வட்டம்[தொகு]

முதன்மைக் கட்டுரை: கோவில்பட்டி வட்டம்

மலட்டாறு, உப்போடை போன்றவை மேட்டு நிலங்களில் பெய்யும் மழைநீரை பெற்று, தூத்துக்குடிக்குத் தெற்கு 1 கி.மீ. தொலைவிலுள்ள கோரப்பள்ளம் குளத்தின் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது.

விளாத்திக்குளம் வட்டம்[தொகு]

முதன்மைக் கட்டுரை: விளாத்திக்குளம் வட்டம்

வைப்பாற்றில் திடீர் வெள்ளம் ஏற்படும். விளாத்திக் குளம்-கோவில்பட்டி சாலைக் கடக்குமிடத்தில் வெள்ள காலங்களில் போக்குவரத்து இருக்காது. அனுமன்நதி- திருவாங்கூரில் உற்பத்தியாகி இங்கு கடலில் கலக்கிறது.

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு[தொகு]

இது 1889-இல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 17.75 இலட்ச ரூபாயில் கட்டப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் 12,000 ஏக்கருக்கு மேற்பட்ட நஞ்சை நிலங்கள் பாசன வாய்ப்பு பெற்றுள்ளன.

மணிமுத்தாறு அணைக்கட்டு[தொகு]

இந்த அணைக்கட்டு மூலம் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் வட்டங்கள் பெருமளவு பாசன நீர் பெறுகின்றன.


காட்டுவளம்[தொகு]

தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுவளம் குறைவே. விடத்தேரை என்னும் கனமான, கரையான் அரிக்க முடியாத ஒருவகை மரம் திருச்செந்தூர் வட்டத்தில் காணப்படுகிறது. சிங்கம்பட்டி மலைப்பகுதியிலும், மணி முத்தாற்றின் இரு கரைகளிலும், நெல்லிமரங்கள் அதிகம் உள்ளன. குறுமலையிலும், கொழந்து மலையிலும் மருத்துவ மூலிகைகள் கிடைக்கின்றன. இம்மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் பனை மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.

தேரிகள்[தொகு]

திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் தேரி என்னும் மணற்குன்றுகள் காணப்படுகின்றன. தேரி என்பது செக்கச் சிவந்த மணற்பாங்கான இடம். கோடைக் காற்றினால், தேரிகள் தோற்றம் மாறி, மாறி காணப்படும். இடையன் குடி, குதிரைமொழி, சாத்தான் குளம் பகுதிகளிலுள்ள தேரிகள் உயரமான அகன்ற மேடாகும். இது போன்ற தேரிகளை பிற மாவட்டங்களில் காணமுடியாது.

வேளாண்மை[தொகு]

இம்மாவட்டத்தின் வடகோடியிலும், தென் கோடியிலும் பாசன வசதி போதியளவு இல்லை. இடைப்பட்ட வட்டங்களில் புஞ்சைபயிர்கள் பயிரிடப்படுகின்றன.

பருத்தி[தொகு]

தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் பருத்தியும், மிளகாயும் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவில்பட்டி வட்டம், இந்தியாவிலேயே மிகுந்த அளவில் பருத்தி விளையும் பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பகுதி காலந்தாழ்ந்து மழை பெறுகின்ற காரணத்தால், பிற மாவட்டங்களுக்குப் பின்னரே, இங்குப் பருத்தி விளைவது வழக்கம்.

முந்திரி[தொகு]

திருச்செந்தூர் வட்டத்தில் முந்திரிப் பயிறு விளைச்சல் குறிப்பிடத் தக்கதாகும். முந்திரி விளைச்சலுக்குப் பூவரசந்தழையை உரமாகப் பயன்படுத்துவது இங்கு வழக்கம்.

