உள்ளடக்கத்துக்குச் செல்

பக்சார் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புக்சார் சண்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பக்சார் சண்டை
நாள் 23 அக்டோபர் 1764
இடம் பக்சார், பிகார்
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன வெற்றி
பிரிவினர்
முகலாயப் பேரரசு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
தளபதிகள், தலைவர்கள்
சுஜா உத்-தவுலா
மிர்சா நஜாஃப் கான்
இரண்டாம் ஷா ஆலம்
மீர் காசிம்
ராபர்ட் கிளைவ்
பலம்
40,000 பேர்
140 பீரங்கிகள்
7,072 பேர்
30 பீரங்கிகள்
இழப்புகள்
10,000 மாண்டவர் / காயமடைந்தவர்
6,000 போர்க்கைதிகள்
1,847 மாண்டவர் / காயமடைந்தவர்

பக்சர் சண்டை அல்லது பக்சர் போர் (Battle of Buxar) 1764 இல் பக்சாரில், (பிகார்) நடைபெற்ற ஒரு சண்டை. இதில் சர் ஹெக்டர் மன்ரோ தலைமையிலான பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் படைகள் முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலம், அயோத்தி நவாப், வங்காள நவாப் ஆகியோரின் கூட்டணிப் படைகளை வென்றன. இதன் மூலம் கிழக்கு இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனம் பலம் பொருந்திய ஆதிக்க சக்தியாக உருப்பெற்றது.

1757 இல் நடைபெற்ற பிளாசி சண்டையில் வெற்றியடைந்த கிழக்கிந்திய நிறுவனம் வங்காளத்தில் குறிப்பிடத்தக்க சக்தியாக மாறியது. பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடத் தொடங்கியது. குறிப்பாக வங்காளத்தின் நவாப் மீர் காசிமைத் தங்கள் கைப்பாவையாக்க முயன்றனர். ஆனால் மீர் காசிம் அவர்களது கம்பனி அதிகாரிகளின் கட்டளைகளை மீறி சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கினார். நிருவாகத்தில் சீருதிருத்தங்களை அறிமுகம் செய்தார்; தனது படைகளுக்கு ஐரோப்பிய முறைப்படி பயிற்சி அளிக்கத் தொடங்கினார். பிரித்தானியர் விருப்பப்படி இந்திய வர்த்தகர்கள் மீது கூடுதல் வரி விதிக்க மறுத்து விட்டார். இதனால் 1763 இல் கிழக்கிந்திய நிறுவனம் அவரைப் பதவியிலிருந்து விரட்டியடித்தது. அவுதிற்குத் தப்பியோடிய மீர் காசிம், அவாத் நவாபிடம் தஞ்சம் புகுந்தார். அதே நேரம் வாரிசுரிமைச் சண்டையால் டெல்லியை விட்டு வெளியேறியிருந்த முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலமும் அவுதில் இருந்தார். இவ்விருவரது துணையுடன் அவத் நவாப் சுஜா உத்-தவுலா பிரித்தானியக் கட்டுப்பாட்டில் இருந்த வங்காளத்தின் மீது படையெடுத்தார்.

அக்டோபர் 23, 1764 இல் இரு தரப்புப் படைகளும் கங்கையாற்றுக் கரையில் பக்சார் எனுமிடத்தில் சந்தித்தன. இந்திய ஆட்சியாளர்களிடையே ஒற்றுமையில்லாததால் அவர்களது படைகள் சரிவர ஒருங்கிணைக்கப்படவில்லை. இதனால் சுமார் 7,000 பேர் அடங்கிய கிழக்கிந்தியக் கம்பனிப் படை சுமார் 40,000 பேர் கொண்ட இந்தியப் படையை எளிதில் தோற்கடித்தது. போர்க்களத்தை விட்டு தனது கருவூலத்துடன் தப்பியோடிய மீர் காசிம் பின்பு தற்கொலை செய்து கொண்டார்.[சான்று தேவை]

ஷா ஆலம் வாரணாசியில் கம்பனிப் படைகளிடம் சரண் அடைந்தார்.[சான்று தேவை] வங்காளம், ஒரிசா, பீகார் பகுதிகளில் பிரித்தானிய ஆட்சியை அங்கீகரித்தார். இவ்வாறு புக்சார் சண்டையின் முடிவில் கிழக்கிந்திய நிறுவனத்தை எதிர்த்த இந்திய ஆட்சியாளர்கள் வலுவிழந்து போயினர்.

அலகாபாத் ஒப்பந்தம்

[தொகு]

போரின் முடிவில் 12 ஆகஸ்டு 1765 அன்று முகலாயப் பேரரசர் ஷா ஆலமிற்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே அலகாபாத் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, வங்காளம், பிகார் மற்றும் ஒடிசா உள்ளிட்ட கிழக்கிந்தியாவின் மக்களிடம் கிழக்கிந்திய கம்பெனி நேரடியாக வரி வசூலிக்கும் உரிமை பெற்றது. மேலும் அவாத் நவாப் சுஜா உத்-தவுலா அலகாபாத் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கம்பனியாருடன் அமைதி ஏற்படுத்திக் கொண்டார்.

கிழக்கு இந்தியாவின் பெரும் பகுதிகள் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தன. இதனால் பிளாசி சண்டையும், புக்சார் சண்டையும் இந்தியாவில் கம்பெனி ஆட்சி அமைய முதல் படிகளாகக் கருதப்படுகின்றன.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்சார்_சண்டை&oldid=3878697" இலிருந்து மீள்விக்கப்பட்டது