உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானித்தான்

ஆள்கூறுகள்: 33°N 66°E / 33°N 66°E / 33; 66
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆப்கானிசுத்தான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆப்கானித்தான்
  • افغانستان (Pashto)
  • Afġānistān
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
காபுல்
33°N 66°E / 33°N 66°E / 33; 66[1]
ஆட்சி மொழி(கள்)
இனக் குழுகள்
சமயம்
  • 99.7% இசுலாம் (அதிகாரபூர்வம்)
  • 0.3% ஏனையோர்
மக்கள்ஆப்கன்,[a][5][6]
அரசாங்கம்
அமைப்பு
• ஓட்டாக் பேரரசு
1709–1738
1747–1842
1823–1926
• அங்கீகாரம்
19 ஆகத்து 1919]]
9 சூன் 1926
• குடியரசு அறிவிப்பு
17 சூலை 1973
7 செப்டம்பர் 1996
• இசுலாமியக் குடியரசு
26 சனவரி 2004
15 ஆகத்து 2021
பரப்பு
• மொத்தம்
652,864[7] km2 (252,072 sq mi) (40-வது)
• நீர் (%)
negligible
மக்கள் தொகை
• 2020 மதிப்பிடு
32,890,171[8] (43-வது)
• அடர்த்தி
48.08/km2 (124.5/sq mi) (174-வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2018 மதிப்பீடு
• மொத்தம்
$72.911 பில்லியன்[9] (96-வது)
• தலைவிகிதம்
$2,024[9] (169-வது)
மொ.உ.உ. (பெயரளவு)2018 மதிப்பீடு
• மொத்தம்
$21.657 பில்லியன்[9] (111-வத்)
• தலைவிகிதம்
$493[9] (177-வது)
ஜினி (2008)positive decrease 27.8[10]
தாழ் · 1-வது
மமேசு (2019) 0.511[11]
தாழ் · 169-வது
நாணயம்ஆப்கானி (افغانی) (AFN)
நேர வலயம்ஒ.அ.நே+4:30 சூரிய நாட்காட்டி (D†)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+93
ஐ.எசு.ஓ 3166 குறியீடுAF
இணையக் குறி.af
افغانستان.

ஆப்கானித்தான் அல்லது ஆப்கனிசுத்தான், Afganistan// (கேட்க);[12] பசுதூ மொழி/தாரி மொழி: افغانستان, Afġānestān) தெற்கு ஆசியாவிற்கும் நடு ஆசியாவிற்கும் குறுக்கே அமைந்துள்ள நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட ஓர் ஆசிய நாடாகும். இதன் கிழக்கிலும், தெற்கிலும் பாக்கித்தான், மேற்கில் ஈரான், வடக்கில் துருக்மெனித்தான், உசுபெக்கிசுத்தான், வடகிழக்கில் தசிகித்தான், சீனா ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. பாக்கித்தானுடனான இதன் எல்லையின் ஒரு பகுதி இந்தியாவால் உரிமை கோரப்படும் காசுமீரூடாகச் செல்கிறது. 652,864 சதுர கிலோமீட்டர்கள் (252,072 சதுர மைல்கள்) பரப்பளவைக் கொண்ட இந்நாடு, பெரும்பாலும் மலைத்தொடர்களையும், வடக்கிலும், தென்மேற்கிலும் சமவெளிகளையும் கொண்டுள்ளது. 2020ஆம் ஆண்டின்கணக்கெடுப்பின் படி, இங்கு 31.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பசுதூன், தசிக்கு, கசாரா, உசுபெக் இனத்தவராவர். காபுல் இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும்.

ஆப்கானித்தானில் மனிதக் குடியேற்றம் இடைக்காலப் பழைய கற்காலத்திற்கு முந்தையது. அத்துடன் பட்டுப் பாதையில் இந்நாடு அமைந்திருந்ததால், மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளுடனான தொடர்புகளுக்கு மூலோபாய இடமாக அமைந்துள்ளது. இந்நிலம் வரலாற்று ரீதியாக பல்வேறு மக்களுக்கு தாயகமாக இருந்து வருகிறது. பேரரசர் அலெக்சாந்தர், மௌரியர், முசுலிம் அராபியர்கள், மங்கோலியர்கள், பிரித்தானிய, சோவியத், மற்றும் 2001 இல் நேட்டோ-நட்பு நாடுகளுடன் அமெரிக்கா உட்படப் பல இராணுவ நடவடிக்கைகளை இந்நாடு கண்டது. வரலாற்றின் பல்வேறு காலங்களில் இது ஆக்கிரமிக்கப்பட்டு வந்திருந்தாலும், இது "வெல்ல முடியாதது" என்றும்,[13][14] "பேரரசுகளின் கல்லறை" என்றும் அழைக்கப்படுகிறது.[15] கிரேக்க பாக்திரியர், குசான்கள், எப்தலைட்டுகள், சமானிதுகள், சஃபாரிதுகள், காசுனவிதுகள், கோரி, கில்சி, முகலாயர், ஓட்டாக்கு, துரானி போன்றோர் பெரிய பேரரசுகளை உருவாக்குவதற்கு இந்த நிலம் ஆதாரமாக இருந்து வந்தது.[16]

இன்றைய ஆப்கானித்தான் 18-ஆம் நூற்றாண்டில் ஒட்டாக்கு, துரானி வம்சங்களுடன் தொடங்கியது. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆப்கானித்தான் பிரித்தானிய இந்தியாவிற்கும் உருசியப் பேரரசிற்கும் இடையிலான "பெரும் போட்டியில்" ஒரு இடையக மாநிலமாக மாறியது. 1919 இல் நடந்த மூன்றாம் ஆங்கிலோ-ஆப்கானியப் போரைத் தொடர்ந்து, அந்நாடு வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, இறுதியில் 1926 சூன் மாதம் மன்னர் அமானுல்லாவின் கீழ் ஆப்கானித்தான் இராச்சியமாக மாறியது. இந்த இராச்சியம் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் வரை நீடித்தது. 1973 சூலையில் மன்னர் முகம்மது சாகிர் சா பதவியில் இருந்து அகற்றப்பட்டு ஒரு குடியரசு நிறுவப்பட்டது. 1978 இல், இரண்டாவது இராணுவப் புரட்சிக்குப் பிறகு, ஆப்கானித்தான் ஒரு சோசலிச நாடாக மாறியது, 1980 களில் முசாகிதீன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சோவியத்–ஆப்கான் போரைத் தூண்டியது. 1996ஆம் ஆண்டிற்குள் ஆப்கானித்தானின் பெரும்பகுதி இசுலாமிய அடிப்படைவாதக் குழுவான தாலிபான்களால் கைப்பற்றப்பட்டது, அவர்கள் நாட்டின் பெரும்பகுதியை ஒரு சர்வாதிகார ஆட்சியாக ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். 2001-இல் அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகு தலிபான்கள் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டாலும், நாட்டின் குறிப்பிடத்தக்க பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். 2021 தாலிபான் தாக்குதல், அதன் விளைவாகக் காபூலின் வீழ்ச்சி ஆகியவற்றுடன் தாலிபான்கள் மீண்டும் நாட்டை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நாட்டில் பயங்கரவாதம், வறுமை, குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாடு, ஊழல் அதிக அளவில் உள்ளது. இது ஐக்கிய நாடுகள் அவை, இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு, தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு, 77 குழு, பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் அணிசேரா இயக்கம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. ஆப்கானித்தானின் பொருளாதாரம் உலகில் 96-வது நிலையில் உள்ளது. கொள்வனவு ஆற்றல் சமநிலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (மொ.உ.உ) 72.9 பில்லியன் டாலர்கள் ஆகும்; தனிநபர் விகிதத்தில் மொ.உ.உ அடிப்படையில் 2018 இல் 186 நாடுகளில் 169 வது இடத்தில் மிக மோசமான நிலையில் உள்ளது.

