பாபுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாபர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாகிருதீன் முகம்மது
பாபுர்
காசி[1]
Babur
முகலாய அரசர்கள் (பாதிசா)
ஆட்சிக்காலம்20லேப்ரல் 1526 – 26 திசம்பர் 1530
முன்னையவர்இப்ராகிம் லோடி லோதி வம்சத்தின் கடைசி சுல்தான் (தில்லி சுல்தானாக)
பின்னையவர்நசிருதீன் உமாயூன்
காபுல் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்1504 – 1530
சமர்கந்து ஆட்சியாளர்
1-வது ஆட்சி1497 – 1498
2-வது ஆட்சி1500 – 1501
3-வது ஆட்சி1511 – 1512
பெர்கானா ஆட்சியாளர்
1-வது ஆட்சி1494 – 1497
2-வது ஆட்சி1498 – 1500
பிறப்புசாகிர் உத்-தீன் முகம்மது
பெப்ரவரி 14, 1483(1483-02-14)
ஆண்டிஜன், நகரம், தைமூரிய வம்சம் (இன்றைய உசுபெக்கிசுத்தான்)
இறப்பு26 திசம்பர் 1530(1530-12-26) (அகவை 47)
ஆக்ரா, முகலாயப் பேரரசு (இன்றைய இந்தியா)
புதைத்த இடம்
துணைமகம் பேகம்
மனைவிகள்ஆயிசா சுல்தான் பேகம்
சைனாப் சுல்தான் பேகம்
மாசுமா சுல்தான் பேகம்
பீபி முபாரக்கா
குல்ருக் பேகம்
தில்தார் பேகம்
குல்நார் அகச்சா
நசுகுல் அகச்சா
சாலிகா சுல்தான் பேகம்
குடும்பம்உறுப்பினர்நசிருதீன் உமாயூன்
கம்ரன் மிசுரா
அசுக்காரி மிர்சா
இந்தால் மிர்சா
அகமது மிர்சா
சாருக் மிர்சா
பர்புல் மிர்சா
ஆல்வார் மிர்சா
பாருக் மிர்சா
பாக்கிர்-உன்-நிசா பேகம்
ஐசான் தவுலத் பேகம்
மெகெர் ஜகான் பேகம்
மசுமா சுல்தான் பேகம்
குல்சார் பேகம்
குல்ருக் பேகம்
குல்பதான் பேகம்
குல்சேரா பேகம்
குல்ராங் பேகம்
பெயர்கள்
சாகிர்-உத்-தீன் முகம்மது பாபுர்
அரசமரபுதைமூரியம் (பிறப்பால்)
முகலாயம் (நிறுவனர்)
தந்தைஉமர் ஷேக் மிர்ஸா II, பெர்கானாப் பள்ளத்தாக்கு அமீர்
தாய்குத்லூக் நிகார் கானும்
மதம்சுன்னி இசுலாம்[2]

பாபுர் (Babur, பாரசீகம்: بابر;[3][4] பெப்ரவரி 14, 1483 – திசம்பர் 26, 1530) என அழைக்கப்பட்ட சகீருதீன் முகம்மது (Zahīr ud-Dīn Muhammad), என்பவர் இந்தியத் துணைக்கண்டத்தில் முகலாயப் பேரரசை நிறுவியவரும், முதலாவது முகலாயப் பேரரசரும் (ஆட்சி: 1526–1530) ஆவார். இவர் தனது தந்தை, தாய் வழியே முறையே தைமூர், செங்கிஸ் கான் ஆகியோரின் வழித்தோன்றல் ஆவார்.[5][6][7] பாபுரிற்கு "பிர்தாவ்சு மகானி" ('சொர்க்கத்தில் வாசம்') என்ற இறப்பிற்குப் பிந்தைய பெயரும் வழங்கப்பட்டது.[8]

