உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானித்தானின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆப்கானிஸ்தான் வரலாறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆப்கானித்தான் இசுலாமியக் குடியரசு நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட நடு ஆசிய நாடாகும். 1747 முதல் 1973 வரை ஆப்கானித்தான் ஒரு முடியாட்சி நாடாகவே இருந்தது; ஆயினும், சில படைத்துறை அதிகாரிகள் இந்நாட்டைக் கைப்பற்றிக் குடியரசாக அறிவித்தனர்.

கிமு

[தொகு]

ஆப்கானிஸ்தான் வரலாற்றுக்கு முந்திய காலம் தொடக்கமே முக்கியமான பிரதேசமாக உள்ளது. இற்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்கானிஸ்தானில் பல நாகரீகங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கிடைத்துள்ளது. இது ஐரோப்பா ஆசியாவின் சந்திப்பு புள்ளியாக இருந்ததுடன் பல யுத்த களங்களையும் கண்டுள்ளது. இன்று ஆப்கானிஸ்தான் என்று அறியப்படும் இப்பிரதேசம் ஆதிகாலம் முதலே பல ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. ஆரியர், (இந்தோ-ஈரானியர்கள், இந்தோ-ஆரியர்கள், மேதாக்கள், பாரசீகர் போன்றோர்), கிரேக்கர், மௌரியர்கள், குஷான்கள், ஹெப்தலைட்கள், அரேபியர், மொங்கோலியர், துருக்கி, பிருத்தானியா, சோவியத் ஒன்றியம் மற்றும் மிக அண்மைக் காலத்தில் ஐக்கிய அமெரிக்கா வரை பல ஆக்கிரமிப்புக்கு உள்ளானது.

கிமு 2000 ஆம் ஆண்டளவில் மத்திய ஆசியாவைச் சேர்ந்த பல குழுக்கள் ஆப்கானிஸ்தானினுள் குடிபெயர்ந்துள்ளனர். இவ்வாறு வந்து குடியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆரியர்களாவர். இவர்கள் இந்து – ஐரோப்பிய மொழியைப் பேசியமை குறிப்பிடத்தக்கது. இதே காலப்பகுதியில் ஆரியர்கள் பாரசீகம் மற்றும் இந்தியாவிற்குள்ளும் குடிபெயர்ந்தனர். இவர்கள் குடியேறிய பிரதேசங்கள் ஆரியானா அல்லது ஆரியர்களின் பூமி என அழைக்கப்பட்டது.

கிமு ஆறாம் நூற்றாண்டில் இந்தப் பிரதேசத்தில் பாரசீகப் பேரரசான அச்செமினிட் (Achaemenid) சாம்ராஜம் எனும் சாம்ராஜம் பலமாக இருந்தது. கிமு 300 ஆம் ஆண்டளவில் மாவீரன் அலெக்சாந்தர் இந்தப் பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொண்டான். கிமு 323 ஆம் ஆண்டில் இவரின் மரணத்திற்குப் பின்னர் செலூசிட்ஸ், பாக்ட்ரியா, அத்துடன் இந்தியாவின் மெளரியப் பேரரசு போன்ற பல பேரரசுகள் இந்தப் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தன. மெளரியப் பேரரசினால் இப்பிராந்தியத்தினுள் பௌத்த மதம் பரப்பப்பட்டது.

கிபி

[தொகு]

கிபி முதலாம் நூற்றாண்டில டோச்சானியன் குஷானாஸ் (Tocharian Kushans) போன்றோர் இப்பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். அரேபியர் இப்பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் வரை பார்த்தியன்கள், சைத்தியர்கள் மற்றும் ஹன்ஸ் போன்ற ஐரோஆசிய பழங்குடியினரும் சஸானியன் (Sassanian) போன்ற பாரசீகரும் உள்ளுர் ஆட்சியாளரான இந்து ஷாயியர் போன்றோர் இப்பிரதேசத்தை ஆட்சி செய்தனர்.

