மணப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மணப்பாடு

மணவை

—  கிராமம்  —
மணப்பாடு
இருப்பிடம்: மணப்பாடு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°22′39″N 78°3′8″E / 8.37750°N 78.05222°E / 8.37750; 78.05222ஆள்கூறுகள்: 8°22′39″N 78°3′8″E / 8.37750°N 78.05222°E / 8.37750; 78.05222
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
அருகாமை நகரம் தூத்துக்குடி
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் திரு எம்.ரவிகுமார் இ.ஆ.ப [3]
மக்களவைத் தொகுதி தூத்துக்குடி
மக்களவை உறுப்பினர்

எஸ்.ஆர்.ஜெயதுரை

சட்டமன்றத் தொகுதி திருச்செந்தூர்
சட்டமன்ற உறுப்பினர்

அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
இணையதளம் www.manavai.com

மணப்பாடு (Manapad) தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரைக் கிராமமாகும். இது மணவை என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்நாளில் மீன் பிடிப்பையும், பனை மரத்தின் பொருட்களையும் வெகுவாக சார்ந்திருக்கும் இச் சிறிய ஊர், முன்னொரு காலத்தில், இலங்கையிலும், பர்மாவிலும் தொழில் புரிந்த இவ்வூரைச் சேர்ந்த வணிகர்களினால் பெரும் செல்வம் ஈட்டியிருந்தது. மேலும், இங்கு இருபதாம் நூற்றாண்டின் நடுவில் நிறுவப்பட்ட கல்விக் கூடங்கள் உள்ளூரில் பலரும், வெளியூர்களிலிருந்து மேலும் பலரும் கல்வி பெறக் காரணமாக விளங்கின. கவிதையும், இசையும், நடிப்பும், ஓவியமும், சிற்பக் கலைகளும் இவ்வூரில் வளர்ந்தன.

இருக்குமிடம்[தொகு]

தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில், குலசேகரன்பட்டினத்திற்குத் தெற்கேயும், பெரியதாளைக்கு வடக்கேயும் வங்காள விரிகுடாக் கடலோரத்தில் அமைந்துள்ளது.

இயற்கையும், சூழலியலும்[தொகு]

வடக்கில் சிற்றாறு ஒன்று கடலில் சேரும் கழிமுகத்தில் ஊர் தொடங்குகிறது. நீண்ட மணல் செறிந்த அகலமான கடற்கரை அதன் கிழக்கு எல்கை. இதன் ஒரு பகுதி படகுகள் நிறுத்தப்படுமிடமாகவும், மீன்கள் வந்திறங்கும் துரையாக செயல்படுகிறது. கிழக்கில் வங்காள விரிகுடாவுக்குள் நீளும் ஒரு சிறிய தீபகற்ப பகுதி பாறையும் மணலுமான ஒரு சிறு குன்றாகும். இந்தக் குன்றின் வடபகுதி மணல் செறிந்த கடற்கரையாகவும், தென்பகுதி பாறைகள் மிகுந்த கடற்கரையாகவும் உள்ளது. தீபகற்ப முனையில் ஒரு கலங்கரை விளக்கம் உள்ளது. பெரிய மணல் தேரிகள் ஊரின் தென்மேற்குப் பகுதியெங்கும் காணப்படுகின்றன. இத் தேரிகளில் பனை மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. பனைமரங்களும், வேப்ப மரங்களும், சீமை ஒடை மரங்களுமே இந்நிலப் பகுதியில் பரவலாகக் காணப்படும் தாவரங்களாகும்.

ஊரின் பெயர்க்காரணம்[தொகு]

மணலும் காற்றும் நிறைந்த இவ்வூரில், மணல் காற்றில் வீசும் போது ஒரு பாட்டிசைப்பது போல் உள்ளதால் இதற்கு மணப்பாடு என்று பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள் இவ்வூர்க்காரர்கள்.

போக்குவரத்து[தொகு]

தூத்துக்குடியிலிருந்து, ஆத்தூர், திருச்செந்தூர், குலசேகரன்பட்டிணம் வழியாக, கன்னியாகுமரி வரை செல்லும் இரு வழிச் சாலைதான் மணப்பாடு செல்வதற்கான பிரதான வழி.