சகத்தாய் துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்த பாபுர்,[9] பெர்கானா பள்ளத்தாக்கில் (இன்றைய உசுப்பெக்கிசுத்தானில்) ஆண்டிசன் நகரில் பெர்கானா ஆளுநர் உமர் ஷேக் மிர்ஸா II (1456–1494) என்பவருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். தைமூரின் (1336-1405) எள்ளுப் பெயரன். பாபுர் 1494 இல் தனது 12-வது அகவையில் தலைநகர் அக்சிகெண்டில் பெர்கானாவின் பேரரசராக முடிசூடி கலகத்தை எதிர்கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சமர்கந்தைக் கைப்பற்றினார், ஆனாலும் விரைவில் பெர்கானாவை அவர் இழந்தார். பெர்கானாவை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில், அவர் சமர்கந்தின் கட்டுப்பாட்டை இழந்தார். 1501 இல் முகம்மது சைபானி கான் அவரைத் தோற்கடித்தபோது இரு பிராந்தியங்களையும் மீட்பதற்கான அவரது முயற்சி தோல்வியடைந்தது. 1504-இல் அவர் காபூலைக் கைப்பற்றினார். காபூல் அப்போது இரண்டாம் உளுக் பேகின் குழந்தை வாரிசு அப்துர் ரசாக் மிர்சாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. பாபுர் சபாவிது ஆட்சியாளர் முதலாம் இசுமாயிலுடன் ஒரு கூட்டணியை உருவாக்கி, சமர்கந்து உட்பட துருக்கிஸ்தானின் சில பகுதிகளை மீண்டும் கைப்பற்றினார். பின்னர் அவற்றை சைய்பானிதுகளிடம் மீண்டும் இழந்தார்.

பல பின்னடைவுகளை எதிர்கொண்ட போதும், இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகின்ற முகலாயப் பேரரசை உருவாக்குவதில் இவர் வெற்றி பெற்றார்.

பாபுர் பல முறை திருமணம் செய்து கொண்டார். இவரது மகன்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஹுமாயூன், கம்ரான் மிர்சா மற்றும் ஹின்டால் மிர்சா ஆகியோர் ஆவர். பாபர் கி. பி. 1530 ஆக்ராவில் இறந்தார். பாபருக்கு பிறகு ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார். முதலில் பாபரின் உடல் ஆக்ராவில் புதைக்கப்பட்டது. பிறகு இவரது ஆசைப்படி இவரது உடல் காபூலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மீண்டும் புதைக்கப்பட்டது.[10][11] தந்தை வழியில் தைமூரின் வழி வந்ததால் அவர் தன்னை தைமூரிய மற்றும் சகடை துருக்கியராக கருதினார்.[9] உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் ஒரு தேசிய கதாநாயகனாக பாபர் பார்க்கப்படுகிறார். இவரது பெரும்பாலான பாடல்கள் அங்கு பிரபலமான நாட்டுப்புற பாடல்களாக உள்ளன. இவர் பாபர் நாமா எனும் நூலை சகாடை துருக்கிய மொழியில் எழுதினார். அக்பரின் காலத்தில் இந்நூல் பாரசீக மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது.

பின்னணி[தொகு]

தற்கால உஸ்பெகிஸ்தானில் உள்ள, பெர்கானாப் பள்ளத்தாக்கில் (Fergana Valley) உள்ள அண்டிஜான் (Andijan) என்னும் நகரத்தில் 1483 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பாபர் பிறந்தார். பெர்கானாப் பள்ளத்தாக்கை ஆண்டுவந்த ஓமர் ஷேக் மீர்சா (தைமூர் இனம்) என்பவருக்கும், அவரது மனைவியான குத்லுக் நிகர் கானும் (மங்கோலிய செங்கிசுக்கான் வழி) என்பவருக்கும் பாபர் மூத்த மகனாவார். இவர் மங்கோலிய மூலத்தைக் கொண்ட பார்லாஸ் என்னும் இனக்குழுவைச் சேந்தவர். எனினும், இந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள், துருக்கிய மற்றும் பாரசீகப் பண்பாட்டைத் தழுவிக்கொண்டு, இசுலாம் மார்க்கத்தைச் சார்ந்து, துருக்கிஸ்தான் என்னும் பகுதியில் வாழ்ந்து வந்தனர். பாபரின் தாய் மொழி சகாட்டை (Chaghatai) என்பதாகும், ஆனாலும் அவர் பாரசீக மொழியையும் சரளமாகப் பயன்படுத்த வல்லவராக இருந்தார். இவர் தன்னை துருக்கியர் என்றே சொல்லிக் கொண்டார்.

கன்னிப்போரும் அதன் பிண்ணனியும்[தொகு]