அரபு ஆட்சி

[தொகு]

ஏழாம் நூற்றாண்டில் அரபு இராச்சியங்கள் ஆப்கானிஸ்தானின் பகுதிகளை கைப்பற்றத் தொடங்கியது. அரபு சாம்ராஜ்ஜியங்கள் தமது அரசை மேற்கு ஆப்கானிஸ்தானுக்கு 652 ஆம் ஆண்டில் விரிவாக்கியதுடன் மெல்ல மெல்ல முழுப் பகுதிகளையும் 706-709 வரையான காலப்பகுதியில் ஆக்கிரமித்துக் கொண்டது. பின்னர் இப்பகுதியை என அழைத்ததுடன் பெரும்பாலான மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இப்பிரதேசத்தில் பல சாம்ராஜ்ஜியங்கள் உருப்பெற்றன. எ-கா: காஸ்னாவிட் சாம்ராஜ்ஜியம் (Ghaznavid Empire) (962-1151) என்ற பேரரசு துருக்கியைச் சேர்ந்த யாமின் உல்-தௌலா மஹ்முத் (Yamin ul-Dawlah Mahmud) என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது. மேற்கூறிய பேரரசு (கோரித் சாம்ராஜ்ஜியம் (Ghorid Empire) (1151-1219), என்ற அரசினால் வெற்றி கொள்ளப்பட்டது.

மொங்கோலிய ஆட்சி

[தொகு]

1299 ஆம் ஆண்டில் இப்பிராந்தியம் செங்கிஸ் கான் என்பவனின் கொடுங்கோல் ஆட்சிக்குட்பட்டது. இவன் மொங்கோலிய இனத்தைச் சேர்ந்தவன் ஆவான்.

பாரசீக ஆட்சி

[தொகு]

1504 ஆம் ஆண்டில் பார்பர் என்ற ஆட்சியாளனினால் காபூலை மையமாகக் கொண்டு முகலாயப் பேரரசு ஸ்தாபிக்கப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டு அளவில் பாரசீகத்தின் சஃபாவிட்ஸ் (Safavids) ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.

ஆப்கானியப் புரட்சி

[தொகு]

18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் காஸ்னாவிட் கான் நாஷர் (Ghaznavid Khan Nasher) என்பவரின் தலைமையின் கீழ் பாரசீகத்திற்கு எதிரான புரட்சி ஆப்கானிஸ்தானில் வெடித்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து பாரசீகர்கள் துரத்தப்பட்டதுடன், கிழக்கு ஈரான் பிரதேசத்தையும் 1719-1729 வரையான காலம் ஆப்கானியர்கள் ஆண்டனர். 1729 ஆம் ஆண்டில் பாரசீகத்தின் நதீர் ஷா என்பவன் ஆப்கானியரை தோற்கடித்தான். 1738 ஆம் ஆண்டில் நாதிர் ஷா கந்தகாரை வெற்றி கொள்வதுடன் அதே ஆண்டில் காபூல், லாகூர், காஸ்னி போன்ற பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொள்கின்றான்.

பின் சிந்து ஆற்றை கடந்து, கைபர் கணவாய் வழியாக வந்த நாதிர் ஷா படைகளுக்கும், தில்லி மொகலாய மன்னர் முகமது ஷாவின் படைக்கும், 1739 இல் அரியானாவின் கர்ணல் பகுதியில் நடந்த போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொகலாய படைவீரர்களை, நாதிர் ஷாவின் படை கொன்று குவித்தது. தோல்வியடைந்த முகமது ஷா, நாதிர் ஷாவுடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் விளைவாக கோஹினூர் வைரமும், விலை மதிப்பு மிக்க மயிலாசனமும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் நாதிர் ஷாவுக்கு கொடுக்கப்பட்டன. முகமது ஷாவின் மகளை, தன் மகனுக்கு திருமணம் செய்வித்தான்.[1]. 1747 ஆம் ஆண்டில் நதீர் ஷா மரணம் அடைகின்றான்.

