நியூசிலாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நியூசிலாந்து
New Zealand
Aotearoa
நியூசிலாந்தின் கொடி நியூசிலாந்தின் சின்னம்
நாட்டுப்பண்
"நியூசிலாந்தை கடவுள் காப்பாராக"
"அரசியைக் கடவுள் காபபராக"
Location of நியூசிலாந்தின்
தலைநகரம் வெலிங்டன்
41°17′S 174°27′E / 41.283°S 174.450°E / -41.283; 174.450
பெரிய நகரம் ஓக்லாந்து
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம் (98%)
மாவோரி (4.2%)3
சமிக்கை மொழி (0.6%)
தேசிய இனங்கள் 
மக்கள் நியூசிலாந்தர், கிவி
அரசு நாடாளுமன்ற மக்களாட்சி, அரசியல் முடியாட்சி
 -  அரசுத் தலைவர் இரண்டாம் எலிசபேத்
 -  ஆளுநர் ஜெரி மட்டபரே
 -  பிரதமர் ஜோன் கீ
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 
 -  தன்னாட்சி செப்டம்பர் 26, 1907 
 -  வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் டிசம்பர் 11, 1931 
 -  அரசியல் சட்டம் 1986 டிசம்பர் 13, 1986 
பரப்பளவு
 -  மொத்தம் 268680 கிமீ² (75வது)
103738 சது. மை 
 -  நீர் (%) 2.1
மக்கள்தொகை
 -  டிசம்பர் 2007 மதிப்பீடு 4,252,000 (122வது (2007))
 -  2006 குடிமதிப்பு 4,143,279 
 -  அடர்த்தி 15/கிமீ² (204வது)
39/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2008 IMF கணிப்பீடு
 -  மொத்தம் $117.696 பில்லியன் (58வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $27,785 (28வது)
மொ.தே.உ(பொதுவாக) 2008 IMF மதிப்பீடு
 -  மொத்தம்l $128.071 பில்லியன் (53வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $30,234 (27வது)
ஜினி சுட்டெண்? (1997) 36.2 (மத்தி
ம.வ.சு (2007) Green Arrow Up Darker.svg 0.943 (உயர்) (19வது)
நாணயம் நியூசிலாந்து டொலர் (NZD)
நேர வலயம் NZST (ஒ.ச.நே.+12)
 -  கோடை (ப.சே.நே.) NZDT (ஒ.ச.நே.+13)
(செப் முதல் ஏப்ரல் வரை)
இணைய குறி .nz
தொலைபேசி +64

நியூசிலாந்து (New Zealand) பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது வடக்குத் தீவு, மற்றும் தெற்குத் தீவு ஆகிய இரண்டு முக்கியமான நிலப்பகுதிகளையும், சதாம் தீவுகள் போன்ற பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. நியூசிலாந்தின் மாவோரி மொழிப் பெயர் ஆவோதேயாரோவா (Aotearoa) என்பதாகும். நீளமான வெண்ணிற முகில் நிலம் என்பது இதன் பொருள். குக் தீவுகள், நியுவே, தொக்கேலாவு என்பனவும் நியூசிலாந்தின் ஆட்சிக்குள் அடங்கியுள்ளன. புவியியல் அடிப்படையில் நியூசிலாந்து மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்து தாஸ்மான் கடலுக்குக் குறுக்காக ஆஸ்திரேலியா நாட்டுக்கு கிழக்கே 1,500 கிலோமீட்டர்களுக்கு (900 மைல்கள்) அப்பாலும், வடக்கே இதன் அண்மையிலுள்ளவை நியூ கலிடோனியா, பிஜி, தொங்கா ஆகிய பசிபிக் தீவுகளுக்குத் தெற்கே ஏறத்தாழ 1000 கிமீ தூரத்துக்கப்பாலும் அமைந்துள்ளது. மனிதர் கடைசியாகக் குடியேறிய நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இதன் நீண்டகாலத் தனிமையின் காரணமாக, நியூசிலாந்தில், பறவைகளை முக்கியமாகக் கொண்ட தனித்துவமான விலங்கினங்கள், மற்றும் பூஞ்சைத் தாவரங்களும் வளர்ச்சியடைந்துள்ளன. இவற்றுட் பல மனிதர்களும் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பாலூட்டிகளும் நாட்டுக்குள் வந்தபின்னர் அழிந்துவிட்டன. நியூசிலாந்தின் மாறுபட்ட இட அமைப்பியல் மற்றும் கூர்மையான மலை உச்சிகள் காரணமாக நிலங்களின் கண்டத்தட்டுப் பெயர்வு, மற்றும் எரிமலைக் குமுறல்கள் இங்கு அடிக்கடி இடம்பெறுகின்றன. நியூசிலாந்தின் தலைநகரம் வெலிங்டன் ஆகும். ஆக்லாந்து மக்கள் அதிகமாக வாழும் நகரமாகும்.