இவர் முதலில் பெர்கானா என்னும் சமவெளியில் உள்ள நாட்டையே ஆண்டு வந்தார். இவரது முன்னோர்கள் ஆண்டு வந்த சமர்கந்து பகுதியை மீண்டும் பிடிக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் தன்னுடைய பெர்கானாப் பள்ளத்தாக்கையும் இழந்ததால் இந்துகுஷ் மலையை தாண்டி வந்து காபூலைப் பிடித்து ஒரு சிற்றச ஆட்சியை நிறுவினார். பிற்பாடு கஜினியும், காந்தகாரும் இவருக்கு கீழே வந்தன. இவரது முன்னோர் காலத்தில் தைமூர்களின் கீழ் பஞ்சாப் பகுதி இருந்தது. அதனால் அதை திருப்பிக் கொடுக்கும் படி தில்லி சுல்தானான இப்ராகிம் லோடியை பாபர் வேண்டினார். அதற்கு தில்லி சுல்தான் மறுத்தார். சுல்தானின் உறவினரான அல்லாவுதீன், தில்லி சுல்தானை எதிர்க்க பாபர் உதவினால் அவரை அந்நாட்டுக்கே அரசர் ஆக்க உதவுகிறேன் என்றார். பஞ்சாப் ஆளுநர் தௌலத்கானும் தில்லி சுல்தானை எதிர்க்க பாபரின் உதவியை நாடினார். அதனால் இருவரையும் சேர்த்துக் கொண்டு 1526ல் பானிப்பட்டில் ஒரு இலட்சம் வீரர்களைக் கொண்ட தில்லி சுல்தானின் சேனையை வென்றார். இந்த வெற்றிக்கு இரண்டு முக்கியக் காரணங்களாக பாபரின் பீரங்கிப்படையின் பலமும், தில்லி சுல்தானின் அரசியல் அனுபவமின்மையும் போர் பயிற்சியின்மையுமே ஆகும்.

பிற வெற்றிகள்[தொகு]

பானிப்பட் போரில் பாபர் வென்றாலும் மற்ற இந்தியப் பகுதிகளான பீகாரும் வங்கமும் ஆப்கானியர் கீழ் இருந்தன. குஜராத்தும், மாளவமும் சுதந்திர அரசுகளாக இராசபுத்திரர்களின் கீழ் இருந்தன. இராசபுத்திரர்களும் முகலாய அரசரான பாபரை எதிர்க்க தருணம் பார்த்திருந்தனர். இராசபுத்திரர்களின் தலைவரான இராணா என்ற சங்கருக்கும் பாபருக்கும் காண்வா என்னும் இடத்தில் 1527ல் பெரும்போர் நடந்தது. அதில் இராசபுத்திரர் தோற்றோடினர். மாளவத்தில் உள்ள சந்தெரி என்ற வழுவான கோட்டை 1528ல் பாபரின் கீழ் வந்தது.

பழைய பகை[தொகு]

தில்லு சுல்தானான இப்ராகிம் லோடியின் இளைய சகோதரர் முகமது லோடி ஆப்கானியரோடு சேர்ந்து கொண்டு பீகார் பகுதிகளில் கலகம் செய்தார். இவர்களை கோக்காரா என்னும் நதிக்கரையில் 1529ல் பாபர் தோற்கடித்தார். பின்னர் வங்காள அரசருடன் நட்புறவு கொண்டதால் பீகார் பகுதி பாபருக்கு வங்காள அரசரால் தரப்பட்டது.

முகலாயப் பேரரசை தோற்றுவித்தல்[தொகு]

பாபர் உஸ்பெக்குகளிடம் இருந்து தப்பிக்க நினைத்தார். காபூலுக்கு வடக்கே இருந்த படாக்ஷானை தவிர்த்து இந்தியாவில் தஞ்சம் அடைய நினைத்தார். அதை பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "இவ்வளவு பெரிய சக்திக்கு முன்னால் நாம் நமக்கென ஒரு இடத்தை பற்றி நினைக்கவேண்டும். இந்த கடினமான சூழ்நிலையில் நமக்கும் நம்முடைய வலிமையான எதிரிகளுக்கும் இடையில் இடைவெளி இருக்க வேண்டும்."[12] சமர்கண்ட்டை இழந்தபிறகு வட இந்தியாவை வெல்வதற்கான பணியில் தனது முழு கவனத்தை பாபர் செலுத்தினார்; கி. பி. 1519 இல் தற்போதைய பாகிஸ்தானில் உள்ள செனாப் ஆற்றை அடைந்தார்.[13] 1524 வரை அவரது குறிக்கோள் பஞ்சாப் வரை தனது ஆட்சியை நீட்டிப்பதாக மட்டுமே இருந்தது. ஏனெனில் தனது முன்னோர் தைமூரின் மரபை பின்பற்ற தைமூரிய பேரரசின் ஒரு பகுதியாக இருந்த அதை ஆள நினைத்தார்.[12] அந்நேரத்தில் வட இந்தியாவின் பகுதிகள் லோடி அரச மரபின் இப்ராஹிம் லோடியின் ஆட்சியின் கீழ் இருந்தன. ஆனால் அந்த அரசு சிதைந்து கொண்டிருந்தது. பலர் பேரரசில் இருந்து விலக ஆரம்பித்து இருந்தனர். பஞ்சாபின் கவர்னரான தவுலத் கான் லோடி மற்றும் இப்ராஹிமின் உறவினரான அலாவுதீன் ஆகியோரிடமிருந்து பாபருக்கு அழைப்புகள் வந்தன.[14] இப்ராஹிம் லோடிக்கு ஒரு தூதுவரை பாபர் அனுப்பினார். தான்தான் அரியணைக்கு உண்மையான வாரிசு என்று கூறினார். ஆனால் அந்த தூதுவர் லாகூரில் கைது செய்யப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.[13]