பெயரின் பின்னணி

[தொகு]

"அஃப்கான்" என்ற வேர்ச் சொல், சில அறிஞர்களின் கூற்றுப்படி, இந்து குஃசு பிராந்தியத்தின் பண்டைய குடிமக்களான அசுவாகன் அல்லது அசாகன் என்ற சமற்கிருதப் பெயரிலிருந்து பெறப்பட்டது.[17][18][19][20][21] அசுவாகன் என்பதன் பொருள் "குதிரை வீரர்கள்", "குதிரை வளர்ப்பவர்கள்" அல்லது "குதிரைப் படையினர்" ("குதிரை" க்கான சமற்கிருத, அவெசுதான் சொற்களான ஆசுவா அல்லது அசுப்பாவில் இருந்து) ஆகும்.[22] வரலாற்று ரீதியாக, ஆஃப்கான் என்ற இனப்பெயர் பசுதூன் மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[23] அஃப்கான் என்ற பெயரின் அரபு, பாரசீக வடிவம், ஊதுத் அல்-ஆலம் என்ற 10 ஆம் நூற்றாண்டின் புவியியல் நூலில் முதன் முதலில் சான்றளிக்கப்பட்டது.[24] பெயரின் கடைசி பகுதி, "-இசுத்தான்" என்பது "இடம்" என்பதற்கான பாரசீக பின்னொட்டு ஆகும். எனவே, "ஆப்கானித்தான்" வரலாற்று ரீதியில் "ஆப்கானியர்களின் நிலம்" அல்லது "பஷ்தூன்களின் நிலம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெயர் உச்சரிப்பு முறை 18-ஆம் நூற்றாண்டில் அகமது ஷா துரானி என்பவர் துராணிப் பேரரசை அமைத்ததில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. இது பின்னர் "அப்துர் ரகுமான் கான்" என்பவரால் இது அரச ஏற்புடைய பெயராக அறிவிக்கப்பட்டது.[25]

வரலாறு

[தொகு]

கி. மு

[தொகு]

ஆப்கானித்தான் வரலாற்றுக்கு முந்திய காலம் தொடக்கமே முக்கியமான நிலப்பகுதியாக உள்ளது. இற்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்கானித்தானில் பல நாகரிகங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இது ஐரோப்பா ஆசியாவின் சந்திப்புப் புள்ளியாக இருந்ததுடன் பல யுத்த களங்களையும் கண்டுள்ளது. இன்று ஆப்கானித்தான் என்று அறியப்படும் இப்பிரதேசம் ஆதிகாலம் முதலே பல்வேறு ஆக்கிரமிப்புக்குக்களுக்கு உள்ளானது. ஆரியர், (Indo-Iranians: Indo-Aryans, Medes, பாரசீகர் போன்றோர்), கிரேக்கர், மௌரியர்கள், குசானர்கள், எப்தலைட்டுகள் (Mauryans, Kushans, Hepthalites), அரேபியர், மொங்கோலியர் போன்றவர்களாலும் , துருக்கி, பிரித்தானியா, சோவியத் ஒன்றியம் மற்றும் மிக அண்மைக் காலத்தில் ஐக்கிய அமெரிக்கா வரை பலநாடுகளாலும் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது.

கி. மு ஆறாம் நூற்றாண்டில் இந்தப் பிரதேசத்தில் பாரசீகப் பேரரசான அக்கேமெனிடு (Achaemenid) பேரரசு பலம்வாய்ந்ததாக இருந்தது. கி.மு 300 ஆம் ஆண்டளவில் மாவீரன் அலெக்சாந்தர் இந்தப் நிலப்பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டான். கி.மு 323 இல் இவனது மரணத்திற்குப் பின்னர் செலூச்சியப் பேரரசு, பக்திரியா (Seleucids, Bactria), அத்துடன் இந்தியாவின் மௌரியப் பேரரசுபோன்ற பல பேரரசுகள் இந்தப் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தன. மௌரியப் பேரரசினால் இந்நிலப்பகுதியினுள் பௌத்த மதம் பரப்பப்பட்டது.

கி.பி

[தொகு]

கிபி முதலாம் நூற்றாண்டில தொசேரியன்,குசானர்கள் (Tocharian Kushans) போன்றோர், இந்நிலப்பகுதியைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். அரேபியர் இப்பிரதேசத்தை தன் கட்டுப்பாட்டில் வருவதற்கு முன்னர் பாரசீகர், சித்தியர் (Parthians, Scythians), மற்றும் மொங்கோலியரான ஃகூன் இனத்தவர் போன்ற யூராசியக் கோத்திரத்தவர்களும் (Eurasian tribes), சாசானியர்கள் (Sassanian) போன்ற பாரசீகரும் உள்ளுர் ஆட்சியாளரான இந்து சாஃகிகள் (Hindu Shahis) போன்றோரும் இந்நிலப்பகுட்தியை ஆட்சி செய்தனர்.

ஏழாம் நூற்றாண்டில் அரபு இராச்சியங்கள், ஆப்கானித்தானின் பகுதிகளை கைப்பற்றத் தொடங்கின. அரபுப் பேரரசுகள் தமது அரசை மேற்கு ஆப்கானித்தானுக்கு 652 இல் விரிவாக்கியதுடன் மெல்ல மெல்ல முழுப் பகுதியையும் 706709 வரையான காலப்பகுதியில் ஆக்கிரமித்துக் கொண்டன. பின்னர் இப்பகுதியை குராசான் என அழைத்ததுடன் அப்பகுதியிலிருந்த பெரும்பாலான மக்கள் முசுலிம்களாக மாறினர்.

