புனித செபமாலை அன்னை பெருங்கோவில் (பாண்டெல், கொல்கத்தா)
புனித செபமாலை அன்னை பெருங்கோவில் அல்லது பாண்டெல் கோவில் (Bandel Church) என்பது இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கத்தோலிக்க கிறித்தவ வழிபாட்டிடம் ஆகும்.
இக்கோவில் இந்தியாவின் வடபகுதி, கிழக்குப்பகுதி (பங்களா தேசம் உட்பட) ஆகியவற்றில் முதல்முறையாக் கட்டப்பட்ட ஒரு கத்தோலிக்க கிறித்தவக் கோவில். பாண்டெலில் எழுந்த முதல் கோவில் கட்டப்பட்ட ஆண்டு 1599 ஆகும். இக்கோவில் போர்த்துகீசிய மொழியில் Nossa Senhora do Rosário என்று வழங்கப்பட்டது. அதற்குப் பொருள் "புனித செபமாலை அன்னை" என்பதாகும்.
வரலாறு
[தொகு]16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் போர்த்துகீசியர்கள் கல்கத்தாவுக்கு அருகே உள்ள பாண்டெல் என்னும் இடத்தை ஒரு துறைமுகமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். முகலாயப் பேரரசான அக்பர் போர்த்துகீசியர்களுக்கு ஹூக்லி ஆற்றின் கரையில் ஒரு நகரத்தை நிறுவ அனுமதி அளித்தார். அப்பகுதியில் குடியேறிய போர்த்துகீசியர் அங்கு வாழ்ந்த மக்களுக்குக் கிறித்தவ சமயத்தை போதித்து, அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்து அவர்களில் பலரைக் கிறித்தவ சமயத்திற்குக் கொணர்ந்தனர். 1598ஆம் ஆண்டளவில் அங்கு போர்த்துகீசியரும் இந்தியருமாக சுமார் 5000 கத்தோலிக்கர் இருந்தனர்.
1579ல் போர்த்துகீசியர் ஹூக்லி ஆற்றின் கரையில் ஒரு துறைமுகம் கட்டினர், பின்னர் அங்கு ஒரு கோட்டையையும் கட்டி எழுப்பினர். அங்கிருந்த கிறித்தவர் நடுவே பணிபுரிய கோவா நகரிலிருந்து புனித அகுஸ்தீன் சபைத் துறவியர் கொண்டுவரப்பட்டார்கள்.
கத்தோலிக்க சமயத்தை வெளிப்படையாகப் போதித்து, மக்களைக் கிறித்தவ சமயத்திற்குக் கொணரவும், அவர்களுக்கு வழிபாட்டிடங்களாகக் கோவில்கள் கட்டி எழுப்பவும் முகலாயப் பேரரசர் அக்பர் முழு இசைவு தந்தார். இதைத் தொடர்ந்து, போர்த்துகீசிய தளபதி பேத்ரோ தவாரெஸ் என்பவர் பாண்டல் நகரில் 1599இல் போர்த்துகீசிய குடியேற்றக் காலக் கலைப்பாணியில் ஒரு கோவிலைக் கட்டி எழுப்பினார். அதோடு அகுஸ்தீன் சபைத் துறவியருக்கு ஒரு துறவற இல்லமும் அமைக்கப்பட்டது.
புதிய கோவில் கட்டப்படுதல்
[தொகு]1632இல் ஷாஜஹான் பேரரசர் காலத்தில் நிகழ்ந்த ஹூக்லி படையெடுப்பின்போது, பாண்டெல் கோவில் தீக்கிரையாக்கப்பட்டது. எனவே போர்த்துகீசியர் ஜாண் கோமசு தே சோத்தோ என்பவரின் தலைமையில் 1660ஆம் ஆண்டு ஒரு புதிய கோவிலைக் கட்டினர். அக்கோவில் பழைய கோவில் அழிந்த அதே இடத்திலேயே கட்டப்பட்டது.