கிபி 1250-1300 களில் பொலினீசியர்கள் நியூசிலாந்தில் குடியேறி தனித்துவமான மாவோரி கலாசாரத்தைப் பேணி வந்தனர். 1642 ஆம் ஆண்டில் ஏபெல் டாஸ்மான் என்ற டச்சு நாடுகாண் பயணியே முதன் முதலாக நியூசிலாந்தைக் கண்ட ஐரோப்பியர் ஆவார்.[2] 1840 இல் பிரித்தானிய அரசும் மவோரியரும் வைத்தாங்கு உடன்பாட்டை ஏற்படுத்தி சியூசிலாந்தை பிரித்தானியக் குடியேற்ற நாடாக்கினர். இன்றுள்ள 4.5 மில்லியன் மக்களில் பெரும்பான்மையானோர் ஐரோப்பிய வம்சாவழியினர் ஆவர். தாயக மாவோரி இனத்தவர் மிகப்பெரிய சிறுபான்மையினர். இவர்களுக்கு அடுத்ததாக ஆசியரும், பசிபிக் தீவு மக்களும் வாழ்கின்றனர். இதனால் நியூசிலாந்தின் கலாச்சாரம் முக்கியமாக மாவோரி மற்றும் ஆரம்பக் கால ஐரோப்பிய கலாசாரங்களை மையப்படுத்தி உள்ளது. அண்மைக் காலத்தில் உலகின் வேறு பகுதிகளில் இருந்து இங்கு குடியேற்றம் ஆரம்பமாகியாதில் இருந்து பல்கலாச்சாரம் பரவி வருகிறது.

ஐக்கிய இராச்சியத்தின் அரசி என்ற வகையில் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்தே நியூசிலாந்தின் நாட்டுத் தலைவராக உள்ளார். இவரது சார்பில் ஆளுனர் ஒருவர் நியூசிலாந்தில் உள்ளார். அரசிக்கு நடைமுறையில் எவ்வித அரசியல் அதிகாரமும் கிடையாது. நாட்டின் அரசியல் அதிகாரம் மக்களாட்சி முறையில் தேர்வு செய்யப்படும் ஓரவையைக் கொண்ட நாடாளுமன்றத்திடமே உள்ளது. இதன் தலைவரான பிரதம அமைச்சரே அரசின் தலைவராக உள்ளார். திறந்த பொருளாதார அமைப்பைக் கொண்ட நியூசிலாந்தின் பொருளாதாரம் உலகில் கூடிய அளவு கட்டற்ற சந்தை முறையைக் கொண்ட முதலாளித்துவ பொருளாதாரங்களில் ஒன்று. நாடாளுமன்றத்தை விட நியூசிலாந்தில் 78 உள்ளூராட்சி அமைப்புகள் உள்ளன. அத்துடன் நியூசிலாந்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் டோக்கெலாவ் (சார்பு மண்டலம்); குக் தீவுகள் மற்றும் நியுவே (சுயாட்சி அமைப்புடைய மாநிலங்கள்) ஆகியனவும், அன்டார்க்டிக்காவில் உள்ள ரொஸ் சார்பு மண்டலமும் உள்ளன. நியூசிலாந்து ஐக்கிய நாடுகள் அவை, பொதுநலவாய நாடுகள், அன்சஸ், பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு, பசிபிக் தீவுகளின் ஒன்றியம், ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளில் உறுப்பு நாடாக உள்ளது.

சொற்பிறப்பு[தொகு]

நியூசிலாந்தின் மேற்குக் கரைகளைக் காட்டும் 1657 ஆம் ஆண்டு நிலவரை.

டச்சு நாடுகாண்பயணி ஏபெல் டாஸ்மான் 1642 ஆம் ஆண்டில் நியூசிலாந்தைக் கண்டு அதற்கு Staten Landt எனப் பெயரிட்டார். தென்னமெரிக்காவின் தென்முனையில் இதே பெயரைக்கொண்ட நிலப்பகுதி இதனை இணைப்பதாக அவர் கருதினார்.[3] 1645 இல் டச்சு நிலப்படவரைவாளர்கள் டச்சு மாகாணமான சீலாந்து (Zeeland) என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு இந்நிலத்துக்கு நோவா சீலாந்தியா (Nova Zeelandia) எனப் பெயரிட்டனர்.[4][5] பிரித்தானியக் கப்டன் ஜேம்ஸ் குக் இதே பெயரை ஆங்கிலப்படுத்தி நியூ சீலாண்ட் (New Zealand) என அழைத்தார்.

