உள்ளடக்கத்துக்குச் செல்

கனோஜி ஆங்கரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனோஜி ஆங்கரே
பிறப்பு1669
இறப்பு1729 சூலை 4
சார்புமராத்திய கடற்படை
சேவைக்காலம்1698–1729
தரம்தளபதி
கட்டளைகடற்படைத் தளபதி

கனோஜி ஆங்கரே(Kanhoji Angre or Conajee Angria or Sarkhel Angre ; மராத்தி: कान्होजी आंग्रे,ஆகஸ்ட் 1669 – 4 ஜூலை 1729) 18 ஆம் நூற்றாண்டில் மராத்திய பேரரசின் கப்பற் படைத் தளபதியாகப் பதவி வகித்தார். இவர் பின்னாளில் மராத்தியக் கப்பற் படைத் தலைமைத் தளபதியாகப் பதவி வகித்ததால் 'சார்க்கெல் ஆங்கரே' (Sarkhel Angre) என்றும் அழைக்கப்பட்டார். இந்திய விடுதலைக்காக, காலனி ஆதிக்கத்தை எதிர்த்து இறுதி வரைப் போராடி, அவர்களுக்குப் பல சேதங்களை ஏற்படுத்தி, பாரதத்திற்கு வெற்றிகள் பல தேடித் தந்த தலைசிறந்த மாவீரர்.[1]

இளமை

[தொகு]

கனோஜி ஆங்கரே மராத்திய மாநிலத்தில் தெற்குக் கடற்கரைப் பிரதேசத்தின் கொங்கணப் பகுதியிலுள்ள ரத்னகிரி மாவட்டத்தின் கர்னே (Harne) என்ற கிராமத்தில் 1669 ஆம் ஆண்டு ஆகஸ்டில் பிறந்தார். இவர் குடும்பத்தினர் கொங்கன் பிரதேசத்திலுள்ள வீர ராணா சன்க் என்ற சிறிய மாகாணத்தைப் பொறுப்பேற்று ஆட்சி செய்து வந்ததால், இவர்கள் 'சங்கபால் குடும்பத்தினர்'(Sankapal) (தற்சமயம் Bhilare குடும்பம்) என்றழைக்கப்பட்டனர். இவர் தாயின் பெயர் அம்பா பாய். தந்தை துகோஜி. இவர்களுக்கு வெகு நாட்களாக பிள்ளைகளில்லாமலிருந்து 'கனிபா நாத்' என்ற தெய்வத்திடம் அம்பா பாய், "உங்கள் எரிக்கப்பட்ட புனித மரச் சாம்பலின் (Angara) மகிமையால் நான் தாய்மையடைந்தால், அந்தக் குழந்தைக்கு ஆங்கரே (Angare) எனப் பெயரிடுகிறேன் என்று வேண்டிக்கொண்டார். எனவே இவருக்குக் கனோஜி ஆங்கரே எனப் பெயரிடப்பட்டது. ஆங்கரேயின் தந்தை, மராட்டியப் பேரரசர் சத்ரபதி சிவாஜியின் தளபதிகளில் ஒருவராக இருந்தார். இதனால் கனோஜி ஆங்கரே குழந்தைப் பருவத்தை 'சுவர்ண துர்க்கைக்' கோட்டையிலேயே கழித்தார். இவர் தன் இளமைப் பருவத்திலேயே கடலில் சில வீரச் செயல்களில் ஈடுபட்டார். கனோஜி பிரித்தானிய கிழக்கு இந்தியக் கம்பெனியின் வணிகக் கப்பல்களைத் தாக்கிப் புகழ்பெற்றார்.

கப்பல் படைத் தளபதி

[தொகு]

