இந்தியக் குடியரசின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய குடியரசின் வரலாறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நவீன இந்தியாவின் வரலாறு
குறித்த தொடரின் அங்கம்
விடுதலைக்கு முன்பு
பிரித்தானிய இந்தியப் பேரரசு (1858–1947)
இந்திய விடுதலை இயக்கம் (1857–1947)
இந்தியப் பிரிவினை (1947)
விடுதலைக்குப் பின்பு
இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு (1947–49)
மாநில மறுசீரமைப்புச் சட்டம் (1956)
கூட்டுசேரா இயக்கம் (1956– )
பசுமைப் புரட்சி (1970கள்)
இந்தியப் பாக்கித்தான் போர்
நெருக்கடி நிலை (1975–77)
இந்தியாவின் பொருளியல் தாராளமயமாக்கல்
2020களில் இந்தியா
இவற்றையும் காண்க
இந்திய வரலாறு
தெற்காசிய வரலாறு

இந்தியக் குடியரசின் வரலாறு (history of the Republic of India) சனவரி 26, 1950இல் துவங்குகிறது. ஆகத்து 15, 1947இல் இந்தியா விடுதலை பெற்று பிரித்தானிய பொதுநலவாயத்தின் ஓர் தன்னாட்சி பெற்ற நாடாக விளங்கியது. 1950இல் குடியரசாக அறிவிக்கப்படும்வரை பிரித்தானியாவின் ஜார்ஜ் VI (ஆல்பர்ட் பிரெடிரிக் ஆர்தர் ஜார்ஜ்) மன்னராக விளங்கினார். அதேநேரம் முசுலிம் பெரும்பான்மையராக விளங்கிய பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் இந்தியப் பிரிவினையை அடுத்து பாக்கித்தான் டொமினியன் என்று பிரிந்தன. இந்தப் பிரிவினையின்போது உலக வரலாற்றிலேயே முதல்முறையாக பத்து மில்லியன் (ஒரு கோடி) மக்கள் இடம் பெயர்ந்தனர்; மற்றும் பத்து இலட்சம் மக்கள் இறந்தனர்."[1] இந்தியத் தலைமை ஆளுனர்களாக மவுண்ட்பேட்டன் பிரபுவும் பின்னர் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியும் பொறுப்பேற்றனர். சவகர்லால் நேரு முதல் பிரதமராகவும் சர்தார் வல்லபாய் பட்டேல் துணை பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தனர். பதவி எதுவும் ஏற்காத மகாத்மா காந்தி வங்காளம் மற்றும் பீகாரின் கலவரப் பகுதிகளுக்குச் சென்று சமயச் சண்டைகளை நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டார்.இப்பிரிவினையின் போது இணையாமல் சில பகுதிகள் வேற்று நாடுகளின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.அவற்றில் போர்சுகீசியர் ஆதிக்கத்தின் கீழ் இருந்த கோவா,பிரான்சு நாட்டின் கீழ் இருந்த பாண்டிச்சேரி,மஹே போன்ற பகுதிகள் இராணுவ நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டன.மேலும் இறுதியாக சிக்கிம் நாடானது இந்தியாவுடன் இணைய விரும்பி எழுபதுகளில் அதுவும் இந்தியாவுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

சனவரி 26, 1950 முதல் இந்தியா ஓர் புதிய அரசியலமைப்புடன் சமயச் சார்பற்ற மக்களாட்சி குடியரசாக மலர்ந்தது. [2] விடுதலைக்குப் பிறகான ஆண்டுகளில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டதுடன் பல சிக்கல்களையும் வெற்றிகரமாக சந்தித்துள்ளது. தொழில்துறையிலும் வேளாண் துறையிலும் பல இடர்களை வென்று தன்னிறைவுநிலை எட்டியுள்ளது. உலகின் மிகப்பெரும் மக்களாட்சி நாடாக விளங்குகிறது. சமயச்சார்பு வன்முறைகளும் சாதி வன்முறைகளும் சமூகப் பிரச்சினைகளாக வளர்ந்துள்ளன. நக்சலிசமும் தீவிரவாதமும் குறிப்பாக சம்மு காசுமீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைப் போராட்டங்களும் நாட்டின் ஆளுமைக்கு எதிராக எழுந்துள்ளன. முடிவுறாத எல்லைப் பிணக்குகளால் சீனாவுடன் 1962இல் இந்தியச் சீனப்போரும் 1947, 1965, 1971, 1999 ஆண்டுகளில் பாக்கித்தானுடன் போர்களும் நிகழ்ந்தன.மேலும் இது தனது அண்டைய நாடான இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்த போது தனது படைகளை இலங்கை அரசுக்கு ஆதரவாய் அனுப்பி போரை முடிவுக்கு கொண்டு வந்தது.

