இட அமைப்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட அமைப்பியல் வரைபடம்

இட அமைப்பியல் (Topography) என்பது கோள் அறிவியல் சார்ந்த ஒரு துறை. இது, புவியினதும், கோள்கள் மற்றும் கோள்கள், மதிகள், விண்கற்கள் போன்ற கவனிக்கத்தக்க பிற வானியற் பொருட்களினதும் மேற்பரப்பு வடிவங்களையும் பிற அம்சங்களையும் பற்றி ஆய்வு செய்யும் துறையாகும்.

பொதுவாக, இட அமைப்பியல் மேற்பரப்பின் உயர வேறுபாடுகள் தொடர்பான விவரங்கள் மட்டுமன்றி, இயற்கை மற்றும் செயற்கை அம்சங்களுடன், உள்ளூர் வரலாறு பண்பாடு போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

இட அமைப்பியல் சிறப்பாக மேற்பரப்பின் முப்பரிமாணத் தரத்தைக் குறிக்கும், நிலப்பகுதியின் உயர அமைப்புக்களைப் பதிவு செய்வதில் ஈடுபடுவதுடன் குறிப்பான நிலவடிவங்களையும் அடையாளம் காண முயல்கிறது. இதை நிலவுரு அளவியல் (geomorphometry) என்றும் அழைப்பதுண்டு. தற்காலப் பயன்பாட்டில் இச்சொல், மின்னணுவியல் வடிவத்தில் நிலப்பரப்பு உயரம் சார்ந்த தரவுகளைப் பெறுவதைக் குறிக்கிறது. சமவுயரக் கோடுகள், உயரங்காட்டு நிறங்கள் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தி நிலவடிவத்தை நிலப்படமாக உருவாக்குவதை இது உள்ளடக்குகிறது.[1][2][3]

நோக்கங்கள்[தொகு]

மேற்பரப்பில் உள்ள ஒர் அம்சத்தின், அல்லது மேலும் பொதுவாக ஒரு புள்ளியின் சரியான அமைவிடத்தை குறுக்குக் கோடு, நெடுங்கோடு, உயரம் ஆகியவற்றின் அடிப்படையில் கண்டறிவதே இட அமைப்பியலின் நோக்கம். அம்சங்களைக் கண்டறிந்து பெயரிடுவதுடன், நிலவடிவக் கோலங்களை அடையாளம் காணுவதும் இத்துறையின் ஒரு பகுதியாகும்.

இட அமைப்பியல் ஆய்வு ஒன்று பல நோக்கங்களுக்காக நடத்தப்படக்கூடும். படைத்துறைத் திட்டமிடலும், நிலவியல் ஆராய்ச்சியும் இவ்வாறான ஆய்வுத் திட்டங்களுக்கு முதன்மையான தூண்டுகோல்களாக அமைகின்றன. அதேவேளை, இட அமைப்பியல் தரவுகள் திட்டமிடல், கட்டுமானம், மற்றும் பல்வேறு குடிசார் பொறியியல், பொது வேலைகள் முதலியவற்றுக்கு மிகவும் அவசியமானவை.

நுட்பங்கள்[தொகு]

இட அமைப்பியல் ஆய்வுகளுக்குப் பல அணுகுமுறைகள் உள்ளன. இவற்றுள் எந்த முறையைப் பயன்படுத்துவது என்பது ஆய்வு செய்யவேண்டிய பகுதியின் அளவு, அதை அணுகக்கூடிய தன்மை, ஏற்கெனவே உள்ள ஆய்வுகளின் தரம் என்பவற்றில் தங்கியுள்ளது.

நேரடி அளவை
தொலையுணர்தல்
வான்வெளிப் படங்களும், செய்மதிப் படங்களும்
ஒளியடர்வு அளவியல்
ரேடாரும், சோனாரும்

மேற்கோள்கள்[தொகு]

  1. What is topography? - Center for Geographic Information
  2. Definition from WordNet Search - princeton.edu
  3. Definition from Federal Citizen Information Center - pueblo.gsa.gov
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட_அமைப்பியல்&oldid=2745201" இலிருந்து மீள்விக்கப்பட்டது