தொழில்களும், பொருளாதாரமும்[தொகு]

மணப்பாட்டின் பொருளாதாரம் கடலையும், பனையையும் சார்ந்துள்ளது. கட்டு மரங்கள், வள்ளங்கள் மூலம் இங்கு பிடிக்கப்படும் மீன்கள் பனியிலிடப்பட்டு பல்வேறு ஊர்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. எஞ்சிய மீன்கள் காயவைத்துக் கருவாடாகவும் ஆக்கப்படுகின்றன. மீன் பிடிப்பது, வலைகளைச் செப்பனிடுவது ஆகியவற்றை மீனவர்கள் கவனிக்கின்றனர். மீன் வந்து இறங்கியதும், அவற்றை விற்பது, வாங்கி சந்தைக்கு கொண்டு செல்வது ஆகியவற்றை பிற ஆண்கள் கவனிக்கின்றனர். உள்ளூர் சந்தைக்கு கொண்டு செல்வது, அங்கே மீனை விற்பது ஆகியவற்றில் பெண்கள் ஈடுபடுகின்றனர். பனை மரத்திலிருந்து பதநீர் இறக்கப்பட்டு அது பெரும்பாலும் வெல்லமாக (கருப்பட்டி) காய்ச்சப்படுகிறது. பனை ஓலைகள் கூடைகளாகவும், அழகிய கைவினைப் பொருட்களாகவும் மாற்றப்படுகின்றன. தரமுள்ள கைவினைப் பொருட்கள் ஒரு கூட்டுறவு சங்கத்தின் மூலம் வாங்கப்பட்டு மேல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சமூகமும், சாதிகளும்[தொகு]

மீன்பிடித் தொழிலை செய்யும் பரதவ இனத்தவரும், பனை தொழிலை செய்யும் நாடார் இனத்தவரும் இம் மண்ணின் பிராதான சாதிகள். மற்ற சாதியினர் சொற்ப தொகையில் உள்ளனர்.

மதம்[தொகு]

கத்தோலிக்க கிறித்தவ மதமே இங்கு நிலவும் முக்கிய மதம்.

தேவாலயங்கள்[தொகு]

கத்தோலிக்க தேவாலயம்
மணப்பாடு - கடற்கரை கிராமம்

பாரம்பரியம் மிக்க பல தேவாலயங்கள், மற்றும் நினைவுச் சின்னங்கள் இந்த ஊரில் இருப்பதாலும், கத்தோலிக்க கிறிஸ்தவ மதச் சம்பிரதாயங்களும், சடங்குகளும் கடைப்பிடிக்கப் பட்டு வருவதாலும் இவ்வூர் "சின்ன ரோமாபுரி" என்று அழைக்கப்படுகிறது.

தீபகற்ப குன்றின் மீதுள்ள திருச்சிலுவை ஆலயம் 400 ஆண்டுகளுக்கு மேலானது என்றும், நடுக்கடலில் கப்பல் சிதைந்தபின் கரைக்குத் தப்பி வந்த போர்த்துக்கீசிய மாலுமிகள் உருவாக்கியது என்றும் நம்பப்படுகிறது. இவ்வாலயத்தில் கிறிஸ்து இறந்த சிலுவை மரத்தின் சிறு துண்டு என்று நம்பப்படும் பொருள் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலைக் கட்டட முறையில், பிரமாண்டமாகவும், அழகாகவும் கட்டப்பட்டுள்ள இரண்டு தேவாலயங்கள், புனித ஜேம்ஸ் தேவாலயம், மற்றும் தூய ஆவியானவர் ஆலயம். இவ்விரண்டும் ஒன்றை, ஒன்று நோக்கும் வண்ணம் ஒரே தெருவின் இரு புறங்களிலும் உள்ளன. மற்றும் பல சிறு தேவாலயங்களும் இவ்வூரில் உண்டு.

இந்த ஊரிலே, புனித சவேரியார் வந்து தங்கி இங்குள்ள மக்களை கத்தோலிக்கர்களாக மாற்றியதாக வரலாறு சொல்லப்படுகிறது. தீபகற்பத்தின் முனையில் இருக்கும் குகையில் அவர் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. பரதவ மக்களுக்கு போர்த்துக்கீசிய குடும்ப பெயர்களான பர்னாந்து, மிராந்த, வாஸ், டிசில்வா, டிகோஸ்தா, டிரோஸ் போன்ற பெயர்களையும் அவரே வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணப்பாடு&oldid=1506364" இருந்து மீள்விக்கப்பட்டது