ஆவோதேயாரோவா (Aotearoa, "நீண்ட வெணிற முகிலின் நிலம்" எனப் பொருள்) என்பது நியூசிலாந்தின் தற்போதைய மாவோரி மொழிப் பெயராகும். ஐரோப்பியர்கள் குடியேறுவதற்கு முன்னர் முழு நாட்டுக்கும் இதே மாவோரி பெயர் இருந்ததா என்பது அறியப்படவில்லை, ஆனாலும் ஆரம்பத்தில் வடக்குத் தீவு மட்டுமே ஆவோதேயாரோவா என அழைக்கப்பட்டு வந்தது.[6] இரு முக்கிய தீவுகளும் மவோரி மொழியில் பாரம்பரியமாகப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. வடக்குத் தீவு தே இகா-ஆ-மாவுய் (மாவுயின் மீன்), என்றும் தெற்குத் தீவு தே வைப்பவுனாமு (பச்சைக்கல்லின் நீர்நிலைகள்) எனவும் மவோரி மொழியில் அழைக்கப்படுகின்றன.[7] ஆரம்பகால ஐரோப்பிய நிலவரைகள் இத்தீவுகளை வடக்கு (வடக்குத் தீவு), நடு (தெற்குத் தீவு), மற்றும் தெற்கு (ஸ்டூவர்ட் தீவு) எனக் குறிப்பிட்டன.[8] 1830 இல், வடக்கு, தெற்கை மிகப்பெரிய இரண்டு தீவுகளாக வேறுபடுத்தி நிலவரைகள் வரையப்பட்டன. 1907 வாக்கில் இது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.[9] 2013 ஆம் ஆண்டில் இவ்விரண்டு தீவுகளுக்கு வடக்குத் தீவு (தே இகா-ஆ-மாவுய்), தெற்குத் தீவு (தே வைப்பவுனாமு) என முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது.[10] இரு பெயர்களில் ஏதாவது ஒன்றையோ, அல்லது இரண்டையுமோ அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தலாம்.

வரலாறு[தொகு]

நியூசிலாந்து மிகவும் அண்மைக்காலத்தில் குடியேற்றம் நிகழ்ந்த மிகப்பெரிய நிலப்பகுதிகளுள் ஒன்று. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு, காடழிப்புக்கான ஆதாரங்கள்[11] மற்றும் மாவோரி மக்களிடையே காணப்படும் இழைமணிகளின் டிஎன்ஏ மாறுபாடுகள்[12] போன்றவை கிழக்குப் பொலினீசியர்கள் 1250 - 1300 ஆம் ஆண்டுகளில் தெற்குப் பசிபிக் தீவுகளில் இருந்து தொடர்ச்சியான பல புலப்பெயர்வுகளின் இறுதியில்[13] நியூசிலாந்தில் முதன்முதலில் குடியேறியவர்கள் என்பதைக் காட்டுகின்றன.[7][14] இதற்குப் பிந்திய சில நூற்றாண்டுகளில் இவர்கள் தனித்துவமான பண்பாட்டைக் கொண்ட மாவோரி என்னும் இனத்தவராக வளர்ச்சியடைந்தனர். "ஐவி" (iwi) என்ற இனக்குழுவாகவும், "ஹாப்பூ" (hapū) என்ற துணை இனக்குழுவாகவும் பிரிந்துள்ளனர். இவர்கள் சில சமயங்களில் கூட்டுறவுடனும், சிலவேளைகளில் போட்டியிட்டும், சண்டை செய்து கொண்டும் வாழ்ந்துள்ளனர். ஒரு காலகட்டத்தில் மாவோரி இனத்தின் ஒரு பிரிவினர் நியூசிலாந்தில் இருந்து 680 கிமீ தென்கிழக்கேயுள்ள சதாம் தீவுகளுக்கும் குடிபெயர்ந்துள்ளனர். அத்தீவுகளுக்கு அவர்கள் ரெக்கோகு (Rēkohu) என்ற பெயரையும் சூட்டினர். அங்கே இவர்கள் தனித்துவமான மொரியோரி பண்பாடு ஒன்றை உருவாக்கினர்.[15][16] 1830களில் தரனாக்கி மாவோரி ஆக்கிரமிப்பு மற்றும் அடிமைப்படுத்தலாலும், ஐரோப்பிய நோய்களின் தாக்கங்களினாலும் 1835 - 1862 காலப்பகுதியில் மோரியோரி இனம் பெரும் அழிவைச் சந்தித்தது. 1862 இல் 101 மோரியோரிகளே எஞ்சியிருந்தனர். கடைசி மொரியோரி இனத்தவர் 1933 ஆம் ஆண்டில் இறந்தார்.[17]

