சாண்டில்யன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாண்டில்யன்

சாண்டில்யன்
தொழில் நாவாலாசிரியர், கட்டுரையாசிரியர்
நாடு இந்தியாவின் கொடி இந்தியர்
கல்வி செயின்ட். ஜோசப் கல்லூரி, திருச்சி
எழுதிய காலம் 1930-1987
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
கடல் புறா, யவன ராணி, மன்னன் மகள், ஜலதீபம், அவனி சுந்தரி
துணைவர்(கள்) இரங்கநாயகி

சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர் ஆவார். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

இளமைப்பருவம்[தொகு]

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

கல்லூரிப் படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார். அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.

திரைப்படத்துறையில்[தொகு]

ஹிந்துஸ்தான் டைம்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது விஜயா ஸ்டுடியோவின் பி.என்.ரெட்டி, நடிகர் சித்தூர்.வி. நாகையா இருவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பே இவர் திரைப்படத்துறையில் அடியெடுத்து வைக்க வழிவகுத்தது. சுவர்க்க சீமா (1945), என் வீடு (1953) ஆகிய இரு திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுத உதவினார். பிற்காலத்தில் தனது திரைப்படத்துறை அனுபவங்களை சினிமா வளர்ந்த கதை (1985) என்ற புத்தகமாக வெளியிட்டார். பெர்த் ஆஃப் நியூஸ்பேப்பர் என்ற ஆவணப்படமும் தயாரித்து வெளியிட்டார்.

புதினங்கள்[தொகு]

ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம்[1] புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

நாட்டுடைமை சர்ச்சை[தொகு]

2009ல் தமிழக அரசு சாண்டில்யன் உட்பட்ட 28 எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கவும் அவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கவும் முன்வந்தது. வாரிசுகளிடம் ஒப்புதல் கேட்ட போது, சுந்தர ராமசாமி மற்றும் கண்ணதாசனின் வாரிசுகள் கண்டனம் தெரிவித்தனர். சாண்டில்யனின் வாரிசுகள் நாட்டுடைமையாக்குவதற்கு மறுத்து விட்டனர்.[2]

இவரது நூல்கள்[தொகு]

சாண்டில்யனின் ௫௰௨ நூல்கள்.
 • கடல் புறா (3 பாகங்கள்)
 • யவன ராணி (2 பாகங்கள்)
 • ராஜ முத்திரை (2 பாகங்கள்)
 • விஜய மகாதேவி (3 பாகங்கள்)
 • பல்லவ திலகம்
 • விலை ராணி
 • மன்னன் மகள்
 • ராஜ திலகம்
 • ஜல தீபம் (3 பாகங்கள்)
 • கன்னி மாடம்
 • சேரன் செல்வி
 • கவர்ந்த கண்கள்
 • மலை வாசல்
 • ஜீவ பூமி
 • மஞ்சள் ஆறு
 • மூங்கில் கோட்டை
 • சித்தரஞ்சனி
 • மோகினி வனம்
 • இந்திர குமாரி
 • இளைய ராணி
 • நீள்விழி
 • நாக தீபம்
 • வசந்த காலம்
 • பாண்டியன் பவனி
 • நாகதேவி
 • நீல வல்லி
 • ராஜ யோகம்
 • மோகனச் சிலை
 • மலையரசி
 • கடல் ராணி
 • ஜலமோகினி
 • மங்கலதேவி
 • அவனி சுந்தரி
 • உதய பானு
 • ராஜ்யஸ்ரீ
 • ராஜ பேரிகை
 • நிலமங்கை
 • புரட்சிப் பெண்
 • சந்திரமதி
 • நங்கூரம்
 • ராணா ஹமீர்
 • ராணியின் கனவு
 • செண்பகத் தோட்டம்
 • மனமோகம்
 • மதுமலர்
 • அலை அரசி
 • மலை வாசல்
 • மண் மலர்
 • மாதவியின் மனம்
 • திருப்பாவை
 • கம்பன் கண்ட பெண்கள்
 • ராமானுஜர்

வெளி இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. "வானதி பதிப்பகம்". பார்த்த நாள் ஆகத்து 22, 2015.
 2. "நாட்டுடமையாக்குதலுக்கு மறுப்பு". பார்த்த நாள் ஆகத்து 22, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாண்டில்யன்&oldid=1973326" இருந்து மீள்விக்கப்பட்டது