பனை[தொகு]

நெடுங்காலமாகவே, இம்மாவட்டத்தின் மணற்பரப்பில் பனை வளர்ந்து செழித்துக் காணப்படுகிறது. திசையன் விளை, குலசேகரப்பட்டினம், உடன்குடி போன்ற ஊர்கள் பனைக்கு புகழ் பெற்றவை.

பிற பயிர்கள்[தொகு]

கோவில்பட்டி வட்டத்தில் பருத்திக்கு அடுத்தபடியாக கம்பு, உளுந்து, சோளம், மிளகாய், மல்லி, வெங்காயம் முதலியன நல்ல விளைச்சலைக் கண்டு வருகின்றன.

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்[தொகு]

கோவில்பட்டியில் உள்ள இந்த ஆய்வு நிறுவனம் பருத்தி வேளாண்மைப்பற்றி ஆய்வு களை நடத்தி வருகிறது. சோளத்துக்குப் பிறகு பயிரிடப்படும் பருத்திக்குக் கேடு உண்டாகா வண்ணம், சோளத்துக்கு சூப்பர் பாண்டேட் உரமும் பருத்திக்கு அமோனியம் சல்பேட்டு உரமும் பயன்படுத்த படலாம் என்பது இந்த ஆய்வு நிறுவனத்தால் கண்டறியப்பட்டுள்ளது. இங்குக் கண்டு பிடிக்கப்பட்ட புதிய வகை பருத்திகள்: கே2, கே5, கே6 என்ற கருங்கண்ணிப் பருத்திவகைகள். இவை இந்தியா எங்கும் பரவியுள்ளன. சீ ஐலண்டு காட்டன் என்றும் நீண்ட இழைப் பருத்தி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சீரிய முறையில் இயங்கும் அரசு விதைப் பண்ணைகளில் இதுவும் ஒன்று.


தொழில் வளர்ச்சி[தொகு]

தூத்துக்குடி மாவட்டம் 86-ஆம் ஆண்டு புதிதாக பிறந்த மாவட்டம் ஆகையால் இனி தான் இங்கு தொழில்வளர்ச்சி ஏற்படவேண்டும்.

மரபுத் தொழில்கள்[தொகு]

முத்துக் குளித்தல், மீன்பிடித்தல், மட்பாண்டங்கள் செய்தல், பாய் பின்னுதல், உப்புக் காய்ச்சுதல், கைத்தறி நெசவு முதலியவை பாரம்பரியமாக நடந்து வருகிறது.

பாய் பின்னுதல்[தொகு]

கோரை புற்களை 25 நாட்கள் வெயிலில் உலர்த்தி, பொன்னிறம் பெற்றதும், ஓடுகின்ற நீரில் ஒருவாரம் நனைய வைத்து, கழிவு நார்கள் நீக்கப்பட்டு, மேல் தோல் பட்டுப் போன்ற நுண்ணிய இழைகளாக நீளமாகக் கிழிக்கப்பட்டு முடையப்படுகிறது.

உப்புக் காய்ச்சுதல்[தொகு]

தென்மேற்குப் பருவக்காற்றை குற்றாலமலைத் தடுப்பதும், வடகிழக்குப் பருவக்காற்றின் வலுவிழந்தத் தன்மையும் உப்புக் காய்ச்சுவதற்கு ஏற்ற சூழ்நிலையத் தருவதனால் இத்தொழிலில் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பின் அளவு இந்திய அளவில் பத்தில் ஒரு பங்காகும். இத்தொழிலில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.

முத்துக்குளித்தல்[தொகு]

மரபாக நடந்துவரும் தொழிலாகும். இது ஆண்டு முழுவதும் நடைபெறும் தொழில் அல்ல. மற்ற காலங்களில் சங்கு எடுக்கும் தொழில் நடைபெறுகிறது.