நியூசிலாந்தை அடைந்த முதல் ஐரோப்பியர் 1642 இல் தரையிறங்கிய டச்சு மாலுமி ஏபல் தாசுமன் மற்றும் அவரது குழுவினரும் ஆவர்.[18] மாவோரிகளுடன் இடம்பெற்ற சண்டையில் தாசுமனின் மாலுமிகள் நால்வர் கொல்லப்பட்டனர். குறைந்தது ஒரு மாவோரி இனத்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.[19] பின்னர் 1769 இல் பிரித்தானிய மாலுமி ஜேம்ஸ் குக் கரையோரப் பகுதி முழுவதையும் சுற்றி வந்த போதே ஐரோப்பியர்கள் இரண்டாவது தடவையாக இங்கு வந்தனர்.[18] குக்கைத் தொடர்ந்து ஐரோப்பிய, வட அமெரிக்க திமிங்கில வேட்டையாளர்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் இங்கு வந்து போயின. அவர்கள் உணவு, உலோகக் கருவிகள், ஆயுதங்கள் போன்றவற்றை மரம், கைவண்ணப் பொருட்கள், நீர் போன்றவற்றுக்காகப் பண்டமாற்றம் செய்தனர்.[20] உருளைக்கிழங்கு, மற்றும் துப்பாக்கிகளின் அறிமுகம் மாவோரிகளின் வேளாண்மை, மற்றும் போர்முறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.[21] 1801 முதல் 1840 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் உள்ளூர் மாவோரிகளிடையே 600 இற்கும் அதிகமான போர்கள் இடம்பெற்றன. 30,000 முதல் 40,000 வரையான மாவோரிகள் கொல்லப்பட்டனர்.[22] 19ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல், கிறித்தவ சமயப் பரப்பாளர்கள் நியூசிலாந்தில் குடியேற ஆரம்பித்தனர். இறுதியில் மாவோரி இனத்தவரின் பெரும்பாலானோர் மதம் மாறினர்.[23] 19ம் நூற்றாண்டில் மாவோரி இனத்தவரின் மகக்ள்தொகை 40% ஆகக் குறைந்தது. ஐரோப்பியர்களால் கொண்டுவரப்பட்ட நோய்களே இவர்களில் பெரும்பான்மையோரை அழித்தது.[24]

வைத்தாங்கி உடன்பாட்டின் ஒரு பகுதி

1788 இல் ஆர்தர் பிலிப் நியூ சவுத் வேல்ஸ் (இன்றைய ஆத்திரேலியாவின் ஒரு மாநிலம்) ஆளுனராகப் பதவியேற்ற போது நியூசிலாந்தை நியூ சவுத் வேன்சின் ஒரு பகுதியாக அறிவித்தார். 1832 இல் ஜேம்ஸ் பஸ்பி என்பவர் நியூசிலாந்தின் பிரித்தானிய அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.[25] 1835 இல், சார்ல்சு டி தியேரி என்பவர் பிரெஞ்சுக் குடியேற்றத்தை ஆரம்பிக்கவிருப்பதாக அச்சுறுத்திய போது, நியூசிலாந்தின் ஐக்கியப் பழங்குடியினர் என்ற அமைப்பு நியூசிலாந்தின் விடுதலையை அறிவித்து தமக்குப் பாதுகாப்பு வழங்குமாறு ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் மன்னரைக் கேட்டுக் கொண்டது.[25] இதனால் எழுந்த குழப்பநிலையை அடுத்து பிரித்தானிய அரசு நாட்டை தமது வசப்படுத்துவதற்காகவும் மாவோரி மக்களுடன் உடன்பாடு ஒன்றை ஏற்படுத்தவும் வில்லியம் ஹோப்சன் என்ற கேப்டனை நியூசிலாந்துக்கு அனுப்பியது.[26] 1840 பெப்ரவரி 6 இல் வைத்தாங்கி ஒப்பந்தம் பே ஒஃப் ஐலன்ட்சு (Bay of Islands) என்ற இடத்தில் கையெழுத்திடப்பட்டது.[27] நியூசிலாந்து கம்பனி என்ற நிறுவனம் வெலிங்டனில் சுயாதீனமான ஒரு குடியேற்றத் திட்டத்தை அமைக்கவிருப்பதாக அறிவித்ததை அடுத்தும்,[28], பிரெஞ்சுக் குடியேறிகள் அக்கரோவா என்ற பகுதியில் நிலம் ஒன்றைக் கொள்வனவு செய்ய முயற்சித்ததைத் தடுக்கவும்,[29] வில்லியம் ஹொப்சன் 1840 மே 21 இல் நியூசிலாந்து முழுவதையும் பிரித்தானியாவுக்கு சொந்தம் என அறிவித்தார்.[30] வைத்தாங்கி உடன்பாடு ஏற்படுத்தப்பட்டதை அடுத்து, குறிப்பாக ஐக்கிய இராச்சியத்தில் இருந்து, குடியேற்றங்கள் மிக விரைவாக அதிகரித்தன.[31]