துராணிப் பேரரசு

[தொகு]

1747 ஆம் ஆண்டில் ஆப்கான்/பஸ்தூன் ஆகியோர் கந்தகாரில் கூடி அஹமது ஷா என்பவனை மன்னனாக முடி சூட்டிவிக்கின்றனர். இவர் தனது கடைசிப் பெயரை டுரியோ (என்பது முத்துக்களின் முத்து என்று பொருள்படும்) என மாற்றிக்கொண்டான். துராணிப் பேரரசு காலத்துடனே இன்று ஆப்கானிஸ்தான் என்று அறியப்படும் பிரதேசம் உருவாகின்றது. 19 ஆம் நூற்றாண்டு அளவில் இந்தப்பிரதேசம் பல்வேறு உட்குழப்பங்களுக்கு உள்ளானது. பாரசீகர் மற்றும் சீக்கியருடனான பிரைச்சனைகள் காரணமாக சுமார் ஒரு நூற்றாண்டு மட்டுமே இந்த பேரரசு நிலைத்து இருந்தது. ஆயினும் பிருத்தானியரின் காலப்பகுதிவரை ஆப்கானின் எல்லைகள் இன்று போன்று வரையறுக்கப்பட முடியாமல் இருந்தது.

1751 ஆம் ஆண்டில் அகமது ஷா துராணி இன்றைய ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் ஈரானின் கோரசன் பிரதேசம், டெல்லி போன்ற பகுதிகளை ஆண்டு கொண்டு இருந்தான். 1772 ஆம் ஆண்டு அக்டோபரில் அகமட் ஷா, மருஃப் இல் ஓய்வு எடுத்ததுடன் அமைதியாக மரணம் அடைகின்றார். இவருக்குப் பின்னர் இவரது மகன் டைமூர் ஷா டுரானி ஆட்சிப் பொறுப்பை ஏற்கின்றான். 1776 ஆம் ஆண்டு இவன் தனது ஆட்சிக்காலத்தில் கந்தகாரில் இருந்த தலைநகரத்தை காபூலுக்கு மாற்றினான். தைமூர் 1793 ஆம் ஆண்டில் மரணம் அடைகின்றான். இவருக்குப் பின்னர் இவரது மகனான சமன் ஷா டுறானி ஆட்சியை ஏற்கின்றான்.

ஐக்கிய இராச்சிய ஆட்சி

[தொகு]

19 ஆம் நூற்றாண்டுப் பகுதியில் அங்லோ – ஆப்கானிய யுத்ததின் பின்னரும் பராக்சாய் சாம்பிராஜ்யத்தின் வளர்ச்சியின் பின்னரும் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதி பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு வசம் போயிருந்தது. 1919 ஆம் ஆண்டில் அரசர் அமனுல்லா கான் அரியணை ஏறும் வரை பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஆப்கானிஸ்தானில் பெரும் செல்வாக்குத் செலுத்தியது. இவரின் பின்னர் ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு விவகாரங்களில் பூரண சுகந்திரம் பெற்றுக்கொண்டது. இதன் போது பிருத்தானிய இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் முறுகலான உறவே நிலவியது.

சாகிர் ஷாவின் ஆட்சி

[தொகு]

ஆப்கானிஸ்தானின் நீண்ட உறுதியான காலப்பகுதி என்றால் அது 1933 தொடக்கம் 1973 வரையான அரசர் சாகிர் ஷாவின் ஆட்சிக்காலமாகும். எனினும் 1973 ஆம் ஆண்டில் சாகிர் ஷாவின் மைத்துணன் சர்தார் தாவ்த் கான் புரட்சிமூலம் பதவியைக் கைப்பற்றிக்கொள்கின்றான். ஆயினும் தாவ்த் (Daoud) கானும் அவரது மொத்த குடும்பமும் 1978 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டனர். இக்கொலை இடதுசாரிகளான ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியால் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது இக்குழுவினர் இராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்கின்றனர். இது (Great Saur Revolution) மாபெரும் சார் புரட்சி என்று அறியப்படுகின்றது.

சோவியத் ஆக்கிரமிப்பு

[தொகு]
1973 முதல் 1978 வரை கான் ஆப்கானியக் குடியரசின் அதிபராவார்.