மீன்பிடித்தல்[தொகு]

இம்மாவட்டத்தின் கடலோரங்கள் எங்கும் மீன் பிடி தொழில் சிறப்பாக நடந்து வருகிறது. இதன் காரணமாக பல குளிர்பதனச் சாலைகள் தோன்றியுள்ளன. மீன்கள் பதப்படுத்தப்பட்டு டின்களில் அடைத்து ஏற்றுமதி செய்வது 1963-இல் தொடங்கி நடந்து வருகிறது. இதனால் அந்நியச் செலாவணி கிடைக்கிறது.

நூலாலைகள்[தொகு]

இம்மாவட்டத்தில செயல்பட்டு வரும் ஆலைகள்; மதுரை மில்-தூத்துக்குடி; லாயல் டெக்ஸ்டைல்ஸ்-கோவில்பட்டி; லெட்சுமி மில்-கோவில்பட்டி; தூத்துக்குடி ஸ்பின்னிங் மில்-தூத்துக்குடி; திருச்செந்தூர் கோவாபரேடிவ் ஸ்பின்னிங்மில்-நாசரேத்.

பொட்டாஷியம் குளோரைடு தொழிற்சாலை[தொகு]

இத்தொழிற்சாலை ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் மத்திய உப்பு ஆராய்ச்சி நிறுவனத் தால் தூத்துக்குடியில் நடத்தப்பட்டு வருகிறது.

கோத்தாரி பெர்டிலைசர்ஸ்[தொகு]

1966-இல் தொடங்கப்பட்டது. தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலை ஆண்டுக்குச் சுமார் 5 இலட்சம் டன் அமோனியம் பாஸ்பேட் உரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

தரங்கத்தாரா இரசாயன தொழிற்சாலை[தொகு]

தூத்துக்குடிக்கு 25கி.மீ. தெற்கே, கடற்கரைக்கு தொலைவில், இந்நிறுவனம் அமைக்கப் பட்டிருக்கிறது. ஆண்டுக்கு சுமார் 75,000 டன் காஸ்டிக் சோடா தயாரிக்க முடியும். உற்பத்திக்குச் சாதகமாக நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கால்ஷியம் கார்பைடு 15,000 டன்னுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. பிளாஸ்டிக்கில் பயன்படுத்தப் படும் போலிவினில் குளோரைடு முதலிய பல பொருள்களும் இங்குத் தயாராகின்றன. இது ஆசியாவிலேயே பெரிய இரசாயனத் தொழிற்சாலை ஆகும். தொடக்கத்தில் மூன்றரைக் கோடி ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்பட்ட இத்தொழிற்சாலை, இன்று இம்மாவட்டத்தில் வளரும் பெரிய தொழிற்சாலைகளில் ஒன்றாகும்.

தொழில் தொடங்கச் சாத்தியக் கூறுகள்[தொகு]

இம்மாவட்டம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதால் தொழிலுக்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்த தேசிய தொழில் வளர்ச்சி நிறுவனம் இம்மாவட்டத்தில் தொழில்கள் தொடங்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து கீழே கண்டவைகளை செயல்படுத்துவது தொழில் முனைவோருக்கு வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது, அவையாவன :

1. கரும்பு சக்கைகளைப் பயன்படுத்தி காகித ஆலைகள். 2. மணப்பாடு-தூத்துக்குடி முதலிய கடலோரங்களில் கிடைக்கும் சுண்ணாம்பு படிவங்களைக் கொண்டு சிமெண்ட் தொழிற்சாலைகள் 3. மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்தல் 4. வானம் பார்த்த 'விளாத்திக்குளம்' பகுதிகளில் வேளாண்மை நடைபெற முயற்சி செய்தல். 5. தேரி மணலிலிருந்து இரசாயனங்களைப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை. 6. உப்பு தொழில்கள். 7. முத்துகுளி-சங்கெடுத்தலை ஏற்றுமதி செய்வது

துறைமுக வணிகம்[தொகு]