நியூசிலாந்து ஆரம்பத்தில் நியூ சவுத் வேல்சின் ஒரு குடியேற்றப் பகுதியாக இருந்து, பின்னர் 1841 சூலை 1 இல் தனியான பிரித்தானியக் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.[32] 1852 இல் இங்கு பிரதிநிதித்துவ அரசு பதவியேற்று 1854 ஆம் ஆண்டில் முதலாவது நாடாளுமன்றம் கூடியது..[33] 1856 இல் உள்நாட்டு விவகாரங்களுக்கான சுயாட்சி உரிமை நியூசிலாந்துக்குக் கிடைத்தது.[33] தெற்குத் தீவு சுயாட்சி உரிமை கோருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்பட்டமையால், நியூசிலாந்தின் அன்றைய பிரதமர் ஆல்பிரட் டோமெட் ஆக்லாந்தில் அமைந்திருந்த தலைநகரை தெற்குத் தீவுக்கு மாற்ற முடிவு செய்தார்.[34] வெலிங்டன் நகரம் துறைமுகம், மற்றும் தெற்கு, வடக்குத் தீவுகளின் நடுவில் அமைந்திருந்ததால் இந்நகரம் தலைநகராகத் தெரிவு செய்யப்பட்டது. 1865 ஆம் ஆண்டில் வெலிங்டனில் முதன் முறையாக நாடாளுமன்றம் கூடியது. குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, நிலம் தொடர்பான சர்ச்சைகளினால் 1860கள், 70களில் அங்கு போர் இடம்பெற்றது. மாவோரிகளின் பெரும் எணிக்கையானல் இதனால் பறி போனது.[35] 1893 இல் பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றது.[36]

1907 ஆம் ஆண்டில் நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் வேண்டுகோளின் படி, ஐக்கிய இராச்சியத்தின் ஏழாம் எட்வர்ட் மன்னர் நியூசிலாந்தை பிரித்தானியப் பேரரசின் கீழ் மேலாட்சி அரசு முறையை அறிவித்தார். 1947 ஆம் ஆண்டில் நியூசிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் இயற்றுச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு, நியூசிலாந்து மக்களின் ஒப்புதல் இன்றி பிரித்தானிய நாடாளுமன்றம் அந்நாடு தொடர்பாக எவ்வித தீர்மானமும் எடுக்க முடியாது எனத் தீர்மானிக்கப்பட்டது.[33] நியூசிலாந்து பிரித்தானியப் பேரரசுடன் இணைந்து முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் போரிட்டு,[37] பெரும் பொருளியல் வீழ்ச்சியில் வீழ்ந்து துன்புற்றது.[38] இதனால் அடுத்து வந்த தேர்தலில் தொழிற் கட்சி அரசு பதவிக்கு வந்து பாதுகாப்புவாத பொருளாதாரத்திட்டத்தை முன்னெடுத்தது.[39] இரண்டாம் உலகப்போரின் பின்னர் நியூசிலாந்தின் வளம் பெரிதும் உயர்ந்தது.[40] மாவோரி மக்கள் வேலை தேடி தமது பாரம்பரிய கிராமப் பகுதிகளை விட்டு நகரங்களுக்குக் குடி பெயரத் தொடங்கினர்.[41] மாவோரி எதிர்ப்பியக்கம் உருவாகி, ஐரோப்பிய மையவாதத்தை விமரிசித்தது, மாவோரி கலாச்சாரத்துக்கு அதிக அங்கீகாரம், வைத்தாங்கி ஒப்பந்தத்தை சரிவர நடைமுறைப் படுத்தல் போன்றவற்றுக்க்காகக் குரல் கொடுத்தது.[42] 1975 ஆம் ஆண்டில், ஒப்பந்தம் மீறப்படுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக 1975 ஆம் ஆண்டில் வைத்தாங்கி தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட்டு பெரும்பான்மையான மாவோரிகளுக்கு வரலாற்று ரீதியாக மேற்கொள்ளப்பட்ட குறைபாடுகளுக்கு தீர்வு கண்டது.[27]

புவியியல்[தொகு]

நியூசிலாந்து
ஆவோராக்கி/குக் மலை நியூசிலாந்தின் மிக உயரமான மலை

ஒரு தீவுக் கூட்டமான நியூசிலாந்து 268,680 சதுர கிலோ மீட்டர்கள் (103,738 சதுர மைல்கள்) பரப்பளவு கொண்டது. இதில் பெரும்பகுதி, வடக்குத் தீவு, தெற்குத் தீவு எனப்படும் இரண்டு பெரிய தீவுகளுக்கு உரியது. குறைந்த அளவு அகலமாக 22 கிலோமீட்டரைக் கொண்ட குக் நீரிணை வடக்கு, தெற்குத் தீவுகளைப் பிரிக்கிறது.[43] நியூசிலாந்து பரப்பளவு அடிப்படையில் சப்பான், இத்தாலி ஆகிய நாடுகளைவிடச் சற்றுச் சிறியதாகவும், ஐக்கிய இராச்சியத்தை விடச் சற்றுப் பெரிதாகவும் உள்ளது. இதன் வடக்கு-வடகிழக்கு அச்சில் இந்நாடு 1,600 கிமீ (1,000 மைல்கள்) நீளம் கொண்டது. இதன் கரைப் பகுதிகளின் மொத்த நீளம் 15,134 கிமீ (9,404 மைல்) ஆகும். வடக்குத், தெற்குத் தீவுகளை விட, மனிதர் வாழும் சிறிய தீவுகளில் முக்கியமானவை: ஸ்டுவர்ட் தீவு, சதாம் தீவுகள், அவுராக்கி குடாவில் அமைந்துள்ள கிரேட் பேரியர் தீவு, டி'ஊர்வில் தீவு[44] மற்றும் ஆக்லாந்தில் இருந்து 22 கிமீ தொலைவில் உள்ள வைகீக்கி தீவு ஆகியவை ஆகும். நியூசிலாந்து பெருமளவு கடல் வளங்களைக் கொண்டது. தனது நிலப்பரப்பிலும் 15 மடங்கு பெரிதான நான்கு மில்லியன் சதுர கிலோ மீட்டர் (1.5 மில்லியன் சதுர மைல்) பரப்பளவு கொண்ட, உலகின் ஏழாவது பெரிய தனிப் பொருளாதார வலயம் இந் நாட்டில் உள்ளது.

