இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்துஸ்தான் சோசிலிசக் குடியரசு அமைப்பு (1928 வரை இந்துஸ்தான் குடியரசு அமைப்பு) பிரிட்டிஷாரை வெளியேற்றி இந்தியாவைச் சுதந்திர நாடாக்க ஆயுதமேந்திப் போராடிய ஒரு புரட்சி அமைப்பு. 1924ல் துவக்கப்பட்ட இவ்வமைப்பு 1930கள் வரை வன்முறை மற்றும் தீவிரவாத உத்திகளைக் கொண்டு பிரிட்டானிய ஆட்சியினை எதிர்த்து வந்தது. பகத் சிங், சுக்தேவ் தபார், சிவராம் ராஜகுரு, சந்திரசேகர ஆசாத் ஆகியோர் இவ்வமைப்பின் முக்கிய உறுப்பினர்கள். ராம் பிரசாத் பிசுமில் இதன் முன்னோடி அமைப்பான இந்துசுத்தான் குடியரசு அமைப்பின் முக்கிய உறுப்பினர்.

தோற்றம்[தொகு]

பின்னணி[தொகு]

1920ல் எழுந்த ஒத்துழையாமை இயக்கம் இந்திய மக்களிடையே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒரு பெரிய அலையை ஏற்படுத்தியது. அறவழி இயக்கமாக ஆரம்பமானாலும் விரைவிலேயே வன்முறை இயக்கமாக உருவெடுத்தது. சவுரி சாரா சம்பவத்திற்குப்பின் வன்முறை வெகுவாகப் பரவி விடக்கூடாதே என்று காந்தி இந்த இயக்கத்தைக் கைவிட்டார்.[1] இந்த முடிவு இந்திய தேசியவாதிகளிடையே ஒரு பிரிவினருக்கு அதிருப்தியேற்படுத்தியது. காந்தியின் முடிவு சரியானதல்ல, தேவையற்றது என அப்பிரிவினர் கருதினர்.[2] இந்த கைவிடலால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்ப பிரிட்டிஷாரை விரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டவர்களால் புரட்சி இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

உருவாக்கம்[தொகு]

கிழக்கு வங்காளத்தில் (பிரம்மபாரிய உட்பிரிவினைச் சேர்ந்த) போலா சாங் கிராமத்தில் 1924ல் நடந்த ஒரு கூட்டத்தில் இந்துஸ்தான் குடியரசு அமைப்பு (இ.கு.அ) உருவானது. அனுஷீலன் சமிதியின் கிளையமைப்பாக இது அமைந்தது. அக்கூட்டத்தில் பிரதூல் கங்கூலி, நரேந்திர மோகன் சென், சச்சிந்திர நாத் சன்யால் மூவரும் பங்கேற்றனர். ஐரியக் குடியரசுப் படையின் என்ற பெயரைப் போலிருக்க வேண்டுமென இவ்வமைப்புக்குப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. முன்னணித் தலைவரான சன்யால், தி ரெவலூஷனரி என்ற தலைப்பில் இப்புது இயக்கத்தின் கொள்கை விளக்க அறிக்கையைத் தயாரித்தார்.

குறிக்கோளும் கொள்கையும்[தொகு]

இந்துஸ்தான் குடியரசு அமைப்பின் குறிக்கோள், திட்டமிட்ட ஆயுதப் புரட்சியினால் இந்திய மாநிலங்களின் ஐக்கியக் குடியரசினை கூட்டாட்சி அடிப்படையில் நிறுவுவது. ஆயுதமேந்திப் போராடுவது, தீவிரவாதம், பதில் தாக்குதல் போன்றவை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இவர்கள் கையாண்ட உத்திகள்.

இந்த அமைப்பின் கொள்கை விளக்கம்:

மேலும்,

என்றும் கூறியது. இ.கு.அ சோசியலிசக் கொள்கை உடையது. சோவியத் ரஷ்யாவின் கம்யூனிசக் கொள்கைகளால் கவரப்பட்டிருந்தது.

அனைவருக்கும் வாக்குரிமை, அரசதிகாரத்தில் சட்டமன்றத்திற்கு மேலுயர்வு மற்றும் மதச் சுதந்திரம் ஆகியவை இந்த அமைப்பின் பிற குறிக்கோள்களாகக் கொள்கை விளக்க அறிக்கையில் தரப்பட்டிருந்தன.