இவர் ஆரம்பத்தில் சதாராவை ஆண்ட தலைவரால் 1698 ல் அறிவில் சிறந்த கப்பல் படை ஆலோசகராக (Darya - Saranga) நியமிக்கப்பட்டார்.'தார்ய ஸாரங்கா' என்ற பட்டப் பெயருடன் கனோஜ் ஆங்கரே மகாராஷ்டிரா கடற்படையின் தலைவராக ராணி தாராபாயின் ஸார்கேலாக பதவி ஏற்கிறார்.[சான்று தேவை] ஜலதீபம்-வரலாற்று நிகழ்ச்சிகளின் கால குறிப்பு-சாண்டில்யன்-வானதி பதிப்பகம் - 17 ஆம் பதிப்பு பிப்ரவரி 2009<\ref> இந்த அதிகாரத்தினால், மும்பையிலிருந்து வின்கோரியா (Vingoria, இப்பொழுது Vengurla) வரையுள்ள மேற்கு கடற்கரை சார்ந்த பகுதிக்கு தலைவராக விளங்கினார். 1700களில் மராத்திய சிம்மாசனத்திற்கு வாரிசுரிமைப் போட்டிகள் ஏற்பட்டன. சிவாஜிக்கு போட்டியாக தாராபாய் என்பவரும் மராத்திய சிம்மாசனத்திற்கு உரிமை கோரினார். அவருக்கு ஆதரவாக ஆங்கரே செயல்பட்டார். இச்சமயத்தில் சிவாஜி மராத்திய சாம்ராஜ்யத்தின் தலைமைக்கு உயர்ந்தபோது, பாலாஜி விஸ்வநாத் பட் என்பவரைத் தளபதியாக (Senakarta) நியமித்து அவர் மூலமாக 1707 ல் ஆங்கரேயிடம் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டார். இது மராத்திய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்திற்குப் போட்டியாகப் போராடி வரும் தாராபாய்க்கு ஆதரவாக இருந்துவரும் ஆங்கரேயைச் சமாளிக்கத் தேவைப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, ஆங்கரே மராத்திய கப்பற் படையின் தலைமைத் தளபதியாக்கப்பட்டார். மொகலாயச் சக்கரவர்த்தி ஔரங்கசீப்பின் தக்காணப்பிரதேசப் படையெடுப்பின் போதும் மராத்தியர்களுடனான முரண்பாடுகளின் போதும் கனோஜி ஆங்கரே முக்கியப் பங்காற்றினார்.

படைத் தளங்கள்

[தொகு]
  1. இவர் 1698-ல் மும்பையிலிருந்து 425 கி.மீ தொலைவிலுள்ள விஜயதுர்க்கையின் மராத்தியக் கோட்டையில் (Victory Fort) (முன்னாளில் Gheriah) தன் முதல் கடற்படைத் தளத்தை அமைத்தார். இந்தக் கோட்டை மராத்திய அரசர் சிவாஜியால் கடற்கரையை ஒட்டிக் கட்டப்பட்டது. கடலிலிருந்தபடியே கப்பல் நுழைந்து நிறுத்தும்படி இக்கோட்டைக்குள் வாசல் அமைக்கப்பட்டது.
  1. மும்பை கடற்கரையிலிருந்து தள்ளியுள்ள ஒருங்கிணைக்கப்பட்ட கந்தேரி (Kandheri - Underi) உந்தேரி தீவுகளில் இன்னொரு படைத் தளம் அமைத்து, துறைமுகத்திற்கு வரும் வணிகக் கப்பல்களுக்கு வரி வசூலிக்கப்பட்டது.[2]
  1. அந்தமான் தீவுகளில் படைத்தளம் அமைத்து, அவைகளை இந்தியாவுடன் இணைத்தார்.
  1. ஆங்க்ரே 17 ஆம் நூற்றாண்டு இறுதியில் அலிபாக் (Alibagh) என்ற நகரத்தை நிர்மாணித்தார். இவர் சொந்த நாணயமாக அலிபாகி ருபையா (Alibagi Rupaiya) என்ற வெள்ளிக் காசுகளை வெளியிட்டார்.

வெற்றிகள்

[தொகு]

கனோஜி ஆங்கரே 1702 லிருந்து 1723 வரை பிரிட்டிஷாரிடமும், போர்ச்சுகீசியரிடமும் பல முறை போர் செய்து கப்பல்கள், கோட்டைகள், தீவுகளையும் கைப்பற்றினார். இவர் மராத்திய கப்பற்படையின் மிக முக்கிய தலைமைத் தளபதியாக இருந்து, ஆங்கிலக் காலனி ஆதிக்கத்தினர்க்கு பல இழப்புகளை ஏற்படுத்தினார்.

இவரால் நாசப்படுத்தப்பட்ட பிரித்தானியா மற்றும் பிற நாட்டுக் கப்பற்படைத் தலைவர்கள், இவர் முறையாக மராத்தியக் கப்பற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டவர் என்பதை அறியாமல், இவரை 'கடற் கொள்ளைக்காரன்' என அறிவித்தார்கள். சட்ட வல்லுனர் வில்லியம் ஹால்(William Hall) என்பவர், 'ஆங்கரே மராத்தியக் கப்பல் படைத் தளபதியாக முறையாக நியமிக்கப்பட்டவர், கடற் கொள்ளைக்காரன் அல்ல ' என்பதை உறுதி செய்கிறார்.

