பனிமய மாதா பேராலயம், தூத்துக்குடி

ஆள்கூறுகள்: 8°47′58″N 78°09′23″E / 8.799444°N 78.156389°E / 8.799444; 78.156389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூய பனிமய மாதா பேராலயம், தூத்துக்குடி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்தூத்துக்குடி, தமிழ் நாடு
புவியியல் ஆள்கூறுகள்8°47′58″N 78°09′23″E / 8.799444°N 78.156389°E / 8.799444; 78.156389
சமயம்கத்தோலிக்க திருச்சபை
வழிபாட்டு முறைதமிழ்
நிலைபேராலயம் (பசிலிக்கா)
செயற்பாட்டு நிலைசெயற்பாட்டில் உள்ளது
தலைமைஅருட்தந்தை குமார் ராஜா
இணையத்
தளம்
www.snowsbasilica.com

பனிமய மாதா பேராலயம் (Lady of Snows basilica) தூத்துக்குடியில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையின் பேராலயமாகும். இப்பேராலயம் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகிசிய பாணியில் கட்டப்பட்டதாகும். 1982ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் 400ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இத்திருத்தலத்தைப் பேராலயமாக தனது அப்போஸ்தலிக்க கடிதமான "Pervenute illa Dei Beatissimae Genitricis Effigies"-இல் உயர்த்தினார்.

வரலாறு[தொகு]

முத்துக்குளித்துறையில் 1535-37-ம் ஆண்டுகளிலேயே முத்துகுளிதுறை பரதவர்கள் மதம் மாறினார்கள்.முதலில் பரதவர்களின் ஜாதி தலைவர் பாண்டியபதி ஏழுகடற்துறை அரசர் விக்கிரம ஆதித்தய பாண்டியன் என்னும் சிஞ்.சிஞ். தென் ஜொவாம் தெக்குருஸ் பரதவர்ம பாண்டியர்  தலைமையில் 85 பட்டம்கட்டிமார் முதலில் மதம் மாறி அதன் பிறகு சுமார் 20000 பரதவர்கள் மதம் மாறினார்கள்.உலகில் முதன்முதலாக அதிக அளவில் மக்கள் ஒரு மதத்தில் இருந்து அடுத்த மதத்துக்கு மதம் மாறி கத்தோலிக்க மறையைத் தழுவியிருந்தனர். ஆனால் இவர்கள் மத்தியில் ஆன்மீகப் பணி புரியவும், வழிபாடுகள் நிறைவேற்றவும் குருக்கள் எவருமே இருக்கவில்லை. திருத்தந்தை 3-ம் சின்னப்பரால் இயேசு சபை குருக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இக்குருக்கள் 1579-ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் ஐந்து அறைகளைக் கொண்டு ஒரு புதிய தலைமை இல்லத்தைக் கட்டியெழுப்பினர். தூத்துக்குடியில் ஏற்கனவே புனித பேதுருவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் ஒன்று இருந்தது. இந்த ஆலயத்தை அருட்தந்தை பேதுரு கொன்சால்வஸ் என்பவர் 1538-ம் ஆண்டில் கட்டினார். இவ்வாலயம், கொச்சி மறைமாவட்டம் 1600-ம் ஆண்டில் உருவாகும் வரை, கோவா மறைமாவட்ட ஆயரின் ஆளுகையின் கீழ் இருந்தது. புனித இராயப்பர் ஆலயமே தூத்துக்குடி வாழ் கிறிஸ்தவர்களுக்கு முதல் பங்கு ஆலயமாக விளங்கிற்று. சுவாமி பேதுரு கொன்சால்வஸ்தான் இந்த ஆலயத்தின் முதல் பங்குக் குருவாக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு அவர் கொச்சிக்கு மாற்றலாகி சென்றுவிட்டார்.

முதல் ஆலயம்[தொகு]

ஆரம்பத்தில் இயேசு சபைக் குருக்கள் புனித இராயப்பர் ஆலயத்தின் பங்குப் பொறுப்பில் இருக்கவில்லை. இதன் காரணமாக அவர்கள் தங்களின் சொந்த வழிபாடு மற்றும் ஆன்மீகக் காரியங்களுக்கென தங்களுக்கென்றே தங்களின் தலைமை இல்லத்தோடு இணைந்தபடி ஓர் ஆலயத்தை உருவாக்கினர். இவ்வாலயம் ஆரம்பத்தில் இரக்கத்தின் மாதா (Senhora da Piedade) ஆலயம் என்று அழைக்கப்பட்டுது.