இந்த இடது சாரி அரசும் உட்பிரைச்சனை, எதிர்ப்புகள் என்று பல்வேறு பிரைச்சனைகளை எதிர்கொண்டது. ரஸ்யா – அமெரிக்காவிற்கிடையிலான பனிப் போரில் ஆப்கானிஸ்தானும் அகப்பட்டுக்கொண்டது. 1979 ஆம் ஆண்டில் ஜிம்மி காட்டர் தலைமையிலான அமெரிக்க அரசு அவரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski உம் பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ மூலம் இடதுசாரி எதிர்ப்பாளர்களான முகாஜுதீன்களுக்கு உதவிஅளித்தது. ஆயினும் உள்ளூரில் சமவுடமையைக் காப்பாற்ற சோவியத் ரசியா ஆப்கானிஸ்தானுடன் நட்புறவு உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டுக்கொண்டது. இதன் படி சுமார் 110,000 முதல் 150,000 வரையான சோவியத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானுள் நுழைந்தன. இவர்களுக்கு சுமார் 100,000 வரையான இடதுசாரி ஆப்கானிய படைகள் ஆதரவு வழங்கின. சோவியத் படைகளின் வருகையை அடுத்து சுமார் 5 மில்லியன் ஆப்கானிய அகதிகள் பாக்கிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். 3 மில்லியனுக்கு அதிகமானோர் பாக்கிஸ்தானிலும், ஒரு மில்லியன் அளவில் ஈரானிலும் பல்வேறு நாடுகளிலும் நிரந்தரமாகத் தங்கியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பல்வேறு சர்வதேச அழுத்தங்களினாலும் சுமார் 15,000 துருப்புக்களை முகாஜுதீன்களுடனான யுத்தத்தில் இழந்ததனாலும் சோவியத் துருப்புகள் 10 ஆண்டுகளின் பின்னர் 1989 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின.

ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகள் வெளியேற்றப்பட்டது இது அமெரிக்கர்களால் பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப் பட்டதும் அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் மீதான நாட்டம் குறைந்தது. அமெரிக்கா போரினால் சிதலமான ஆப்கானிஸ்தானை சீரமைக்க உதவவில்லை. சோவியத் ரசியா தொடர்ந்து அதிபர் நஜிபுல்லாவிற்கு தமது ஆதரவை வழங்கியது, ஆயினும் 1992 ஆம் ஆண்டில் இவர் வீழ்த்தப்பட்டார். சோவியத் படைகளின் பிரசன்னம் இன்மை இந்த இடதுசாரி அரசின் வீழ்ச்சிக்கும் போராளிகள் ஆட்சியைக் கைப்பற்றவும் உறுதுணையாக இருந்தது.

பல சிறுபாண்மையினரும், புத்திஜீவிகளும் யுத்தத்தின் பின்னர் ஆப்கானிஸ்தானை விட்டுவெளியேறினர். சோவியத் வெளியேற்றத்தின் பின்னரும் முகாஜுதீன்களின் பல உட்பிரிவுகளிற்கிடையில் யுத்தங்கள் முளலாயின. இதன் உச்சக்கட்டமாக 1994 ஆம் ஆண்டில் 10,000 பொதுமக்கள் காபூலில் கொல்லப்பட்டனர். இக்காலகட்டத்தில் தலீபான் அமைபப்பு எழுச்சி பெற்றது. இவர்கள் பெரும்பாலும் ஹெல்மான்ட், கந்தகார் பிரதேசத்தைச் சோந்த பஷ்துனர்கள் ஆவார்.

தலீபான் ஆட்சி

[தொகு]

தலீபான் அரசியல் – மதம் சார் சக்தியை உருவாக்கியது. இது 1996 ஆம் ஆண்டில் காபூலை கைப்பற்றிக்கொண்டது. 2000 ஆம் ஆண்டின் முடிவில் தலீபான் நாட்டின் 95% மான நிலப்பரப்பைக் கைப்பற்றிக்கொண்டது. இதேவேளை வடக்கு முன்னணி எனும் அமைப்பு வடகிழக்கு மாகானமான படக்ஷான்இல் நிலையூன்றி இருந்தது. தலீபான் ஷரியா எனும் முஸ்லிம் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தியதுடன் பின்னர் பயங்கரவாதிகள் என்று சர்வதேச சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டனர். தலீபான் அல்-கைடா தீவிரவாதியான ஒசாமா பின் லேடன்னை பாதுகாத்தனர்.

