பாக்-இ பாபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
"பாக்-இ பாபர்"பூங்காவினுள் உள்ள மசூதி.

பாக்-இ பாபர் என்பது ஆப்கானிசுத்தானின் தலைநகரமான காபுலில் உள்ள ஒரு வரலாற்றுப் பூங்கா ஆகும். முகலாயப் பேரரசை நிறுவி அதன் முதல் பேரரசராக இருந்த பாபரின் சமாதியும் இங்கேயே உள்ளது. இப் பூங்கா 1528 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பாபரின் குறிப்புக்களான "பாபர்நாமா" என்னும் ஆவணத்தில், காபுலில் ஒரு பூங்காவைக் அமைக்க பாபர் ஆணையிட்டது பற்றிக் கூறப்பட்டுள்ளது.


தமது வாழ்க்கைக் காலத்தில் இப்படி ஒரு இடத்தைத் தமது கேளிக்கைத் தேவைகளுக்காக உருவாக்குவது முகலாய இளவரசர்களின் வழக்கமாக இருந்தது. அப்படி உருவாக்கப் பட்ட இடமொன்றிலேய பிற்காலத்தில் அவர்களை அடக்கம் செய்வதும் உண்டு. பாபரின் பின் வந்தவர்களுக்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க இடமாக இருந்து வந்துள்ளது. காபுலில் உள்ள எல்லாப் பூங்காக்களைச் சுற்றியும் சுவர் எழுப்பப்படவேண்டும் என்று கட்டளையிட்ட செகாங்கீர், 1607 ஆம் ஆண்டில் இவ்விடத்துக்கு யாத்திரை சென்றார். பாபரின் கல்லறைக்கு முன்பாக ஒரு தொழுகைக்கான மேடை அமைக்கப்படவேண்டும் என்றும் அவ்விடத்தில் ஒரு கல்வெட்டு வைக்கப்படவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். 1638 ஆம் ஆண்டில் பேரரசர் சா சகான் இவ்விடத்துக்கு வந்து இங்கிருந்த கல்லறைத் தொகுதியைச் சுற்றி சலவைக்கல் மறைப்பு ஒன்று அமைக்கப் பணித்ததோடு, அருகே யுள்ள தளத்தில் மசூதி ஒன்று அமைக்கவும் ஏற்பாடு செய்தார். சா சகானின் இந்த வருகை தொடர்பான விபரங்களில், அக்காலத்தில் கீழ் மட்டத்தில் இருந்த மர வரிசைகளுக்கும் குறித்த இடைவெளிகளில் அமைந்திருந்த சிறிய குளங்களுக்கும் இடையே கல்லாலான வாய்க்கால்கள் இருந்தது பற்றிக் கூறப்பட்டுள்ளது.

படங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்-இ_பாபர்&oldid=2399283" இருந்து மீள்விக்கப்பட்டது