தூத்துக்டியில் இயேசு சபைக் குருக்கள் எழுப்பிய முதல் மாதா ஆலயத்தை மக்கள் சம்பவுல் கோவில் என்றும் அழைத்தனர். இயேசு சபைக் குருக்கள் கோவாவில் அமைத்த தங்களின் நிர்வாக தலைமை செயலகத்தை சம்பவுல் என்றும் புனித பவுலுக்கு அர்பணித்திருந்தனர். இதனால் மக்கள் அவர்களை சம்பவுல் குருக்கள் என்றும் அழைப்பதுண்டு, மேலும் தூத்துக்குடியில் இயேசு சபைக் குருக்கள் அமைத்த தங்களின் முதல் தலைமை இல்லத்தை புனித பவுலுக்கே அர்பணித்தனர். அதனால் சம்பவுல் கல்லூரி (St. Pauls’ College) என வழங்களாயிற்று அத்துடன் இணைந்திருந்த இரக்கத்தின் பனிமயமாதா ஆலயத்தை மக்கள் சம்பவுல் கோவில் என அழைக்கலாயினர்.

தூத்துக்குடியின் இந்த முதல் மரியன்னை ஆலயமானது 1582-ம் ஆண்டு உரோமையிலுள்ள பனிமய மாதா பேராலயத்தின் நேர்ந்தளிப்பு விழா நாளான ஆகஸ்டு 5ஆம் தேதி அன்று அர்ச்சிக்கப்பட்டது. அன்றே பனிமய மாதாவின் முதல் திருவிழா திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.

முதல் ஆலயத்தின் அழிவு[தொகு]

1603-ம் ஆண்டில் மதுரை நாயக்கர் தனக்கு வரி குறித்த காலுத்தினுள் செலுத்தாததால் குறுநில மன்னனாக இருந்த கயத்தாறு மன்னன் வெட்டும் பெருமாளோடு சேர்ந்து படையெடுத்து வந்து தூத்துக்குடியைத் தாக்கினான். அங்கிருந்த இயேசு சபையினரின் தலைமை இல்லத்தையும், அதனுடன் இணைந்திருந்த பனிமய மாதாவின் முதல் ஆலயத்தையும் இடித்து நெருப்பு வைத்தான். அங்குள்ள விலையுயர்ந்த பொருட்களையும் சூறையாடினான். புனித இராயப்பர் ஆலயத்தையும் இடித்துத் தகர்த்தான்.

ராஜ தீவில் புதிய ஆலயம்[தொகு]

மதுரை நாயக்கனின் கொடுமைகளிலிருந்து தப்பிப்பதற்காக, தூத்துக்குடி, வைப்பாறு, வேம்பாறு போன்ற ஊர்களில் வாழ்ந்தவர்களும் இயேசு சபையினரும் 1604-ம் ஆண்டில் தூத்துக்குடிக்கு எதிரேயுள்ள ராஜ தீவில் (இன்றைய முயல் தீவில்) குடியேறினர். அங்கு இல்லங்கள் அமைத்து வாழ்ந்தனர். இயேசு சபையினர் ராஜ தீவில் புதியதோர் தலைமை இல்லத்தை நிறுவினர். மேலும் பனிமய அன்னைக்கும் புதிய ஆலயம் ஒன்றைக் கட்டியெழுப்பினர். இவ்வாலயத்திற்கு இயேசு சபையின் கொச்சி மாநிலத் தலைவர் அருட்தந்தை ஆல்பர்ட் லெர்சியோ 1604-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி அடிக்கல் நாட்டினார். இவ்வாலயம் 1606-ம் ஆண்டில் முற்றுப் பெற்றது. மக்கள் தங்களோடு ராஜ தீவுக்குப் எடுத்து வந்த பனிமய மாதாவின் அற்புத சுருபத்தை இப்புதிய ஆலயத்தில் ஆடம்பரச் சிறப்போடு வைத்தனர். இவ்வாலயம் ராஜ தீவில் குடியேறிய மக்களுக்கு பங்கு ஆலயமாக விளங்கிற்று. ஆனால் ராஜ தீவு குடியேற்றம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அக்காலத்தில் கொச்சி மறைமாவட்ட ஆயராக இருந்த அந்திரேயாஸ் இயேசு சபையினரையும் மக்களையும் ராஜ தீவிலிருந்து வெளியேறி நிலப் பகுதிக்குத் திரும்புமாறு ஆணை பிறப்பித்தார். அதன்படி ராஜதீவில் வாழ்ந்த அனைவரும் 1609-ம் ஆண்டில் வெளியேறி மீண்டும் நிலப்பகுதியில், தங்கள் தங்கள் சொந்த ஊர்களில் குடியேறினர்.

