குளித்தலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குளித்தலை
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் T. அன்பழகன் இ. ஆ. ப. [3]
நகராட்சிதலைவர் பல்லவிராஜா
மக்கள் தொகை 26,152 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

குளித்தலை (ஆங்கிலம்:Kulithalai ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

பெயர்க்காரணம்[தொகு]

காவிரிக் கரையோரம் நன்செய் நிலங்களும், மலர்ச்சோலைகளுமாய் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக கடம்பவனம் எனும் சிற்றூர் அமைந்திருந்தது. அப்பகுதி "குளிர் தண்டலை" என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் "குளித்தலை" என்றாகியது.

எல்லைகள்[தொகு]

குளித்தலையின் புவியியல் அமைவிடமானது 10°34′N 78°15′E / 10.56°N 78.25°E / 10.56; 78.25[4] . மேலும் வடக்கில் முசிறி, கிழக்கில் பெட்டவாய்த்தலை , தெற்கில் அய்யர் மலை, மேற்கில் லாலா பேட்டை ஆகியவை குளித்தலையைச் சுற்றியுள்ள ஊர்களாகும். குளித்தலை சுமார் 11.16 கி.மீ சுற்றளவு கொண்ட ஒரு நகராட்சி ஆகும்.

வழிபாட்டு தலங்கள்[தொகு]

இந்து வழிபாட்டு தலங்கள்[தொகு]

அருள்மிகு கடம்பனேசுவரர் திருக்கோவில்(அமைவிடம் latitude 10°56'34.16"N , longitude 78°25'3.53"E )

காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள கடம்பனேசுவரர் கோவிலானது சுமார் 1500 ஆண்டுகள் பழமையான தேவாரப் பாடல் பெற்ற சிவ தலமாகும். இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்திருப்பது இதன் அரிய தொரு தனிச்சிறப்பாகும். ஆண்டு தோறும் தைப்பூசம் அன்று இத்தலமானது விழாக்கோலம் பூண்டிருக்கும். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகமானது பக்தர்கள் கூட்டம் வழிய வெகு விமரிசையாக நடைபெற்றது

அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் திருக்கோவில். (அமைவிடம் latitude 10°56'6.99"N, longitude78°25'29.68"E)

குளித்தலையில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் கோவில் திருவிழாக்களில் அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் திருக்கோவிலின் திருவிழா முதன்மையானது. சித்திரையில் பூச்சொரிதல் நிகழ்ச்சியில் துவங்கி வைகாசி திங்களில் தேரோட்டமானது கோவிலின் 4 மாடவீதிகளை சுற்றி வந்து பின் பூ மிதி நிகழ்ச்சியுடன் நிறைவு பெறும்.

அருள்மிகு நீலமேக பெருமாள் திருக்கோவில்.(அமைவிடம் latitude 10°56'9.32"N , longitude 78°25'28.25"E)

இத்திருக்கோவிலானது குளித்தலையில் அமைந்துள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வைணவ தலமாகும். இக்கோவிலானது மரங்கள் மற்றும் மூலிகைகள் நிறைந்த ரம்யமான சூழலில் அமைந்திருக்கின்றது.[சான்று தேவை]

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில். (அமைவிடம் latitude 10°56'13.87"N,longitude78°25'30.90"E)

சிவ பெருமான் மூலவராக உள்ள இந்த சிவ தலமானது குளித்தலை MBS அக்ரஹாரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுப்ரமணிய சுவாமிகளின் சன்னதியும், விநாயகர், தட்சினா மூர்த்தி, துர்க்கை அம்மன் முதலிய சன்னதிகளும் அமையப்பெற்றுள்ளன. பிரதோஷம் அன்று சிறப்பு பூஜைகளில் பெருவாரியான மக்கள் கலந்து கொள்வர்.

அருள்மிகு பேரகுந்தாளம்மன் திருக்கோவில். (அமைவிடம் latitude 10°56'20.35"N , longitude 78°25'19.00"E)

இத்திருக்கோவிலானது குளித்தலை நகரின் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ளது. குளித்தலையின் எல்லை காக்கும் அம்மனாக வழிபடப்படுகின்றது. தை, மாசி மாதங்களில் வெகு விமரிசையாக திருவிழா நடத்தப்படுகின்றது.

அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில். (அமைவிடம் latitude 10°56'9.25"N , longitude 78°25'29.25"E )

நீலமேக பெருமாள் கோவிலுக்கு நேராக அமைந்துள்ளது இக்கோவில். மூலவராக அருள்மிகு ஆஞ்சநேயர் இருக்கிறார். சனிக் கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.

அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில். (அமைவிடம் latitude 10°56'13.78"N ,longitude 78°25'21.68"E)

மூலவராக அருள்மிகு தண்டாயுதபாணி அருள் பாலிக்கும் இக்கோவிலானது சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு வெகு அருகாமையில் அமைந்துள்ளது. கிருத்திகை போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அருள்மிகு ஐயப்ப சுவாமிகள் திருக்கோவில் (அமைவிடம் latitude 10°56'13.78"N ,longitude78°25'21.68"E)

குளித்தலை பஜனை மட வீதியில் அருள்மிகு ஐயப்பன் சன்னதி அமையப்பெற்றுள்ளது. இக்கோவில் அண்மையில் கட்டி முடிக்கப்பெற்றது. சபரி மலை பக்தர்கள் உட்பட ஏராளமானோர் இத் திருத்தலத்திற்கு சென்று தரிசனம் செய்வர்...

அருள்மிகு ஓம்சக்தி திருக்கோவில். (அமைவிடம் latitude 10°56'14.63"N , longitude 78°25'14.43"E)

ஓம்சக்தி கோவிலானது பேருந்து நிலையத்திலிருந்து தெற்கு திசையில் நடக்கும் தொலைவில் அமைந்துள்ளது. பக்தர்கள் குறிப்பாக மேல் மருவத்தூர் செல்லும் பெண் பக்தர்கள் இக்கோவிலில் வழிபடுவது வழக்கம்.

கிறித்தவ வழிபாட்டு தலங்கள்[தொகு]

சி. எஸ். ஐ தேவாலயம். (அமைவிடம் latitude 10°56'7.50"N , longitude 78°25'25.82"E)

குளித்தலை பழைய ஆஸ்பத்திரி சாலையில் அமைந்துள்ளது சி. எஸ். ஐ தேவாலயம். ஆலயத்தின் வளாகத்திலேய சி. எஸ். ஐ. துவக்க பள்ளி (தமிழ் & ஆங்கிலம்) செயல்பட்டு வருகின்றது. கிறித்தவ பண்டிகைகள் அன்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஆர். சி. தேவாலயம். (அமைவிடம் latitude 10°56'6.70"N , longitude 78°25'20.29"E)

பஜனை மடத்திற்கு வடக்கே இரயில் நிலையம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது RC தேவாலயம். இதன் வளாகத்தினுள்ளே நடுநிலை பள்ளியும் செயல்பட்டு வருகின்றது. கிறிஸ்துமஸ் திருநாளில் வெகு சிறப்பாக பூஜைகள் நடைபெறும். மேலும் சப்பரம் திருநாளின் போது அன்னை மாதா, அந்தோணியாரின் திரு பவனி நடைபெறும். இதில் அனைத்து சமய மக்களும் ஏராளமாக கலந்து கொள்வர்.

இஸ்லாமிய திருத்தலங்கள்[தொகு]

பள்ளிவாசல். (அமைவிடம் latitude 10°56'20.14"N , longitude 78°25'21.95"E)

பேருந்து நிலையம் அருகே பள்ளிவாசல் அமைந்துள்ளது. ரமலான் , பக்ரீத் போன்ற பண்டிகைகளின் போது அனைத்து மதத்தவருக்கும் பிரியாணி போன்ற உணவு பொருட்களை பரிமாறி கொள்ளும் வழக்கம் ஓர் தனிச்சிறப்பாகும்.

கல்வி[தொகு]

குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் சேவையாற்றி வருகின்றன. குளித்தலை நகராட்சியில் கீழ்காணும் பள்ளிகள் அமைந்துள்ளன.

