சீர்காழி
சீர்காழி | |||||||
— - இரண்டாம் நிலை நகராட்சி - — | |||||||
அமைவிடம்: சீர்காழி, தமிழ்நாடு
| |||||||
ஆள்கூறு | 11°14′N 79°44′E / 11.23°N 79.73°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
பகுதி | சோழ நாடு | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | மயிலாடுதுறை | ||||||
வட்டம் | சீர்காழி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | ஏ.பி .மகாபாரதி, இ. ஆ. ப | ||||||
நகராட்சி தலைவர் | துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் | ||||||
மக்களவைத் தொகுதி | சீர்காழி | ||||||
சட்டமன்றத் தொகுதி | சீர்காழி | ||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
32,228 (2001[update]) • 2,440/km2 (6,320/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 13.21 சதுர கிலோமீட்டர்கள் (5.10 sq mi) | ||||||
குறியீடுகள்
|
சீர்காழி (Sirkali) தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். சீர்காழி நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. [3] நகராட்சியான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆறும், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது. சீர்காழி நகரின் நடுவே புகழ்பெற்ற திருஞானசம்பந்தர் சன்னதி அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் சட்டைநாதர் ஆவார்
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 32,228 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 16,196 ஆண்கள், 16,032 பெண்கள் ஆவார்கள். சீர்காழி மக்களின் சராசரி கல்வியறிவு 84.98% ஆகும். சீர்காழி மக்கள் தொகையில் 13.39% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[4]
இங்கு ஆதி திராவிடர் (பறையர்) சமூகத்தை சேர்ந்த மக்கள் பரவலாக வாழுகின்றனர். படையாட்சிகள் (வன்னியர்), நாயுடுகள், பிள்ளைமார்கள் என்று வாழ்கின்றனர். பல தலைமுறைகளாக இங்கு கிறித்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்குப் பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.
திருக்கோயில்கள்
[தொகு]இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள்ளன. அவற்றில் சில, சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில் சீர்காழி, செங்கமேடு, திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் புள்ளிருக்கு வேளூர் எனும் வைத்தீசுவரன்கோவில், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில், திருக்கோலக்கா, திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில், வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில், திருக்கடையூர், திருவெண்காடு, திருமணஞ்சேரி மற்றும் திருவாழி – திருநகரி விண்ணவர் கோவில்கள் எனப் பல புகழ்மிகு கோவில்கள் அமைந்துள்ளன.
உண்மையான பெயர்
[தொகு]ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் "ஸ்ரீ காழி நகரம்' அதுவே தமிழில், "சீகாழி' என்றானது. சீ= மிகவும் உயர்ந்தது. இப்போது இவ்வூரை "சீர்காழி' என்று தவறாக அழைக்கின்றனர். ஆனாலும் விவரமறிந்த சைவப் பெரியோர்கள், "காழி நகரம்" என்றோ, "சீகாழி' என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் சீர்காழி நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
திருஞானசம்பந்தர்
[தொகு]இந்தச் சீகாழியில், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையாரின் தெய்வக் குழந்தையாகத் தோன்றியவர் திருஞானசம்பந்தர் ஆவார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த சமயம், தன் தந்தையுடன் சிர்காழி சட்டை நாத சுவாமி ஆலய குளத்தில் நீராடச் சென்றார். சம்பந்தர் சிறு குழந்தையாதலால் அவரைக் கரையில் அமர்த்திவிட்டு சிவபாத இருதயர், குளத்தில் ஆழ மூழ்கி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர், தந்தையைக் காணாமல் திகைத்தார். முற்பிறவி நல்வினைகளால் பார்வதியையும் பரமேசுவரனையும் அம்மையப்பராக உணர்ந்து, "அம்மே அப்பா' என்று அழுதார்.
இதைக் கண்ட இறைவன், "கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க என்று தேவிக்குக் கட்டளையிட்டார். அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவ ஞானம் பெற்று திருஞானசம்பந்தரானது.