நியூசிலாந்தில் உள்ள மிகப்பெரிய நிலப்பகுதி தெற்குத் தீவு ஆகும். இது இதன் நீள வாக்கில் தெற்கு ஆல்ப்ஸ் எனப்படும் மலைத் தொடரினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம் மலைத் தொடரின் மிகவுயர்ந்த சிகரம் ஆவேராக்கி/குக் மலை 3,754 மீட்டர்கள் (12,320 அடிகள்) உயரமானது. தெற்குத் தீவில் 3000 மீட்டர்களுக்கு மேல் உயரமான 18 மலைச் சிகரங்கள் உள்ளன. வடக்குத் தீவு தெற்குத்தீவிலும் குறைவான மலைகளைக் கொண்டது ஆயினும் எரிமலைச் செயற்பாடுகளைக் கொண்டது. வடக்குத் தீவில் மிக உயர்ந்த மலையான ருவாப்பேகூ மலை (2,797 மீ / 9,177 அடி) ஒரு இயக்கமுள்ள எரிமலையாகும்.

நியூசிலாந்தின் வேறுபட்ட நில அமைப்புக்கும், இது கடல் மட்டத்துக்கு மேல் வெளிப்பட்டதுக்கும் காரணம் பசிபிக் புவியோட்டுக்கும், இந்திய-ஆஸ்திரேலியப் புவியோட்டுக்கும் இடையே உள்ள இயங்கியல் எல்லை (dynamic boundary) ஆகும். நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவின் அரைப்பங்கு பரப்பளவு கொண்டதும், பெரும்பகுதி நீரில் முழுமையாக அமிழ்ந்துள்ளதுமான நியூசிலாந்தியா என்னும் கண்டம் ஒன்றின் ஒரு பகுதியாகும். சுமார் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், தட்டுப் புவிப்பொறை இயக்கங்கள் காரணமாக நியூசிலாந்தியா இரண்டு பகுதிகளாக இழுக்கப்பட்டது. இதனை ஆல்ப்ஸ், தாவுப்போ எரிமலை வலயம் ஆகிய பகுதிகளிலுள்ள பிளவுகளிலிருந்து அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

பண்பாட்டு அடிப்படையிலும், மொழியியல் அடிப்படையிலும், நியூசிலாந்து பொலினீசியாவின் ஒரு பகுதியாகும். இது பொலினீசிய முக்கோணப் பகுதியின் தென்மேற்கு மூலையாக உள்ளது. நியூசிலாந்தின் அகலக்கோடு 47°தெ 34 ஆக அமைந்துள்ளது. இது வட அரைக் கோளத்தில் இத்தாலியின் அமைவிடத்துடன் பொருந்தி வருகிறது. எனினும் கண்டச் செல்வாக்கிலிருந்து தனிமைப் படுத்தப்பட்டு இருப்பதும், தெற்கிலிருந்து வீசும் குளிர் காற்றுக்களாலும், கடல் நீரோட்டங்களாலும், இதன் காலநிலை மிதமானதாகவே உள்ளது. நாடு முழுதும் மித வெப்பக் காலநிலை நிலவுவதுடன் கடல் சார்ந்ததாகவும் உள்ளது. வெப்பநிலை மக்கள் குடியேற்றம் உள்ள இடங்களில் 0° (32°) க்குக் கீழ் செல்வதோ அல்லது 30 °C (86 °F) மேல் செல்வதோ கிடையாது. முக்கியமான நகரங்களில் கிறைஸ்ட்சேர்ச்சே மிகவும் வரண்ட நகரமாகும். இது ஆண்டுக்கு 640 மிமீ (25 அங்) மழை வீழ்ச்சியைப் பெறுகிறது. ஆக்லாந்து கூடிய ஈரலிப்பான நகரம். இது ஏறத்தாழ இரண்டு மடங்கு மழையைப் பெறுகிறது. கிறிஸ்ட்சர்ச், வெல்லிங்டன், ஆக்லாந்து ஆகிய நகரங்கள் ஆண்டுக்குரிய சராசரியாக 2000 மணிநேரங்களுக்கும் மேலான சூரிய ஒளியைப் பெறுகின்றன. தெற்குத் தீவின் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகள் குளிர்ந்ததும், மேக மூட்டம் கொண்டதுமான காலநிலையைக் கொண்டுள்ளன. இப் பகுதிகள் ஆண்டுக்கு 1400 - 1600 மணிநேர சூரிய ஒளி பெறுகின்றன. தெற்குத் தீவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளே நாட்டில் அதிக சூரிய ஒளியைப் பெறும் பகுதிகளாகும். இவை ஆண்டுக்கு 2400 - 2500 மணிநேர சூரிய ஒளியைப் பெறுகின்றன.