தொடக்ககால செயற்பாடுகள்[தொகு]

1924லிருந்து 1925 வரை பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், சுக்தேவ், ராம் பிரசாத் பிஸ்மில் போன்றவர்களின் சேர்வால் இ.கு.அ உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமானது. வெளியுலகிற்குத் தெரிந்த இதன் முதல் நடவடிக்கை ககோரி ரயில் கொள்ளை. ஆகஸ்ட் 9, 1925ல் இந்த அமைப்பைச் சேர்ந்த ஒரு கூட்டம் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடித்தது. ஆஷ்ஃப்க்குல்லா கான், ராம்பிரசாத் பிஸ்மில், ரோஷன் சிங், ராஜேந்திர லகிரி ஆகியோர் காகோரி சதி வழக்கில் தூக்கிலிடப்பட்டனர். சன்யால் மற்றும் ஜோகேஷ் சந்திர சட்டர்ஜிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ககோரி வழக்கின் முடிவினால் இ.கு.அ வின் தலைவர்களின் எண்ணிக்கைப் பெரிதும் குறைந்து அதன் நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. சதிகாரர்களில் ஆசாத் மற்றும் குந்தன் லால் குப்தா மட்டுமே தப்பினர். இக்காலகட்டத்தில் இ.கு.அ கான்பூர், லாகூர் மற்றும் வங்காளத்தைத் தலைமையிடமாகக் கொண்ட கோஷ்டிகளாகப் பிரிந்தது. 1927ல் ஜதிந்திரநாத் சன்யால், (சச்சிந்திரநாத்தின் சகோதரர்) ஃபனீந்திரநாத் கோஷ், வீரேந்திரநாத் பட்டாச்சார்ஜி போன்ற புதிய புரட்சியாளர்கள் தீவிர உறுப்பினர்களாயிருந்தனர். 1928ல் காசியில் நடந்த ராவ் பகதூர் ஜேஎன் பானர்ஜி கொலை முயற்சி நிகழ்ச்சியின் பின்னணியில் இருந்தவர் கோஷ். தியோகார் சதி வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் வீரேந்திரநாத் பட்டாச்சார்ஜி.

இந்துஸ்தான் சோசியலிசக் குடியரசு அமைப்பு[தொகு]

லாகூர் டிரிபியூன் நாளிதழின் முதல் பக்கம் -மார்ச் 25, 1931

செப்டம்பர் 1928ல் இகுஅ வின் லாகூர் பிரிவு (பகத் சிங், சுக் தேவ்), கான்பூர் பிரிவு (ஆசாத், குந்தன் லால் குப்தா) இரண்டும் ஃபனீந்திரநாத் தலைமையில் இயங்கிய வங்காளப் புரட்சிக் பிரிவுடன் இணைந்து இந்துஸ்தான் சோசியலிசக் குடியரசு அமைப்பு (இ.சோ.கு.அ) உருவானது. டெல்லியில் ஃபெரோஸ் ஷா கோட்லா திடலில் நடந்த கூட்டத்தில்தான் வெவ்வேறு பிரிவுகளை ஒருங்கிணக்கும் இந்தத் திட்டம் நிறைவேறியது. பகத் சிங் கட்சியின் இறுதியான குறிக்கோள் சோசியலிசமாக இருக்க வேண்டுமென்றும் கட்சியின் பெயர் அதனைப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டுமென்றும் அறிவித்தார். ஆசாதுக்குப் தலைமைப் பொறுப்பும் பகத் சிங்கிற்குக் கருத்தியல் கொள்கைப் பொறுப்பும் தரப்பட்டது. வெடிகுண்டுத் தத்துவம் (தி ஃபிலாசஃபி ஆஃப் தி பாம்) என்ற தலைப்புடன் இ.சோ.கு.அ வின் கொள்கை விளக்கம் பகவதி சரன் வோராவால் தயாரிக்கப்பட்டது.

