உள்ளடக்கத்துக்குச் செல்

புனித அந்திரேயா பெருங்கோவில் (ஆர்த்துங்கல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித அந்திரேயா பெருங்கோவில்
ஆர்த்துங்கல்
கடலோரக் கிராமம்
புனித அந்திரேயா வட்டாரக் கோவில், ஆர்த்துங்கல்
புனித அந்திரேயா வட்டாரக் கோவில், ஆர்த்துங்கல்
Country இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்Alappuzha
Languages
 • OfficialMalayalam, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
PIN
688530
Telephone code+91 478
வாகனப் பதிவுKL-
Nearest cityKochi
மக்களவை (இந்தியா) constituencyAlappuzha
Vidhan Sabha constituencyCherthala

ஆர்த்துங்கல் புனித அந்திரேயா பெருங்கோவில் (Arthunkal) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆலப்புழை மறைமாவட்டத்தின் கடலோரக் கிராமமும் வட்டாரப் பங்குமான ஆர்த்துங்கல் என்னும் ஊரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க வழிபாட்டு இடம் ஆகும்.

ஆர்த்துங்கல் என்னும் கிராமம் சேர்த்தலைக்கு மேற்கே 8 கி.மீ. தொலையிலும், ஆலப்புழை நகரிலிருந்து வடக்காக 22 கி.மீ. தொலையிலும் உள்ளது. இங்கே மீன்பிடித்தல் முக்கிய தொழில் ஆகும்.

ஆர்த்துங்கல் அந்திரேயா கோவிலும் புனித செபஸ்தியாரும்

[தொகு]

ஆர்த்துங்கல் கிராமம் அங்கு அமைந்துள்ள கத்தோலிக்க கோவிலாகிய புனித அந்திரேயா பெருங்கோவில் காரணமாக மிகவும் புகழ்பெற்றுள்ளது. இங்கு கிறித்தவர்களும் பிற சமயத்தவர்களும் திருப்பயணிகளாக வருகின்றனர்.

இக்கோவில் புனித அந்திரேயாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும், இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்ற விழா புனித செபஸ்தியார் திருவிழா ஆகும். புனித செபஸ்தியார் கத்தோலிக்க திருச்சபையில் ஒரு முக்கிய புனிதராகக் கருதப்படுகிறார். குறிப்பாக, கொள்ளை நோய் மற்றும் பலவிதமான நோய்நொடி உபாதைகளிலிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் வல்லமை மிக்க புனிதராக இவரைக் கருதி மக்கள் வேண்டுதல் செலுத்துகிறார்கள்.

புனித செபஸ்தியார் வரலாறு

[தொகு]

கிறித்தவத் தொன்ம வரலாற்றின்படி, செபஸ்தியார் பிரான்சு நாட்டின் நார்போன் நகரில் பிறந்தார். கி.பி. 283 அளவில் அவர் உரோமை இராணுவத்தில் சேர்ந்து போர்வீரர் ஆனார். அப்போது அவர் பலரைக் கிறித்தவ மதத்தில் சேர்த்தார். பலருடைய நோய்களைப் போக்கும் வல்லமையும் அவருக்கு இருந்தது. இராணுவத்தில் அவர் பதவி உயர்வு பெற்றார். ஆனால் அவர் கிறித்தவ மதத்தைத் தழுவியிருந்தார் என்பது அரசனுக்கோ பிற அதிகாரிகளுக்கோ தெரியவில்லை.

மாக்சிமியன் மன்னன் செபஸ்தியார் கிறித்தவர் என்பதைக் கண்டுகொண்டதும் அவரைக் கொல்லுமாறு ஆணையிட்டார். அவரை ஒரு மரத்தில் கட்டிவைத்து, அவர்மேல் அம்புகளை எய்து கொல்லப்பார்த்தார்கள். அவர் இறந்துபோனார் என்று நினைத்து அவரை விட்டு இராணுவத்தினர் சென்றுவிட்டனர். அப்போது அவருடைய உடலை எடுத்து அடக்கம் செய்வதற்காகச் சென்ற பெண்மணி ஒருவர் அவர் உயிரோடு இருப்பதைக் கண்டு, அவருக்கு மருத்துவ உதவி அளித்து உடல் நலம் பெறச் செய்தார்.

பின்னர் செபஸ்தியார் அரசனை அணுகி, அரசன் கிறித்தவர்களைத் துன்புறுத்துவது தவறு என்று கடிந்துகொண்டார். அரசன் சினமுற்று அவரைத் தடிகளால் அடித்துக் கொல்லுமாறு ஆணையிட்டான். அவரது உடல் உரோமையின் ஆப்பியா சாலை அருகே அடக்கம் செய்யப்பட்டது.

செபஸ்தியாரை ஒரு புனிதராகக் கருதி மக்கள் வணக்கம் செலுத்தத் தொடங்கினர். அவர் அம்பு எய்துவோர், விளையாட்டு வீரர்கள், இராணுவத்தினர் போன்றோரின் பாதுகாவலராகக் கருதப்படுகிறார். கொள்ளைநோய் போன்ற கடின வியாதிகளிலிருந்து விடுதலை பெற மக்கள் அவரை நோக்கி வேண்டுவது வழக்கம்.

