உள்ளடக்கத்துக்குச் செல்

கோண்டுவானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோண்டுவானா (Gondwana, ɡɒndˈwɑːnə)[1][2]) என்பது வரலாற்றுரீதியாக பாஞ்சியாவின் தெற்குப் பகுதிக்குக் கொடுக்கப்பட்ட பெயர். 570 - 510 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இக்கண்டம் நிலவியல் ரீதியாக மூடத் தொடங்கியது. இதன் மூலம் கிழக்கு மற்றும் மேற்கு கோண்டுவானாக்கள் இணைந்தன.[3] 180 - 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா என்ற ஒரு நிலம் இரண்டாகப் பிரிந்த போது கோண்டுவானாவும் லோரேசியாவில் இருந்து பிரிந்தது.[4] லோரேசியா என்ற வடக்கு-அரைப்பகுதியின் கண்டம் மேலும் வடக்கே நகர்ந்தபோது கோண்டுவானா தெற்கே நகர ஆரம்பித்தது.

கோண்டுவானா இன்றைய ஆப்பிரிக்கா, இந்தியத் துணைக்கண்டம், ஆஸ்திரலேசியா, சீலாந்தியா, அண்டார்க்டிக்கா, மடகாசுகர், அறபுத் தீபகற்பம், தென் அமெரிக்கா, ஓசியானியா ஆகிய பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்தது.

நண்ணிலக்கடல் ஆசியாவை ஊடறுத்துச் சென்று பசிபிக் பெருங்கடலுடன் சேர்ந்திருந்தது. ஆனால் இமயமலை தொடர் அன்று கடலுக்குள் மூழ்கி இருந்தது.

ஒரு காலத்தில் புவியியல் நிலப்பகுதி 7 கண்டங்களாக இருந்ததாக தெரிகிறது. அவை ஒன்றில் இருந்து ஒன்று தனித்து இருந்ததால் தீவுகள் எனப்பட்டன. அவை பெருநிலப் பகுதிகள் என்பதால் தீபம் என்று சொல்லப்பட்டது.

ஒவ்வொரு தீவும் தாவரத்தால் நிறைந்து ஒரு மாபெரும் சோலை போல் தோன்றியது. இதனால் பொழில் எனப்பட்டது. இதனாலேயே இந்திய நிலப்பகுதி நாவலந்தீவு என்றும், நாவலந் தண் பொழில் என்றும் அழைக்கப்பட்டது. ஒரு காலத்தில் இந்தியாவுடன் இணைந்திருந்து இந்தியப் பெருங்கடலில் மூழ்கிப் போன பெருநிலப்பகுதியை பழந்தமிழ் நூல்களும், இக்கால தமிழ் அறிஞர்களும் குமரிக்காடு அல்லது குமரிக் கண்டம் அல்லது பழம்பாண்டிநாடு என்று குறிப்பிடுகின்றனர். அதனை லெமுரியா கண்டம் என்றும், கோண்டுவானா என்றும், மேலை நாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உயிர்களின் தோற்றத்திற்குரிய மூலத்தாயகத்தை - கடலுள் சிறிதளவு மூழ்காதிருந்த மிகப் பரந்த கண்டத்தை அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டார்கள் எனலாம்.

லெமுரியா கண்டத்தில் நிலைப்பேற்றை இக்கால ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். அதை உயிர்களின் தோற்றத்திற்குரிய இடமாக ஊகம் செய்கின்றனர். அவ்விடம் தென்னிந்தியாவின் நிலப்பகுதியை ஒட்டி கடலில் இருந்தது. இவ்வாறு கூறுவதில் இருந்தும், அதனுள் அழிந்த நாகரீகம் பற்றியும் கொண்டிருந்த நம்பிக்கை வரலாற்று நிகழ்வை ஒட்டியதே அன்றி கற்பனை அன்று என உறுதியாகக் கூற முடிகின்றது. லெமுரியாவின் நிலைப்பேற்றை பல்துறை ஆய்வாளர்களும் தத்தம் ஆய்வு முடிவுகளைக் கண்டு உறுதிப்படுத்துகின்றனர். உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்போ, தோன்றும் காலத்திலோ கோண்டுவானா கண்டம் சிதைவுறத் தொடங்கியது என்கின்றனர்.

மனிதனுக்கு முன்னோடியான குரங்கு மனிதன் தோன்றிய காலத்தில் லெமுரியா அழிவு எய்தத் தொடங்கியது என்கின்றனர். ஒரு தலைசிறந்த நாகரீகமே குமரி கண்டத்தில் மூழ்கிவிட்டது என்று பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. உயிர்களின் தோற்றம், வளர்ச்சி, நாகரீகத் தொடக்கம் ஆகியன ஒரு கண்டத்தில் இருந்து தொடங்குவதை ஆய்வாளர்களின் கூற்றுக்கள் தெளிவாக உணர்த்துகின்றன.

கடலுள் மூழ்கிய கண்டத்தில் இன்றைய நாகரீகத்திற்கு இணையான நாகரீகம் செழித்திருந்தது என்று இசுக்காட்டு எலியட்டு, கார்வே போன்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உயிர் வகைகள் பெருகுவதற்கு ஏற்ற தட்பவெப்ப சூழ்நிலைகளை நிலநடுக்கோட்டுப் பகுதி சிறப்பாக பெற்றுள்ளது. உயிர் திரளில் வகை மிகுதிக்கும், செழித்த வளர்ச்சிக்கும், எண்ணிக்கைப் பெருக்கத்திற்கும் நடுக்கோட்டுப் பகுதியே தலைசிறந்து நிற்கின்றது உலகில் மிக வடக்கில் உள்ள நாடுகளில் மரங்கள் 5 அடி உயரத்தில் வளர்வது அரிதாக இருக்கின்றது. தென்னிந்தியா போன்ற நடுக்கோட்டுப்பகுதியில் 100, 120 அடி உயரமுள்ள மரங்கள் உள்ளன. இதனைக் கூட தமிழர், புல் என்றே அழைக்கின்றனர்.