ஜே.பி. சாண்டர்சு படுகொலை[தொகு]

நவம்பர் 1928ல் காவல்துறையின் லத்தியடிக்குப் பலியான லாலா லஜபதி ராயின் மரணத்துக்குப் பழிவாங்க இ.சோ.கு.அ முடிவெடுத்து, லத்தியடிக்கு உத்தரவிட்ட லாகூர் காவல்துறைக் கண்காணிப்பாளர், ஜே. ஏ. ஸ்காட்டைக் கொலை செய்யத் தீர்மானித்தது. பகத் சிங், சிவ்ராம் ஹரி ராஜ்குரு, ஆசாத் மற்றும் ஜெய்கோபால் ஆகியோர் இக்காரியத்தை நிறைவேற்ற தேர்ந்தெடுக்கப்பட்டனர். டிசம்பர் 17, 1928 அன்று படுகொலை முயற்சிக்குத் தேதி குறிக்கப்பட்டது. ஸ்காட் அலுவலகத்தை விட்டு வெளியே வரும்போது ஜெய்கோபால், பகத் சிங்கிற்கும் ராஜ்குருவிற்கும் சைகை காட்டவேண்டும் எனத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஜெய்கோபால் உதவிக் கண்காணிப்பாளர் சாண்டர்சைத் தவறுதலாக ஸ்காட் என நினைத்து சைகை காட்டிவிட பகத் சிங்கும் ராஜ்குருவும் சாண்டர்சை சுட்டுக் கொன்றுவிட்டனர். கொலையாளிகளை விரட்டிப்பிடிக்க முயன்ற தலைமைக் காவலர் (ஏட்டு) ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த நாள் லாகூரில் சுவரொட்டிகள் அடித்து ஒட்டித் தாங்கள் செய்த கொலையை ஒப்புக் கொண்டது இ.சோ.கு.அ. சுவரொட்டியில் காணப்பட்ட விவரம்:

சட்ட மன்றத்தில் குண்டு வீச்சு[தொகு]

டெல்லியில் மத்திய சட்ட மன்றத்தின் மீது குண்டு வீசியதுதான் இ.சோ.கு.அ நடத்திய அடுத்த முக்கிய நடவடிக்கை. பொதுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் வர்த்தகச் சிக்கல்கள் சட்டம் கொண்டுவரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சட்ட மன்றத்தின் மீது குண்டு வீசுவது என தீர்மானிக்கப்பட்டது. சட்ட மன்றத்தில் இவ்விரு சட்டங்களும் நிறைவேற்றப்படும் நேரத்தில் குண்டு வீசப்பட்டால் பொதுமக்களிடையே அச்சட்டங்களுக்கெதிரான எண்ணங்கள் வலுப்படும் என நினைத்தனர். ஏப்ரல் 8, 1929ல் பகத் சிங், பதுகேஷ்வர் தத் இருவரும் சட்டமன்றத்தில் காலியாயிருந்த ஆளுங்கட்சி இருக்கைகள் மீது குண்டுகளை வீசினர். குண்டுவீசி விட்டு இருவரும் தப்பிச் செல்ல முயற்சிக்கவில்லை. இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி வாழ்க), சாம்ராஜ்யவாத் கோ நாஷ் ஹோ (ஏகாத்திபத்தியம் ஒழிக) என்று முழக்கமிட்டவாறே சிறைப்பட்டனர். தங்களது செயலுக்கான நியாயமான விளக்கத்தை டு மேக் தி டெஃப் ஹியர் (செவிடர்களைக் கேட்க வைப்பதற்கு) என்ற தலைப்பிட்ட துண்டுப்பிரசுரத்தில் அச்சிட்டு சட்ட மன்றத்துக்குள் வீசி எறிந்தனர். அடுத்த நாள் அந்த துண்டுப்பிரசுரம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வெளியானது. வெறும் பிரச்சாரத்திற்காக மட்டுமே இந்த நடவடிக்கை தீட்டப்பட்டதால் குண்டு வீச்சில் யாரும் இறந்து போகவில்லை. ஏப்ரல் 15, 1929ல் லாகூரிலிருந்த இ.சோ.கு.அ வின் வெடிகுண்டுத் தொழிந்சாலையின்மீது காவல்துறை தீடீர்த்தாக்குதல் நடத்தி கிஷோரி லால், சுக்தேவ், ஜெய் கோபால் மூவரையும் கைது செய்தது. சட்டமன்ற குண்டுவீச்சு வழக்கு விசாரணை நடந்தது. மார்ச் 23, 1931ல் பகத் சிங், சுக்தேவ். ராஜ்குரு மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.

