வங்காளப் பிரிவினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வங்காளப் பிரிவினை அல்லது வங்கப் பிரிவினை (Partition of Bengal) அல்லது வங்கபங்கம் என்பது 1905 அக்டபர் 16 ல் பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட முடிவு[1] [2], இந்திய தேசியவாதிகளின் எதிர்ப்பாலும், இந்துக்களின் வற்புறுத்தலாலும் 1911ல் மீண்டும் வங்காளம் ஒன்றாக இணைக்கப்பட்டது. 1947ல் இந்தியப் பிரிவினையின் போது மத அடிப்படையில் மீண்டும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

வங்காளம் பிரித்தானிய இந்தியாவின் மிகப் பெரிய மாகாணங்களில் ஒன்று. 1905ல் 1,89,000 சதுர மைல்கள் பரப்பளவையும் 8 கோடி மக்கள் தொகையினையும் கொண்டிருந்தது. அளவிலும் மக்கள் தொகையிலும் பெரிதாக உள்ள மாகாணத்தை நிர்வகிப்பது கடினமாக உள்ளதென்று கூறி காலனிய ஆட்சியாளர்கள் அதனை இரண்டாகப் பிரிக்க முடிவு செய்தனர். இப்பிரிவினையோடு சேர்த்து அசாம் மத்திய மாகாணங்களின் பகுதிகள் சிலவற்றை புதிய மாகாணங்களோடு இணைக்கவும் முடிவு செய்தனர். கிழக்கு வங்காளத்தின் முசுலிம்களும் மேற்கு வங்கத்தில் இந்துக்களும் பெரும்பான்மையாக இருந்தனர். இந்தியாவின் வைசுராய் கர்சான் பிரபுவால் அக்டோபர் 16, 1905ல் இப்பிரிவினை நடைமுறைப்படுத்தப்பட்டது.

புதிய அமைப்பில் மேற்கு வங்காளம் 141,580 சதுர மைல்கள் பரப்பளவையும் 5.4 கோடி மக்கள்தொகையினையும் (4.2 கோடி இந்துக்கள், 1.2 கோடி முசுலிம்கள்) கொண்டிருந்தது. இரண்டாவது பிரிவு கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் 106,540 சதுர மைல்கள் பரப்பளவையும் 3.1 கோடி மக்கள்தொகையினையும் (1.3 கோடி இந்துக்கள், 1.8 கோடி முசுலிம்கள்) கொண்டிருந்தது.

எனவே இப்பிரிவினை மத அடிப்படையில் அமைவதுடன் இந்து முசுலிம்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்துவதற்காக செய்யப்படுகிறது என்று இந்திய தேசியவாதிகள் குற்றம் சாட்டினர். மேற்கு வங்க இந்துக்கள் இதனை எதிர்த்தாலும், கிழக்கு வங்க முசுலிம்களிடையே இப்பிரிவினை பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தது. அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்திய தேசியக் காங்கிரசின் தலைமையில் வங்காளம் முழுவதும் இதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன.

1911ல் இப்பிரிவினைத் திட்டம் திருப்பிப்பெறப்பட்டு இரு மாகாணங்களும் மீண்டும் ஒரே மாகாணமாக இணைக்கப்பட்டன. எனினும் இப்பிரிவினையால் வங்காளத்தில் மத அடிப்படையில் தேசிய உணர்வுகள் ஆழமாக வேரூன்றிவிட்டன. 1947ல் இந்தியா மத அடிப்படையில் பிரிக்கப்பட்டபோது கிழக்கு வங்காளம் பிரிந்து பாகிஸ்தானுடன் இணைந்துவிட்டது. 1971ல் வங்காளதேச விடுதலைப் போரின் மூலம் பாகிஸ்தானிலிருந்து விடுதலைபெற்று பங்களாதேஷ் என்ற தனி நாடாகியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Partition-of-Bengal
  2. "Partition of Bengal by Lord Curzon (1905)". 2017-06-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-06-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)


"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காளப்_பிரிவினை&oldid=3420870" இருந்து மீள்விக்கப்பட்டது