இந்தியாவில் வேறு எந்த துறைமுகத்திற்கும் கிட்டாத ஒரு பெருமை தூத்துக்குடி துறைமுகத்திற்கு கிடைத்திருக்கிறது. உலகில் ஒரு சில துறை முகங்களுக்கு மட்டுமே தரப்பட்டிருக்கும் சர்வதேச தரச் சான்றிதல் ஐஎஸ்ஓ 9002, பிப்ரவரி 1996 இல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கிழக்குக் கடற்கரையோரத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய துறைமுகம் தூத்துக்குடியாகையால், இங்கு ஏற்றுமதி, இறக்குமதி வாணிகம் சிறந்த கட்டுப்பாட்டில் நடைபெறுகிறது. இங்கு முக்கிய அமைப்புகள் பெரும்பங்காற்றி வருகின்றன.

1. ஐரோப்பிய வணிகர்களின்-தூத்துக்குடி சேம்பர் ஆப் காமர்ஸ் 2. இந்திய வணிகர்களின் - இந்தியன் சேம்பர் ஆவ் காமர்ஸ் 3. தூத்துக்குடி தொழிற்சங்கம் 4. தூத்துக்குடி - இலங்கை ஏற்றுமதி இறக்குமதியாளர் வணிகச்சபை. 5. தன்பாது உப்பு வியாபாரிகள் சங்கம். 6. உப்பு உற்பத்தியாளர் சங்கம் 7. தூத்துக்குடி நாட்டுப் படகு உரிமையாளர் சங்கம். 8. தூத்துக்குடி கப்பல் பிரதிநிதிகள் சங்கம். 9. தூத்துக்குடி இரும்பு தளவாட வணிகர் சங்கம். 10. தூத்துக்குடி நார்ப்பொருள் வணிகர் சங்கம். 11. சுங்க வேலைகளை முடித்துக் கொடுக்கும்-வணிக ஏஜெண்டுகளின் சங்கம். 12. கால்நடை ஏற்றுமதியாளர் சங்கம். 1. மதுரை சேம்பர் ஆப் காமர்ஸ் 2. விருதுநகர் சேம்பர் ஆப் காமர்ஸ் 3. இராமநாதபுரம் சேம்பர் ஆப் காமர்ஸ் ஆகிய அமைப்புகளுக்கும் தூத்துக்குடியே மைய இடமாக உள்ளது.

கனிமவளம்[தொகு]

 • ஜிப்சம் : கோவில்பட்டி வட்டத்திலும், அருணாசலபுரம், ஒட்டப்பிடாரம்,

எட்டையாபுரம், பகுதிகளிலும் மிகுந்த அளவில் ஜிப்சம் கிடைக்கிறது. இது சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான பொருள்.

 • அல்லனைட் : இந்த மூலப்பொருள் அணுசக்திக்கு மிகவும் தேவையானது.
 • லித்தியம் : லிதியம் என்பது நெஞ்சக நோய் தீர்க்கும் மருந்துக்குத் துணையாகும்.

கோவில்பட்டிக்கருகில் உள்ள சூலமங்கலம் கிராமத்தில் லிதியம் கலந்த நீர் கிடைக்கிறது. இரத்த விருத்தி மருந்து செய்ய இந்த நீரை வேறு இடங்களுக்கு அனுப்பி மருந்துகள் செய்கின்றனர்.

கார்னர்டு மணல்[தொகு]

உப்புத்தாள் செய்யத் தேவைப்படும் இப்பொருள் இம்மாவட்டத்தின் கடலோரங்களின் சில பகுதிகளில் கிடைக்கிறது.

கிராபைட்[தொகு]

உருக்கு வேலைக்கும், சிலவகை எண்ணெய் தயாரிக்கவும் பயன்படக்கூடிய இது பென்சிலில் உள்ள எழுதுபொருள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

மோனசைட்[தொகு]

உலோக சத்து நிறைந்த இந்தப் பொருளும் கடற்கரை மணலில் காணப்படுகிறது. சில வகை மருந்துகள் தயாரிக்க மிகவும் தேவைப்படக் கூடியது.