ஐக்கிய இராச்சிய ஆட்சி

[தொகு]

19 ஆம் நூற்றாண்டுப் பகுதியில் ஆங்கிலேய – ஆப்கானியப் போர்களின் பின்னரும் பராக்சாய் சாம்ராச்சியத்தின் (பேரரசின்) வளர்ச்சியின் பின்னரும் ஆப்கானித்தானின் பெரும் பகுதி ஐக்கிய இராச்சியத்திடம் போயிருந்தது. 1919 இல் அரசர் `அமனுல்லா கான்' அரியணை ஏறும் வரை ஐக்கிய இராச்சியம் ஆப்கானித்தானில் பெரும் செல்வாக்குச் செலுத்தியது. இவரின் பின்னர் ஆப்கானித்தான் வெளிநாட்டு விவகாரங்களில் பூரண சுகந்திரம் பெற்றுக்கொண்டது. அப்போது பிரித்தானிய இந்தியாவிற்கும், ஆப்கானித்தானுக்கும் இடையில் முறுகலான உறவே நிலவியது.

சாஃகிர் சாவின் ஆட்சி

[தொகு]

நட்புக்கொண்டவர்.ஆப்கானித்தானின் நீண்ட உறுதியான காலப்பகுதி என்றால் அது 1933 தொடக்கம் 1973 வரையான அரசர் சாஃகிர் சாவின் ஆட்சிக் காலமே ஆகும். எனினும் 1973 இல் சாஃகிர் சாவின் மைத்துனன் சர்தார் தாவூத் கான் புரட்சிமூலம், பதவியைக் கைப்பற்றிக்கொண்டான். ஆயினும் தாவூத் கானும் அவரது மொத்த குடும்பமும் 1978இல் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலை இடதுசாரிகளான ஆப்கானித்தான் மக்கள் மக்களாட்சிக்கட்சி (People's Democratic Party of Afghanistan) ஆல் மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது, இக்குழுவினர் பட்டாளப் புரட்சியின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். இது (Great Saur Revolution) "மாபெரும் சவுர் புரட்சி" என்று அழைக்கப்படுகின்றது.

சோவியத் ஆக்கிரமிப்பு

[தொகு]
1973 முதல் 1978 வரை 'முகம்மது தாவூத் கான்' ஆப்கானியக் குடியரசின் அதிபராவார்.

இந்த இடது சாரி அரசும் உட்பிரச்சனை, எதிர்ப்புகள் என்று பல்வேறு கடுஞ்சிக்கல்களை எதிர்கொண்டது. உருசியா – அமெரிக்காவிற்கு இடையிலான பனிப்போரில் ஆப்கானித்தானும் அகப்பட்டுக்கொண்டது. 1979 இல் ஜிம்மி காட்டர் தலைமையிலான அமெரிக்க அரசு, அவரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் "சிக்னீவ் பிரசின்கி" (Zbigniew Brzezinski) – அவர்களின் ஆலோசனையினால் பாக்கித்தானின் ஐ. எசு. ஐ மூலம் இடதுசாரி எதிர்ப்பாளர்களான முச்சாகதீன்களுக்கு உதவி அளித்தது. பல்வேறு பன்னாட்டு அழுத்தங்களினாலும், சுமார் 15,000 துருப்புக்களை முச்சாகதீன்களுடனான போரில் இழந்ததனால், சோவியத் துருப்புகள் 10 ஆண்டுகளின் பின்னர் 1989 இல் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறின. ஆப்கானித்தானில் இருந்து சோவியத் படைகள் வெளியேற்றப்பட்டது அமெரிக்கர்களுக்குப் பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. சோவியத் படைகள் ஆப்கானித்தானில் இருந்து வெளியேற்றப்பட்டதும், அமெரிக்காவிற்கு ஆப்கானித்தான் மீதான நாட்டம் குறைந்தது. அமெரிக்கா போரினால் சிதைந்துபோன ஆப்கானித்தானைச் சீரமைக்க உதவவில்லை. சோவியத் ரசியா தொடர்ந்தும், அதிபர் நச்யிபுல்லாவிற்குத் தமது ஆதரவை வழங்கியது; ஆயினும் 1992 இல் இவர் வீழ்த்தப்பட்டார். சோவியத் படைகள் வெளியேறியமை, இந்த இடதுசாரி அரசின் வீழ்ச்சிக்கும், போராளிகள் ஆட்சியைக் கைப்பற்றவும் உறுதுணையாக இருந்தது.

பல சிறுபான்மையினரும், அறிவுஜீவிகளும் யுத்தத்தின் பின்னர் ஆப்கானித்தானைவிட்டு வெளியேறினர். சோவியத் வெளியேற்றத்தின் பின்னரும், முச்சாகதீன்களின் பல உட்பிரிவுகளுக்கிடையில் போர்கள் மூளலாயின. இதன் உச்ச கட்டமாக 1994 இல் 10,000 பொதுமக்கள் காபூலில் கொல்லப்பட்டனர். இக்காலகட்டத்தில் தாலிபான் அமைபப்பு எழுச்சி பெற்றது. இவர்கள் பெரும்பாலும் எல்மான்ட், கந்தகார் நிலப்பகுதிகளைச் சோந்த பட்டாணியர்கள் (Pashtuns) ஆவர்.

தாலிபான் ஆட்சி

[தொகு]

தாலிபான் அரசியல்–மதம் சார்ந்த சக்தியை உருவாக்கியது. இது 1996 இல் காபூலைக் கைப்பற்றிக்கொண்டது. 2000 ஆம் ஆண்டின் முடிவில் தாலிபான் நாட்டின் 95%விழுக்காட்டு நிலப்பரப்பைக் கைப்பற்றிக்கொண்டது. இதேவேளை "வடக்கு முன்னணி" எனும் அமைப்பு, வடகிழக்கு மாகாணமான படக்ஷான்இல் நிலையூன்றி இருந்தது. தாலிபான்கள், ஷரீஆ எனும் முஸ்லிம் சட்டங்களைக் கடுமையாக அமுல்படுத்தினர். அவர்கள் பிற்காலத்தில் பயங்கரவாதிகள் என்று சர்வதேச சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டனர். தாலிபான்கள், "அல்-காயிதா" தீவிரவாதியான உசாமா பின் லாதினைப் பாதுகாத்தனர்.

தாலிபானின் ஏழு ஆண்டு ஆட்சியில் பெரும்பாலான மக்கள் அவர்களின் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. கடும் கட்டுப்பாடுகள் காணப்பட்டன. இதன்போது, தாலிபான் அதிகஅளவில் மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டது. பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தடைசெய்தது; பெண்கள் பாடசாலைக்கோ, பல்கலைக்கழகத்திற்கோ செல்வது தடைசெய்யப்பட்டது; இவற்றை எதி்ர்த்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். களவு எடுத்தவர்களின் கைகள் வெட்டி அகற்றப்பட்டன; இதைப்போன்ற கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தாலிபான் ஆட்சியில் ஏற்பட்ட நல்லநிகழ்வு என்றால், அது 2001 ஆம் ஆண்டு அளவில் "ஆப்கானின் அபின்" எனும் போதைப் பொருள் தயாரிப்பு, முற்றாக முடிவிற்குக் கொண்டு வரப்பட்டதே ஆகும்.

