உள்ளடக்கத்துக்குச் செல்

சிக்கிமின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கிமின் நாம்ச்சியில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான 36 மீட்டர் (120 அடி) துறவியின் சிலையான பத்மசம்பவர் சிலை.

சிக்கிமின் வரலாறு என்பது, 1642 ஆம் ஆண்டில் தற்போதைய வடகிழக்கு இந்தியா மற்றும் நேபாளத்தில் பல ஆட்சியாளர்கள் இருந்த போது நிறுவப்பட்ட ஒரு இராச்சியத்தின் காலத்திலிருந்து வருகிறது. அந்த சமயத்தில் இருந்த சிக்கிமானது தனி நாடாக இருந்து வந்தது அதன் அரசர் சோக்யால் அல்லது தர்ம ராஜா என அழைக்கப்பட்டார். இந்த நாடானது 1975 மே 16 வரை மன்னரின் ஆட்சியின் கீழ் சுதந்திர நாடாக இருந்தது. சுதந்திர சிக்கிம் நாட்டின் கடைசி மன்னராக பல்டன் தொண்டூப் நம்கையால் என்பவர் இருந்தார். சிக்கிமானது பண்டைய இந்து மற்றும் திபெத்தியர்களிடையே தொடர்புகள் கொண்டு இருந்தது, அதைத் தொடர்ந்து 17 ஆம் நூற்றாண்டில் பௌத்த இராஜ்யமான சோக்யால் நிறுவப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், பிரித்தானியப் பேரரசானது திபெத்தில் வணிக வழித்தடங்களை நிறுவ முயன்றது, இது சிக்கிமை பிரித்தானியரின் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. இது 1947 இல் அது சுதந்திரம் பெறும் வரை நீடித்தது. ஆதன்பின் சிக்கிம் சுதந்திரமான நாடாக இருந்து, 1975 இல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

பழங்கால வரலாறு[தொகு]

கி. மு. 1500 இல் கிராந்தி மன்னர் யாலம்பார் நடு நேபாளத்தைக் கைப்பற்றினார். அவரது நாடு மேற்கில் திரிசுலி ஆற்றிலிருந்து கிழக்கில் டீஸ்டா ஆறுவரை விரிவுபடுத்தப்பட்டது. பழங்கால இந்து இதிகாசங்களின்படி, அருச்சுனன் முன்பு சிவபெருமான் வேட்டைக்காரனாக தோன்றியதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு சிவன் தோன்றிய இடமாக சொல்லப்படும் கீரேச்வர் கோவில் மேற்கு சிக்கிமின் லெக்சிப்பில் உள்ளது.

7 ஆம் நூற்றாண்டில், தென்குங் ஆடெக் லெப்கா பழங்குடியினரை ஒருங்கிணைத்து தன்னை பழங்குடிகளின் அரசராக அறிவித்துக்கொண்டார். இதேபோல், லிம்புவ பழங்குடியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து தலைவர்களால் அல்லது அவர்களது குடும்பங்களில் இருந்து (பழங்குடி குடியரசுக் குழு) குழுவினர் ஆண்டனர். பல இந்து நூல்களில் சிக்கிம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது, ஏனென்றால் பௌத்த துறவி குரு ரன்போச்சே அல்லது பத்மசம்பவர் 9 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியைக் கடந்து வந்ததாக கூறப்படுகிறது. புராணங்களின் படி, குரு இந்த நிலத்தை ஆசீர்வதித்து, புத்தமதத்தை சிக்கிமுக்கு அறிமுகப்படுத்தினார். திபெத்தியர்கள் சிக்கிமில் குடியேறியதையும், சிக்கிமில் முடியாட்சியை நிறுவியதைப் பற்றி பல கதைகள் நிலவுகின்றன. ஒரு பிரபலமான கதையாக 13 ஆம் நூற்றாண்டில், கிழக்கு திபெத்தில் உள்ள காம் நகரத்தில் உள்ள மாய்யாக் அரண்மனையில் இருந்த ஒரு இளவரசியான குரு டாஷி, தனது அதிர்ஷ்டத்தைத் தேட தெற்கே பயணிக்கும்படி ஒரு இரவு தெய்வீக வெளிப்பாட்டை உணர்ந்தார். அதன்படி குரு தாஸ் சும்பி பீடபூமியில் குடியேறினார். இந்த காலப்பகுதி குறித்து மக்கள் மற்றும் மொழியியல் ஆய்வுகள் நடத்தப்படவில்லை, ஆனால் இப்பகுதியில் லேப்சாஸ், லிம்பஸ், மாகர் மற்றும் சில பூட்டியா இனமக்கள் பிந்தைய காலங்களில் குடியேற்றப்பட்டதாகத் தெரிகிறது.