வாயில் பால் வழிந்த நிலையில் நின்ற சம்பந்தரைக் கண்ட அவரது தந்தையார், "பால் கொடுத்தது யார்? என்று கோபத்துடன் கேட்டு, கோலெடுத்து அதட்டினார். அப்போது சம்பந்தர் "தோடுடைய செவியன்' என்னும் திருப்பதிகம் பாடியருளி, சிவ-பார்வதியே இந்த அருளைச் செய்தனர் என்று தனது தந்தைக்கு உணர்த்தினார்.
அதன்பின் திருஞான சம்பந்தர் சைவ சமயம் தழைக்க, பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று திருப்பதிகங்கள் பாடினார். தனது பதினாறாவது வயதில், நல்லூர்ப்பெருமணம் எனும் ஆச்சாள்புரத்தில், தன்னுடைய திருமணத்தை முடித்து அன்பர்கள் கூட்டத்துடன் தானும் சிவ ஜோதியில் கலந்தார்.
இப்படிச் சைவம் தழைக்கத் தோன்றி, அயராது பாடுபட்டு வெற்றி பெற்ற ஞானசம்பந்தரின் பிறந்த தலமென்ற பெருமையே சீகாழிக்குப் போதுமானது.
புராண வரலாறு
[தொகு]ஏழு தீவுகள் அடங்கிய இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்ப்பத்தில் கடல் பொங்கி அழித்தது. அப்போது சீகாழி திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து அழியாதிருந்தது. இதனால் இவ்வூர் "தோணிபுரம்' என்றும் போற்றப்படுகிறது.
மகாவிஷ்ணு மாவலி மன்னனின் வேண்டுகோளின்படி தனது மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து பாதாள உலகில் செலுத்தினார். பின்னர், அகங்காரம் ஏற்பட்டு பூமியை நடுங்கச் செய்தார். இதையறிந்த சிவாம்சமான வடுக பைரவர், தமது திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பில் அடித்து பூமியில் வீழ்த்தினார். இதையறிந்த மகாலட்சுமி மாங்கல்ய பிச்சை கேட்க, மகாவிஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்தார் பரமேசுவரன். பின்னர் திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவன் அவரது எலும்பைக் கதையாகக் கொண்டும், தோலைச் சட்டையாகப் போர்த்தியும் காட்சி தந்தார். இதனால் சீகாழி பைரவருக்கு "சட்டை நாதர்' என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
தலப் பெயர்கள்
[தொகு]காவிரியின் வடகரைத் தலங்களுள் சீகாழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இதனைக் "கழுமல வள நகர்' என்றும் குறிப்பிடுவர். பிரமன் தன் தொழில் தடையின்றி நடைபெற வழிபட்டதால் "பிரம்ம புரம்' என்றும், மூங்கில் வடிவமாக இறைவன் தோன்றி இந்திரனுக்கு அருள் செய்ததால் "வேணுபுரம்' என்றும், சூரனுக்கு பயந்த தேவர்கள் புகலிடமாகப் பூசித்ததால், "புகலி' என்றும், வியாழன் பூசித்ததால் "வெங்குரு' என்றும், பிரளய காலத்தில் தோணியாய் மிதந்ததால் "தோணிபுரம்' என்றும், ராகு பூசித்ததால் "சிரபுரம்' என்றும், வராக மூர்த்தி பூசித்ததால் "பூந்தராய்' என்றும், சிபிச் சக்கரவர்த்தி பேறு பெற்றதால் "புறவம்' என்றும், கண்ணன் பூஜித்ததால் "சண்பை' என்றும், பத்திரகாளி, காளிங்கன், பாம்பு பூஜித்ததால் "ஸ்ரீகாளிபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
கல்வெட்டுகள்
[தொகு]இவ்வாலயத்தில் 47 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், வீர ராஜேந்திரன், ராஜாதிராஜ தேவர், கோப்பெருஞ் சிங்கன், பரகேசரி வர்மன், கிருஷ்ண தேவராயர் எனப் பல்வேறு மன்னர்களின் கல்வெட்டுகள் இங்குள்ளன.