1524 இல் பாபர் பஞ்சாபின் லாகூருக்கு தனது பயணத்தைத் தொடங்கினார். ஆனால் இப்ராகிம் லோடியால் அனுப்பப்பட்ட படையானது தவுலத் கான் லோடியை விரட்டி இருந்தது.[15] பாபர் லாகூரை அடைந்தபோது லோடி இராணுவமானது லாகூரை விட்டு வெளியேறி இருந்தது. லாகூரை கடந்த பாபர் திபல்பூருக்கு பயணித்தார். இப்ராஹிம் லோடியின் மற்றொரு கிளர்ச்சியாளரான ஆலம் கானை ஆளுநராக நியமித்தார்.[16] ஆலம் கானும் சீக்கிரமே பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டு காபூலுக்கு தப்பினார். இதற்குப் பதிலாக ஆலம் கானுக்கு பாபர் துருப்புகளை கொடுத்தார். தவுலத் கான் லோடியுடன் இணைந்த ஆலம் கான் 30,000 துருப்புகளுடன் இப்ராஹிம் லோடியின் தில்லியை முற்றுகையிட்டார்.[17] இப்ராஹிம் லோடி ஆலம் கானின் இராணுவத்தை எளிதாக தோற்கடித்து விரட்டினார். தான் பஞ்சாபை ஆக்கிரமிப்பதை லோடி அனுமதிக்க மாட்டார் என்பதை பாபர் உணர்ந்தார்.[17]

ஆட்சிக்காலங்கள்[தொகு]

இவர் ஐந்து ஆண்டுகள் மட்டுமே இந்தியாவில் ஆட்சி செய்ததால் மக்கள் நலத்திட்டங்களை பெரியளவில் செய்யவில்லை. இவர் கல்வியிலும் இசையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தன்னுடைய வரலாற்றை துருக்கி மொழியிலேயே எழுதி நூலாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் ஆட்சிக் காலத்திலேயே நீதித்துறை செயல்பட்டு குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் ஆரம்பித்தன. இவர் கோக்காரா போருக்குப் பின் எந்த போரிலும் ஈடுபடவில்லை.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அக்பரின் ஆட்சி காலத்தின் போது மொழிபெயர்க்கப்பட்ட பாபர்நாமா நூலில் உள்ள ஓவியங்களை தவிர பாபரின் உருவ அமைப்பு பற்றிய குறிப்புகள் கிடையாது.[18] தனது சுயசரிதையில் பாபர் தான் வலிமையாக உடலளவில் நேர்த்தியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் கண்ட அனைத்து முக்கிய நதிகளையும் நீந்தி கடந்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் வட இந்தியாவில் உள்ள கங்கை ஆற்றை இரண்டு முறை நீந்திக்கடந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.[19]

பாபர் சிந்து ஆற்றை நீந்தி கடத்தல்

அமைதியான சூழ்நிலை நிலவிய காலமான காபூலில் ஆட்சி செய்த காலத்தில் பாபர் இலக்கியம், ஓவியம், இசை மற்றும் தோட்டக்கலை ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.[12]

மறைவு[தொகு]

இவர் தன் இறுதிக்காலங்களில் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். இதை பயன்படுத்திக் கொண்ட பாபரின் தங்கையின் கணவரான மாது காஜ்வா தன்னை அரசராக்கி கொள்ளலாம் என நினைத்திருந்தார். ஆனால் பாபரின் மகனான ஹூமாயூனால் இது தடைப்பட்டது. இவரின் ஆட்சிக்குப்பின் இவரது மகனான ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சியில் இந்தியாவை இழந்து மீண்டும் போரிட்டுப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாபர் மசூதி[தொகு]

பாபர் தான் கட்டிய பாபர் மசூதியின் மூலம் அதிகம் அறியப்படுகிறார். இம்மசூதியை இராமர் கோயிலை இடித்து அதற்கு மேல் கட்டியதாக கூறப்படுகிறது. இம்மசூதியில் உள்ள மூன்று கல்வெட்டுகள் பாபரின் தளபதியான மிர் பாகியால் கட்டப்பட்டதாக கூறுகின்றன. இப்பகுதியில் அகழாய்வு மேற்கொண்ட இந்திய தொல்லியல் அறிக்கைக் குழு இங்கு கோயில் ஏதும் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் இல்லை என்றும் ஆனால் சைவ சமயத்தை சேர்ந்த கட்டிட எச்சங்கள் காணப்படுகிறன என்றும் தன் ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளது.