பிற்கால செயற்பாடுகள்[தொகு]

டிசம்பர், 1929ல் இந்திய வைசிராய் இர்வின் பிரபு பயணம் செய்த சிறப்பு ரயிலை குண்டு வைத்துத் தகர்த்தது இ.சோ.கு.அ. ஆனால் இர்வின் காயமேதும் படாமல் தப்பித்து விட்டார். பின்னர் இ.சோ.கு.அ வின் லாகூர் பிரிவு பிளவுபட்டு, ஹன்ஸ்ராஜ் ”வயர்லெஸ்” தலைமையில் அதிசி சக்கர்(தீ வளையம்) அமைப்பு உருவானது. ஜூன், 1930ல் அக்கட்சி பஞ்சாபில் தொடர்ச்சியாக பல வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தியது. செப்டம்பர் 1, 1930ல் ராவல்பிண்டிப் பிரிவு தலைமை ராணுவக் கணக்கு அதிகாரி அலுவலகத்தைக் கொள்ளையிட முயற்சி செய்து தோல்வியடைந்தது. அப்போது ஆசாத், யாஷ்பால், பகவதி சரன் வோரா, கைலாஷ் பதி ஆகியோர் இ.சோ.கு.அ வின் முன்னணி உறுப்பினர்களாக இருந்தார்கள். ஜூலை 1930ல் புது டெல்லி, கடோடியா அங்காடியில் 14,000 ரூபாயைக் கொள்ளையடித்தது இ.சோ.கு.அ. அப்பணம் பின்னர் வெடிகுண்டு தொழிற்சாலை ஒன்றை அமைக்க செலவிடப்பட்டது. டிசம்பர், 1930ல் பஞ்சாப் ஆளுனரைக் கொலை செய்ய முயற்சித்தனர். அவர் கையில்பட்ட காயத்தோடு உயிர் தப்பினார்.

வீழ்ச்சி[தொகு]

1931ம் ஆண்டு பெரும்பாலான இ.சோ.கு.அ தலைவர்கள் இறந்து போயிருந்தார்கள் அல்லது சிறையில் இருந்தனர். அக்டோபர் 1930ல் கைதான கைலாஷ் பதி அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறிவிட்டார். பெப்ரவரி 27, 1931ல் காவல்துறையுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் (பிடிபடுவதைத் தவிர்க்க) சந்திரசேகர ஆசாத் தம்மைத்தாமே சுட்டுக்கொண்டு இறந்து போனார். மார்ச் 1931ல் பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு தூக்கிலிடப்பட்டனர். ஆசாத்தின் மரணத்துக்குப்பின் இ.சோ.கு.அவை நடத்திச் செல்ல சரியான தலைவர்கள் இல்லை. வட்டாரவாரியாக நிறைய கருத்து வேற்றுமைகள் எழுந்தன. எனவே இவ்வமைப்பு வட்டார அளவில் சிறு சிறு பிரிவுகளாகப் பிரிந்தது. ஒவ்வொரு பிரிவும் மத்திய அளவில் எந்தவொரு இணைப்பும் திட்டமிடலுமின்றி தனித்தனியே இந்திய அதிகாரிகள் மீது குண்டுவீச்சுகளையும் தாக்குதல்களையும் நடத்தின. டிசம்பர் 1931ல் மீரட்டில் நடந்த கூட்டத்தில் இ.சோ.கு.அ வை மீண்டும் ஒருங்கிணைத்துத் தூக்கி நிறுத்த முயற்சியெடுக்கப்பட்டது. ஆனால் யஷ்பால் மற்றும் தார்யாவ் சிங் இருவரும் 1932ல் கைது செய்யப்பட்டதால் அம்முயற்சிக்குப் பலனில்லாமல் போனது. தனித்தனி வட்டாரக் குழுக்களாக 1936 வரை தங்களது ஆயுதப் புரட்சியை நடத்தினாலும் இத்துடன் இ.சோ.கு.அ ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாகச் செயல்பட்ட நிலைமை முடிவுக்கு வந்தது.