கனோஜி ஆங்கரே தீர்க்க தரிசனத்துடன் நீலக் கடல் படை(Blue Water Navy) என்று நிறுவி, பகைவர்களை கடற்கரையை நெருங்க விடாமல் தடுத்தார். அவருக்கு உதவியாக ஒரு நேரத்தில் சில ஐரோப்பியர்களையும் தன் படையில் சேர்த்திருந்தார். ஒரு டச்சுக்காரரை தன் தளபதியாகவும் ஆக்கியிருந்தார்.[3] இவர் தன் செல்வாக்கின் உச்ச கட்டத்தில் இருந்தபோது நூற்றுக்கணக்கான போர்க்கப்பல்களை நிர்வகித்து வந்தார்.

இறுதிக் காலம்

[தொகு]

பிரித்தானிய கப்பற் படையால் மராத்திய கப்பற் படையை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆங்க்ரே 1729 ஜூலை 4 ஆம் தேதி இறந்த தருணத்தில், அரபிக் கடலின் சூரத்திலிருந்து தெற்கு கொங்கன் வரை அவர் ஆதிக்கத்திலிருந்தது. ஆங்கரேயைப் பணிய வைக்கும் முயற்சியில், பிரித்தானிய மற்றும் டச்சுக்காரர்களால் ஆங்கரேயின் ஆயுட் காலம் வரை வெற்றிபெற முடியவில்லை.[4] அவரது கல்லறை ஞாபகச் சின்னமாக மகாராஷ்ட்ராவின் அலிபாக் நகரில் இருக்கிறது.

சிறப்புகள்

[தொகு]
கனோஜி ஆங்கரேயின் சமாதி, அலிபாக், மகாராஷ்டிரம்.

தெற்கு மும்பையின் கப்பல் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பழைய பம்பாய்க் கோட்டையில் (Old Bombay Castle) ஆங்கரேயின் உயரமான சிலை நிறுவப்பட்டிருக்கிறது. அங்கு கோட்டையிருந்த இடத்தில் தற்போது மேற்கு கடற்படையின் தலைமை ஆணையகம் (Indian Naval Ship Angre - INS Angre) அமைந்திருக்கிறது. இது மராத்தியத்தின் தீரமிகு கடற்படைத் தளபதிக்கு மரியாதை செய்யும் பொருட்டு, 1951 செப்டம்பர், 15 ஆம் தேதி ஐஎன்எஸ் ஆங்கரே (INS Angre) எனப் பெயரிடப்பட்டது.

1999, ஏப்ரலில் இந்திய தபால் துறை, ஆங்கரேயின் கப்பற்படை பயணம் செய்யும் கப்பல் படத்தைப் பொறித்து 3 ரூபாய் தபால் தலை வெளியிட்டது.

மும்பைத் துறைமுகத்தின் தெற்கு எல்லையாக விளங்கும் கந்தேரித்தீவிலுள்ள (Khanderi) கலங்கரை விளக்கம் (Kennery Light House) 'கனோஜி ஆங்கரே கலங்கரை விளக்கம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அலிபாக்கிலுள்ள ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & பெர்டிலைசர்ஸ் குடியிருப்பு வளாகம் 'சார்க்கெல் கனோஜி ஆங்க்ரே நகர்' எனப்படுகிறது.

1995-ல், மால்வானி ஜத்ரோத்சவம் (Malvani Jatrotsav) திருவிழாவின்போது, சார்லசு பூன் (Charles Boon) தலைமையேற்ற பிரித்தானிய கப்பற்படைக்கும், ஆங்கரேயின் கப்பற் படைக்கும் நடந்த போரினைப் போன்ற ஒத்திகை, ஒலி ஒளியுடன் முப்பரிமாணக் காட்சியாக மும்பை அணிவகுப்பினரால் 10 நாட்களுக்கு மும்பையில் நடத்திக் காட்டப்பட்டது. அதனை ஆயிரக் கணக்கான மும்பை மக்கள் கண்டு களித்தனர்.

புதினங்கள்

[தொகு]

தமிழில் சாண்டில்யன் எழுதிய ஜல தீபம், கடல் ராணி (புதினம்) என்ற வரலாற்றுப் புதினங்களில் கனோஜி ஆங்கரே ஒரு முக்கிய கதாபாத்திரமாகக் காட்டப்பட்டுள்ளார்.

உசாத்துணை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனோஜி_ஆங்கரே&oldid=4056427" இலிருந்து மீள்விக்கப்பட்டது