மத்தியப் பிரதேச வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இந்தியாவின் மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் வரலாறு மூன்று கால கட்டங்களைக் உள்ளடக்கியது.

பண்டைய வரலாறு[தொகு]

அசோகர் கி மு 3ஆம் நூற்றாண்டில் நிறுவிய சாஞ்சி தூபி

கி மு 6ஆம் நூற்றாண்டில் பண்டைய உஜ்ஜைன் பெரு நகரம், மால்வா எனப்படும் அவந்தி நாட்டின் தலைநகராக விளங்கியது. அவந்தி நாட்டின் வடக்கில் புந்தேல்கண்ட் பகுதியில் சேதி நாடு இருந்தது. பரத கண்டத்தின் வடக்குப் பகுதிகள் முழுவதையும் மகதப் பேரரசின் கீழ் சந்திரகுப்த மௌரியர் கொண்டு வரும் போது, மத்தியப் பிரதேசமும் மௌரியர் ஆட்சியின் கீழ் சென்றது. அசோகரின் மனைவி தற்கால போபால் நகரத்தின் வடக்குப் பகுதியை விதிஷா பகுதியைச் சேர்ந்தவர். கி மு 3ஆம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின் பரத கண்டத்திற்கு மேற்கிலிருந்து படையெடுத்து வந்த சகர்களும், குசானர்களும், உள்ளூர் ஆட்சியாளர்களும் மத்திய இந்தியப் பகுதியான மத்தியப் பிரதேசத்தை கைப்பற்றி ஆள போட்டியிட்டனர். கி மு முதல் நூற்றாண்டு முதல், கங்கைச் சமவெளிக்கு, அரபுக்கடலின் துறைமுகங்களுக்கும் நடுவில், சிப்ரா ஆற்றாங்கரையில் அமைந்த உஜ்ஜைன் நகரம் புகழ் பெற்ற வணிக மையமாகவும், ஆன்மீக மையமாகவும் விளங்கியது. உஜ்ஜைன் நகரம் இந்து, பௌத்தம் மற்றும் சமண சமயங்களின் ஆன்மீக மையமாக விளங்கியது. கி பி 1 முதல் 3ஆம் நூற்றாண்டு வரை, வடக்கு தக்கானத்தின் சாதவாகனப் பேரரசு மற்றும் சகர் குல மேற்கு சத்ரபதிகள் மத்தியப் பிரதேசத்தை கைப்பற்றி ஆளும் போரில் ஈடுபட்டனர்.

கி பி இரண்டம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் சாதவாகனர் குல மன்னர் கௌதமிபுத்ர சதகர்ணி என்பவர், மத்தியப் பிரதேசத்தின் மால்வா மற்றும் தற்கால குசராத்து பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த சகர்களை வெற்றி கொண்டார்.[1]

கி பி 4 மற்றும் 5ஆம் நூற்றாண்டுகளில் குப்தப் பேரரசு காலத்தில் மத்தியப் பிரதேசம் குப்தர்கள் ஆட்சியின் கீழ் சென்றது. கி பி 5ஆம் நூற்றாண்டு முடிய தக்கானத்தின் வடக்கில், குப்தப் பேரரசின் அருகில் அமைந்த வாகாடகப் பேரரசு வங்காள விரிகுடா முதல் அரபுக் கடல் வரை பரந்திருந்தது. மத்தியப் பிரதேசமும் வாகாடகப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தது.

மத்திய கால வரலாறு[தொகு]

போஜராஜன் கட்டிய சிவன் கோயில், போஜ்பூர், மத்தியப் பிரதேசம்
கஜுராஹோ கோயில்

ஹெப்தலைட்டுகள் எனும் வெள்ளை ஹூணர்கள் குப்தப் பேரரசை வென்று பேரரசை சிதைத்து விட்ட பின், பேரரசு குறுநில மன்னர்களின் கையில் சென்று விட்டது. கி பி 528இல் மால்வா எனப்படும் அவந்தி நாட்டு மன்னரான யசோதர்மன் ஹூணர்களின் படையெடுப்பை தடுத்தி நிறுத்தி, அவர்களின் பேரரசின் விரிவாக்கத்தை தடுத்தி நிறுத்தினான். தானேசுவரம் நகரத்தை தலைநகராகக் கொண்ட ஹர்ஷவர்தனர், தான் 647இல் இறக்கும் முன்னர், மத்தியப் பிரதேசத்தை உள்ளடக்கிய[ வட இந்தியா முழுவதையும் ஹர்சப் பேரரசில் கொண்டு வந்தார். கி பி 8 முதல் 10 நூற்றாண்டு முடிய, மத்தியப் பிரதேசத்தின் மால்வா எனும் அவந்தி பகுதிகளைக் கைப்பற்றி, தென்னிந்தியாவின் இராஷ்டிரகூடர்கள் ஆண்டனர். [2] மத்திய காலத்தில் இராஜபுதனத்தின் இராசபுத்திர குலத்தின் பரமாரப் பேரரசு மத்திய இந்தியாவின் அவந்தி பகுதியிலும், புந்தேல்கண்ட் பகுதியில் சந்தேலர்களும் கைப்பற்றி ஆண்டனர். பரமாரப் பேரரசின் புகழ் பெற்ற மன்னர் போஜராஜன் (1010-1060) பன்மொழிப் புலவரும், எழுத்தாளரும் ஆவார். சந்தேலர்கள் 980 -1050 ஆண்டுக்கிடையில் மத்தியப் பிரதேசத்தில் அழகிய சிற்பங்களைக் கொண்ட கஜுராஹோ கோயில்களை கட்டினர். விந்திய மலைத் தொடரில் உள்ள கோண்டுவானா இராச்சியமும், மகாகோசல இராச்சியமும் உருவெடுத்தது.

