திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில் (கொச்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில்
Santa Cruz Cathedral Basilica
திருச்சிலுவைப் பெருங்கோவிலின் முன்தோற்றம்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Kerala" does not exist.
9°57′54″N 76°14′35″E / 9.965°N 76.243°E / 9.965; 76.243ஆள்கூற்று: 9°57′54″N 76°14′35″E / 9.965°N 76.243°E / 9.965; 76.243
அமைவிடம் இந்தியாவின் கொடி, கொச்சி, கேரளம்
நாடு இந்தியா
சமயப் பிரிவு உரோமன் கத்தோலிக்கம் - இலத்தீன் வழிபாட்டுமுறை
வலைத்தளம் www.santacruzcathedralbasilica.org
www.dioceseofcochin.org
வரலாறு
நிறுவப்பட்டது 3 மே 1505
நிறுவனர்(கள்) பிரான்சிஸ்கோ தே அல்மேய்தா
Architecture
நிலை இணைப் பெருங்கோவில் (minor basilica)
பாணி கோத்திக் கலைப்பாணி
நிருவாகம்
உயர் மறைமாவட்டம் வராப்புழை உயர்மறைமாவட்டம்
மறைமாவட்டம் கொச்சி மறைமாவட்டம்
Province வராப்புழை உயர்மறைமாவட்டம்
குரு
பேராயர் பிரான்சிஸ் கல்லறக்கல்
ஆயர் ஜோசப் கரியில்

திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில் (Santa Cruz Cathedral Basilica) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொச்சி நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கத்தோலிக்க வழிபாட்டிடம் ஆகும். கேரளத்தின் வரலாற்றுச் சிறப்புடைய இக்கோவில் இந்தியாவிலேயே புகழ்பெற்ற கிறித்தவக் கோவில்களுள் ஒன்றாகும். இக்கோவிலைச் சந்தித்து அங்கு வேண்டுதல் நிகழ்த்த ஆண்டுமுழுவதிலும் திருப்பயணிகளும் சுற்றுலாப் பயணிகளும் செல்கின்றனர்.

கொச்சி மறைமாவட்டத்தின் தலைமைக் கோவில்[தொகு]

இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர்துறந்த சிலுவையை நினைவுகூர்ந்து எழுப்பப்பட்டுள்ள இக்கோவில் கேரளத்தின் கொச்சி மறைமாவட்டத்தின் தலைமைக் கோவிலாகவும் திகழ்கிறது. இது இந்தியாவின் பழமையான கோவில்களுள் இரண்டாவதாக உள்ளது. கொச்சியில் உள்ள மற்றொரு முக்கிய கோவில் புனித பிரான்சிசு சவேரியார் கோவில் ஆகும் (St. Francis Church, Kochi).

கோவிலின் வரலாறு[தொகு]

திருச்சிலுவைக் கோவில் போர்த்துகீசியரால் கட்டப்பட்டு, 1558இல் திருத்தந்தை நான்காம் பயஸ் என்பவரால் மறைமாவட்டத் தலைமைக் கோவிலாக உயர்த்தப்பட்டது.

போர்த்துகீசியரை எதிர்த்துப் போரிட்ட ஓல்லாந்தர்கள் இந்தியாவில் பல கத்தோலிக்க நிறுவனங்களை அழித்துவிட்டனர். ஆனால் அவர்கள் இக்கோவிலை விட்டுவைத்தனர். ஓல்லாந்தர்களை முறியடித்த பிரித்தானியர் இக்கோவிலை அழித்தனர்.

அதன்பின் ஆயர் யோவான் கோமஸ் ஃபெர்ரேய்ரா[1]என்பவர் 1887இல் இக்கோவிலை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கினார். கோவில் கட்டடம் 1905இல் நிறைவுற்று, கோவில் அர்ச்சித்து அர்ப்பணிக்கப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோவிலை திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1984இல் "இணைப் பெருங்கோவில்" (minor basilica) நிலைக்கு உயர்த்தினார்.