தலீபானின் ஏழு ஆண்டு ஆட்சியில் பெரும்பாலான மக்கள் அவர்களின் சுநத்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. கடும் கட்டுப்பாடுகள் காணப்பட்டன. இதன்போது தலீபான் அதிகளவான மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டது. பெண்கள் வேலைக்குச் செல்வது தடைசெய்யப்பட்டது, பெண்கள் பாடசாலையோ, பல்கலைக்கழகமோ செல்வது தடைசெய்யப்பட்டது போன்றவையைக் குறிப்பிடலாம். இதை எதி்ர்த்தவர்கள் அடிக்கடி கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். களவு எடுததவர்களின் கைகள் வெட்டி அகற்றப் பட்டவை போன்ற கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தலீபான் ஆட்சியின் நல்ல நிகழ்வு எனும் போது 2001 ஆம் ஆண்டு அளவில் ஆப்கானின் ஓபியம் எனும் போதைப் பொருள் தயாரிப்பு முற்றாக முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது.

செப்டம்பர் 11, 2001 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா ஆப்கானில் உள்ள அல்-கைடா வலையமைப்பைத் தகர்க்க இராணுவ நடவடிக்கையை ஆப்கான் மீது நடத்தியது. தலீபானை தோற்கடிக்க வடக்கு முண்ணியுடன் அமெரிக்கா நட்புறவு பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

2001 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆப்கானின் பெரும்பாலான தலைவர்கள் ஜேர்மனியின் பொன் நகரின் கூடி ஆராய்ந்து ஒரு இடைக்கால அரசை அமைக்க இணங்கினர். இதன் போது கந்தகார் நகரைச் சோந்தவரும், பாஸ்துன் இனத்தவருமான ஹமீட் ஹர்சாய் ஆப்கானிய இடைக்கால அரசின் இக்குனராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இடைக்கால அரசு

[தொகு]
ஆப்கானித்தான் அதிபர் கர்சாய்

2002 ஆம் ஆண்டில் தேசிய ரீதியாக நடைபெற்ற லோய ஜர்கா வின் பின்னர், கர்சாய் ஏனைய பிரதிநிதிகளால் இடைக்கால – அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டார். 2003 ஆம் ஆண்டில் நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய ரீதியான தேர்தலின் மூலம் ஹமீட் கர்சாய் புதிய அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டார். செப்டம்பர் 2005 ஆம் ஆண்டில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன. 1973 ஆம் ஆண்டுக்குப்பின்னர் சுதந்திரமாகத் தெரிவுசெய்யப்பட்ட சட்டவாக்கசபை இதுவாகும். இதில் பெண்கள் வாக்களித்தமை, பெண்கள் தேர்தலில் போட்டியிட்டமை, தெரிவுசெய்யப்பட்டமை என்பன குறிப்பிடத்தக்க விடங்களாகும்.

நாடு தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகின்ற போதும் கணிசமான பல பிரைச்சனைகளை எதிர்நோக்கியுள்ளது. உதாரணமாக வறுமை, தரம் குறைந்த உட்கட்டுமான வசதிகள், மிதிவெடிகள் அதிக செறிவில் உள்ளமை, பொப்பி, ஓபியம் வியாபாரம் போன்றன. இதைவிட மிஞ்சியிருக்கும் அல்-கைடா உறுப்பினர்கள் மற்றும் தலீபான் போராளிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது. மேலும் வடக்கில் சில இராணுவத் தலைவர்கள் தொடர்ந்தும் பிரைச்சனை கொடுத்து வருகின்றனர்.

உசாத்துணை

[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. "வரலாற்றுப் பக்கங்கள் மார்ச் 22: நாதிர் ஷா டெல்லியை கைப்பற்றிய தினம்". Archived from the original on 2015-08-08. பார்க்கப்பட்ட நாள் 2015-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்கானித்தானின்_வரலாறு&oldid=4055589" இலிருந்து மீள்விக்கப்பட்டது