அரியானா வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரியானா என்பது இந்தியாவின் ஒரு மாநிலமாகும். பிரித்தானிய இந்தியாவின் காலத்தில் இருந்து இப்பகுதி பஞ்சாப் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் இது 1966 இல் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.

வேதகாலம்[தொகு]

சில பண்டைய இந்து சமய நூல்களில் குறிப்பிடப்படும், குருசேத்திரத்தின் எல்லைகளுடன் அரியானா மாநிலத்தின் எல்லைகள் ஒத்துப்போகின்றன. இவ்வாறு புனித நூலின் பகுதியான ஆரண்யகம் 5.1.1., குருச்சேத்திரத்திர வட்டாரம் துர்கானா (ஸ்ருகானா/சுக் என சிர்இந்த்-பதேகர், பஞ்சாப்) இன் தெற்கிலும், காண்டவா (தில்லி மற்றும் மேவாத் வட்டாரம்) வின் வடக்கிலும், மருவுக்கு (பாலைவனம்) கிழக்கிலும் பரினுக்கு மேற்கிலும் உள்ளதாக[1] குறிப்பிடுகிறது.

இடைக்காலம்[தொகு]

 1910களின் சித்தரிப்பான இந்துப் பேரரசர் ஹெமு

ஹன் இனத்தவரின் வெளியேற்றத்துக்குப்பின், கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் மன்னர் ஹர்ஷவர்தனர் தனது தலைநகரான தானேசரை குருசேத்திரத்துக்கு அருகில் உருவாக்கின்ர். இவரின் மரணத்துக்குப்பின், அவருக்கு கீழிருந்த சிற்றரசர்கள் தங்கள் எல்லைகளை பெருக்கி கொண்டனர், இதனால் அரியானா உள்ளிட்டப்பகுதிகள் பிரதிகாரப் பேரசின் ஆட்சிக்குள் வந்தன இவர்களின் தலைநகராக கன்னோசியை ஏற்றுக்கொண்டனர். 12 ஆம் நூற்றாண்டில் பிரித்திவிராஜ் சௌகானால் தரோரி மற்றும் ஹான்சி ஆகிய கோட்டைகள் நிறுவப்பட்டன. இரண்டாம் தாரைன் போரால் இப்பகுதி முகமது கோரியால் வெற்றிகொள்ளப்பட்டது. இவரது மரணத்துக்குப்பின்னர், தில்லி சுல்தானகம் நிறுவப்பட்டு இந்தியாவின் பெரும்பகுதி முசுலீம் சுல்தான்களால் பல நூற்றாண்டுகள் ஆளப்பட்டது. அரியானவைப் பற்றி குறிப்பிடும் கி.பி.1328 ஆண்டைச் சேர்ந்த சமசுகிருதக் கல்வெட்டு தில்லி அருங்காட்சியகத்தில் உள்ளது, இதில் இப்பிராந்தியத்தை வளமானது மற்றும் அதே நேரத்தில் ஒப்பீட்டளவில் அமைதியான பகுதி என்பதை சுட்டிக்காட்டும் விதத்தில், புவியின் சொர்கம், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரோஸ் ஷா துக்ளக் இப்பகுதியை மேலும் பலப்படுத்தும் நோக்குடன் கி.பி. 1354 இல் ஹிசாரில் ஒரு கோட்டையை நிறுவினார், மேலும் இப்பகுதியில் அவர் கால்வாய்களை அமைத்ததாக இந்தோ-பர்ஸியன் வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படுட்டுள்ளது.

புகழ்பெற்ற மூன்று பானிபட் போர்கள் நவீன நகரமான பானிப்பட்டுக்கு அருகே நடந்தன. இதில் முதல் போர் 1526 இல், காபூல் மன்னரான பாபர் மற்றும் தில்லி சுல்தானகத்தின் மன்னரான இப்ராகிம் லோடி ஆகியோருக்கு இடையில் நடந்தது. இப்போர் இந்தியாவில் முகலாயப் பேரரசு ஏற்பட வழிவகுத்தது.

இரண்டாம் பானிபட் போர் (நவம்பர் 5, 1556), அக்பரின் தளபதி பைராம் கான் மற்றும் ஹெமு ஆகியோருக்கு இடையில் நடந்தது, ஹேமு அரியானாவின் ரேவாரியைச் சேர்ந்தவர் அங்கேயே வளர்ந்தவர், இவர் முதலில் ஒரு தொழிலதிபராக இருந்தார் பின்னர் ஆப்கான் மன்னரின் ஆலோசகராகவும், பின்னர் முதலமைச்சராகவும், படைத்தலைவராகவும் உயர்ந்தார். இவர் 1553 முதல் 1553 காலகட்டத்தில் பஞ்சாப் முதல் வங்காளம்வரை 22 போர்களை ஆப்கானியர்கள் மற்றும் முகலாயர்களுக்கு எதிராக நடத்தி அனைத்திலும் வெற்றிபெற்றார். ஹேமு 1556 இல் தில்லி- துக்ளகாபாதில் நடந்த போரில் அக்பரின் படைகளைத் தோற்கடித்து தில்லியின் மன்னராக 1556 அக்டோபர் 7 அன்று விக்ரமாதித்தன் என்ற பெயருடன் பதவி ஏற்றார்,.[2] ஹேமு இரண்டாம் பானிபட் போரில் உயிரிழந்தார்.

1761 இல் நடைபெற்ற மூன்றாம் பானிபட் போரானது ஆப்கானிய படைத்தலைவர் அஹ்மத் ஷா அப்டாலி மற்றும் மராத்தியப் பேரரசின் சதாசிவராவ் பாவு ஆகியோரிடையே நடைபெற்றது. இப்போரில். அஹ்மத் ஷா சனவரி 13, 1761 அன்று வென்றார்.

அரியானா உருவாக்கம்[தொகு]

1966, நவம்பர் 1 அன்று பஞ்சாபில் இருந்த இந்தி பேசும் பகுதிகளைப் பிரித்து அரியானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இதே முன்னுதாரணத்தைக் கொண்டு இமாச்சலப் பிரதேசம் உருவாக்கப்பட்டது. அரியானா மாநில சர்தார் ஹுகம் சிங் தலைமையிலான நாடாளுமன்ற குழுவின் பரிந்துரையின் பேரில் உருவாக்கப்பட்டது. இக்குழுவின் உருவாக்கமானது 1965 செப்டம்பர் 23 அன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

23 ஏப்ரல் 1966 அன்று, ஹுகம் சிங் குழுவின் பரிந்துரையின்மேல், நடவடிக்கை எடுக்கும்விதமாக பஞ்சாப், அரியானா ஆகியவற்றின் எல்லைகளை பிரிக்க வசதியாக, இந்திய அரசாங்கம் நீதிபதி ஜே சி ஷா தலைமையின்கீழ் ஷா ஆணையத்தை அமைத்தது.

ஆணையம் 1966 மே 31 அன்று தன்னுடைய அறிக்கையை அளித்தது. இந்த அறிக்கையின்படி புதிய அரியானா மாநிலத்தில் ஹிசார், மகேந்திரகார், குருகிராம், ரோத்தக், கர்னால் ஆகிய மாவட்டங்கள் அடங்கியதாக இருக்கும் என கூறிப்பட்டிருந்தது. மேலும் ஆணையம் கரார் தாலுகா (சண்டிகார் உள்ளிட்ட) பகுதியானது, அரியானாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றது.[3]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியானா_வரலாறு&oldid=3541677" இருந்து மீள்விக்கப்பட்டது