கட்டுமானம்
கட்டிடங்கள் அல்லது வேறு அமைப்புக்களை அமைக்கும் செயற்பாடு கட்டுமானம் (ⓘ) (Construction) எனப்படுகின்றது. வேறு அமைப்புக்கள் என்பதனுள், பாலங்கள், அணைக்கட்டுகள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், தொலைதொடர்புக் கோபுரங்கள் போன்றவை அடங்குகின்றன. ஒரு சேவைத் தொழில்துறை என்ற அளவில், கட்டுமானம் மனிதர்களுடைய செயற்பாட்டுத் தேவைகளுக்கான இடவசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உதவுவதுடன், உலகளாவிய ரீதியில் ஒரு முக்கியமான பொருளாதார நடவடிக்கையாகவும் திகழ்கிறது. இது ஒரு தனியான பொருளாதார நடவடிக்கை என்பது ஒருபுறம் இருக்கப் பல்வேறு வகையான ஏனைய பொருளாதாரச் செயற்பாடுகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் பெரும்பங்கு வகிக்கின்றது. ஒரு பகுதியின் பொருளாதாரம் சிறப்பாக வளர்ச்சியடையும் போது, கட்டுமானத்தின் தேவை அதிகரிக்கின்றது. இதனால், குறிப்பிட்ட பகுதிகளில் நடைபெறுகின்ற கட்டுமானச் செயற்பாடுகளின் தன்மையும், அளவும், அப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சி நிலையை எடுத்துக் காட்டுவதாகக் கொள்ளமுடியும். அது போலவே ஒரு நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையை அடையும் போது முதலில் பாதிக்கப்படுவதும் கட்டுமானத் துறையேயாகும்.
கட்டுமானம் என்பதை ஒரு செயற்பாடாகக் குறிப்பிடுகின்ற போதிலும், உண்மையில் இது வெவ்வேறு வகையான, பொருட்கள், இயந்திர சாதனங்கள், முறைமைகள், துறைசார் அறிவு, திறமை என்பவற்றை வேண்டி நிற்கின்ற பலவகையான செயற்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.
கட்டுமான வகைகள்
[தொகு]கட்டுமானத்தின் தன்மை, கட்டப்படுகின்ற அமைப்பு என்பவற்றைப் பொறுத்துக் கட்டுமானம் என்பதைப் பல வகைகளாகப் பிரிக்க முடியும். அவற்றுள் முக்கியமானவை:
- கட்டிடக் கட்டுமானம்
- கனரகக் கட்டுமானம்
- தொழிற்துறை கட்டுமானம்