2001 அமெரிக்க நடவடிக்கை

[தொகு]

செப்டம்பர் 11, 2001 தாக்குதலிற்குப் பின்னர் அமெரிக்கா ஆப்கானில் உள்ள அல்-காயிதா வலையமைப்பைத் தகர்க்க இராணுவ நடவடிக்கையை ஆப்கானித்தான் மீது நடத்தியது. தாலிபானைத் தோற்கடிக்க வடக்கு முன்னணியுடன் அமெரிக்கா நட்புறவு பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

2001 டிசம்பரில் ஆப்கானின் பெரும்பாலான தலைவர்கள் ஜேர்மனியின் "பொன்" நகரில் கூடி ஆராய்ந்து, ஓர் இடைக்கால அரசை அமைக்க இணங்கினர். இதன் போது கந்தகார் நகரைச் சோந்தவரும், பட்டாணிய (பாஸ்துன்) இனத்தவருமான "ஹமீது கர்சாய்" ஆப்கானிய இடைக்கால அரசின் இயக்குநராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இடைக்கால அரசு

[தொகு]
ஆப்கானித்தான் அதிபர் கர்சாய்

2002 இல் தேசிய ரீதியாக நடைபெற்ற லோய ஜர்கா வின் பின்னர்க், கர்சாய் ஏனைய பிரதிநிதிகளால் இடைக்கால – அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டார். 2003 இல் நாட்டுக்குப்ப புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2004 இல் நடைபெற்ற தேசிய அளவிலான தேர்தலின் மூலம் ஹமீது கர்சாய் புதிய அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டார். செப்டம்பர் 2005 இல், சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்றன. 1973ஆம் ஆண்டுக்குப்பின்னர்ச் சுதந்திரமாகத் தெரிவுசெய்யப்பட்ட "சட்டவாக்க சபை" இதுவாகும். இதில் பெண்கள் வாக்களித்தமை, பெண்கள் தேர்தலில் போட்டியிட்டமை, தெரிவுசெய்யப்பட்டமை என்பன குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.

நாடு தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகின்ற போதும், கணிசமான பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. உதாரணமாக வறுமை, தரம்குறைந்த உட்கட்டுமான வசதிகள், மிதிவெடிகள் அதிக செறிவில் உள்ளமை, பொப்பி, அபின் வியாபாரம் போன்றவற்றைக்குறிப்பிடலாம். இதைவிட அந்நாட்டில் மிஞ்சியிருக்கும் அல்-காயிதா உறுப்பினர்கள் மற்றும் தாலிபான் போராளிகளின் தாக்குதல்கள் வேறு தொடர்ந்து நடக்கின்றன. மேலும், வடக்கில் சில இராணுவத் தலைவர்கள் தொடர்ந்தும் பிரச்சினை கொடுத்து வருகின்றனர்.

அரசாங்கமும் கொள்கைகளும்

[தொகு]

ஆப்கானித்தானின் அரசியலானது வரலாற்று ரீதியாகப் பல்வேறுபட்ட குழப்பங்கள் நிறைந்தது. உதாரணமாக, பல்வேறுபட்ட அரசியல் பதவிச் சண்டைகள், இராணுவப் புரட்சிகள், நிலையற்ற ஆட்சி அதிகார மாற்றம் என்பவற்றைக் குறிப்பிடலாம். இந்த நாடு இராணுவ ஆட்சி, அரசாட்சி, குடியரசு, சமவுடைமை அரசு என்று பல்வேறு பட்ட ஆட்சிமுறைகளின்கீழ் இருந்துள்ளது. 2003 ஆம் ஆண்டில் அரசியல் சட்டம், லோயா ஜிர்காவால் மீள் அமைக்கப்பட்டது. இதன்படி ஆப்கானித்தான் ஓர் இசுலாமியக் குடியரசாக மாற்றப்பட்டது. இதில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன; அவை நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை என்பனவாகும்.

ஆப்கானின் தற்போதைய அதிபராக ஹமீது கர்சாய் உள்ளார். இவர் 2004 அக்டோபரில் தெரிவுசெய்யப்பட்டார். இவர் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்திருத்துவதற்காக எடுத்த நடவடிக்கைகள், தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தியமை போன்ற காரணங்களுக்காகப் பாராட்டப்பட்டாலும் இன்னமும் அடக்கப்படாமல் உள்ள பழைய இராணுவத் தலைமைகளால் கொஞ்சம் கெட்ட பெயரும் உள்ளது. தற்போதுள்ள நாடாளுமன்றம் 2005 இல் தெரிவுசெய்யப்பட்டது. தெரிவு செய்யப்பட்டவர்களில் முன்னாள் முஜாஹிதீன்கள், தாலிபான்கள், சமவுடைமைவாதிகள், மறுசீரமைப்பாளர்கள் மற்றும் இஸ்லாமியப் பழைமைவாதிகள் உள்ளடங்குவர். இவர்களுள் 28% பெண்கள் ஆவர்; இதன் மூலம் தாலிபான் ஆட்சியில் இருந்த பெண்களுக்கு எதிரான அடக்குமுறை குறைந்துள்ளதுடன், "அதிகளவு பெண்களை நாடாளுமன்றத்தில் கொண்ட நாடுகளில் ஆப்கானித்தானும் ஒன்று" என்ற நிலையையும் பெற்றது.

ஆப்கனிஸ்தான் நாட்டின் "மீயுயர் நீதிமன்றம்" (Supreme Court of Afghanistan) தற்போது தலைமை நீதிபதி "அப்துல் சலாம் அசினி"யால் நிர்வகிக்கப்படுகின்றது. இவர் முன்னாள் பல்கலைக்கழகப் பேராசிரியரும், அதிபரின் சட்ட ஆலோசகரும் ஆவார். முன்பிருந்த நீதி மன்றம், இடைக்கால அரசின்போது நியமனம் செய்யப்பட்டது. ஆயினும் இதில் பைசல் அஹமட் ஷின்வாரி போன்ற பழமைவாதிகள் இருந்தனர். அதனால், அப்போதைய நீதிமன்றம் பல்வேறு தனிநபர் உரிமைகளைத் தடுக்கும் சட்டங்களை உருவாக்கியது; உதாரணமாகக் கேபிள் தொலைக்காட்சியைத் தடைசெய்தமை, பெண்களின் உரிமைகளைப் பறிக்க முயன்றமை, மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை அதன்அதிகார வரம்புக்கு அப்பால் பாவிக்க முயன்றமை என்பவற்றைக் கூறலாம். ஆயினும் தற்போதைய நீதிமன்றம் சரியான நபர்களால் வழிநடத்தப்படுகின்றது.