மூலம்[தொகு]

 • இராசகணபதி (2008). கஜினி முதல் சிவாஜி வரை. தியாகராஜ நகர், சென்னை.: பாண்டியன் பாசறை. 

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Stephen F. Dale (2018). Babur. பக். 154. 
 2. Christine Isom-Verhaaren, Allies with the Infidel, (I.B. Tauris, 2013), 58.
 3. EB (1878).
 4. Dale, Stephen Frederic (2004). The garden of the eight paradises: Bābur and the culture of Empire in Central Asia, Afghanistan and India (1483–1530). Brill. பக். 15, 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-13707-6. 
 5. Christoph Baumer, The History of Central Asia: The Age of Islam and the Mongols, Bloomsbury Publishing, 2018, p. 47
 6. F. Lehmann: Ẓahīr-al-Dīn Moḥammad Bābor. In Encyclopædia Iranica. Online Ed. December 1988 (updated August 2011). "Bābor, Ẓahīr-al-Dīn Moḥammad son of Umar Sheikh Mirza, (6 Moḥarram 886-6 Jomādā I 937/14 February 1483 – 26 December 1530), Timurid prince, military genius, and literary craftsman who escaped the bloody political arena of his Central Asian birthplace to found the Mughal Empire in India. His origin, milieu, training, and education were steeped in முஸ்லிம் culture and so Bābor played significant role for the fostering of this culture by his descendants, the Mughals of India, and for the expansion of Islam in the Indian subcontinent, with brilliant literary, artistic, and வரலாற்றுவரைவியல் results."
 7. Robert L. Canfield, Robert L. (1991). Turko-Persia in historical perspective, Cambridge University Press, p. 20. "The Mughals-Persianized Turks who invaded from Central Asia and claimed descent from both Timur and Genghis – strengthened the Persianate culture of Muslim India".
 8. Jahangir, Emperor Of Hindustan (1999). The Jahangirnama : memoirs of Jahangir, Emperor of India. Washington, D. C. : Freer Gallery of Art, Arthur M. Sackler Gallery, Smithsonian Institution ; New York : Oxford University Press. பக். 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780195127188. https://archive.org/details/jahangirnamamemo0000jaha. 
 9. 9.0 9.1 Richards, John F. (1995), The Mughal Empire, Cambridge University Press, p. 6, ISBN 978-0-521-56603-2
 10. Necipoğlu, Gülru (1997), Muqarnas: An Annual on the Visual Culture of the Islamic World, BRILL, p. 135, ISBN 90-04-10872-6
 11. (Mahajan 2007, p. 438)
 12. 12.0 12.1 12.2 Eraly 2007, பக். 27–29.
 13. 13.0 13.1 Mahajan, V.D. (2007). History of medieval India (10th ). New Delhi: S Chand. பக். 428–29. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-219-0364-6. 
 14. Chaurasia, Radhey Shyam (2002). History of medieval India : from 1000 A.D. to 1707 A.D.. New Delhi: Atlantic Publ.. பக். 89–90. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-269-0123-3. https://books.google.com/books?id=8XnaL7zPXPUC&lpg=PA89&ots=mlw-HxSFcx&dq=babur%20receiving%20invitations%20from%20Daulat%20Khan%20Lodi&pg=PA89#v=onepage&q&f=false. 
 15. Satish Chandra, Medieval India:From Sultanat to the Mughals, Vol. 2, (Har-Anand, 2009), 27.
 16. (Chandra 2009, pp. 27–8)
 17. 17.0 17.1 (Chandra 2009, p. 28)
 18. Eraly 2007, பக். 21–23.
 19. Elliot, Henry Miers (1867–1877). "The Muhammadan Period". The History of India, as Told by Its Own Historians. John Dowson (ed.). London: Trubner. Archived from the original on 22 ஜூன் 2008. http://persian.packhum.org/persian//pf?file=80201014&ct=56. பார்த்த நாள்: 2 April 2008. "... and on the same journey, he swam twice across the Ganges, as he said he had done with every other river he had met with." 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபுர்&oldid=3583017" இருந்து மீள்விக்கப்பட்டது