13ஆம் நூற்றாண்டில் வடக்கு மத்தியப் பிரதேசம் தில்லி சுல்தான்களால் கைப்பற்றப்பட்டது. கி பி 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் தில்லி சுல்தான்களின் ஆட்சி வீழ்ச்சி அடைந்த போது, மத்தியப் பிரதேசத்தின் இராசபுத்திர தோமாரா குலத்தின் குவாலியர் மன்னர் போன்ற இராசபுத்திர மன்னர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். மால்வா பகுதியை இசுலாமிய சுல்தான்களால் தொடர்ந்து ஆளப்பட்டது. மால்வா சுல்தானகம், 1531இல் குஜராத் சுல்தானகத்தை கைப்பற்றியது.

நவீன காலம்[தொகு]

அக்பர் (1556 – 1605) ஆட்சிக் காலத்தில் மத்தியப் பிரதேசத்தின் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளும் முகலாயப் பேரரசில் வீழ்ந்தது. முகலாயர்களின் மேலாண்மையை ஏற்றுக் கொண்ட கோண்ட்வானா மற்றும் மகாகோசலம் பகுதிகள் தொடர்ந்து, கோண்டு மன்னர்களின் தன்னாட்சியுடன் விளங்கியது.

1707இல் அவுரங்கசீப்பின் மறைவுக்குப் பின்னர் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த முகலாயப் பேரரசை, மராத்தியர்களும், இராசபுத்திரர்களும் கடுமையாக தாக்கி நலிவுறச் செய்தனர். கி பி 1720 – 1760 இடைப்பட்ட காலத்தில், மராத்தியர்கள், மத்தியப் பிரதேசத்தின் பெரும் பகுதிகளை பேஷ்வாக்கள் எனப்படும் மராத்தியப் படைத் தலைவர்கள் கைப்பற்றி பிரித்துக் கொண்டு ஆண்டனர்.

குவாலியர் பகுதிகளை சிந்தியாக்களும், மால்வா மற்றும் இந்தூர் பகுதிகளை ஹோல்கர்களும், நாக்பூரை தலைமையிடமாகக் கொண்ட போன்ஸ்சலேக்கள் கோண்டுவானா மற்றும் மகாகோசலம் மற்றும் தற்கால மகாராட்டிராவின் விதர்பா பகுதிகளையும் ஆண்டனர்.

மராத்தியப் படைத்தலைவர் ஒருவர் ஜான்சி நகரத்தை நிறுவினார். போபால் பகுதி தொடர்ந்து ஒரு ஆப்கானிய இசுலாமிய நவாப், தோஸ்து முகமது கான் என்பவரால் ஆளப்பட்டது. 1761இல் நடந்த மூன்றாம் பானிபட் போருக்குப் பின்னர், மராத்தியப் பேரரசின் விரிவாக்கம் நின்று விட்டது.

1775 முதல் 1818 முடிய நடந்த ஆங்கிலேய-மராட்டியப் போர்களின் முடிவில் பிரித்தானிய இந்தியா பேரரசின் கீழ் மத்தியப் பிரதேசத்தின் போபால், குவாலியர், ரேவா, இந்தூர் போன்ற 12 சுதேச சமஸ்தானங்களை உள்ளூர் இந்திய மன்னர்கள் ஆண்டனர்.

மத்தியப் பிரதேசத்தின் மகாகோசாலப் பகுதிகள் பிரித்தானிய இந்தியா அரசின் நேரடி ஆட்சியின் வந்தது. 1853இல் மத்தியப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதி, மற்றும் மகாரஷ்டிராவின் கிழக்குப் பகுதிகள், மற்றும் சத்தீஸ்கரின் பெரும் பகுதிகளை கொண்டிருந்த நாக்பூர் சுதேச சமஸ்தானத்தை ஆங்கிலேயர்கள் தங்களின் நேரடி ஆட்சியில் கொண்டு வந்தனர். பின்னர் 1861இல் மத்தியப் பிரதேசத்தின் வடமேற்கு பகுதிகளின் சுதேச சமஸ்தானங்களை ஒன்றினைத்து மத்திய இந்திய முகமை எனும் அமைப்பை ஏற்படுத்தினர். [3]

இந்திய விடுதலைக்குப் பின்னர்[தொகு]

இந்தியப் பிரிவினைக்கு பிறகு 1950இல் நாக்பூரை தலைநகராகக் கொண்ட மத்திய இந்தியா முகமையின் பகுதிகள், புந்தேல்கண்ட், சத்தீஸ்கர், போபால் சமஸ்தானம், விதர்பா என்ற பேரர் சமஸ்தானம் ஆகிய பகுதிகளைக் கொண்டு மத்திய பாரதம், விந்தியப் பிரதேசம் உருவானது.

பின்னர் 1956இல் மத்திய பாரதம், விந்திய பிரதேசம் மற்றும் போபால் சமஸ்தானங்களை உள்ளட்டக்கிய பகுதிகளை இணைத்து மத்தியப் பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது. மராத்தி மொழி பேசும் பகுதிகளான விதர்பா, நாக்பூர் மும்பை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

போபால் நகரம் மத்தியப் பிரதேசத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. நவம்பர் 2000ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதிகளைக் கொண்டு, சத்தீஸ்கர் எனும் புதிய மாநிலம் துவக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ramesh Chandra Majumdar. Ancient India, p. 134
  2. Chandra Mauli Mani. A Journey through India's Past (Great Hindu Kings after Harshavardhana), p. 13
  3. Central India Agency
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தியப்_பிரதேச_வரலாறு&oldid=2473526" இலிருந்து மீள்விக்கப்பட்டது