சிக்கிம் இராச்சியம்[தொகு]

சிக்கிம் வரைபடம்

1641 வாக்கில், லெப்சா, லிம்புகள், மாகாரர்கள் போன்ற மக்கள் வெவ்வேறு கிராமங்களில் சுயாட்சியுடன் இயங்கிவந்தனர். லிம்பு மற்றும் மாகாரா பழங்குடியினர் தொலை மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வாழ்ந்துவந்தனர். 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பூட்டியாக்கள் திபெத்தில் நிலவிய சிவப்பு தொப்பிகள் மற்றும் மஞ்சள் தொப்பிகள் இடையே நிகழ்ந்த மோதல்கள் காரணமாக சிக்கிமில் தஞ்சம் அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இங்கு குடியேறிய பூட்டியா இனக்குழுவினர், அங்கு வாழ்ந்த மக்களை சிக்கிமின் பூழ்வீக சமயத்திலிருந்து புத்த சமயத்துக்கு மாற்ற முயன்று, அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றனர். திபெத்திய லாமாக்கள் சிக்கிமில் ஒரு பௌத்த ராஜ்யத்தை நிறுவ முயன்றார், அதனால் திபெத்திய மாதிரியான லோகா அரச வம்சம் உருவானது.

பூட்டான், நேபாளப் படையெடுப்புகள்[தொகு]

1670 ஆம் ஆண்டில் புன்ட்சோங் நம்க்யாலுக்குப் பிறகு அவரது மகன், டென்சுங் நாம்யால் என்பவர் ஆட்சிக்கு வந்தார். இந்த சோக்யால் ஆட்சியில் நாடு அமைதியாக இருந்தது, நாட்டின் தலைநகரானது யூக்சோம் நகரிலிருந்து ரபெண்டெஸ் நகரத்துக்கு மாற்றப்பட்டது. அரசரின் இரண்டாவது மனைவியின் மகனான சக்டோர் நம்கியால், 1700 ஆம் ஆண்டு அரசாட்சி கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது ஒன்றுவிட்ட அக்காள் பெண்டியன்குமு, பூடானின் உதவியுடன் அவரை ஆட்சியில் இருந்து அகற்றினார். 1700 முதல் 1706 வரை சக்டோர் நாம்கால் சிக்கிமை ஆண்டுவந்தபோது, சிக்கிம் மன்னர் மூன்றாவது சோகையால் என்பவர் படையெடுத்துவந்து சிக்கிமின் பெரும்பகுதியைக் கைப்பற்றினார். இதனால் சக்டோர் நாம்கால் திபெத்தில் தஞ்சமடைந்தார். இதன் பின்னர் திபெத்தியர்கள் பூட்டானிய இராணுவத்தை வெளியேற்றி, நாம்காலை மீண்டும் சிக்கிமுக்கு அழைத்து வந்தனர். சக்டோருக்குப் பின் அவரது மகன் கியுர்மத் நம்க்யால் 1717 இல் ஆட்சிக்கு வந்தார். கியுர்மத் நம்க்யால் ஆட்சியில் நேபாளம் மற்றும் சிக்கிமுக்கு இடையே பல சண்டைகள் நடந்தன. கியுர்மத்துக்கு முறையற்றவகையில் பிறந்தவரான இரண்டாம் நன்ஜால், 1733 இல் தனது தந்தையிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினார். இவர் காலத்தில் பூட்டானியர்கள் மேற்கொண்ட தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிட்டது மேலும் நேபாளிகள் இவர்களின் தலைநகரான ரபெண்டெஸை கைப்பற்றினர் இதனால் ஆட்சியில் குழப்பம் நிலவியது.