துவக்க பள்ளிகள்:

 • C S I துவக்க பள்ளி (தமிழ் & ஆங்கிலம்) (அரசு உதவி )
 • லிட்டில் ஃபேரீஸ் (தனியார்)
 • குழந்தை ஏசு பாலர் பள்ளி (தனியார்)
 • அன்னை நாமகிரி துவக்க பள்ளி (தனியார்)
 • அன்னை புஷ்பம் துவக்க பள்ளி (தனியார்)
 • நேஷனல் மெட்ரிக் பள்ளி (தனியார்)
 • மவுண்ட் கிரீஸ் மெட்ரிக் பள்ளி (தனியார்)
 • அறிஞர் அண்ணா மழலையர் பள்ளி (தனியார் )
 • செயிண்ட் டோம்னிக் மெட்ரிக் பள்ளி (தனியார்)
 • விவேகானந்தா வித்யாலயா (தனியார்)

நடுநிலை பள்ளிகள்:

 • மாரியம்மன் கோயில் நடுநிலை பள்ளி (அரசு உதவி)
 • அமலராக்கினி நடுநிலை பள்ளி (அரசு உதவி)
 • கடம்பர் கோவில் நடுநிலை பள்ளி (அரசு உதவி)

உயர்நிலை பள்ளிகள்:

 • பாரதி வித்யாலயா உயர்நிலை பள்ளி (தனியார்)
* கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளி (தனியார்)
 • செயிண்ட் டோம்னிக் மெட்ரிக் பள்ளி (தனியார்)

மேல்நிலை பள்ளிகள்:

 • அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி (அரசு)
 • அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி (அரசு)
 • வித்யா பாரதி மெட்ரிகுலேசன் பள்ளி (தனியார்)

கல்லூரிகள்:

 • கலைஞர் அரசு கலை & அறிவியல் கல்லூரி

இக்கல்லூரி 2007 ல் குளித்தலை அண்ணா நகரில் தொடங்கப்பட்டு 8.9.2010 முதல் குளித்தலையின் புறநகர் பகுதியான அய்யர் மலைக்கு கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் சார்பில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இக்கல்லூரியில் பி. பி. ஏ, பி. எஸ். சி கணினி அறிவியல் போன்ற துறைகளும், கலை சார் துறைகளும் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றன.

மருத்துவ வசதிகள்[தொகு]

குளித்தலை நகரில் மருத்துவ சேவைகள் உள்ளன். அவசர உதவி, அரசு மருத்துவமனை, பல தரப்பட்ட நோய்களுக்கான சிறப்பு பிரிவு தனியார் மருத்துவமனைகள் மற்ற பல மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்கபெறுகின்றன. மேலும் 24 மணிநேர சேவையிலான மருத்துவமனைகள் , மருந்து கடைகள் உள்ளன.

சில மருத்துவமனைகள் குறித்த விபரங்கள் :

 • அரசு மருத்துவமனை
 • பத்மா மருத்துவமனை (பொது நலம் & சர்க்கரை)
 • சாமிநாதன் மருத்துவமனை (பொது நலம்)
 • ஜோதிமணி மருத்துவமனை (குழந்தை நலம்)
 • ராகா மருத்துவமனை (யூராலஜி)
 • குரு மருத்துவமனை (பொது நலம்)
 • பூமணி மருத்துவமனை (மகப்பேறு)
 • TMR மருத்துவமனை (பொது நலம்)
 • நாகமாணிக்கம் மருத்துவமனை (பொது நலம்)
 • அபிஷேக் மருத்துவமனை (பொது நலம்)
 • ABCD மருத்துவமனை (பொது நலம்)
 • பூமிநாதன் மருத்துவமனை (பொது நலம்)

நிதி நிறுவனங்கள்[தொகு]

நகரில் முன்னனி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் சிறந்த சேவையாற்றி வருகின்றன. எனவே மக்களின் பொருளாதார, தொழில் ரீதியான தேவைகள் பூர்த்தியாகின்றன. வங்கிகளின் விபரங்கள் பின்வருமாறு