போர்த்துகீசிய மறைப்பணியாளர்களும் தொடக்க காலத் திருச்சிலுவைக் கோவிலும் (1505-1558)[தொகு]

இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடிப்பதில் ஈடுபட்ட எசுப்பானிய-போர்த்துகீசிய நாட்டவர் இந்தியாவுக்குக் கத்தோலிக்க சமயத்தையும் கொண்டுவந்தார்கள். 1498, மே 20ஆம் நாள் வாஸ்கோ ட காமா கோழிக்கோடு நகருக்கு அருகே காப்பாடு என்னும் கிராமத்தில் வந்திறங்கினார். அதைத் தொடர்ந்து இரண்டாவது கப்பல் 1500, திசம்பர் 24ஆம் நாள் வந்துசேர்ந்தது. அதற்குத் தலைமை வகித்தவர் பேத்ரோ ஆல்வாரெஸ் காப்ரால் (Pedro Álvares Cabral) என்பவர்.

அவரையும் அவருடைய குழுவினரையும் கொச்சி இராச்சியத்தை ஆண்ட அரசர் உண்ணி கோத வர்மா திருமூலப்பாடு என்பவர் மகிழ்ச்சியோடு வரவேற்றார். இதை அறிந்த கோழிக்கோடு சாமூதிரி கொச்சி இராச்சியத்தின்மீது போர்தொடுத்தார். ஆனால் 1503 திசம்பர் 24இல் கொச்சியை வந்தடைந்த போர்த்துகீசியப் படை அஃபோன்சோ தே ஆல்புகெர்க்கே (Afonso de Albuquerque) என்பவரின் தலைமையில் கொச்சி அரசரை எதிர்த்தவர்களின் படையை முறியடித்தது. இதற்குக் கைம்மாறாகக் கொச்சி அரசர் போர்த்துகீசியர் கொச்சி நகரில் ஒரு கோட்டை கட்ட இசைவு அளித்தார்.

அரச அரண்மனையும் இந்துக் கோவில்களும் தவிர வேறு கட்டடங்கள் கல், சாந்து போன்ற உறுதியான பொருள்களால் கட்டப்படுவதற்கு அனுமதி இல்லாத அக்காலத்தில், கிறித்தவக் கோவில் ஒன்றைக் கல், சாந்து போன்ற பொருள்களைக் கொண்டு உறுதியாகக் கட்டி எழுப்ப அரசர் இசைவு அளித்தார். இவ்வாறு திருச்சிலுவைக் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் 1505, மே 3ஆம் நாள் இடப்பட்டது. அந்நாள் "திருச்சிலுவை கண்டெடுக்கப்பட்ட திருநாள்" என்று கொண்டாடப்பட்ட நாள் ஆகும். எனவே அக்கோவிலுக்கு "திருச்சிலுவைக் கோவில்" (போர்த்துகீசம்: Santa Cruz) என்னும் பெயர் இடப்பட்டது. இன்று கொச்சி கோட்டை (Fort Cochin) என்று அழைக்கப்படும் இடத்திற்குக் கிழக்குப் பக்கம் அக்கோவில் அமைந்திருந்தது.[2].

மறைமாவட்டக் கோவிலாக உயர்த்தலும், கோவில் அழிபடுதலும் (1558-1795)[தொகு]

1558இல் திருத்தந்தை நான்காம் பவுல் கோவா மறைமாவட்டத்தின் தெற்குப் பகுதியைத் தனியாகப் பிரித்து கொச்சி மறைமாவட்டத்தை உருவாக்கினார். அதோடு திருச்சிலுவைக் கோவில் கொச்சி மறைமாவட்டத்தின் தலைமைக் கோவில் நிலையைப் பெற்றது.[3][4][5] அதே சமயம் கோவாவிலிருந்து பிரிந்து தனி மறைமாவட்டம் ஆனது மலாக்கா ஆகும்.[6]

1663இல் ஓல்லாந்தர்கள் போர்த்துகீசியரை எதிர்த்து, கொச்சியைக் கைப்பற்றினார்கள். அங்கிருந்த எல்லாக் கத்தோலிக்க கட்டடங்களையும் அழித்தார்கள். அந்த அழிவிலிருந்து தப்பியவை திருச்சிலுவைக் கோவிலும் புனித பிரான்சிசு சவேரியார் கோவிலும் மட்டுமே. ஓல்லாந்தர்கள் திருச்சிலுவைக் கோவிலைத் தம் படை ஆயுதங்களைப் பாதுகாக்கும் கிடங்காகப் பயன்படுத்தினர்.