இடிந்து பாழாகக் கிடந்த புனித இராயப்பர் ஆலயத்தை இயேசு சபையினர் புதுப்பித்து பனிமய மாதாவின் அற்புத சுருபத்தை மக்களின் வணக்கத்திற்காக அங்கே நிறுவினர். மதுரை நாயக்கனால் அழிக்கப்பட்ட தங்களின் தலைமை இல்லத்தையும், அத்துடன் இணைந்தபடி பனிமய மாதா ஆலயத்தையும் 1621-ம் ஆண்டில் எளிய முறையில் மீண்டும் கட்டியெழுப்பினர். பனிமய மாதாவின் சுருபத்தைப் புனித இராயப்பர் ஆலயத்திலிருந்து எடுத்து வந்து இப்புதிய ஆலயத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தனர்.

கிழக்கிந்தியக் கம்பனி உருவான பிறகு வணிகம் செய்வதற்காக ஹாலந்து நாட்டிலிருந்து டச்சுக்காரர்கள் இந்தியாவுக்கு வரத்தொடுங்கினர். இவர்கள் கால்வீனியம் என்னும் சீர்திருத்தத் திருச்சபையினர். இவர்கள் கத்தோலிக்கத் திருமறையின் கொள்கைகளை வன்மையாகக் கண்டனம் செய்தவர்கள். அவர்கள் 1655-ம் ஆண்டில் இலங்கைத் தீவைக் கைப்பற்றினர். இலங்கையிலுள்ள கொழும்பு நகரைத் தங்களின் வணிகத் தலைமைச் செயலகமாக்கி அங்கு கோட்டையும் கட்டினர். டச்சு ஆளுனரும், மற்றும் டச்சு உயர் அதிகாரிகளும் அங்கு நிரந்தரமாகத் தங்கினர்.

டச்சுக்காரர்களின் வருகை[தொகு]