இந்தியா ஓர் அணுவாயுத நாடாகும்; தனது முதல் அணுவாயுதச் சோதனையை 1974இலும்[3] தொடர்ந்து மேலும் ஐந்து சோதனைகளை 1998இலும் நடத்தியது.[3] 1950களிலிருந்து 1980கள் வரை இந்தியா சோசலிசம்|சோசலிசக் கொள்கைகளை கடைபிடித்து வந்தது. இந்த நெறிமுறையின் கூடுதலான கட்டுப்பாடுகள், பாதுகாப்புவாதம் ஆகியவை ஊழலுக்கும் மந்தமான வளர்ச்சிக்கும் வழிகோலியதாக கருதப்படுகிறது.[4] 1991ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க பொருளியல் சீர்திருத்தங்கள்[5]இந்தியாவை உலகின் மிக விரைவாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாக ஆக்கி உள்ளது. இதனால் உலக அரங்கில் இந்தியாவின் வீச்சு கூடுதலாகியுள்ளது.எனினும் 2௦12 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய பெருமளவு பொருளாதார வீழ்ச்சிகளையும் விலைவாசி உயர்வு பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சியிலும் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்து வருகிறது.1975 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கை கோளான ஆரியபட்டா செலுத்தப்பட்டது.அதை தொடந்து வானிலை,கல்வி,வேளாண்மை என பல துறைகளுக்கும் பயன்படும் செயற்கைகோள்களை செலுத்தி வருகிறது.2008 ஆம் ஆண்டு சந்திராயன் செயற்கைகோளின் மூலம் நிலவின் ஆராய்ச்சியிலும் நுழைந்துள்ளது.

அரசியல் வரலாறு[தொகு]

இந்தியாவில் தற்போது இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி உட்பட ஆறு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் கொண்டுள்ளது , மேலும் 40 பிராந்திய கட்சிகள் இருக்கின்றன.1950 ல் இந்தியா முதல் குடியரசு நாடாக மாறியபோதிலிருந்து பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி தனித்தும் சக்தி வாய்ந்த பிராந்திய கட்சிகளுடன் கூட்டணிகளின் மூலமும் ஆட்சியில் இருந்திருக்கிறது. இந்திய குடியரசின் 1951, 1957 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் நடந்த முதல் மூன்று பொது தேர்தல்களில் ஜவகர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் எளிதாக வெற்றி பெற்றது. 1964 ல் நேருவின் மரணதிற்கு பின் லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானார்.எனினும் 1966 ல் அவரும் மரணமடைந்தார் 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டு தேர்தல்களில் இந்திரா காந்தி தலைமையில் வெற்றி பெற்று அவர் இந்திய குடியரசின் முதல் பெண் பிரதமரானார்.1975 ல் அவசரகால பிரகடனத்தை தொடர்ந்து 1977 ல் புதிய ஜனதா கட்சியானது ஆட்சியில் அமர்ந்தது.அதன் அரசு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தது.1980 ல் இந்திரா காந்தி மீண்டும் பதவிக்கு வந்தார். அவரது ஆட்சி காலத்தில் நீல நட்சத்திரம் என்ற இராணுவ நடவடிக்கையால் சீக்கியர்கள் அதிருப்பதி அடைந்தனர்.அவரது சொந்த பாதுகாவலர்களாலே 1984 ல் அவர் சுட்டு கொல்லப்பட்டார்.அதன் பின்னர் வந்த பொது தேர்தலில்அவரது மகன் ராஜீவ் காந்தி வெற்றி பெற்றார். 1989 ல் புதிதாக அமைக்கப்பட்ட ஜனதா தளம் தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணிவெற்றி பெற்றது.எனினும் இவ்வரசு இரு ஆண்டுகளுக்குள்ளேயே கலைந்ததை அடுத்து தேர்தல் 1991 ல் மீண்டும் நடத்தப்பட்டன எந்த கட்சியும் ஒரு அறுதி பெரும்பான்மை பெற்றவில்லை எனினும் காங்கிரஸ் மிக பெரிய ஒற்றை கட்சியாக பி.வி. நரசிம்ம ராவ் தலைமையில் ஒரு சிறுபான்மை அரசை அமைத்தது. 1998 ல் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றதை அடுத்து அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் ஆட்சியமைத்து வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்தது. 2004-2009, 2009-2014 ஆண்டு இந்திய பொது தேர்தலில் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சியமைத்து வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவு செய்தாா். 2014 ல் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றதை அடுத்து திரு. நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • [1] பிபிசியின் இந்தியா அறிமுகம்