மூவரின் தூக்குதண்டனை[தொகு]

பகத்சிங், சுக்தேவ் தபார், சிவராம் ராஜ்குரு ஆகிய மூவரின் தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார். தி லெசன்ட் ஆஃப் பகத் சிங் என்ற இந்தி திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குதண்டனைக்கு ஒப்புதல் அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது.[3]

விமர்சனம்[தொகு]

இ.சோ.கு.அவின் வழிமுறைகள் காந்தியின் அமைதி வழிக்கு நேரெதிராக இருந்தன. இவ்வமைப்பின் செயல்பாடுகளைக் காந்தி கடுமையாககச் சாடினார். காந்தி இவ்வமைப்புக்கு எதிராக எழுதிய கடுமையான விமரிசனம் ஜனவரி 2, 1930ல் யங் இந்தியாவில் தி கல்ட் ஆஃப் தி பாம் (வெடிகுண்டு கலாச்சாரம்) என்ற தலைப்பில் வெளியானது. அதில் இ.சோ.கு.அ வின் செயல்கள் கோழைத்தனமானவை, இழிவானவை; வன்முறையானது கையாண்டவருக்கே இன்னல் விளைவிக்கும், அன்னிய ஆட்சியாளர்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைச் செயல்கள் நம் சொந்த மக்களை நோக்கித் எளிதாக விரைவில் திரும்பிவிடும் எனக் காந்தி விமரிசத்தார். காந்தியின் விமரிசனத்துக்கு இ.சோ.கு.அ தங்களது கொள்கை விளக்கமான தி ஃபிலாசஃபி ஆஃப் தி பாம் (வெடிகுண்டின் தத்துவம்) மூலம் பதிலளித்தது. தங்களது வன்முறை வழி காந்தியின் அமைதி வழிக்கு எதிரானது அல்ல அதற்கு இணையாகச் செயல்படுவதுதான் என்றும் வாதிட்டது.

முக்கிய உறுப்பினர்கள்[தொகு]

பெயர் ஈடுபட்ட புரட்சி நடவடிக்கை அவருக்கு ஏற்பட்ட முடிவு
சிவராம் ஹரி ராஜ்குரு ஜே. பி. சாண்டர்சு படுகொலை (1928) இரண்டாவது லாகூர் சதி வழக்கில் மரண தண்டனை; 1931ல் தூக்கிலிடப்பட்டார்
சச்சிந்திர நாத் சான்யால் காகோரி இரயில் கொள்ளை (1925) அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனை; சிறையில் இறந்தார் (1942)
பகத் சிங் ஜே. பி. சாண்டர்சு படுகொலை (1928), மத்திய சட்டமன்ற குண்டுவீச்சு (1929) சட்டமன்ற வெடிகுண்டு வழக்கில் ஆயுள் தண்டனை; இரண்டாவது லாகூர் சதி வழக்கில் மரண தண்டனை; 1931ல் தூக்கிலிடப்பட்டார்
சந்திரசேகர ஆசாத் காகோரி இரயில் கொள்ளை(1925), ஜே. பி. சாண்டர்சு படுகொலை (1928) போலீசுடனான துப்பாக்கிச் சண்டையில் பிடிபடுவதைத் தவிர்க்க தற்கொலை (1931)
ராம் பிரசாத் பிசுமில் காகோரி இரயில் கொள்ளை(1925) காகோரி வழக்கில் மரண தண்டனை, 1927ல் தூக்கிலடப்பட்டார்
ஆஷ்ஃபக்குல்லா கான் காகோரி இரயில் கொள்ளை(1925) காகோரி வழக்கில் மரண தண்டனை, 1927ல் தூக்கிலடப்பட்டார்
விஷ்ணு சரன் துப்லிஷ் காகோரி இரயில் கொள்ளை (1925) அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனை; காங்கிரசில் இணைந்தார், பின்னர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரானார்.
ராஜேந்திர லாகிரி காகோரி இரயில் கொள்ளை(1925) காகோரி வழக்கில் மரண தண்டனை, 1927ல் தூக்கிலடப்பட்டார்
ரோஷன் சிங் காகோரி இரயில் கொள்ளை(1925) காகோரி வழக்கில் மரண தண்டனை, 1927ல் தூக்கிலடப்பட்டார்
சச்சிந்திர நாத் பக்‌ஷி காகோரி இரயில் கொள்ளை(1925) காகோரி வழக்கில் ஆயுள் தண்டனை; Released in 1937
ஜோகேஷ் சந்திர சட்டர்ஜீ காகோரி இரயில் கொள்ளை(1925) காகோரி வழக்கில் ஆயுள் தண்டனை; இந்திய விடுதலைக்குப் பின் மாநிலங்களவை உறுப்பிரானார்.
மன்மத் நாத் குப்தா காகோரி இரயில் கொள்ளை(1925) காகோரி வழக்கில் ஆயுள் தண்டனை; இந்திய விடுதலைக்குப் பின் பத்திரிக்கையாளரானார்.
கோவிந்த் சரன் கார் காகோரி இரயில் கொள்ளை(1925) காகோரி வழக்கில் ஆயுள் தண்டனை
சுக்தேவ் தபார் ஜே. பி. சாண்டர்சு படுகொலை (1928) இரண்டாவது லாகூர் சதி வழக்கில் மரண தண்டனை; 1931ல் தூக்கிலிடப்பட்டார்
பதுகேஷ்வர் தத் மத்திய சட்டமன்ற குண்டுவீச்சு (1929) சட்டமன்ற வெடிகுண்டு வழக்கில் ஆயுள் தண்டனை; Released in 1937
பகவதி சரன் வோரா மத்திய சட்டமன்ற குண்டுவீச்சு (1929) குண்டு வெடிப்பில் மரணம் (1930)
கைலாஷ் பதி கடோடியா அங்காடிக் கொள்ளை (1929) 1930ல் கைது. அரசு தரப்பு சாட்சியானார்
ஃபனிந்திர நாத் கோஷ் வங்காளப் பிரிவுத் தலைவர் 1930ல் கைது. அரசு தரப்பு சாட்சியானார்; பழிக்குப் பழியாக கொல்லப்பட்டார் (1931)
யாஷ்பால் வைசுராய் இரயில் குண்டுவீச்சு (1929) 1932ல் கைது. 7 வருட கடுங்காவல் தண்டனை, பின்னாளில் விருது பெற்ற நாவலாசிரியர்
ஜெய்தேவ் கபூர் மத்திய சட்டமன்ற குண்டுவீச்சு (1929) இரண்டாவது லாகூர் சதி வழக்கில் ஆயுள் தண்டனை
ஷியோ வர்மா மத்திய சட்டமன்ற குண்டுவீச்சு (1929) இரண்டாவது லாகூர் சதி வழக்கில் ஆயுள் தண்டனை
பிஜோய் குமார் சின்ஹா மத்திய சட்டமன்ற குண்டுவீச்சு (1929) இரண்டாவது லாகூர் சதி வழக்கில் ஆயுள் தண்டனை
கயா பிரசாத் மத்திய சட்டமன்ற குண்டுவீச்சு (1929) இரண்டாவது லாகூர் சதி வழக்கில் ஆயுள் தண்டனை
சிவராம் ராஜ்குரு மத்திய சட்டமன்ற குண்டுவீச்சு (1929) சாண்டர்சை பகத் சிங்கோடு சேர்ந்து சுட்டுக் கொன்றவர், 1931ல் தூக்கிலிடப்பட்டார்