 • பாரத ஸ்டேட் வங்கி ( SBI )
 • கனரா வங்கி ( CANARA BANK )
 • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ( IOB )
 • இந்தியன் வங்கி (INDIAN BANK)
 • டிடிசிசி வங்கி (TDCC BANK)
 • கரூர் வைஸ்யா வங்கி (KVB)
 • லக்ஷ்மி விலாஸ் வங்கி (LVB)
 • நகர கூட்டுறவு வங்கி (URBAN BANK)

இதைத் தவிர சில தனியார் நிதி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அவை

 • முத்தூட் பைனான்ஸ்
 • மணப்புரம் கோல்டு பைனான்ஸ்

போக்குவரத்து[தொகு]

பேருந்து போக்குவரத்து[தொகு]

சென்னை, திருச்சி, மணப்பாறை, துறையூர், முசிறி, கரூர், மதுரை , திண்டுக்கல் , பழனி, திருச்செந்தூர், தஞ்சாவூர், கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளது.

இரயில் போக்குவரத்து[தொகு]

குளித்தலை இரயில் நிலையமானது பேருந்து நிலையத்தின் மிக அருகாமையிலேயே உள்ளது. மேலும் பெங்களூரு, மைசூர் முதலிய கர்நாடக மாநிலத்திற்கும் திருவனந்தபுரம், கொச்சின் முதலிய கேரளா மாநிலத்தின் பகுதிகளுக்கும் இரயில் போக்குவரத்து சேவை கிடைக்கின்றது.

தொழில்கள்[தொகு]

காவிரி ஆறு இருப்பதால் விவசாயமே முதன்மைத் தொழிலாகும். நிறைந்த மண்வளமும் நீர்வளமும் இருப்பதால் வாழை, கரும்பு, நெல் மற்றும் வெற்றிலை என நன்செய் பயிர்கள் அலங்கரிக்கும். குறிப்பாக வாழையே இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. குளித்தலைக்கு மேற்கே லாலாப்பேட்டை என்ற ஊரிலிருந்து கிழக்கே நங்கவரம் வரையிலான பகுதிகளில் பயிரிடப்படும் பல்வேறு தரப்பட்ட வாழை ரகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களாகிய கேரளா, கர்நாடகாவிற்கும் ஏற்றுமதியாகிறது.

குளித்தலையின் கிழக்கே 8 கிலோமீட்டர் தொலைவில் பெட்டவாய்த்தலை என்னும் ஊரில் சர்க்கரை ஆலை உள்ளது. எனவே வாழைக்கு அடுத்தபடியாக கரும்புக்குத்தான் இங்கே முக்கியத்துவம். நெல் குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகிறது. காவிரியின் அக்கரையில் உள்ள மண்ணச்சநல்லூரில்தான் நெல் பிரசித்தம்.

விவசாயத்திற்கு அடுத்தபடியாக இப்பகுதியில் செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழில் பரவலாக உள்ளது. மேற்கே 20 கி.மீ தொலைவில் மாயனூர் என்னும் ஊரில் சில தொழிற்சாலைகள் உள்ளன. மற்றும் கரூர் நகரில் எண்ணற்ற தொழிற்சாலைகள் உள்ளன. இவையே குளித்தலைவாழ் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் தொழில் ஆதாரம்.

சிறப்புகள்[தொகு]