நிர்வாக அலகுகள்

[தொகு]

முதன்மைக் கட்டுரை: ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள்

ஆப்கானித்தான், முப்பத்தொரு (31) மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணங்கள் மேலும், மாவட்டங்கள் என்ற பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பொருளாதாரம்

[தொகு]

முதன்மைக் கட்டுரை: ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம்

ஆப்கானித்தான் உலகில் மிக வறுமையான, பின்தங்கிய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஒன்றாகும். மூன்றில் இரண்டு பகுதி மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு (2) அமெரிக்க டொலர் பண மதிப்புக்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். பொருளாதாரம் 1979 தொடக்கம் இருந்த அரசின் நிலையற்ற தன்மையால் பலமாகப் பாதிக்கப்பட்டது.

நாட்டில் பெருளாதார ரீதியாக செயலூக்கத்துடன் 11 மில்லியன் (மொத்தம் 29 மில்லியன் மக்கள் உள்ளனர்) மக்கள் உள்ளதாக 2002 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகள் சொல்கின்றன. ஆயினும் வேலையில்லாதோர் வீதம் பற்றிய உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை, ஆயினும் அந்த நாட்டில் வேலையில்லாதோர் விழுக்காடு(%) மிக உயர்வு என்பதே உண்மை. தொழில்சார் பயிற்சி இல்லாத இளம் சமுதாயத்தில் கிட்டத்தட்ட மூன்று (3) மில்லியன் அளவினர் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 300,000 இனால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆப்கானித்தானிய மொத்த தேசிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி அபின், மோபைன், ஹாசிஸ் போன்ற போதைப்பொருள்கள் மூலமே கிடைக்கின்றது.

அனைத்துலக உதவி

[தொகு]

மறுபக்கம் சர்வதேச சமூகம் ஆப்கானித்தானைக் கட்டி எழுப்புவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றது. ஆப்கானிய இடைக்கால அரசு, ஜேர்மன் பொன் நகரில் டிசம்பர் 2001 இல் உருவாகிய பின் "டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில்" 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி உறுதியளிக்கப்பட்டது. இதைவிட 10.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள், லண்டன் மாநாட்டின் மூலம் 2006 இல் ஆப்கானுக்குக் கிடைத்தது. வளர்ச்சித்திட்டத்தில் கல்வி, சுகாதாரம், நிர்வாகத் திறன் மேம்பாடு, பயிர்ச் செய்கைத் துறை மேம்பாடு, வீதிகள் மீளாக்கம், சக்தி மற்றும் தொலைத் தொடர்பு இணைப்புகள் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

மீள்கட்டுமானம்

[தொகு]

2004 ஆம் ஆண்டுக்கான 'ஆசிய அபிவிருத்தி வங்கி'யின் அறிக்கையின்படி, தற்போதைய அபிவிருத்திகள் இரண்டு முக்கிய கிளைகளைக் கொண்டுள்ளன. இதன்படி முதலில் அவசிய உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்தலும், இரண்டாவதாக நவீன பொதுக் கட்டமைப்பை (Modern Public Sector) ஏற்படுத்துவதும் அடங்கும். 2006 இல் இரண்டு அமெரிக்கக் கம்பெனிகள் 1.4 பில்லியன் பெறுமதியான வீதிகளை மீளமைத்தல், சக்தி இணைப்புகள், நீர் வழங்கல் போன்ற செயற்பாட்டிற்காகத் தொழில் ஒப்பந்தம் ஒன்றைப் பெற்றுக்கொண்டன.

தற்போதைய பொருளாதார மீட்சிக்கு முக்கிய காரணம் அண்டைய நாடுகளிலும், மேற்கிலும் இருந்து மீளவும் இங்கு வந்த 4 மில்லியன் அகதிகளாவர். இவர்கள் தம்முடன் புதிய சக்தி, தொழில்களை ஆரம்பித்தமை என்பனவாகும். அத்துடன் சுமார் 2-3 பில்லியன் வரையான சர்வதேச உதவிகள் ஆண்டுதோறும் கிடைத்து வருவதும், பொருளாதாரத்திற்குச் சக்தி வழங்குவதாக உள்ளது. தனியார்துறையும் தற்போது புத்தாக்கம் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். துபாயில் வசித்துவரும் ஆப்கானியக் குடும்பம் ஒன்று, ஆப்கானில் ஒரு கொக்கா – கோலா போத்தல் நிரப்பும் நிலையத்தை 25 மில்லியன் செலவில் நிர்மாணித்துள்ளதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

நாட்டின் திறைசேரி பெரும்பாலும் வெளிநாட்டு உதவிகளை நம்பியே உள்ளது. மிகச் சிறிய பகுதியே அதாவது, 15% அளவே உள்ளுர் அரசின் மூலம் "வரவுசெலவு திட்டப்" பணிக்குக் கிடைக்கின்றது. மீதி ஐக்கிய நாடுகள் அவையின் மூலமும், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களாலும் வழங்கப்படுகின்றது. அரசு 2003 இல் $350 மில்லியன் வரவு செலவுத் திட்டமும், 2004 இல் $550 மில்லியன் அளவிலான வரவு செலவுத் திட்டமும் போட்டது. அந்நியச் செலாவணி $500 மில்லியன் அளவாகும், இது பெரும்பாலும் சுங்க வரிமூலமே அறவிடப் படுகின்றது.

மக்களின் பரவல் பற்றிய விபரம்

[தொகு]

நாட்டின் சனத்தொகை பல்வேறு இனக்குழுக்களாக உள்ளது. நாட்டில் முறையான சனத்தொகைக் கணக்கெடுப்பு பல பத்தாண்டுகளாக நடத்தப்படவில்லை. ஆகவே, ஆப்கானிய மக்கள் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் தோராயமாக மதிப்பிட்ட எண்ணிக்கையேயாகும்.

2006 இல் பிபிசி செய்தி நிறுவனம், சிஐஏ புத்தகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அறிக்கை என்பற்றில் இருந்து மக்கள்தொகைக் கணக்கை கீழே உள்ளபடி இருக்கலாம் என்று கணிக்கப்டுகின்றது.

சிஐஏ புத்தகத்தின் தகவலின்படி கீழுள்ளவாறு மக்களின்பரவல் உள்ளது.

கலைக்களஞ்சியம் பிருட்டானிகா பின்வருமாறு, சிறிது வேறுபட்ட தகவலைத் தருகின்றது.

  • 49% – விழுக்காடு பட்டாணியர்கள்
  • 18% – விழுக்காடு Tajik தாஜிக்
  • 9% – விழுக்காடு Hazara ஹசரா
  • 8% – விழுக்காடு Uzbek உசுபெக்
  • 4% – விழுக்காடு Aimak அய்மக்
  • 3% – விழுக்காடு Turkmen துர்க்மென்
  • 9% – விழுக்காடு other பிறர்

1960 தொடக்கம் 1980 வரையான காலப்பகுதியில் எடுத்த உத்தியோக பூர்வ சனத்தொகைக் கணக்கெடுப்பு பின்வரும் முடிவைக்காட்டுகின்றது. இது இரானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள முடிவு, பின்வருமாறு.