அரசியல்[தொகு]

நியூசிலாந்து, எழுதப்படாத அரசியலமைப்பைக் கொண்டிருந்தாலும்,[45] அது பாராளுமன்ற சனநாயகத்துடன் கூடிய அரசியலமைப்பு ஒற்றையாட்சி நாடாகும்.[46] இரண்டாம் எலிசபெத் நாட்டின் ராணியும், அதன் தலைவருமாவார்.[47] பிரதமரின் ஆலோசனைக்கமைய[48] ராணியால் நியமிக்கப்படும் ஆளுநரே ராணியின் பிரதிநிதியாவார்.[49]

நியூசிலாந்தின் பாராளுமன்றம் சட்டமியற்றும் அதிகாரத்தையும் நாட்டின் இறைமையையும் கொண்டுள்ளது. இது சுயாதீனமான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "2013 Census - Cultural Diversity". Statistics New Zealand.
 2. History of New Zealand. Newzealand.com.
 3. Wilson, John (மார்ச் 2009). "European discovery of New Zealand – Tasman's achievement". Te Ara: The Encyclopedia of New Zealand.
 4. Wilson, John (September 2007). "Tasman’s achievement". Te Ara – the Encyclopedia of New Zealand.
 5. Mackay, Duncan (1986). "The Search For The Southern Land". in Fraser, B. The New Zealand Book Of Events. Auckland: Reed Methuen. பக். 52–54. 
 6. Hay, Maclagan & Gordon 2008, p. 72.
 7. 7.0 7.1 Mein Smith 2005, p. 6.
 8. Brunner, Thomas (1851). The Great Journey: an expedition to explore the interior of the Middle Island, New Zealand, 1846-8. Royal Geographical Society. http://www.nzetc.org/tm/scholarly/BruJour-fig-BruJour_P001a.html. 
 9. McKinnon, Malcolm (நவம்பர் 2009). "Place names – Naming the country and the main islands". Te Ara – the Encyclopedia of New Zealand. பார்த்த நாள் 24 சனவரி 2011.
 10. New Zealand Government(10 அக்டோபர் 2013). "Names of NZ’s two main islands formalised". செய்திக் குறிப்பு.
 11. எஆசு:10.1016/S1040-6182(98)00067-6
  This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
 12. Murray-McIntosh, Rosalind P.; Scrimshaw, Brian J.; Hatfield, Peter J.; Penny, David (1998). "Testing migration patterns and estimating founding population size in Polynesia by using human mtDNA sequences". த புரோசிடிங்சு ஆஃவ் த நேசனல் அக்காடமி ஆஃவ் சயன்சு 95 (15): 9047–52. doi:10.1073/pnas.95.15.9047. Bibcode1998PNAS...95.9047M. 
 13. எஆசு:10.1126/science.1166083
  This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
 14. எஆசு:10.1073/pnas.0801507105
  This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
 15. Clark, Ross (1994). "Moriori and Māori: The Linguistic Evidence". in Sutton, Douglas. The Origins of the First New Zealanders. Auckland: ஆக்லாந்து பல்கலைக்கழகம். பக். 123–135. 
 16. Davis, Denise (செப். 2007). "The impact of new arrivals". Te Ara Encyclopedia of New Zealand. பார்த்த நாள் 30 ஏப்ரல் 2010.
 17. "'Moriori – The impact of new arrivals'". Te Ara – the Encyclopedia of New Zealand (மார்ச் 2009). பார்த்த நாள் 23 மார்ச் 2011.
 18. 18.0 18.1 Mein Smith 2005, p. 23.
 19. Salmond, Anne. Two Worlds: First Meetings Between Maori and Europeans 1642–1772. Auckland: Penguin Books. p. 82. ISBN 0-670-83298-7. 
 20. King 2003, p. 122.
 21. Fitzpatrick, John (2004). "Food, warfare and the impact of Atlantic capitalism in Aotearo/New Zealand". Australasian Political Studies Association Conference: APSA 2004 Conference Papers. https://www.adelaide.edu.au/apsa/docs_papers/Others/Fitzpatrick.pdf. 
 22. Brailsford, Barry (1972). Arrows of Plague. Wellington: Hick Smith and Sons. p. 35. ISBN 0-456-01060-2. 
 23. Wagstrom, Thor (2005). "Broken Tongues and Foreign Hearts". in Brock, Peggy. Indigenous Peoples and Religious Change. Boston: Brill Academic Publishers. பக். 71 and 73. ISBN 978-90-04-13899-5. 
 24. Lange, Raeburn (1999). May the people live: a history of Māori health development 1900–1920. Auckland University Press. p. 18. ISBN 978-1-86940-214-3. 