1780 முதல் 1793 வரை டென்சிங் நம்க்யால், ஆட்சி புரிந்தார் இவர் சோக்யால்களில் பலவீனமான ஆட்சியாளராக இருந்தார், அவருடைய நாட்டின் பெரும்பான்மைப் பகுதியானது நேபாளம், சிக்கிம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டது. 1788 ஆம் ஆண்டு, நேபாள கோர்கா இராணுவம் சிக்கிம்மீது படையெடுத்தது, லிம்புவானா மற்றும் முன்னாள் தலைநகரான ரெட்டெண்ட்ஸை ஆகியவற்றை சூறையாடியது. சிக்கிம் மன்னர் இரண்டாவது முறையாக திபெத்தில் தஞ்சமடைந்தார். 1788 ஆம் ஆண்டு, திபெத்தின் 8 வது தலாய் லாமா ரெனா ஸாங்கில் சும்பி பீடபூமியில் (இன்றைய யாதோங் கவுண்டி) அவரை தங்க வைத்தார்.[1] சீனாவின் உதவியுடன் அவரது மகன் துஷ்புது நாம்யாலை 1793 ல் சிக்கிமுக்கு திரும்பினார். அவர் தன் தலைநகரை டும்லொங்கிற்கு மாற்றினார்.

பிரித்தானிய பேரரசுடன் உறவு[தொகு]

அருகில் உள்ள இந்தியாவுக்கு பிரித்தானியர் வந்தனர். நேபாளத்தின் கோர்கா இராச்சியத்தின் பொது எதிரியான பிரித்தானியரிடன் சிக்கிம் கைகோர்தது. இதனால் சிக்கிமை பழிவாங்க நேபாளப் படைகள் சிக்கிம் மீது தாக்குதல் நடத்தியது. இது ஆங்கிலேய-நேபாளப் போருக்கு தூண்டுதலாகி பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி நேபாளத்தை 1814 இல் தாக்கத் தொடங்கியது. போரின் முடிவில் பிரித்தானிய மற்றும் நேபாளத்திற்கு இடையே ஒப்பந்தமான - சூகாலி உடன்படிக்கையும், சிக்கிம் மற்றும் பிரித்தானியாவின் இந்தியா இடையே - டிலிடியா உடன்படிக்கைகள் கையெழுத்தாயின. 1817 இல் நேபாளத்தால் கைப்பற்றப்பட்ட சிக்கிமின் பகுதிகள் மீண்டும் சிக்கிமுடன் இணைக்கப்பட்டன.

இதற்கிடையில், பிரித்தானியர் திபெத்துடன் வர்த்தக உறவுகளைத் தொடங்குவதற்கு ஒரு பாதையைத் தேடிக்கொண்டிருந்தது. சிக்கிம் வழியாக பண்டைய பட்டுச் சாலையை அடையும் வழிக்கு ஏற்றதாக இருப்பதை பிரித்தானியர் கண்டனர். அச்சூழலில் திபெத்தில் வளர்ந்து வந்த உருசிய செல்வாக்கை முடக்குவதும் இந்த பாதை இணைப்புகளை நிறுவுவதற்கான இன்னொரு காரணமாக இருந்தது. 1825 இல் சிக்கிமில் தொடங்கிய உள்நாட்டுக் குழப்பத்தையடுத்து சிக்கிமைக்கு பாதுகாப்பளிக்கும் வாய்ப்பு பிரிட்டனுக்கு கிடைத்தது. இந்த உறவு மகிழ்ச்சியற்றதானது, சிக்கிமிலிருந்து பிரித்தானிய பகுதிக்கு எளிதாக குற்றவாளிகள் தப்பிச் சென்றுவிடுவதால். அதற்கு இழப்பீடாக, பிரித்தானிய அரசாங்கம் சிக்கிம் மன்னருக்கு ரூ. 1841 முதல் 3,000 வரை வழங்கியது, பின்னர் அது ரூ. 12,000 ஆக ஆனது.[2]

1849 ஆம் ஆண்டில், பிரித்தானிய டாக்டர் அர்கிபால்ட் காம்ப்பெல், பின்னர் டார்ஜிலிங் கண்காணிப்பாளரும், தாவரவியலாளருமான ஜோசப் ஹூக்கரும், சிக்கிமின் மலைகளில் பிரிட்டனின் அனுமதியுடன் சென்றனர், ஆனால் திபெத்தின் சோ சா லா பகுதிக்குள் நுழைந்தனர். அவர்கள் திபெத்தியர்களின் தூண்டுதலால் சிக்கிம் அரசாங்கத்தால் தடுத்துவைக்கப்பட்டனர், இது இமாலய இராச்சியத்திற்கு எதிராக பிரிட்டிசார் போர் நடவடிக்கையில் ஈடுபட வழிவகுத்தது.[3][2] அடுத்தடுத்த இரத்தக்களரிகள் தவிர்க்கப்பட்டாலும், பிரிட்டித்தானியர் டார்ஜீலிங் மாவட்டத்தையும் 1861 ஆம் ஆண்டில் டெரேயையும் தன்னோடு இணைத்துக்கொண்டது. அதே ஆண்டில், இதுகுறித்த தும்கொங் உடன்படிக்கை சிக்கிம் மற்றும் இடையே உண்டானது.