  • 36.4 – விழுக்காடு% Pashtun பட்டாணியர்கள்
  • 33.6% – விழுக்காடு Tajik (including Farsiwan and Qezelbash) தாஜிக்
  • 8.0% – விழுக்காடு Hazara ஹசரா
  • 8.0% – விழுக்காடு Uzbek உசுபெக்
  • 3.2% – விழுக்காடு Aimak அய்மக்
  • 1.6% – விழுக்காடு Baloch பாலாக்
  • 9.2% – விழுக்காடு other பிறர்

மொழிகள்

[தொகு]

இந்தோ-ஐரோப்பிய மொழிகளினதும், பாரசீக மொழிக் குடும்பத்தின் உப பகுதியுமான பாஷ்தூ 35% விழுக்காடும், பாரசீக மொழி (தாரி) 50% விழுக்காடும் பேசப்படுவதாக சி.ஐ.ஏ தரவுப் புத்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைவிடத் துருக்கி மொழிகளான உஸ்பெக், துர்க்மெனி 9% விழுக்காடும், அவி 30 சிறுபான்மை மொழிகள் (பிரதானமாக பலோச்சி, பசானி, நுரிஸ்டானி) 4% விழுக்காடு வீதமும் பேசப்படுகின்றன. இரு மொழி பேசும் தன்மையை இங்கே பரவலாக அவதானிக்கலாம்.

மதங்கள்

[தொகு]

மத ரீதியாக, 99% விழுக்காட்டினர் இசுலாமியர் ஆவர், கிட்டத்தட்ட 74-89 விழுக்காடு வரையானோர் 'சுன்னி' முஸ்லிம்களாகவும் 9-25 விழுக்காட்டினர் "சியா" முஸ்லிம்களாகவும் உள்ளனர். அங்குக் கிட்டத்தட்ட 150,000 இந்துக்களும், எண்ணிக்கை தெரியாத அளவில் சீக்கியர் இனத்தவரும் காபூல், கந்தகார், காஸ்சி மற்றும் ஜலாலாபாத் போன்ற நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு சிறிய அளவில் யூத இனத்தவர் வாழ்ந்து வந்த போதும், ரசிய ஆக்கரமிப்புக்குப் பின்னர் 1979 இல் நாட்டைவிட்டு வெளியேறினர். ஒரு தனி நபரான 'சப்லோன் சிமின்டோவ்' மீதமாக அந்நாட்டில் உள்ளார்.

பெரிய நகரங்கள்

[தொகு]

ஒரு மில்லியனுக்கு அதிகமான சனத்தொகை உள்ள ஒரே நகரம் தலைநகரமான "காபூல்" ஆகும். ஏனைய முக்கிய நகரங்கள் சனத்தொகை ஒழுங்கில் பின்வருமாறு. கந்தகார், ஹெரத், மசார்-ஏ-ஷரீஃப், ஜலாலாபாத், கஸ்னி மற்றும் குந்துஸ் ஆகும்.

பண்பாடு

[தொகு]

ஆப்கானியர் தமது மதம், நாடு, தம்முடைய பழைமை, தம் முன்னோர்கள், இவற்றிற்கு மேல் அவர்களது சுநத்திரம் போன்றவற்றில் பெருமை கொள்கின்றனர். இந்த நாட்டு மக்களின் தனிப்பட்ட நடத்தை காரணமாகவே வெளிநாட்டுச் சக்திகளால் அந்நாட்டைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவதில்லை.

ஆப்கானித்தான் குழப்பமான வரலாற்றை உடைய ஒருநாடு. அதன் வரலாறு, தற்போது அங்குள்ள கலாச்சாரங்கள், அல்லது பல்வேறு வடிவிலுள்ள மொழிகள் மற்றும் நினைவுச் சின்னங்களில்தான் எஞ்சி உள்ளது. ஆனால், நாட்டின் பெருமளவிலான நினைவுச் சின்னங்கள் இங்கு நடந்த போர்களினால் அழிந்துபோயின; பாமியான் மாகாணத்தில் இருந்த உலகப் புகழ்பெற்ற இரு புத்தர் சிலைகள் தாலிபான்களால் அழிக்கப்பட்டன. கந்தகார், ஹீரத், கஸ்னி போன்ற நகரங்களில் கலாச்சாரச் சுவடுகளைக் காணலாம். 'முகம்மது நபி' அவர்களால் அணியப்பட்ட மேலாடை ஒன்று, இன்றும் கந்தகார் நகரில் உள்ள "கால்கா ஷரிஃபா"வில் உள்ளதாக நம்பப்படுகின்றது. இதைவிட ஹரி ருட் பள்ளத்தாக்கில் உள்ள "மின்னரட் ஒப் ஜாம்" யுனெஸ்கோவினால், உலகின் முக்கிய கலாச்சார இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானியர், பெரும்பகுதியினர் குதிரை ஓட்டிகள்; இந்த நாட்டின் தேசிய விளையாட்டு புஸ்காசி, இது ஒரு வகையில் போலோ விளையாட்டை ஒத்ததாகும். ஆனால், பந்துக்குப் பதிலாக ஓர் இறந்த ஆட்டின் உடலை வைத்து விளையாடுவர்.

கல்வியறிவு வீதம் மிகக் குறைவாக இருந்தபோதும், பாரசீக கவிதைகள் நாட்டின் கலாச்சாரத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. கவிதையானது, ஈரானிலும் ஆப்கானித்தானிலும் கல்வியின் தூண்களாக இருந்துள்ளது. பாரசீகத்தின் கலாச்சாரங்களின் தாக்கம் இன்றும் ஆப்கானில் தொடர்வதை அவதானிக்கலாம். “முஸ்ரா எரா” என்ற பெயரில் அழைக்கப்படும் கவிதைப்போட்டி நாட்டில் மிகச் சாதாரணமாக நடைபெறுவதாகும். கிட்டத்தட்ட வீடுகள் எல்லாவற்றிலும், தம் வீட்டில் உள்ளோர் வாசிக்காவிட்டாலும் ஏதாவது ஒரு வகையான கவிதைத் தொகுதி வீட்டில் கட்டாயம் இருக்கும்.

தாரி என்பது கிழக்கில் பேசப்படும் பாரசீக மொழியின் வித்தியாசமான ஒரு பேச்சு வழக்காகும்.

