உள்ளடக்கத்துக்குச் செல்

சாலிமார் பூங்கா, இலாகூர்

ஆள்கூறுகள்: 31°35′09″N 74°22′55″E / 31.58583°N 74.38194°E / 31.58583; 74.38194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
இலாகூரின் கோட்டையும் சாலமார் பூங்காவும்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைபண்பாடு
ஒப்பளவுi, ii, iii
உசாத்துணை171
UNESCO regionஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1981 (5th தொடர்)
ஆபத்தான நிலை2000–2012
முதல்நிலை தெற்குச் சுவர் கூடாரம்

சாலிமார் பூங்கா (Shalimar Gardens, பஞ்சாபி, உருது: شالیمار باغ‎), சிலநேரங்களில் சாலமார் பூங்கா, பாக்கித்தானின் இலாகூரில் அமைந்துள்ள ஓர் முகலாயப் பூங்காவாகும்.[1] 1641இல் கட்டிடப் பணித் துவங்கி[2] அடுத்த ஆண்டு முடிவுற்றது. இக்கட்டிடப் பணியை ஷாஜகான் அவையைச் சேர்ந்த கைலிலுல்லாகான் மேற்பார்வையிட்டார். அலி மர்தான் கானும் முல்லா அலாவுல் துனியும் அவருக்கு உதவினர். 'ஷாலிமார்' என்ற சொல்லுக்கு மர்மம் எனப் பொருள்படும்; இது அராபிய அல்லது பெர்சிய வேர்ச்சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.[3] இந்தப் பூங்கா இலாகூர் நகரத்திலிருந்து வடகிழக்கில் 5 கிமீ தொலைவில் பெரும் தலைநெடுஞ்சாலையை அடுத்து பாக்பன்புரா என்றவிடத்தில் அமைந்துள்ளது. நடு ஆசியா, காஷ்மீர், பஞ்சாப் பகுதி, ஈரான், மற்றும் தில்லி சுல்தானகங்களிடமிருந்து இப்பூங்கா அகவூக்கம் பெற்றுள்ளது.[4]

1895இல் சாலிமார் பூங்கா

வரலாறு

[தொகு]
சாலிமார் பூங்காவினுள்ளே

சாலிமார் பூங்காவிருக்குமிடம் பாக்பன்பூரா மியான் குடும்பத்து ஆரியனுக்குச் சொந்தமாயிருந்தது. பேரரசுக்கு செய்த சேவைகளுக்காக இந்தக் குடும்பத்திற்கு முகலாயப் பேரரசர் மியான் என்ற அரசப்பட்டத்தை வழங்கினார். இந்த இடத்தை பார்வையிட்ட பொறியாளர்கள் இங்குள்ள மண்ணின் வளத்தையும் அமைவிடத்தையும் கருத்தில் கொண்டு இங்கு பூங்கா அமைக்கத் திட்டமிட்டனர்; அவர்கள் கொடுத்த அழுத்தத்தினால் மியான் முகமது யூசஃப் இந்த இடத்தை பேரரசர் ஷாஜகானுக்கு வழங்கினார். இதற்கு மாறாக பேரரசர் ஷாஜகான் மியான் ஆரியன் குடும்பத்திற்கு இந்தப் பூங்காவை பராமரிக்கும் பொறுப்பினை வழங்கினார். இந்தப் பொறுப்பு இக்குடும்பத்தினரிடம் 350 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தது.

1962இல் பாக்கித்தானில் படைத்துறைச் சட்டம் செயலாக்கப்பட்டதை மியான் குடும்பத்தினர் எதிர்த்த காரணத்தால் படைத்தலைவர் அயூப் கான் சாலிமார் பூங்காவை தேசவுடமையாக்கினார்.

1958இல் அயூப் கான் தடை விதிக்கும்வரை இங்கு சிராகான் மேளா என்ற விழா கொண்டாடப்பட்டு வந்தது.

கட்டிடவியல்

[தொகு]

சாலிமார் பூங்கா நீள்சதுர இணைகர வடிவில் அமைந்துள்ளது; சுற்றிலும் நுணுக்கமான கலைவண்ணம் மிகுந்த செங்கற் சுவரால் சூழப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா சார் பாக் பூங்காவை ஒட்டிய கருத்தியலில் கட்டமைக்கப்பட்டது. வடக்கு தெற்காக 658 மீட்டர்கள் நீளமும் கிழக்கு மேற்காக 258 மீட்டர்கள் நீளமும் கொண்டது. யுனெசுக்கோவின் 1972இல் இயற்றிய உலக பண்பாட்டு, இயற்கை மரபிடங்களைப் பாதுகாக்கும் கொள்கைக்கேற்ப 1981இல் இலாகூர் கோட்டையுடன் சாலிமார் பூங்கா உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.