1655-ம் ஆண்டில் டச்சுப் படையின் தளபதியாக இருந்த வன்கோவன்ஸ் என்பவர் போர்த்துக்கீசியப் படையினரை தோற்கடித்துத் தூத்துக்குடியைக் கைப்பற்றினார். இதனால் போர்த்துக்கீசியப் படை வீரர்கள் தூத்துக்குடி மற்றும் கடுலோர ஊர்களிலிருந்து வெளியேறினர். முத்துக்குளித்துறை முழுவதும் டச்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தது. அடுத்து வந்த டச்சுத் தளபதி வன்ரீஸ் என்பவர் தூத்துக்குடியின் பிரதான பகுதியைச் சுற்றி கோட்டைச் சுவர் எழுப்பினார். இப்போது புனித இராயப்பர் ஆலயமும், இயேசு சபையினரின் தலைமை இல்லமும், அதனைச் சேர்ந்த பனிமய மாதா ஆலயமும் டச்சுக் கோட்டைக்குள்ளேயே இருந்தன. எனவே டச்சுப் படையினர் புனித இராயப்பர் ஆலயத்தைத் தங்களின் தங்கும் விடுதியாக மாற்றினர். உள்ளே போர்க் கருவிகளையும் குவித்து வைத்தனர். பனிமய மாதா ஆலயத்தைத் தங்களின் கால்வீனிய வழிபாட்டுத் தலமாக மாற்றினர். இந்நிலையில் புனித பனிமய மாதாவின் அற்புத சுருபத்தை சிவந்தாகுளம், கொற்கை போன்ற இடங்களுக்கு எடுத்துச் சென்று அதனை மக்கள் பாதுகாத்து வந்தனர்.  டச்சுக்காரர்கள் தூத்துக்குடி வாழ் மக்களைத் தங்களின் கால்வீனிய மத வழிபாடுகளில் கலந்து கொள்ளுமாறு பலவந்தப்படுத்தினர். இந்த முயற்சியில் தோல்வி கண்டதால் கோபமடைந்த டச்சுப் படை வீரர்கள், முத்துக் குளித்துறை ஊர்களில் பணியாற்றி வந்த இயேசு சபைக் குருக்களை கடுலோர ஆலயங்களிலிருந்து வெளியேற்றி உள் நாட்டுப் பகுதிகளுக்கு விரட்டியடித்தனர். மேலும் நாகப்பட்டினம், வேம்பாறு, வைப்பாறு, மணப்பாடு போன்ற ஊர்களிலிருந்த மாதா ஆலயங்களை இடித்துத் தரைமட்டுமாக்கினர். இறுதியில் தூத்துக்குடியில் டச்சுக் கோட்டைக்குள்ளிருந்த இயேசு சபைத் தலைமை இல்லத்தையும், அதனோடு இணைந்த பனிமய மாதா ஆலயத்தையும் 1695-ம் ஆண்டில் இரவோடு இரவாக இடித்துத் தரைமட்டுமாக்கி, அந்த இடத்தைத் இறந்தோரை அடக்கம் செய்யும் கல்லறைத் தோட்டமாக மாற்றினர். இதுவே இன்று வரை “கிரகோப்” என்று அழைக்கப்படுகிறது. “கிரகோப்” என்றாலே டச்சு மொழியில் கல்லறைத் தோட்டம் என்று பொருள்.

புதிய கற்கோவில்[தொகு]

