பருப்பொருளியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பருப்பொருளியல் (அ) பருவினப் பொருளியல் (Macroeconomics) என்பது, பொருளியலின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றாகும். மற்றொன்று நுண்பொருளியல் (microeconomics) ஆகும். பருப்பொருளியல் நாடுசார் அல்லது மண்டலம்சார் பொருளாதாரச் செயற்பாடு, கட்டமைப்பு, நடத்தை ஆகியவற்றுடன் தொடர்புள்ளது. ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தின் கட்டமைப்பு மற்றும் அதனுடைய செயல்திறன் ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்த கூடிய எந்த ஒரு விஷயமும் பருவினப் பொருளியல் சார்ந்ததாகும். பருப்பொருளியல், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), வேலையின்மை வீதம், விலைச் சுட்டெண் போன்றவற்றை ஆய்வு செய்வதன் மூலம், முழுப் பொருளாதாரமும் எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முயல்கிறது. தேசிய வருமானம், விளைவு, நுகர்வு, வேலையின்மை, பணவீக்கம், சேமிப்பு, முதலீடு, பன்னாட்டு வணிகம், பன்னாட்டு நிதியம் போன்றவற்றுக்கு இடையிலான தொடர்புகளை விளக்கும் மாதிரிகளை பருப்பொருளியலாளர்கள் உருவாக்குகின்றனர். ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலையின்மை விகிதம ஆகியவற்றை குறைக்க ஆரசாங்கம் தீட்டும் செயல்திட்டம், நாட்டின் நிதி கொள்கை (Fiscal policy), ஒரு நாட்டின் பண அமைப்பை கட்டுபடுத்த மத்திய வங்கி தீட்டும் பணவியல் கொள்கை (monetary policy), வணிக சுழற்சிகள் (Business cycles), பணவீக்கம் (inflation) மற்றும் பணவாட்டம் (deflation) இவை அனைத்துமே பருவினப் பொருளியல் கீழ் வருவனவாகும். மாறாக நுண்பொருளியலில், நிறுவனங்கள், நுகர்வோர் போன்ற தனிக் காரணிகளின் செயற்பாடுகளும், எவ்வாறு அவற்றின் நடத்தைகள் குறிப்பிட்ட சந்தையில் காணும் விலைகள், அளவு என்பவற்றைக் கட்டுப்படுத்துகின்றன என்பதும் ஆய்வு செய்யப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பருப்பொருளியல்&oldid=2091836" இலிருந்து மீள்விக்கப்பட்டது