அறிவியலாளர் முடிவின்படி தென்னிந்தியா, இலங்கை என்பன பெரும்பாலும் கருங்கல் பாங்காகவே இருக்கின்றன. இவற்றில் உள்ள பாறைகள் தீவண்ணப்பாறை வகையைச் சேர்ந்தவை. இதுவே முதலில் கொதிக்கிற நெருப்புக் குழம்பாக இருந்து பின் இறுகிய பாறையாகி இருக்கும் எனவே இதில் இருந்து உயிரினங்கள் தோன்றுவதற்கு முந்தைய காலம் தொட்டே., தென்னிந்தியா நிலப்பகுதியாகவே இருந்தது என்பது தெளிவாகின்றது. இதற்கு நேர்மாறாக வட இந்தியா, இமயமலைப் பகுதி மற்றும் பிற ஆசிய பகுதிகள் ஆகியவற்றில் இருக்கும் மண், பாறைகளின் இயல்பை பார்த்தால் அவை மிகவும் பிற்பட்டவை என்பதை அறியலாம்.

வடஇந்திய பகுதிகளின் நிலத்தில் எத்தகைய ஆழத்திலும் கருங்கல் நிலத்தைக்காண முடியாது. ஏனெனில் அப்பகுதி முழுமையும் உண்மையில் பல்லாயிரம் ஆண்டுகளாக சிந்து, கங்கை ஆறுகள் அடித்துக் கொணர்ந்த வண்டல் மண்ணால் ஏற்பட்டதே ஆகும். இதில் இருந்து சற்று பழமையான இமயமலை, உலக வரலாற்றின் மிகப் பிந்தைய நாள் வரையில் கடலுள் அமிழ்ந்தே இருந்தது. அதில் இன்றும் காணப்படும் கடல் சிப்பிகளும், நண்டு முதலான கடல் உயிர்களின் எலும்புக்கூடுகளும், சுவடுகளும் இந்த உண்மைக்கு சான்றாக இருக்கின்றன.

மேலும், வடஇந்திய பகுதிகளில் உள்ள நில நடுக்குகளில் செடி, கொடிவகை உயிரினங்களின் சுவடுகள் காணப்படுகிறது. அவையும் மிகப் பழைய உயிர்வகைகளாக இல்லை. இவற்றுக்கு மாறாக, தென்னிந்தியாவில் உள்ள பாறைகளின் அடிப்பகுதிகளில் உயிர் வகைக்கே இடமில்லாத கருங்கல் அல்லது நெருப்பு வண்ணக்கல் காணப்படுகிறது. அதன் மேற்பகுதிகளில் மிகப்பழைய செடி, கொடிகளின் வளர்ச்சி முறைப்படி காணப்படுகின்றன.

ஆப்பிரிக்க கண்டமும், இந்தியாவும் பெரிதும் ஒத்திருப்பதில் இருந்து லெமுரியாகண்டம் ஆப்பிரிக்காவையும், இந்தியாவையும் இணைத்திருக்க வேண்டும். கிழக்கிந்திய தீவுகளும், ஆஸ்திரேலியாவும் ஒத்திருப்பதில் இருந்து லெமுரியா கண்டம், ஆஸ்திரேலியா வலை ஒரு காலத்தில் பரந்து இருந்திருக்க வேண்டும், பசிபிக் தீவுகள் வட அமெரிக்காவவின் கலிபோர்னியா பகுதியுடன் ஒற்றுமை உடையவையாக இருப்பதால் அதனை லெமுரியா ஒரு வகையில் உள்ளடக்கி இருந்தது என்பவை விளங்கும்.

லெமுரியா கண்டத்தின் மூலமாக பெர்மியன், மயோசின் காலங்களில் இந்தியாவுடன் ஆப்பிரிக்கா இணைக்கப்பட்டிருந்தது. பலயோசாயிக் காலங்களில் ஆஸ்திரேலியாவுடன் அது இணைக்கப்பட்டிருந்தது என்று கருதப்படுகிறது.

இந்தியாவின் மேற்குக் கரையில் இருந்து ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள சீசெல்சு, மடக்காசுக்கர், மொரீசியசு வரைக்கும் இலச்சத்தீவுகள், மாலத்தீவு, சாகோசுத்தீவுகள், சாயாதேமுல்லா, ஆதசுக்கரை ஆகியவை உள்பட பல பவழத்தீவுகளும், மணல் மேடுகளும் காணப்படுகின்றன. இவற்றுள் சீசெல்சைச் சுற்றி நெடுந்தொலைவு கடல் 30 அல்லது 40 பாகம் ஆழத்திற்கு மேல் இல்லை என்றும், அதன் அடியிலுள்ள நிலம் தட்டையான, அகன்ற மணல் மேடே என்றும் டார்வின் குறிப்பிடுகின்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "gondwana". Dictionary.com. Lexico Publishing Group. பார்க்கப்பட்ட நாள் 2010-01-18.
  2. "Gondwanaland". Merriam-Webster Online Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2010-01-18.
  3. Buchan, Craig(November 7–10, 2004). "Paper No. 207-8 - Linking Subduction Initiation, Accretionary Orogenesis And Supercontinent Assembly". {{{booktitle}}}, Geological Society of America. 2010-01-18 அன்று அணுகப்பட்டது..
  4. Houseman, Greg. "Dispersal of Gondwanaland". லீட்ஸ் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 21 அக் 2008. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோண்டுவானா&oldid=4113642" இலிருந்து மீள்விக்கப்பட்டது