 25. 25.0 25.1 Rutherford, James (ஏப்ரல் 2009). "Busby, James". from An Encyclopaedia of New Zealand. Te Ara – the Encyclopedia of New Zealand. 
 26. "Sir George Gipps". from An Encyclopaedia of New Zealand. (ஏப்ரல் 2009). Te Ara – the Encyclopedia of New Zealand. 
 27. 27.0 27.1 Wilson, John (March 2009). "Government and nation – The origins of nationhood". Te Ara – the Encyclopedia of New Zealand.
 28. "Settlement from 1840 to 1852". An Encyclopaedia of New Zealand இலிருந்து. (April 2009). Te Ara – the Encyclopedia of New Zealand. அணுகப்பட்டது 7 சனவரி 2011. 
 29. Foster, Bernard (April 2009). "Akaroa, French Settlement At". from An Encyclopaedia of New Zealand. Te Ara – the Encyclopedia of New Zealand. அணுகப்பட்டது 7 சனவரி 2011. 
 30. Simpson, K (September 2010). "Hobson, William – Biography". from the Dictionary of New Zealand Biography. Te Ara – the Encyclopedia of New Zealand. அணுகப்பட்டது 7 சனவரி 2011. 
 31. Phillips, Jock (April 2010). "British immigration and the New Zealand Company". Te Ara – the Encyclopedia of New Zealand. பார்த்த நாள் 7 சனவரி 2011.
 32. "Crown colony era – the Governor-General". Ministry for Culture and Heritage (மார்ச் 2009).
 33. 33.0 33.1 33.2 Wilson, John (மார்ச் 2009). "Government and nation – The constitution". Te Ara – the Encyclopedia of New Zealand.
 34. Temple, Philip (1980). Wellington Yesterday. John McIndoe. ISBN 0-86868-012-5. 
 35. "New Zealand's 19th-century wars – overview". Ministry for Culture and Heritage (ஏப்ரல் 2009).
 36. Wilson., John (மார்ச் 2009). "History – Liberal to Labour". Te Ara – the Encyclopedia of New Zealand.
 37. "War and Society". Ministry for Culture and Heritage.
 38. Easton, Brian (April 2010). "Economic history – Interwar years and the great depression". Te Ara – the Encyclopedia of New Zealand.
 39. Derby, Mark (May 2010). "Strikes and labour disputes – Wars, depression and first Labour government". Te Ara – the Encyclopedia of New Zealand. பார்த்த நாள் 1 பெப்ரவரி 2011.
 40. Easton, Brian (November 2010). "Economic history – Great boom, 1935–1966". Te Ara – the Encyclopedia of New Zealand. பார்த்த நாள் 1 பெப்ரவரி 2011.
 41. Keane, Basil (November 2010). "Te Māori i te ohanga – Māori in the economy – Urbanisation". Te Ara – the Encyclopedia of New Zealand.
 42. Royal, Te Ahukaramū (March 2009). "Māori – Urbanisation and renaissance". Te Ara – the Encyclopedia of New Zealand.
 43. "The Sea Floor". from An Encyclopaedia of New Zealand. (April 2009). Te Ara – the Encyclopedia of New Zealand. அணுகப்பட்டது 13 சனவரி 2011. 
 44. Hindmarsh (2006). "Discovering D'Urville". Heritage New Zealand. பார்த்த நாள் 13 சனவரி 2011.
 45. "Factsheet – New Zealand – Political Forces". தி எக்கனாமிஸ்ட் (The Economist Group). 15 பெப்ரவரி 2005. http://web.archive.org/web/20060514204533/http://economist.com/countries/NewZealand/profile.cfm?folder=Profile-Political%20Forces. பார்த்த நாள்: 4 August 2009. 
 46. "Queen and New Zealand". ஐக்கிய இராச்சியத்தின் அரசர். பார்த்த நாள் 28 April 2010.
 47. "New Zealand Legislation: Royal Titles Act 1974". New Zealand Government (பெப்ரவரி 1974). பார்த்த நாள் 8 சனவரி 2011.
 48. "The Queen's role in New Zealand". The British Monarchy. பார்த்த நாள் 28 April 2010.
 49. "The Governor General of New Zealand". Official website of the Governor General. பார்த்த நாள் 8 சனவரி 2011.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நியூசிலாந்து&oldid=1688317" இருந்து மீள்விக்கப்பட்டது