"பிரித்தானிய சிக்கிம்" உடன், "சுதந்திரமான சிக்கிம்" 2,500 சதுர மைல்கள் (6,500 km2) பரப்பளவில் தலைநகரத்தை மையமாகக் அதைச் சுற்றிய நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்தது.

சுதந்திர முடியாட்சி[தொகு]

சிக்கிம் தேசியக் கொடி
தக்கா நம்கியால், சிக்கிமின் சோக்யால். 1938.

பிரிட்டனிடமிருந்து 1947 இல் சிக்கிம் சுதந்திரம் அடைந்தது. அதை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் முயற்சி நடைபெற்றது. ஆனால் இந்திய ஒன்றியத்தில் சேர்வதற்கு சிக்கிம் மக்களிடையே நடந்த பொது வாக்கெடுப்பு தோல்வியுற்றது. இதன் பிறகு இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிக்கிமின் சிறப்புப் பாதுகாப்பிற்கு ஒப்புக் கொண்டார். இந்தியாவைச் சார்ந்த சுதந்திர நாடாக சிக்கிம் இருந்து. சிக்கிமின் வெளியுறவு, பாதுகாப்பு போன்றவை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1953 ஆம் ஆண்டு மாநில சபை நிறுவப்பட்டது, அது 1973 வரை நீடித்தது.

1962 ஆம் ஆண்டு, இந்தியாவும், சீன மக்கள் குடியரசும் போரில் ஈடுபட்டன. சிக்கிம் ஒரு சுதந்திரமான நாடாக இருந்தாலும் இந்திய எல்லைப் பாதுகாவலர்கள் மற்றும் சீன வீரர்களுக்கு இடையில்நாதூ லா கணவாயில் மோதல் நிகழ்ந்தது. போருக்குப் பின், இந்த பண்டைய கணவாய் மூடப்பட்டது (இது 2006 சூலை 6 இல் மீண்டும் திறக்கப்பட்டது).

பழைய மன்னர் டாஷி நாம்கால் 1963 இல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். பரம்பரையின் கடைசி மன்னரான பால்தன் தொண்டூப் நம்க்யால், 1965 இல் அரியணை ஏறினார். சிக்கிமின் சுதந்திந்திரத்தை மதித்து அதை பாதுகாத்த இந்திய பிரதமர் நேரு 1964 இல் மறைந்தார். அதன்பிறகு சிக்கிம் மன்னரின் அரியணை ஆட்டம் கண்டது. 1966 இல் இந்தியப் பிரதமரான இந்திரா காந்தி, சுதந்திர சிக்கிம் நாடு அல்லது அதன் முடியாட்சியை ஏற்றுக் கொள்வதில் பொறுத்துக்கொள்ள இயலாதவராக இருந்தார்.

1970 களின் முற்பகுதியில், முடியாட்சிக்கு எதிரான சிக்கிம் தேசிய காங்கிரசு புதிய தேர்தலையும், நேபாளிகளுக்கு அதிக பிரதிநிதித்துவத்தையும் கோரியது.

1973 ஆம் ஆண்டு, அரண்மனைக்கு முன்னால் ராயல்டி எதிர்ப்பு கலவரம் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்புக்கு இந்தியாவுக்கு முறையான வேண்டுகோள்விடப்பட்டது. சிக்கிம் நிலையற்று உள்ளதால் அதில் சீனாவின் தலையீடு நிகழ வாய்ப்புள்ளதாவும், நிலவியலில் திபெதின் ஒரு பகுதியாக சிக்கிம் உள்ளதால், அங்கு சீனாவை சிக்கிம் அழைக்க வாய்ப்புள்ளதாக இந்தியா கவலையுற்றது. இந்திய அரசாங்கம் பி. எஸ். தாஸ் என்பவரை சிக்கிமில் தலைமை நிர்வாகியாக நியமித்தது. அவர் சிக்கிமின் மன்னரிடமிருந்து நாட்டைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

மன்னர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட காசி (பிரதம மந்திரி) லென்பெப் டோரிஜி ஆகியோருக்கு இடையே பணிப்போர் துவங்கி அது சட்டமன்றத்தின் கூட்டத்தை தடுக்கும் முயற்சியை ஏற்படுத்தியது. அமைச்சரவையால் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டார், அமைச்சரவை முடியாட்சி தொடர்வதை ஒருமனதாக எதிர்த்தது.

