மராத்திய கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மராத்திய கூட்டமைப்பு (Maratha confederacy), சிவாஜியின் மறைவிற்குப் பின்னர், முகலாயர்களின் தொடர் தாக்குதல்களால் மராத்தியப் பேரரசு சீர்குலைந்தது. 1707ல் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் மறைவுக்குப் பின்னர், மராத்தியப் பேரரசை மீண்டும் நிலை நிறுத்துவதற்காக பேஷ்வாக்களின் ஆலோசனையின் படி, சிவாஜியின் பேரன் சத்திரபதி சாகுஜியின் தலைமையில், மராத்தியப் படைத் தலைவர்கள் கொண்ட மராத்தியக் கூட்டமைப்பை பேஷ்வா பாஜிராவ் உருவாக்கினார்.[1]

முன்னர் சத்திரபதி சாகுஜி, தனது பேரரசை வழிநடத்திச் செல்ல தகுதியான பிரதம அமைச்சர் எனும் பேஷ்வா தலைமையில் அமைச்சரவையும், பேஷ்வாவுக்கு அடங்கி நடக்கும் படைத்தலைவர்களையும் நியமித்து, அவர்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்கியிருந்தார்.

1749ல் சாகுஜியின் மறைவிற்குப் பின்னர் மராத்தியப் பேரரசின் அனைத்து அதிகாரங்களும் பேஷ்வாக்களிடம்[2] வந்தது. மராத்தியப் பேரரசர்கள் பொம்மைகளாக இருந்தனர். மராத்தியப் படைத்தலைவர்களான ஓல்கர்கள், கெயிக்வாட்டுகள், சிந்தியாக்கள் மற்றும் போன்சலேக்கள் போன்ற மராத்திய அரச குலங்கள், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியா, கிழக்கு இந்தியா மற்றும் மேற்கு இந்தியப் பகுதிகளை கைப்பற்றினர். மராத்தியக் கூட்டமைப்பின் எல்லைகள் மேற்கே பஞ்சாப் முதல் கிழக்கே மேற்கு வங்காளம் வரையும், வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே ஆற்காடு வரை விரிவு படுத்தினர்.

1761ல் மூன்றாம் பானிபட் போரில், ஆப்கானிய மன்னர் அகமது ஷா துரானியின் படைகளுடன், மராத்திய கூட்டமைப்பு படைகள் மோதின. மராத்திய கூட்டமைப்பு படைகள் போரில் அதிர்ச்சி தோல்வி கண்டது.

பின்னர் 1772ல் மராத்தியக் கூட்டமப்பின் பேஷ்வா முதலாம் மாதவராவின் மறைவிற்குப் பின்னர், மராத்தியக் கூட்டமைப்பு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, பேஷ்வாவால் நியமிக்கப்பட்ட மராத்தியப் படைத்தலைவர்களின் வம்சத்தினர் ஆண்டனர். அவர்கள் முறையே: பரோடா பகுதிகளை கெயிக்வாட் மராத்திய வம்சத்தவர்களும், குவாலியர் பகுதிகளை ஹோல்கர் வம்சத்தவர்களும், இந்தூர் பகுதிகளை சிந்தியா வம்ச மராத்தியர்களும் ஆண்டனர். மராத்திய போன்சலே வம்சத்தினர் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மராத்திய அரசு, தற்கால மகாராட்டிராவில் உள்ள நாக்பூர் அரசு, சதாரா அரசு மற்றும் அக்கல்கோட் அரசு போன்ற 28 இராச்சியங்களை ஆண்டனர்.

இவர்கள் தங்களுக்குள் பிணக்குகள் கொண்டிருந்தாலும், தொடர்ந்து போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி மற்றும் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்களுக்கு எதிராக 1775 முதல் 1818 முடிய போரிட்டனர்.

1802ல் ஓல்கர் வம்சத்தவர்கள் ஆண்ட குவாலியர் அரசை போரில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் கைப்பற்றினர். பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் ஆங்கிலேக் கிழக்கிந்திய கம்பெனியின் பாதுக்காப்பைக் கோரினார். எனவே 1818ல் மராத்தியக் கூட்டமைப்பு சிதைவுற்றது. [3]

பிரித்தானிய இந்தியாவில் மராத்திய கூட்டமைப்பில் இருந்த மன்னர்கள், ஆங்கிலேயர்களுக்கு ஆண்டு தோறும் கப்பம் செலுத்திக் கொண்டு தங்கள் அரசை, இராணுவப் படை இல்லாத சுதேச சமஸ்தான மன்னர்களாக ஆண்டனர். பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர், 1948ல் மராத்திய சுதேச சமஸ்தானங்கள், இந்திய அரசுடன் இணைந்தது.

மராத்திய கூட்டமைப்பில் இருந்த அரச குலங்களும், இராச்சியங்களும்[தொகு]

வம்சம் அரசு மாநிலம்
போன்சலே சதாரா, நாக்பூர், கோலாப்பூர், அக்கல்கோட், தஞ்சாவூர் மகாராட்டிரா மற்றும் தமிழ்நாடு.
கெயிக்வாட் பரோடா அரசு குஜராத்.
ஹோல்கர் இந்தூர் அரசு மத்தியப் பிரதேசம்
சிந்தியா குவாலியர் அரசு மத்தியப் பிரதேசம்
பவார் திவாஸ் & சத்தர்பூர் அரசு மத்தியப் பிரதேசம்
பவார் தார் அரசு மத்தியப் பிரதேசம்
கோர்படே முட்கல் அரசு கருநாடகம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Maratha confederacy
  2. Peshwa, MARATHA CHIEF MINISTER
  3. The Marathas

வெளி இணைப்புகள்[தொகு]