 • காவிரி ஆறு குடகு தொடங்கி பூம்புகார் வரையிலான தன் ஓடுபாதையில் இங்கு மட்டும்தான் அகண்ட காவிரியாக (1.5 கி.மீ) உள்ளது. எனவே தான் குளித்தலை நகரின் காவிரி காகம் கடக்கா காவிரி என அழைக்கப்படுகின்றது, குளித்தலை, முசிறி நகரங்களை இணைக்கும் தந்தை பெரியார் பாலம் தமிழகத்திலேயே ஒரு நதியின் குறுக்கே கட்டப்பட்ட மிக நீளமான பாலம் என்ற சிறப்பைப் பெற்றது. சரியாக 1450 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம், கடல் மீது கட்டப்பட்டிருக்கும் பாம்பன் பாலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தின் நீளமான பாலம் என்று கருதப்படுகிறது.[சான்று தேவை]
 • காலைக்கடம்பர், மதியம் சொக்கர் (அய்யர்மலை), அந்தி திருஈங்கோய்நாதர் (திருஈங்கோய்மலை)" என்று ஒரு சொற்றொடர் உண்டு. ஒரே நாளில் இந்த மூன்று சிவாலயங்களுக்கும் சென்று வருதல் சிறப்பு. திருஈங்கோய்மலை குளித்தலைக்கு வடக்கே 5 கி.மீ தொலைவிலும், அய்யர்மலை (ரத்தினகிரி) தெற்கே 10 கி.மீ தொலைவிலும் உள்ளது.
 • சுற்று வட்டாரப்பகுதியில் குளித்தலை கடம்பனேஸ்வரர் தைப்பூசத் திருவிழா மிகவும் விஷேசம். இப்புண்ணிய தலமானது ஏறத்தாழ 1500 ஆண்டுகள் பழமையான சிவ தலமாகும். இந்த சிவதலமானது வடக்கு நோக்கி அமைந்திருப்பது மற்றுமொரு அரிய சிறப்பாகும். குளித்தலையைச் சுற்றியுள்ள ஏழு ஊர்களின் சிவாலயங்களில் இருந்தும் அம்பாள் சமேத பெருமான் திருத்தேரில் அலங்கரிக்கப்பட்டு உற்சவமாக தைப்பூசத்தன்று கடம்பவனேஸ்வரர் கோயிலின் எதிரே உள்ள காவிரித்துறையில் கூடுவர். அம்பாள் உடனுறை கடம்பவன நாதரும் உற்சாகமாக அவர்களோடு உற்சவராக பங்கேற்பார். மறுநாள் திருஈங்கோய்நாதர் அம்பாளுக்கும், கடம்பவனேஸ்வரருக்கும் பெண் கேட்கும் படலம் நடக்கும். அப்போது அர்ச்சகர் ஒருவர் தும்மி விட, சகுனம் சரியில்லை. அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம் என்று கலைந்து விடுவர். இந்த இரண்டு நாட்களும் எட்டு ஊர் மக்களும் காவிரித்துறையில் கூட திருவிழா களைகட்டி இருக்கும்.

வரலாற்றில் குளித்தலை[தொகு]

 • கொங்கு நாட்டு எல்லைகள் பற்றி ஒரு தனிப்பாடல் ஒன்றில்
வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு
குடக்குப் பொருப்பு வெளிக்குன்று-கிடக்கும்
களித்தண் டலைமேவு காவிரிசூழ் நாட்டு
குளித்தண் டலையளவும் கொங்கு

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குளித்தண்டலை என்பது குளித்தலையைக் குறிப்பதாகும்.[சான்று தேவை]

 • கி.வா.ஜ என்று அழைக்கப்படும் பழம்பெரும் தமிழ் எழுத்தாளரும், தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் மாணவருமான கி.வா.ஜகந்நாதன் போன்றோர் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தனர்.
 • ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, கடம்பர் கோவில் பாடல் பெற்ற ஸ்த்லமாகும். , தேவாரத்தில் திருநாவுக்கரசர் இக்கோயில் பற்றி சில பாடல்கள் பாடியுள்ளார். அவற்றில் ஒன்று:
நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்
பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார்
காலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறை
மேலா னாஞ்செய்த வல்லினை வீடுமே.
 • ஐந்து முறை தமிழக முதல்வரும், பத்து முறை சட்டமன்ற உறுப்பினருமான திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி முதல்முறையாக குளித்தலை தொகுதியில் தான் தனது அரசியல் பயணத்தைத் துவக்கினார். 1957ல் திமுக வெறும் 13 இடங்களையே கைப்பற்றியது. அதில் கருணாநிதியின் குளித்தலையும் ஒன்று.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,152 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். குளித்தலை மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குளித்தலை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. Falling Rain Genomics, Inc - Kulittalai
 5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளித்தலை&oldid=2551437" இருந்து மீள்விக்கப்பட்டது