சிக்கிமின் பிரதமர் டோரிஜி இந்திய பாராளுமன்றத்திற்கு மாநில பிரதிநிதித்துவம் வேண்டி முறையிட்டார். அப்போது இந்திய இராணுவம் தலையிட்டு சோக்யாலின் படைகளை முறியடித்துத் தலைநகர் கேங்டாக்கை தன் வசம் எடுத்துக்கொண்டது. அதைத் தொடர்ந்து 1975 ஏப்ரல் 14 அன்று சிக்கிமில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதில் பெரும்பான்மையான மக்கள் சோக்யால் அரசை மீண்டும் பதவியில் அமர்த்த விரும்பவில்லை. இதை இந்திய ஒன்றியத்துடன் இணைவதற்கானமறைமுக வாக்களிப்பாக எடுத்துக்கொள்ளப்பட்டது.[4] 1975 ஏப்ரல் 26 அன்று சிக்கிம் இந்தியாவின் 22 வது இந்திய மாநிலமாக மாறியது. 1975 மே 16 அன்று, சிக்கிம் அதிகாரப்பூர்வமாக இந்திய ஒன்றியத்தின் ஒரு மாநிலமாக மாறியது அதன் முதலமைச்சராக லீண்ட் டோர்ஜி ஆனார்.

இவ்வாறு சோழயலின் முடியாட்சி அகற்றப்பட்டு முடிவடைந்தது.1982 ஆம் ஆண்டு, பால்தன் தொண்டப்பு அமெரிக்காவில் புற்றுநோயால் இறந்தார்.

இந்திய மாநிலம்[தொகு]

1979 சட்டமன்றத் தேர்தலில் நாக பகதூர் பண்டாரி சிக்கிமின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் மீண்டும் பண்டாரி வெற்றிபெற்றார். 1994 இல், பவன் குமார் சாம்லிங் சிக்கிமின் முதல்வராக ஆனார். பின்னர் 1999, 2004, 2009, 2014 தேர்தல்களில் வென்று ஆட்சி அமைத்துள்ளார்.

சீனா சிக்கிமை இந்தியாவால் ஆக்கிரமக்கப்பட்ட ஒரு நாடாகவே கூறிவந்தது. 2000-ல் பெளத்த மதத்தின் 17வது கரம்பா எனத் தலாய் லாமாவால் அறிவிக்கப்பட்டு, சீன அரசாலும் அவ்வாறே ஏற்றுக்கொள்ளப் பட்ட டோர்ஜே திபெத்திலிருந்து தப்பித்துச் சிக்கிம் மாநிலத்தில் உள்ளரும்டெக் மடாலயத்துக்கு வந்தபோது சீனா கொந்தளித்தது.

2003-ல் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலம் என சீனா ஏற்றுக்கொண்டது. 2005 இல் நாதுலா மற்றும் செலப் லா கணவாய் ஆகிய கணவாய்களைத் திறக்க இரண்டு அரசாங்கங்களும் ஒப்புக்கொண்டன.

2011 செப்டம்பர் 18 அன்று ஏற்பட்ட6.9 நிலநடுக்கத்தில் சிக்கிம் மாநிலம், நேபாளம், பூட்டான், வங்காளம், திபெத் ஆகிய நாடுகளில் குறைந்தது 116 பேர் கொல்லப்பட்டனர். சிக்கிமில் மட்டும் 60 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர், அதில் கேங்டாக் நகரம் கணிசமான அளவு சேதமுற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "III. A Brief History of Sikkim". Journal of Qinghai Nationalities Institute III: 34. April 1978 இம் மூலத்தில் இருந்து 23 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110723043800/http://epub.cnki.net/grid2008/detail.aspx?filename=QHMS197804003&dbname=CJFQ1979. பார்த்த நாள்: 21 November 2008. 
  2. 2.0 2.1 Paget 1907.
  3. Arora 2008.
  4. வீ.பா.கணேசன் (20 திசம்பர் 2016). "சாதனைகளுக்குக் குறைவில்லாத சிக்கிம்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 29 நவம்பர் 2017.
நூல்கள்

மேலும் வாசிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கிமின்_வரலாறு&oldid=3924965" இலிருந்து மீள்விக்கப்பட்டது