பழைய கோவிலின் எஞ்சிய அடிக்கல்லில் காணும் 1599 என்னும் ஆண்டு அக்கோவில் கட்டப்பட்ட காலத்தைக் காட்டி நிற்கிறது. அக்கல் இன்று அங்குள்ள துறவற இல்லத்தின் மேற்கு வாயிலில் பதிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்பு
[தொகு]இன்று பாண்டெல் நகரில் போர்த்துகீசியர் விட்டுச்சென்ற தடயமாக உள்ளவை புனித செபமாலை அன்னை கோவிலும், துறவற இல்லமும், அதன் முற்றமும் மட்டுமே. அங்கிருந்த அகுஸ்தீன் சபையின் இறுதி போர்த்துகீசிய துறவி இறந்தது 1869இல் ஆகும். 1870இல் வங்காள மொழிப் பள்ளிக்கூடம் ஒன்று தொடங்கப்பட்டது. அது மயிலாப்பூர் மறைமாவட்டத்தின் கீழ் போர்த்துகீசிய நேர் கண்காணிப்பில் தொடங்கப்பட்டது.
சலேசிய சபை பொறுப்பு
[தொகு]பின்னர் கொல்கத்தா மறைமாவட்டம் உருவானதைத் தொடர்ந்து பாண்டெல் கோவிலும் அதைச் சார்ந்த துறவற இல்லம், பள்ளிக்கூடம் போன்றவையும் சலேசிய சபையின் பொறுப்பில் 1928இல் ஒப்படைக்கப்பட்டன.
இன்றுவரை பாண்டல் மறைத்தளத்தின் பொறுப்பு சலேசிய சபையினரிடமே உள்ளது. அவர்கள் அங்கு புதிய கட்டங்களை எழுப்பியுள்ளனர். ஒரு கல்லூரி, புகுமுகத் துறவியர் இல்லம், தியான இல்லம் போன்றவற்றை அவர்கள் தொடங்கி நடத்திவருகின்றனர்.
அன்னை மரியா திருத்தலம்
[தொகு]இன்று புனித செபமாலை அன்னை கோவில் ஒரு திருத்தலமாகச் சிறப்புப் பெற்றுள்ளது. வங்காள விரிகுடாவில் எழுந்த ஒரு புயலின்போது அன்னை மரியாவின் வேண்டுதலால் அற்புதமாகக் காப்பாற்றப்பட்டதற்கு நன்றியறிதலாக அக்கோவிலில் "நற்பயணத் துணை அன்னை மரியா" என்ற பெயரில் ஒரு திருவுருவம் வைக்கப்பட்டது. அதன் முன் வேண்டுதல் நடத்த கத்தோலிக்கரும் பிறருமாக ஆயிரக் கணக்கான மக்கள் ஆண்டு முழுவதும் திருப்பயணமாக வருகின்றனர். கோவில் முன் எழுப்பப்பட்டுள்ள கப்பலின் கொடிமரம் அந்நிகழ்ச்சியை இன்று நினைவுபடுத்துகிறது.
குறிப்பாக, சனவரி மாதத்தில் இந்தியாவிலிருந்தும் பங்களா தேசத்திலிருந்தும் சாந்தால் இன கத்தோலிக்க மக்கள் ஆண்டுத் திருப்பயணமாக வந்து பாண்டல் கோவிலில் தங்கள் மாநாட்டை நிகழ்த்துகின்றனர்.
அதுபோலவே, கொல்கத்தா பகுதி வாழ் சீனக் கத்தோலிக்கரும் இக்கோவிலுக்குத் திருப்பயணமாகச் செல்கின்றனர்.
கோவிலில் மூன்று பீடங்கள் உள்ளன. ஒரு பீடம் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கல்லறைகளில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் பல உள்ளன. இன்னிசை எழுப்புகின்ற குழல் பாணி பேரிசைக் கருவியும் (pipe organ) உள்ளது.
பெருங்கோவில் நிலைக்கு உயர்த்தப்படல்
[தொகு]1988ஆம் ஆண்டு, நவம்பர் 25ஆம் நாள் இக்கோவிலை திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் "பெருங்கோவில்" (பசிலிக்கா) நிலைக்கு உயர்த்தினார்.
குறிப்புகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Hooghly District Official Website பரணிடப்பட்டது 2013-09-30 at the வந்தவழி இயந்திரம்
- Bandel Church - Hooghly பரணிடப்பட்டது 2013-09-28 at the வந்தவழி இயந்திரம்