நினைவகங்கள்[தொகு]

துருக்கி நாட்டிலுள்ள பிசுமில் நகரம்

துருக்கி பிசுமில் நகரம்[தொகு]

ராம் பிரசாத் பிசுமில் காலத்தில் துருக்கியின் முதல் அதிபராக இருந்த கலி முகமத் கேமல் பசா அலியாசு என்பவரை பற்றி பிரபா என்ற இந்தி இதழில் விசயி கேமல் பசா என்ற கட்டுரை எழுதினார்.[4][5] அதை கௌரவப்படுத்தும் விதமாக கேமல் 1936ல் துருக்கி நாட்டில் தியார்பகிர் மாநிலத்தில் ஒரு மாவட்டத்திற்கு பிசுமில் மாவட்டம் என்று பெயர் வைத்து அதன் கீழ் இந்தியாவின் உன்னத போராளி மற்றும் தேசபக்தியுடைய கவிஞர் என்றும் குறிப்பிட்டிருந்தார்[6]

ககோரி நினைவகம்[தொகு]

ககோரி ரயில் கொள்ளையில் பிசுமில், சந்திரசேகர ஆசாத் போன்றவர்கள் பங்கு கொண்டதன் நினைவாக அவர்களுக்கு ககோரியில் ஒரு நினைவகம் உள்ளது.