மீண்டும் 1699-ம் ஆண்டில் தூத்துக்குடியில் புதிய இடிக்கப்பட்ட ஆலயங்களையெல்லாம் மீண்டும் கட்டியெழுப்ப அனுமதி அளித்தனர் டச்சுக்காரர்கள். அச்சமயத்தில் தூத்துக்குடியின் பங்குக் குருவாக இருந்த இயேசு சபையைச் சேர்ந்த அருட்தந்தை விஜிலியுஸ் சவேரியுஸ் மான்சி என்பவர், டச்சுக்கதாரர்களால் வெளியேற்றப்பட்டு தூத்துக்குடிக்கு வெளியேயுள்ள துப்பாஸ்பட்டி என்ற இடத்தில் புனித லொயோலா இஞ்ஞாசியாரின் பெயரால் ஒரு குடிசைக் கோவிலும், பங்கு இல்லமும் அமைத்து பணி செய்து வந்தார். டச்சுககாரர்களின் அனுமதிக்குப்பின் அருட்தந்தை விஜிலியுஸ் மான்சி மீண்டும் தூத்துக்குடிக்கு வந்து கிரகோப் கல்லறைத் தோட்டத்திற்கு வெளியே மிகவும் எளிய முறையில் ஒரு பங்கு இல்லத்தை அமைத்து அங்கே குடியிருந்தார். சீர்குலைந்து கிடுந்த புனித இராயப்பர் ஆலயத்தையும் கட்டியெழுப்பினார். அது மீண்டும் தூத்துக்குடியின் பங்கு ஆலயமாக மாறியது. கொற்கையில் நாடோடியாக இருந்த பனிமயத் மாதாவின் சுருபத்தை மீண்டும் தூத்துக்குடிக்கு வரவழைத்து அதனைத் தனது பங்கு இல்லத்தின் மேல்மாடியில், பெட்டுகப் பீடம் (almare) ஒன்று செய்து, அதன் உள்ளே வைத்துப் பாதுகாத்து வந்தார்.  1707-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவில் இடியும், மின்னலும் கூடிய பெரும் மழை பெய்து கொண்டிருந்தது. அருட்தந்தை விஜிலியுஸ் மான்சி அன்னையின் சுருபமிருந்த பெட்டகப் பீடத்தின் முன் மண்டியிட்டு செபிக்க சுபித்துக்கொண்டிருந்த போது அவ்வில்லத்தின் கூரையைக் கிழித்துக் கொண்டு பயங்கரமான ஓர் இடி பனிமய அன்னையின் சுருபத்தின் மீது விழுந்தது. அருட்தந்தை விஜிலியுஸ் மான்சி இடியின் அதிர்ச்சியில் உணர்வற்றுப் போனார். அவர் மீண்டும் தனது சுய நினைவுக்கு வந்ததும், அன்னையின் சுருபத்தின் மீது இடி விழுந்தும் அது யாதொரு சேதமுமின்றி அப்படியே இருந்ததாகவும் இடியின் கந்தகப் புகையால் மட்டும் அது கருநீல நிறமாக மாறியிருந்ததாகவும் கூறுவர். மேலும் சுருபத்திற்கு முன்னால் நின்று கொண்டிருந்தும் அருட்தந்தை விஜிலியுஸ் மான்சி இடியிலிருந்து தாம் உயிர் தப்பி பிழைத்திருப்பது அன்னை செய்த அற்புதமாக நம்பினார். அங்கு விழுந்த இடியானது அவர் சுவரில் தொங்க விட்டிருந்த சில புனிதர்களின் படங்களையும், கதவு நிலைகளையும் உடைத்து சேதப்படுத்தியிருந்தது. இதானால் பனிமய அன்னைக்குப் பெரிய புதியதோர் கற்கோவிலை எழுப்ப அருட்தந்தை விஜிலியுஸ் மான்சி அன்றே தீர்மானித்தார்.  இடியினால் கறை படிந்து போன அன்னையின் அற்புத சுருபத்தை மக்களின் பார்வைக்கு வைக்கும்படியாக அருட்தந்தை அதனை மாடியிலிருந்து கீழே இறக்கி புனித இராயப்பர் ஆலயத்தில் வைத்தார். பனிமய மாதாவுக்குப் புதிதாக கற்கோவில் அமைக்கும் தனது திட்டத்தை அருட்தந்தை விஜிலியுஸ் மான்சி உடனடியாக செயல்படுத்த முனைந்தார். இடிவிழுந்த அதே இடத்திற்கு நேர் எதிலே புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்ட விரும்பினார். கற்கோவில் எழுப்ப டச்சுத் தளபதியிடம் அனுமதி பெறப்பட்டது. ஆனால் போர்க் காலங்களில் எதிரிகள் கோவிலை அரணாகப் பயன்படுத்தக்கூடும் என அஞ்சியதால் ஆலயத்தைக் கற்களால் கட்ட அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் அருட்தந்தை விஜிலியுஸ் கொழும்பிலிருந்த டச்சு ஆளுனருக்கு கடிதம் எழுதி, அதில் புதிய ஆலயத்தின் அளவுகளைத் குறிப்பிட்டு, அதனை கற்களால் கட்டுவதற்கு அனுமதி வேண்டினார். டச்சு ஆளுனரும் புதிய ஆலயத்தை கற்களால் கட்டுவதற்கு அனுமதி வழங்கினார்.

இறுதியில் 1712-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி பனிமய அன்னையின் புதிய கற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆலயத்தின் கட்டிட வேலைகள் வேகமாக நடந்து ஒரே ஆண்டில் ஆலய வேலை முற்றுப் பெற்றது. ஆலயக் கூரையில் கனரா ஓடுகளும் பதிக்கப்பட்டன.  இந்த முதல் கற்கோவில், 1713-ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி, பனிமய மாதாவின் திருவிழாவஎறு இவ்வாலயம் திறந்து வைக்கப்பட்டது. இயேசு சபையின் கொச்சி மாநிலத் தலைவர் அருட்தந்தை எம்மானுவேல் பெரைரா இப்புதிய ஆலயத்தை அர்ச்சித்துத் திறந்து வைத்தார். அங்கு முதல் திருவிழா திருப்பலியும் நிறைவேற்றினார்.

1982-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இவ்வாலயத்தைப் “பேராலயம்” (Basilica) என்ற சிறப்பு நிலைக்கு உயர்த்தினார்.

வெளி இணைப்புகள்[தொகு]