உலக வங்கிக் குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக வங்கிக் குழுமம்
உருவாக்கம்27 திசம்பர் 1945
வகைபன்னாட்டு அமைப்பு
சட்ட நிலைஉடன்பாடு
நோக்கம்பொருளியல் மேம்பாடு, தீவிர வறுமை ஒழிப்பு
உறுப்பினர்கள்
185 நாடுகள்
தலைவர்
ராபர்ட் சொல்லிக்
மைய அமைப்பு
இயக்குனர் மேலாண்மைக் குழு[1]
வலைத்தளம்worldbank.org

உலக வங்கிக் குழுமம் (World Bank Group, WBG) ஐந்து பன்னாட்டு அமைப்புகளை உள்ளடக்கிய ஓர் குழுமமாகும். இது உலகளவில் பெரிய நிதி நிறுவனம். [2] இதன் முதன்மை நோக்கம் வறுமையான நாடுகளுக்கு கடன்கள் அமைத்துக் கொடுப்பதாகும். [3]

நிறுவல்[தொகு]

இது முறையாக பிரெட்டன் வுட்சு உடன்பாடுகள் ஏற்புறுதி வழங்கப்பட்டபின் திசம்பர் 27, 1945ஆம் ஆண்டு செயலுக்கு வந்தது. 1951ஆம் ஆண்டில் உலக மேம்பாடு அறிக்கையை தயாரிக்க அமைக்கப்பட்ட ஓசியண்டர் குழுவிற்கு அடித்தளமாக இருந்தது. சூன் 25,1946இல் செயல்படத் தொடங்கி முதல் கடனை பிரான்சிற்கு மே 9, 1947 இல் வழங்கியது. டாலர் 250 மில்லியன் மதிப்புள்ள இந்தக் கடன் போர் பிந்தைய புனரமைப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. இதுவே இன்றளவில் (உண்மையான மதிப்பில்) உலக வங்கி வழங்கிய மிகப்பெரும் கடன்தொகையாக உள்ளது.

இதில் அங்கமேற்கும் அமைப்புகளாவன:

"உலக வங்கி" என்பது பொதுவாக முதல் இரு நிறுவனங்களின் தொகுதியையேக் குறிக்கும். உலக வங்கிக் குழுமம் என்பது அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கிய தொகுதியைக் குறிக்கும்.[4]

பொறுப்புகள், பணிகள்[தொகு]

உலக வங்கி (ஐபிஆர்டி & ஐடிஏ) மனிதவள மேம்பாடு (கல்வி, சுகாதாரம்), வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி (பாசனங்கள், சிற்றூர் சேவைகள்), சுற்றுச்சூழல் பாதுகாப்பு (மாசுக் கட்டுப்பாடு அமைப்புகளை நிறுவுதல்), கட்டமைப்பு (சாலைகள், நகர்ப்புற புத்துயிராக்கல், மின்துறை), அரசாண்மை (ஊழல் எதிர்ப்பு, சட்டபூர்வ அமைப்புகள் மேம்படுத்தல்) போன்றவற்றில் வளரும் நாடுகளுக்கு உதவி புரியுமாறு குவிந்த செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இவற்றிற்காக இரு அமைப்புகளும் உறுப்பினர் நாடுகளுக்கு முன்னுரிமை வட்டியில் கடன் வழங்குகின்றன; மிக வறிய நாடுகளுக்கு உதவி மானியங்கள் வழங்குகின்றன. இந்தக் கடன்களும் உதவி மானியங்களும் பெரும்பாலும் அந்தத் துறை அல்லது பொருளாதாரத்தில் உள்ள பரந்தளவு கொள்கை மாற்றங்களுக்கு உட்பட்டவை. காட்டாக, கடலோரச் சூழல் மேலாண்மை மேம்பாடு திட்டத்திற்கான கடன் புதிய தேசிய மற்றும் பிராந்திய சுற்றுச்சூழல் நிறுவனங்களை அமைப்பதையும் இனி சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் சட்டங்கள்/கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதையும் கட்டாயப் படுத்தும்.

பன்னாட்டு நிதிக் கழகம் தனியார்த் துறை முதலீடுகளுக்கு கடன் ஏற்பாடு செய்யவும் பலதரப்பு முதலீடு பொறுப்புறுதி முகமை தனியார் முதலீடுகளுக்கு காப்புறுதிகள் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

உறுப்பினர்கள்[தொகு]

ஐ.நா சபையின் 187 உறுப்பினர்களும், கொசோவோவும் இதன் உறுப்பினர்கள் ஆவர். இவை நிதி தொடர்பான பிற அமைப்புகளிலும் பங்கு கொண்டுள்ளன. அமைப்புகளில் உறுப்பினராக உள்ள விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