ஆலய அமைப்பு
[தொகு]சீகாழி நகரின் மையப் பகுதியில், நான்கு புறமும் கோபுரங்களுடன், உயர்ந்த திருச்சுற்று மதில்களுடனும் இவ்வாலயம் விளங்குகிறது. இறைவன் பிரம்மபுரீசுவரருக்கும், இறைவி திருநிலை நாயகிக்கும், திருஞானசம்பந்தருக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. வடக்கு உட்பிரகாரத்தில் முத்துச் சட்டை நாதர் அருள் பாலிக்கின்றார். தெற்கு உட்பிரகாரத்தில் அறுபத்து மூவர் காட்சியைக் காணலாம். இங்கு சட்டை நாதர் பலிபீடமும் அமைந்துள்ளது.
மேல் பிரகாரத்தில், கருவறை விமானமேறிச் சென்று தரிசிக்கப் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. விமானத்தில் பெரிய உருவத்தில் உமா மகேசுவரர், தோணியப்பராகக் காட்சி தருகின்றார். இவரையடுத்து மேல்புறத்தில் சட்டை நாதர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் திருப்பெயராலேயே இத்திருத்தலம் அழைக்கப்படுகின்றது. ஆலய வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் திருஞானசம்பந்தர் திருக்கோயிலும், அதனருகே திருநிலைநாயகி திருக்கோயிலும் அமைந்துள்ளன. அதன் அருகே பெரிய அளவில் பிரம்ம தீர்த்தம், நாற்புறமும் கருங்கல் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது.
இறைவன்
[தொகு]இவ்வாலயத்தில் குரு மூர்த்தம், லிங்க மூர்த்தம், சங்கம மூர்த்தம் என மூன்று வகையான மூர்த்தங்களும் ஒருங்கே அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும். மலைமீது பெரிய நாயகி சமேத பெரிய நாயகராகக் காட்சி தரும் தோணியப்பரே குரு மூர்த்தமாவார். இவரே திருஞானசம்பந்தருக்கு ஞானோபதேசம் செய்த குரு ஆவார்.
இத்தலத்தின் மூலவராக விளங்கும் பிரம்மபுரீஸ்வரரே லிங்க மூர்த்தமாகும். இவர் பிரம்மனால் பூஜிக்கப்பட்டவர்.
விமானத்தின் உச்சியில் ஆணவ மாயையால் உலகைக் கலக்கிய திருமாலின் உடலைப் பிளந்து, அவருடைய எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் கொண்டு, "சட்டை நாதர்' என்ற திருநாமத்தோடு தனிச் சிறப்புடன் பைரவர் விளங்குகிறார்.
தீர்த்தங்கள்
[தொகு]இவ்வாலயத்தில் பிரம்ம தீர்த்தம், காளி தீர்த்தம், கழுமல தீர்த்தம், விநாயக நதி என இருபத்திரண்டு தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஞானசம்பந்தருக்கு அன்னை ஞானப்பால் ஊட்டிய இடமான பிரம்ம தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
விழாக்கள்
[தொகு]இவ்வாலயத்தில் நாள்தோறும் ஆறு காலப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இதில் இரண்டாம் திருவிழா, திருமுலைப்பால் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. திருநிலை நாயகிக்கு ஆடிப்பூர உற்சவமும், நவராத்திரி உற்சவமும் நடைபெறுகின்றன. சட்டை நாதருக்கு வெள்ளிக் கிழமைதோறும் நள்ளிரவில் நடைபெறும் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவருக்கு புனுகுச் சட்டம் சார்த்தி வடை, பாயசம் படைக்கப்படுகிறது.
நிர்வாகம்
[தொகு]இவ்வாலயம் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.சீகாழி சட்டைநாத சுவாமி ஆலயம் வருவோர்க்கு மிகப் பெரிய வாய்ப்பு ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருஞான சம்பந்தர் அவதரித்த இல்லத்தைத் தரிசிப்பது (இது காஞ்சி சங்கர மடத்தின் பராமரிப்பில் உள்ளது). ஞானசம்பந்தருக்குப் பொன்தாளம் வழங்கிய "திருக்கோலக்கா' என்னும் தலமும் அருகில் இருக்கின்றது.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ LocalBodies of MAYILADUTHURAI DISTRICT
- ↑ சீர்காழி நகரத்த்தின் மக்கள்தொகை பரம்பல்