பின்னர் பிரித்தானியர் படையெடுத்து, கொச்சியைக் கைப்பற்றி, 1795இல் திருச்சிலுவைக் கோவிலை அழித்தனர். அழிந்துபோன கோவிலின் அலங்காரக் கருங்கல் தூண்களுள் ஒன்று, இன்றைய கோவிலின் தென்கிழக்கு மூலையில் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

இன்றைய கோவில் கட்டப்படுதல்: 1886[தொகு]

அதன்பின் சுமார் 100 ஆண்டுகள் கழிந்து, திருச்சிலுவைக் கோவிலை மீண்டும் பெரிய அளவில் கட்டி எழுப்புவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. 1887-1897 காலத்தில் கொச்சி ஆயராக இருந்த யோவான் கோமஸ் ஃபெர்ரேய்ரா என்பவர் கட்டட வேலையைத் தொடங்கிச் செயல்படுத்தினார்.[7]

ஆயினும், கோவில் வேலை ஆயர் மத்தேயு தே ஒலிவேய்ரா சேவியர் (Bishop D. Mateus de Oliveira Xavier) காலத்தில்தான் (1897-1908) நிறைவுபெற்றது.[8]

புதிய கோவில் 1905, நவம்பர் மாதம் 19ஆம் நாள் அர்ச்சிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது.கோவிலை அர்ப்பணித்தவர் டாமன் ஆயராக இருந்த தோம் செபாஸ்தியான் ஹோசே பெரேய்ரா (Bishop Dom Sebastião José Pereira) என்பவர் ஆவார்.[9]

திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில் உள்தோற்றம்

பெருங்கோவில் நிலைக்கு உயர்த்தப்படுதல்[தொகு]

திருச்சிலுவைக் கோவிலின் பழமை, வரலாறு மற்றும் கலை அழகு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அக்கோவிலை 1984, ஆகத்து 23ஆம் நாள் "இணைப் பெருங்கோவில்" (minor basilica) நிலைக்கு உயர்த்தினார்.

கோவிலின் கலையழகு[தொகு]

திருச்சிலுவைப் பெருங்கோவில் இரு உயர்ந்த கோபுரங்களைக் கொண்டுள்ளது. அது வெண்ணிறமாக அமைந்து ஒளிவீசுகின்றது. கோவிலின் உட்பகுதி பெரும்பாலும் கோத்திக் பாணியில் உள்ளது. கோவிலின் மையப் பீடம் புகழ்பெற்ற இத்தாலியக் கலைஞரான ஃபிரா அந்தோனியோ மொஸ்கேனி (Fra Antonio Moscheni) என்னும் இயேசு சபைத் துறவியாலும் அவருடைய துணையாளரும் மங்களூரைச் சார்ந்தவருமான தே காமா என்பவராலும் உருவாக்கப்பட்டது. புதிதாகக் கட்டப்பட்ட கோவில் அர்ச்சிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்படுவதற்கு நான்கு நாள்களுக்கு முன் கலைஞர் மொஸ்கேனி இறந்துவிட்டார்.

கோவிலின் தூண்களில் கிறித்தவ மறை சார்ந்த சுவரோவியங்கள் மற்றும் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. கோவிலில் உள்ள கலையழகு மிக்க படைப்புகளுள் இயேசுவின் துன்பங்களையும் சிலுவைச் சாவையும் சித்தரிக்கின்ற ஏழு தொங்குதிரைகள் குறிப்பிடத் தக்கன. இயேசுவின் இராவுணவுச் சித்திரம் லியொனார்டோ டா வின்சியின் புகழ்பெற்ற சித்திரத்தின் பாணியில் அமைக்கப்பட்டது.

மேலும் திருச்சிலுவைக் கோவிலில் எழில் மிக்க கண்ணாடிப் பதிகை ஓவியங்கள் பல உள்ளன. கோவிலின் உட்கூரையில் எழுதப்பட்டுள்ள சித்திரங்கள் இயேசுவின் துன்பங்களைச் சித்தரிக்கின்றன.

குறிப்புகள்[தொகு]

  1. ஆயர் யோவான் கோமஸ் ஃபெர்ரேய்ரா
  2. Children’s Park, கொச்சி கோட்டை
  3. Diocese of Cochin erected | Original Catholic Encyclopedia
  4. www.gcatholic.com | Diocese of Cochin
  5. "Diocese of Cochin". டேவிட் எம். சேனி. பார்த்த நாள் 20 Jan 2014.
  6. Archdiocese of Goa - suffragan sees of Cochin and Malacca
  7. Bishop புதிய கோவில்
  8. கோவில் வேலை நிறைவுபெறல்
  9. கோவில் அர்ப்பணம்

வெளி இணைப்புகள்[தொகு]

படத்தொகுப்பு[தொகு]