இன்றய ஆப்கானித்தான், அன்று "குராசான்" என்று அழைக்கப்பட்டது; அங்கு 10ஆம் நூற்றாண்டு தொடக்கம் 15 ஆம் நூற்றாண்டு வரை பல அறிஞர்கள் தோன்றியுள்ளனர். இவர்கள் மொழி, இயற்கை விஞ்ஞானம், மருத்துவம், சமயம், வானியல் போன்றவற்றில் தேர்ச்சி உடையவர்களாக இருந்துள்ளனர். உதாரணமாக "மெளலானா றூமி" என்பவரைக் கூறலாம். இவர் 13 ஆம் நூற்றாண்டில் பல்க் நகரில் பிறந்ததுடன் அங்கேயே கல்வி கற்றார்; பின்னர் இவர் "கோன்யா" (இன்றய துருக்கியில் உள்ள இடம்.) என்ற பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்தார். சனாயி கஸ்வானி (12ஆம் நூற்றாண்டு, பூர்வீகம் கஸ்னி மாகாணம்), ஜாம்-ஏ-ஹீரத் (15ஆம் நூற்றாண்டு, பூர்வீகம் Jam-e-Herat, மேற்கு ஆப்கானித்தான்), Nizām ud-Dīn Alī Sher Navā'ī, நிசாம்-உத்-தீன் அலி சேர் நவாஇ என்பவர் (15ம் நூற்றாண்டு, ஹீரட் மாகாணம்). இவர்களில் பெரும்பாலானோர் பாரசீகர் ஆவர். (தாஜிக்) இனத்தைச் சேர்ந்தவர்கள்; இவ்வினத்தைச் சேர்ந்தவர்களே. இவர்கள் நாட்டில் இரண்டாவது அதிகமான இனத்தவராக இருந்து வருகின்றனர். இவர்களை விட உசுதாத் பிதாப், கலிலுல்லா கலிலி, சூஃபி குலாம் நபி அஷ்காரி, ககார் ஆசே, பர்வீன் பசுவாக் போன்ற பாரசீக எழுத்தாளர்கள் (Ustad Betab, Khalilullah Khalili, Sufi Ghulam Nabi Ashqari, Qahar Asey, Parwin Pazwak) ஈரான், ஆப்கானித்தான் ஆகிய இருநாடுகளிலும் ஓரளவு அறியப்பட்டவர்களாவர். 2003 இல் காலித் ஹுசைனி என்பவர் பதிப்பித்த புத்தகம் ஒன்று 1930 இல் இருந்து இன்றய தினம்வரையான, ஆப்கானித்தானில் நடந்த வரலாற்று, அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

கவிஞர்கள், எழுத்தாளர்களைவிடப் பல பாரசீக விஞ்ஞானிகளின் பூர்வீகம் பாரசீகமாக இருந்துள்ளது. இவர்களுள் குறிப்பிடத்தக்கவரான "அவிசென்னா" என மேலை நாடுகளில் அறியப்பட்ட அபு அலி ஹூசைன் இப்னு சினா பல்க் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இப்னு சினா, இஸ்பகானில் மருத்துவக் கல்லூரி அமைத்தவரும், இன்றைய நவீன மருத்துவத்தின் தந்தையரில் ஒருவருமானவர். தற்போது பிரபலமான ஆங்கிலப் புத்தகங்களான Noah Gordon இன் The Physician இல் கூட இவர் பற்றிய தகவல்களைக் காணலாம். இந்தப் புத்தகம் இப்போது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றும் முன்னர் அந்த நகரில் பல இசையறிஞர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பாரம்பரிய இசையிலும், நவீன இசையிலும் தேர்ந்து விளங்கினர்.

பழங்குடியினரின் முறைப்படி, ஆண்கள் அவர்களது இனத் தலைவருக்கு மிகவும் கட்டுப்பட்டவர்களாக உள்ளனர். தலைவர் கோரினால் ஆயுதமேந்த வேண்டிய கடப்பாடும் அவர்களுக்கு இருக்கின்றது.

உட்கட்டுமானம்

[தொகு]

தொடர்பாடலும், தொழில் நுட்பமும்

[தொகு]

ஆப்கானித்தான் தொடர்பாடற் துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றது. இணையம், வானொலி, தொலைக்காட்சிச் சேவைகள் என்பன விரிவடைந்து வருகின்றன. ஆப்கானித்தானின் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களான ஆப்கான் வயர்லெஸ், றோசான், அறீபா போன்றன செல்லிடத் தொலைபேசிப் பாவனையை அதிகளவில் அதிகரிக்கச் செய்துள்ளன. 2006 இல் ஆப்கானித்தானிய அரசு ZTE என்ற நிறுவனத்துடன் 64.5 அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தைச் செய்ததன் மூலம், நாடுமுழுவதும் பரந்துபட்டதான ஒளியிழைத் தொடர்பாடல் வலையமைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

  • ஆப்கானித்தானிய உள்நாட்டுத் தொலைக்காட்சிச் சேவைகள்.
    • ஐனா டிவி
    • அரியானா டிவி
    • அரியானா ஆப்கானித்தான் டிவி
    • லாமர் டிவி
    • ஷாம்ஷாட் டிவி
    • டோலோ டிவி

போக்குவரத்து

[தொகு]

ஆப்கானின் வர்த்தக நோக்கிலான விமான சேவை நிறுவனமான 'அரியானா ஆப்கான் எயார் லைன்ஸ்' இப்போது லண்டன் ஹீத்ரோவ், பிராங்புர்ட், மட்ரிட், ரோம், துபாய் மற்றும் இஸ்தான்புல் ஆகிய நகரங்களுக்குச் சேவைகளை வழங்குகின்றது. இது காபூல் மற்றும் ஹீரத் ஆகிய நகரங்களில் இருந்து நடைபெறுகின்றது. ஆப்கானித்தானில் டொயோட்டா, லேண்ட் ரோவர், பி. எம். டபிள்யு மற்றும் ஹயுண்டாய் போன்ற வாகனங்கள் பாவனைக்கு வரத் தொடங்கியுள்ளன. அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பாவி்த்த வாகனங்கள் பெருமளவில் இறக்குமதி செய்து பயன்படுத்தப்படுகின்றன. ஆப்கானித்தான் தற்கால நவீன தொழில் நுட்ப வசதிகளை அனுபவிக்காவிட்டாலும் அந்த இலக்கு நோக்கி விரைவாகப் பயனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்வி

[தொகு]

ஆப்கானித்தானின் 7000 பாடசாலைகளில் 30% விழுக்காடு பாடசாலைகள், இரண்டு பதின்ம ஆண்டுக்கால உள்நாட்டு யுத்தத்தினால் சேதமடைந்தனவாக 2003 காலப்பகுதியில் அறியப்பட்டுள்ளது. இவற்றில் அரைவாசிப் பாடசாலைகளே சுத்தமான குடிநீர் வசதி பெற்றுள்ளன. தாலிபான் காலத்தில் பெண்கள் பாடசாலைக்கு வராமல் தடுக்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆப்கானியச் சிறுவரைச் சுற்றியுள்ள யுத்தம், வறுமை போன்றவற்றின் மத்தியிலும், அவர்கள் அதில் இருந்து விரைவாக மீண்டு ஆர்வமுடன் கல்வி கற்பதாக "சேவ் த சில்ரன் நிதியம்" எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.