1.ஐ.பி.ஆர்.டி-யில் மட்டும் உறுப்பினராக உள்ள நாடுகள் - சான் மரினோ
2.ஐ.பி.ஆர்.டி-யிலும், இன்னொரு அமைப்பிலும் உறுப்பினராக உள்ள நாடுகள் - சுரினாம், துவாலு, புருணை
3.ஐ.பி.ஆர்.டி-யிலும், மேலும் இரண்டு அமைப்புகளிலும் உறுப்பினராக உள்ள நாடுகள் - அண்டிகுவாவும் பார்புடாவும், சாவோ தோமும் பிரின்சிபியும், நமீபியா, பூட்டான், மியான்மர், கத்தார், மார்சல் தீவுகள், கிரிபாதி
4. ஐ.பி.ஆர்.டி-யிலும், மேலும் மூன்று அமைப்புகளிலும் உறுப்பினராக உள்ள நாடுகள் - இந்தியா, கனடா, மெக்சிகோ, பெலீசு, ஜமைக்கா, டோமினிக்கன் குடியரசு, வெனிசுவேலாம் பிரேசில், பொலிவியா, உருகுவே, எக்குவடேர், டோமினிக்கா, புனித வின்செண்ட், கிரேனடின்ஸ் தீவுகள், கேப் வர்தே, கினியா-பிசா, நைகர், எக்வடோரியல் கினியா, அங்கோலா, தென்னாப்பிரிக்கா, கோமோரோஸ், சீசெல்சு, லிபியா, சோமாலியா, எத்தியோப்பியா, எர்த்ரியா, டிஜிபௌட்டி, பஹ்ரைன், ஈரான், ஈராக், மால்டா, மோண்டெனெக்ரோ, பல்கேரியா, ரொமானியா, மால்டோவா, போலந்து, ரசியா, லிதுவேனியா, பெலாரசு, கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், தர்க்மெனிஸ்தான், தாய்லாந்து, லாவோசு, வியட்நாம், பலவு, வானுவாட்டு, சமோவா, மாலத் தீவுகள், தெற்கு சூடான்
5.மற்ற அனைத்து நாடுகளும் ஐந்து அமைப்புகளிலும் உறுப்பினராக உள்ளன.
உறுப்பினராக இல்லாத நாடுகள் : அண்டோரா, கூபா, லீச்செஸ்டீன், மொனாக்கோ, நவுரு, வடகொரியா

அமைப்பு[தொகு]

இதன் தலைமையகம் வாசிங்டன் நகரில் உள்ளது. சர்வதேச அமைப்பான இது, உறுப்பினர் நாட்டு அரசுகளின் சொத்தாகும். உலக வங்கியும் ஐக்கிய நாடுகள் சபைக்கு உட்பட்டதே. உறுப்பினர் நாடுகளுக்கு வாக்குரிமை உண்டு. நிதி பங்களிப்பைப் பொருத்து, சில நாடுகளுக்கு அதிக வாக்குகள் வழங்கப்படலாம். உலக வங்கியின் தலைவரை, அமெரிக்க அதிபர் நியமிப்பார், வங்கியின் ஆளுனர்கள் அவரை தேர்ந்தெடுப்பர். அண்மைய வங்கியின் சட்டப்படி, ஒரு திட்டம் செயல்பட 85 % வாக்குகள் தேவை. அமெரிக்கா 16.4% வாக்குகளையும், ஜப்பான் 7.9 % வாக்குகளையும், ஜெர்மனி 4.5 % வாக்குகளையும், இங்கிலாந்து 4.3 % வாக்குகளையும், பிரான்சு 4.3 % வாக்குகளையும் கொண்டுள்ளன. அமெரிக்காவுக்கு 17.4 % வாக்குகள் உள்ளபடியால், வங்கியின் பெரியளவிலான எந்த செயல்பாட்டையும் நிறுத்த உரிமை பெற்றுள்ளது.

தலைவர்[தொகு]

இதுவரையிலும், அமெரிக்க குடியுரிமை பெற்றவரே வங்கியின் தலைவராக இருந்துள்ளார். நிதியில் பெரும்பங்கை கொண்டுள்ளபடியால், அமெரிக்காவே தேர்ந்தெடுத்து நியமிக்கும். தலைவரின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும். [5] தற்போதைய தலைவராக ஜிம் யோங் கிம் நீடிக்கிறார். இவரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நியமித்தார். இதுவரை பன்னிரெண்டு பேர் தலைவர் பதவி வகித்துள்ளனர். யூகின் மேயர் என்பவர் முதல் தலைவராக, 1946 மேயில் இருந்து ஆறு மாதங்களுக்குப் பணியாற்றினார்.

தகவல் பெறும் உரிமை[தொகு]

முன்பைவிட அதிக தகவல்களை பொதுமக்கள் பெறும்படி சட்டங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன. [6]தயாரிக்கப்படவுள்ள திட்டங்கள், செயல்பாட்டில் உள்ள திட்டங்கள், கூட்டங்கள், செயல்பாடுகள் குறித்த தகவல்களைக் கேட்டுப் பெறலாம். சில சந்தர்ப்பங்களில், நிதி தொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்கும் அறிவிக்கப்படலாம். விலக்கப்பட்ட சிலவற்றைத் தவிர பிற அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ளலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Board of Directors". Web.worldbank.org. பார்க்கப்பட்ட நாள் 2010-05-31.
  2. "UNDG Members". Undg.org. Archived from the original on 2011-05-11. பார்க்கப்பட்ட நாள் 2012-05-27. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. The World Bank Information Center, http://www.bicusa.org/institutions/worldbank/ பரணிடப்பட்டது 2014-04-10 at the வந்தவழி இயந்திரம்
  4. "About Us", wordbank.org, accessed May 30, 2007.
  5. http://www.imf.org/external/np/cm/2010/042510.htm
  6. "Access to Information". Worldbank.org. பார்க்கப்பட்ட நாள் 2012-05-27.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_வங்கிக்_குழுமம்&oldid=3545271" இலிருந்து மீள்விக்கப்பட்டது