செவ்வாய் கிரக குழி[தொகு]

ககோரி ரயில் கொள்ளையை அடுத்து அவர்களின் நினைவாக செவ்வாய் கிரக குழி ஒன்றிற்கு ககோரியின் பெயர் 1976ல் வைக்கப்பட்டுள்ளது. அந்த குழியின் இருப்பிடம் 41°48′S 29°54′W / 41.8°S 29.9°W / -41.8; -29.9.[7]

திரைப்படம்[தொகு]

பகத்சிங் வரலாற்றை திரையிடும் அத்தனை படங்களிலும் சந்திரசேகர ஆசாத்தும் இந்த இயக்கத்தினரும் முக்கிய கதாப்பாத்திரங்களாக இருப்பர். அவை,

ஆசாத் பாத்திர நடிகர்கள் பகத்சிங் பாத்திர நடிகர்கள் திரைப்படம் (ஆண்டு)
சன்னி தியோல் மனோஜ் கிமார் சாகித் (1931)
அகிலேந்திர மிசுரா அஜய் தேவ்கன் தி லெசன்ட் ஆஃப் பகத் சிங்
அமீர் கான் சித்தார்த் ரங் தே பசந்தி

குறிப்புகள்[தொகு]

  1. Dr.'Krant'M.L.Verma/Swadhinta Sangram Ke Krantikari Sahitya Ka Itihas/Vol-1/Page262
  2. Dr.Vishwamitra Upadhyay Ram Prasad Bismil Ki Aatmkatha NCERT Delhi Page57
  3. http://www.frontline.in/fl1808/18080910.htm
  4. Article of Bismil Vijayee Kemal Pasha 1 November 1922 issue of Prabha p.400-401
  5. (en. Victorious Kemal Pasha) in November 1922. Later too, Bismil appraised Kemal Pasha in his Autobiography[1] பரணிடப்பட்டது 2014-01-06 at the வந்தவழி இயந்திரம்
  6. en:Bismil
  7. http://en.wikipedia.org/wiki/List_of_craters_on_Mars:_A-L

மேற்கோள்கள்[தொகு]

  • Dr Mahaur, Bhagwandas (1978), Kakori Shaheed Smriti, Lucknow U.P. இந்தியா: Ram Krishna Khatri Kakori Shaheed Ardhshatabdi Samaroh Samiti
  • Gupta, Manmath Nath (1993), Bhartiya Krantikari Andolan Ka Itihas, Delhi 110006 இந்தியா: Atmaram & Sons, ISBN 8170430542{{citation}}: CS1 maint: location (link)
  • Ralhan, Om Prakash (1998), Encyclopaedia of political parties, Volumes 33-50, New Delhi: Anmol Publications, ISBN 8174888659[தொடர்பிழந்த இணைப்பு]
  • Grewal, P.M.S (2007), Bhagat Singh, liberation's blazing star, New Delhi: LeftWord Books, ISBN 8174888659
  • Bowden, Brett; Davis, Michael. T (2009), Terror: From Tyrannicide to Terrorism, Australia: Univ. of Queensland Press, ISBN 0702235997
  • Singh, Bhagat; Lala, Camanna; Hooja, Bhupendra (2007), The jail notebook and other writings, New Delhi: Left Word Books, ISBN 818749672X
  • Nayar, Kuldip (2000), The martyr: Bhagat Singh experiments in revolution, New Delhi: Har-Anand Publications, ISBN 8124107009
  • Gandhi, Rajmohan (2008), Gandhi: the man, his people, and the empire, Berkeley: University of California Press, ISBN 0520255704
  • Saha, Murari Mohan (2001), Documents Of The Revolutionary Socialist Party 1938-1947 A.D, Volume 1, Agartala: Lokayata Chetana Bikash Society, ISBN 8190119303
  • Dr.'Krant 'M. L. Verma Swadhinta Sangram Ke Krantikari Sahitya Ka Itihas (3 Volumes), (2006), 4760-61, IInd Floor, 23, Ansari Road, Daryaganj, New Delhi-110002, Praveen Prakashan, ISBN 8177831224 (Set).
  • Madan Lal Verma 'Krant' Sarfaroshi Ki Tamanna (4 Volumes), Research work on Ram Prasad 'Bismil', (1997), Praveen Prakashan, Delhi.
  • Dr. Mehrotra N.C. & Dr. Tandon Manisha Swatantrata Andolan Mein Shahjahanpur Ka Yogdan, (1995), Shaheed-E-Azam Pt. Ram Prasad Bismil Trust, Shahjahanpur.

இதையும் பார்க்க[தொகு]