மார்ச் 2003 இல் ஆரம்பித்த பாடசாலைத் தவணையில் சுமார் நான்கு மில்லியன் சிறுவர்களும், சிறுமிகளும் பாடசாலைகளில் சேர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது ஆப்கானித்தான் வரலாற்றில் மிக அதிகமான தொகையாகும்.

நாட்டின் எழுத்தறிவு வீதம் 36%விழுக்காடு ஆகும்; இதில் ஆண்கள் 51% விழுக்காடும், பெண்கள் 21% விழுக்காடும் ஆகும்.

உயர்கல்வி ஆப்கானினிஸ்தானில் புதிய வடிவம் எடுத்து வளர்ந்து வருகின்றது. தாலிபான்களின் வீழ்ச்சிக்குப் பின்னர்க் "காபூல் பல்கலைக்கழகம்" மீளத் திறக்கப்பட்டதுடன் ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலரும் இங்குக் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டனர். அத்துடன 2006 இல் ஆப்கானித்தானின் "அமெரிக்கப் பல்கலைக்கழக"மும் இங்கே அதன் கதவுகளைத் திறந்துவைத்தது குறிப்பிடத்தக்கது. இப்பல்கலைக்கழகமானது ஆங்கில மொழி மூலமாக உலகத்தரம் வாய்ந்த கற்கைநெறிகளை வழங்குவதை இங்குக் குறிப்பிட வேண்டும். பல்கலைக்கழகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்கிக் கொள்கின்றது. மசார்-ஏ-ஷரீப் இல் புதிதாக அமைய உள்ளதான பல்க் பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பொறியியல் திணைக்களத்திற்காக 600 ஏக்கர் நிலத்தில் 250 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டடம் அமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. ஆப்கானி என்றும்,[3] ஆப்கானித்தானி என்றும் அழைக்கப்படுகின்றனர்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. [[[:வார்ப்புரு:Geonameslink]] Islamic Republic of Afghanistan] in [[[:வார்ப்புரு:Geonamesabout]] Geonames.org (cc-by)]
  2. "Country Profile: Afghanistan" (PDF). Library of Congress Country Studies on Afghanistan. August 2008. Archived from the original (PDF) on 8 April 2014. பார்க்கப்பட்ட நாள் 10 October 2010.
  3. Dictionary.com. The American Heritage Dictionary of the English Language, Fourth Edition. Houghton Mifflin Company, 2004. Reference.com (Retrieved 13 November 2007).
  4. Dictionary.com. WordNet 3.0. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம். Reference.com (Retrieved 13 November 2007). பரணிடப்பட்டது 28 மார்ச்சு 2014 at the வந்தவழி இயந்திரம்
  5. "Constitution of Afghanistan". 2004. Archived from the original on 20 September 2016. பார்க்கப்பட்ட நாள் 16 February 2013. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. Afghan | meaning in the Cambridge English Dictionary. the Cambridge English Dictionary. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107660151.
  7. Central Statistics Office Afghanistan
  8. Central Statistics Office Afghanistan, 2020.
  9. 9.0 9.1 9.2 9.3 "Afghanistan". International Monetary Fund. பார்க்கப்பட்ட நாள் 14 November 2018.
  10. "Gini Index". World Bank. Archived from the original on 11 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2 March 2011.
  11. Human Development Report 2020 The Next Frontier: Human Development and the Anthropocene (PDF). United Nations Development Programme. 15 December 2020. pp. 343–346. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-1-126442-5. பார்க்கப்பட்ட நாள் 16 December 2020.
  12. These pronunciations involve assimilation, wherein /f/ becomes its assimilated allophone [v] before a voiced consonant.
  13. Dalrymple, William (9 March 2014). "Is Afghanistan really impossible to conquer?". BBC News. https://www.bbc.co.uk/news/magazine-26483320. 
  14. "Afghanistan: Most invaded, yet unconquerable". Times of India.
  15. Akhilesh Pillalamarri. "Why Is Afghanistan the 'Graveyard of Empires'?". The Diplomat.
  16. Griffin, Luke (14 January 2002). "The Pre-Islamic Period". Afghanistan Country Study. Illinois Institute of Technology. Archived from the original on 3 November 2001. பார்க்கப்பட்ட நாள் 14 October 2010.
  17. "The name Afghan has evidently been derived from Asvakan, the Assakenoi of Arrian... " (Megasthenes and Arrian, p 180. See also: Alexander's Invasion of India, p 38; J.W. McCrindle).
  18. "Even the name Afghan is Aryan being derived from Asvakayana, an important clan of the Asvakas or horsemen who must have derived this title from their handling of celebrated breeds of horses" (See: Imprints of Indian Thought and Culture abroad, p 124, Vivekananda Kendra Prakashan).
  19. cf: "Their name (Afghan) means "cavalier" being derived from the சமசுகிருதம், Asva, or Asvaka, a horse, and shows that their country must have been noted in ancient times, as it is at the present day, for its superior breed of horses. Asvaka was an important tribe settled north to Kabul river, which offered a gallant resistance but ineffectual resistance to the arms of Alexander "(Ref: Scottish Geographical Magazine, 1999, p 275, Royal Scottish Geographical Society).
  20. "Afghans are Assakani of the Greeks; this word being the சமசுகிருதம் Ashvaka meaning 'horsemen' " (Ref: Sva, 1915, p 113, Christopher Molesworth Birdwood).
  21. Cf: "The name represents Sanskrit Asvaka in the sense of a cavalier, and this reappears scarcely modified in the Assakani or Assakeni of the historians of the expedition of Alexander" (Hobson-Jobson: A Glossary of Colloquial ஆங்கிலோ இந்தியர்கள் words and phrases, and of kindred terms, etymological..by Henry Yule, AD Burnell).
  22. Majumdar, Ramesh Chandra (1977) [1952]. Ancient India (Reprinted ed.). Motilal Banarsidass. p. 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-12080-436-4.
  23. Ch. M. Kieffer (15 December 1983). "Afghan". Encyclopædia Iranica (online). Columbia University. 
  24. Vogelsang, Willem (2002). The Afghans. Wiley Blackwell. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-19841-5. Archived from the original on 9 July 2019. பார்க்கப்பட்ட நாள் 6 July 2019.
  25. Nölle-Karimi, Christine (2020). "Afghanistan until 1747". இசுலாமியக் கலைக்களஞ்சியம், 3-ஆம் பதிப்பு.

வெளி இணைப்புகள்

[தொகு]

அதிகாரபூர்வ அரசு இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்கானித்தான்&oldid=4055590" இலிருந்து மீள்விக்கப்பட்டது