சுண்ணாம்புக்கல்[தொகு]

திருச்செந்தூர் வட்டம், சாத்தான் குளம் பகுதியில் ஒரு வகை உயர்தரச் சுண்ணாம்புக்கல் மிகுதியாகக் கிடைக்கிறது. இதைப் பளிங்குக் கற்களாக மாற்றினால் கட்டட வேலைகளுக்கு மிகவும் பயன்படக்கூடும்.

நுரைக்கல்[தொகு]

இந்த வகைச் சுண்ணாம்புக் கல்லைப் பயன்படுத்தியும் சிமெண்ட் தயாரிக்கலாம். கடற்கரையோரமாய் உள்ள தீவுப் பகுதிகளில் இது மிகுதியாய் உள்ளது.

இல்மனைட்[தொகு]

ஏராளமான அளவில் சாத்தான் குளத்திலும், கோவில்பட்டி வட்டத்திலும் கிடைக்கிறது. இதில் இரும்பு, டிட்டானியம் ஆக்ஸைடுகள் கலந்து உள்ளன.

பாஸ்டேட்[தொகு]

மலைக்கல் போன்ற இவ்வகை பாஸ்பேட்டுகள், தூத்துக்குடிக் கடற்கரைப் பகுதிகளில் கிடைக்கிறது.

கெட்டிமண்[தொகு]

கட்டடம் கட்டப்பெரிதும் பயன்படும் இவ்வகைமண்தூத்துக் குடியிலும், அதையடுத்த தீவுகளிலும் மிகுதியாக உள்ளது.

சுற்றுலா தலங்கள்[தொகு]

தூத்துக்குடி, திருச்செந்தூர், மணப்பாடு, கழுகுமலை, ஒட்டப்பிடாரம், எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறு, நவதிருப்பதிகள்.

சங்கர ராமேஸ்வரர் கோயில்[தொகு]

தூத்துக்குடி நகரில் உள்ள முக்கியமான கோயில்களில் சங்கர ராமேஸ்வரர் கோயிலும் ஒன்று. இந்தக் கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஒன்றாகும்.

தூய பனிமயமாதா ஆலயம்[தொகு]

தூத்துக்குடியில் வாழும் பரதர் குல மக்களும், இங்கு வாழும் பிற சமூக மக்களும் பனிமய மாதா ஆலயத்திற்கு வந்து வேண்டிச் செல்கின்றனர். 425 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் துத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பனிமயமாதா தங்கத் தேர் விழா மிகச் சிறப்பான ஒரு விழாவாகும். இத்தேர்த்திருவிழாவைக் காண சாதி, மத, இனப்பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொள்வதே இதன் சிறப்பு.[7]

சிறப்புகள்[தொகு]

 • இங்கு தயாராகும் உப்பு ஆசியாக் கண்டத்திலேயே மிகச் சிறந்த உப்பாகும்.[8]
 • இங்கு சுடுமனைகள் (பேக்கரிகள்) அதிக அளவில் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் மெக்ரூன் எனப்படும் இனிப்பு மிகவும் சுவையானது.
 • புரோட்டாவிற்கு பெயர் பெற்ற விருதுநகருக்கு அடுத்து தூத்துக்குடி இரண்டாமிடத்தில் இருக்கிறது.
 • இங்குள்ள பனிமயமாதா பேராலயத் தங்கத்தேர் திருவிழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிறப்பு பெற்ற ஒரு விழாவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.tn.gov.in/government/keycontact/197
 2. http://www.tn.gov.in/government/keycontact/197
 3. http://www.tn.gov.in/government/keycontact/18358
 4. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
 5. 10வது மாநகராட்சி உதயம்
 6. http://www.annammal.in/
 7. தூய பனிமய அன்னை திருத்தலப் பேராலயம்
 8. இந்திய உப்பின் தரத்தை விளக்கும் ஆங்கில கட்டுரை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூத்துக்குடி&oldid=1870274" இருந்து மீள்விக்கப்பட்டது