பூங்காவின் மூன்று நிலைத் தளங்கள்

[தொகு]

ஒன்றிலிருந்து ஒன்று 4–5 மீட்டர்கள் (13-15 அடிகள்) உயரமுடைய மூன்று நிலைகளில் தெற்கு வடக்காக அமைக்கப்பட்ட தளங்களில் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று தளங்களுக்கானப் பெயர்கள்:

பையிசு பக்‌ஷ் என்று பெயரிடப்பட்டுள்ள நடுநிலைதளப் பூங்கா
  • மேல்மாடி அல்லது மூன்றாம்நிலை தளம் ஃபாரா பக்‌ஷ் ( இன்பம் வழங்கி எனும் பொருள்படும்)
  • நடுமாடி அல்லது இரண்டாம்நிலை தளம் ஃபைசு பக்‌ஷ் (நல்லது வழங்கி எனும் பொருள்படும்)
  • கீழ்தளம் அல்லது முதல்நிலை தளம் அயத் பக்‌ஷ் ( வாழ்வு வழங்கி எனும் பொருள்படும்)

நீரூற்றுகள்

[தொகு]

அடித்தளத்திலிருந்தும் கால்வாய்களிலிருந்தும் 410 நீரூற்றுக்கள் அமைக்கப்பட்டுள்ளன; இவை பளிங்கு குளங்கில் நீரை இறைக்கின்றன. இந்த நீரமைப்பு மற்றும் வெப்பச்சலன பொறியியல் முகலாயப் பொறியாளர்களின் புத்தாக்கத் திறனுக்குச் சான்றுகளாக உள்ளன; இன்றைய அறிவியலாளர்களுக்கு இதன் நுட்பம் இன்னமும் புரிபடவில்லை. இந்த நீரூற்றுகளின் நீரோட்டத்தால் சுற்றுப்புற பகுதிகள் குளுமையாக வைத்திருக்கின்றன; 120 °F (49 °C) வரை வெப்பநிலை நிலவும் இலாகூரில் சுற்றுலாப் பயணிகளுக்கு இது மிகவும் இதமாக உள்ளது. இந்த நீரூற்றுகளின் பரவல் பின்வருமாறு உள்ளது:

  • மேல்நிலை தளத்தில் 105 நீரூற்றுகள்.
  • நடுநிலை தளத்தில் 152 நீரூற்றுகள்.
  • கீழ்நிலை தளத்தில் 153 நீரூற்றுகள்.
  • அனைத்துமாக, பூங்காவில் 410 நீரூற்றுகள் உள்ளன.

பூங்காவில் 5 நீரோடைகள் அமைக்கப்பட்டுள்ளன; இவற்றில் பெரும் பளிங்கு நீரோடையும் சாவன் பாதூன் நீரோடையும் குறிப்பிடத்தக்கன.

பூங்காவிலுள்ள கட்டிடங்கள்

[தொகு]

பூங்காவிலுள்ள கட்டிடங்கள்:

  • சாவன் பாதூன் அரங்கங்கள்
  • நகர் கானா மற்றும் அதன் கட்டிடங்கள்
  • குவாப்கா அல்லது உறங்குமறைகள்
  • அம்மாம் அல்லது அரசக் குளியல்
  • ஐவான் அல்லது பெரும் கூடம்
  • ஆராம்கர் அல்லது ஓய்வெடுக்கும் இடம்
  • பேகம் சாகிபின் குவாப்கா அல்லது பேரரசர் மனைவியின் கனவு காணுமிடம்
  • பராதரீசு அல்லது கோடை அரங்கங்கள்
  • திவான்-இ-காசு-ஒ-ஆம் அல்லது சிறப்பு கூடம் மற்றும் பொது மக்கள் அரசரைக் காணுமிடம்
  • இரு வாயில்கள் மற்றும் பூங்கா மூலைகளில் மினாரட்டு கோபுரங்கள்

காட்சிக்கூடம்

[தொகு]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Google maps. "Location of Shalimar Gardens". Google maps. பார்க்கப்பட்ட நாள் 23 September 2013. {{cite web}}: |last= has generic name (help)
  2. Shalamar Gardens Gardens of the Mughal Empire. Retrieved 20 June 2012
  3. http://tribune.com.pk/story/327000/the-meaning-of-shalimar/
  4. http://mughalgardens.org/html/shalamar.html

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலிமார்_பூங்கா,_இலாகூர்&oldid=3288944" இலிருந்து மீள்விக்கப்பட்டது