போர்த்துகீசியர்கள் இந்தியாவுக்கு கிறித்தவத்தைக் கொணர்ந்தபோது கேரளப் பகுதிகளில் புனித செபஸ்தியார் வணக்கமும் பரவியது. ஆர்த்துங்கல் கோவிலிலும் இந்த வணக்கம் சிறப்பாக வளர்ச்சியுற்றது.[1]

ஆர்த்துங்கல் கோவிலில் புனித செபஸ்தியார் விழா

[தொகு]

கத்தோலிக்க திருச்சபையின் வழிபாட்டு நாள்காட்டிப்படி, சனவரி 20ஆம் நாள் புனித செபஸ்தியாருக்கு விழாக் கொண்டாடப்படுகிறது. ஆர்த்துங்கல் புனித அந்திரேயா கோவிலிலும் இந்த விழா சனவரி 20ஆம் நாள் சிறப்பிக்கப்படுகிறது. இது “பெருநாள்” என்று அழைக்கப்படுகிறது. “எட்டம் பெருநாள்” என்ற பெயரில் சனவரி 27ஆம் நாள் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கூடுகின்றனர். புனித செபஸ்தியாரின் திருச்சிலையை மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, கடற்கரைக்குக் கொண்டு செல்வர். பின்னர் அச்சிலை கோவிலுக்குக் கொண்டுவரப்படும். அப்போது வானத்தில் கழுகு ஒன்று வட்டமிடும் என்று மக்கள் கூறுகின்றனர். அது புனித செபஸ்தியாரின் பாதுகாவல் தொடர்கிறது என்பதற்கு அடையாளம் என்பது புராதன வரலாறு.

செபஸ்தியாருக்கு மக்கள் பக்தி

[தொகு]

புனித செபஸ்தியார் வழியாகப் பெற்றுக்கொண்ட வரங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பக்தர்கள் “உருளு நேர்ச்சை” என்று அழைக்கப்படும் முயற்சியைச் செய்கிறார்கள். கடலோரச் சாலையிலிருந்து கோவில் வரை முழங்காலில் ஊர்ந்து செல்வது இதில் அடங்கும். மக்கள் வழங்கும் காணிக்கைகளுள் முக்கியமானவை அம்பும் வில்லும் ஆகும். புனித செபஸ்தியார் உடலில் அம்புகள் எய்யப்பட்டதைக் குறிக்கும் விதமாக இக்காணிக்கைகள் உள்ளன.

இன்னொரு முக்கிய அம்சம், இங்கே கொண்டாடப்படுகின்ற செபஸ்தியார் விழாவுக்கும் சபரிமலை ஐயப்பனுக்கும் இடையே மக்கள் காட்டுகின்ற தொடர்பு. மக்களின் நம்பிக்கைப் படி, செபஸ்தியாரும் ஐயப்பனும் உடன்பிறப்புகளாம். இவ்வாறு ஆயிரக்கணக்கான சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் செபஸ்தியாருக்கும் வணக்கம் செலுத்த வருகின்றனர்.

ஆர்த்துங்கல் புனித அந்திரேயா கோவில் பற்றிய குறிப்புகள்

[தொகு]
ஆர்த்துங்கல் புனித அந்திரேயா வட்டாரக் கோவில்

ா ஆர்த்துங்கல் கிராமத்தில் புனித அந்திரேயாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோவில் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது. 1584இல் கட்டப்பட்ட இக்கோவிலில் ஜாக்கொமோ ஃபெனீசியோ என்பவர் குருவாக இருந்தார். அவர் மக்களின் நோய்களைப் போக்கும் திறம் பெற்றிருந்தாராம். மக்கள் அவரை “ஆர்த்துங்கல் வெளுத்தச்சன்” (வெள்ளைக்காரத் தந்தை) என்று அழைத்தனர். அவர் 1632இல் இறந்தார். அதன் பின் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் மறுபடியும் கட்டப்பட்டது. அரபிக் கடலை நோக்கி, மேற்கு பார்த்த விதத்தில் கோவில் கட்டப்பட்டது.

1647இல் இத்தாலியின் மிலான் நகரில் வார்க்கப்பட்ட புனித செபஸ்தியார் திருச்சிலை கொண்டுவரப்பட்டு, புனித அந்திரேயா கோவிலில் வணக்கத்திற்கு வைக்கப்பட்டது.

பெருங்கோவில் நிலைக்கு உயர்த்தப்படுதல்

[தொகு]

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2010ஆம் ஆண்டு, சூலை மாதம் 9ஆம் நாள் புனித அந்திரேயா வட்டாரக் கோவிலை “இணைப் பெருங்கோவில்” (basilica) நிலைக்கு உயர்த்தினார்.

கோவிலை அடுத்துள்ள வளாகத்திலும் சாலையின் இரு ஓரங்களிலும் பல கல்விக் கூடங்கள், துறவற இல்லங்கள், மருத்துவ மனைகள் உள்ளன.

குறிப்புகள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-02-05. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.

படத்தொகுப்பு

[தொகு]