தானாஜி ஜாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தானாஜி ஜாதவ் (Dhanaji Jadhav)[1] (1650[1]–1708) முகலாய-மராத்தியப் போர்களில் (1680 – மே 1707) முகலாயர்களுக்கு எதிராக மராத்தியப் பேரரசின் சார்பில் பங்கெடுத்த படைத்தலைவர்களில் ஒருவர் ஆவார். இவர் மராத்தியப் படைத்தலைவர் சாந்தாஜி கோபர்படேவுடன் இணைந்து தக்காணத்தில் அவுரங்கசீப்ப்பின் முகலாயப் படைகளை எதிர்த்து போர் புரிந்தவர். சாந்தாஜி கோபர்படேவின் மறைவிற்குப் பின் தானாஜி ஜாதவ் மராத்தியப் படைகளின் தலைமைப் படைத்தலைவராக 1696-ஆம் ஆண்டு முதல் 1708-ஆம் ஆண்டு முடிய இறக்கும் வரை பதவி வகித்தவர்.

முகலாய-மராத்தியப் போர்கள்

பின்னணி[தொகு]

மராத்திய சத்திரியக் குடும்பத்தில், ஏறத்தாழ 1650-ஆம் ஆண்டில் பிறந்த தானாஜி ஜாதவ், பேரரசர் சிவாஜியின் தாய் ஜிஜாபாயால் வளர்க்கப்பட்டார். தானாஜி ஜாதவின் தாத்தா அக்கோல்ஜி ஜிஜாபாயின் சகோதரர் ஆவார். சாந்தாஜி கோபர்படேவின் மகன் சாம்புஜி கூட சிவாஜியுடன் ஜிஜாபாயின் வளர்ப்பில் வளர்ந்தவர்கள்.

இளமை வாழ்க்கை[தொகு]

இளமையில் தானாஜி ஜாதவ் சிவாஜியின் மராத்தியப் படையில், படைத்தலைவர் பிரதாபராவ் குஜார் தலைமையில் இணைந்து முகலாயர் மற்றும் தக்கானச் சுல்தான்களுக்கு எதிராகப் போரிட்டார்.[1] சிவாஜி மரணப் படுக்கையில் இருந்தபோது, மராத்தியப் பேரரசு கடுமையான சூழலில் இருந்த போது காத்த ஆறு தூண்களில் ஒருவராக தானாஜி ஜாதவின் பெயரையும் குறிப்பிட்டார். தானாஜி ஜாதவ் அவுரங்கசீப்பின் முகலாயப் படைகளுக்கு எதிராக 27 சன்டைகளில் பங்கெடுத்தார்.

பிந்தைய வாழ்க்கை மற்றும் இறப்பு[தொகு]

நவம்பர் 1703-ஆம் ஆண்டில் அவுரங்கசீப் தானாஜி ஜாதவின் மகன் கம்பக்ஸ் மூலம் தானாஜி ஜாதவிடம் பேசி, சிவாஜியின் பேரன் சாகுஜியை ஒப்படைக்க முயன்றார். மராத்தியப் பேரரசு விதித்த நிபந்தனைகளால், தானாஜி ஜாதவ் அவுரங்கசீப்பின் கோரிக்கையை ஏற்கவில்லை. 1705-ஆம் ஆண்டில் 40,000 மராத்தியப் படைகளுடன் தானாஜி ஜாதவ் சூரத், பரூச் மற்றும் குஜராத் பகுதிகளை சூறையாடினார். மேலும் பரோடாவின் நவாப் நசர் அலி தலைமையிலான முகலாயப்ப் படைகளை ரத்தன்பூரில் வென்று பரோடாவின் பெரும் கருவூலங்களை மகாராட்டிராவிற்கு கொண்டு வந்தார்.

1708-ஆம் ஆண்டில் தானாஜி ஜாதவ்வின் கணக்காளராக இருந்த பாலாஜி விஸ்வநாத் 1713-ஆம் ஆண்டில் மராத்திய பேஷ்வா ஆக பதவி உயர்வு பெற்றார்.[2]எனவே தானாஜி ஜாதவ், தாராபாய்யை விட்டு வெளியேறி, சத்திரபதி சாகுஜியுடன் இணைந்து கொண்டார். காலில் ஏற்பட்ட ஆறாத காயம் காரணமாக தானாஜி ஜாதவ் கோலாப்பூரில் மறைந்த பிறகு, அவரது மகன் சந்திரசென் ஜாதவ் ராவ், தானாஜி ஜாதவின் பணியிடத்தில் படைத்தலைவராக பொறுப்பு ஏற்றார்.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தானாஜி_ஜாதவ்&oldid=3383605" இருந்து மீள்விக்கப்பட்டது