உள்ளடக்கத்துக்குச் செல்

பாமியான் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாமியான் மாகாணம்
بامیان
பாமியான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகள்
பாமியான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகள்
ஆப்கானிஸ்தானில் பாமியான் மாகாணத்தின் இடம்
ஆப்கானிஸ்தானில் பாமியான் மாகாணத்தின் இடம்
நாடு ஆப்கானித்தான்
தலை நகரம்பாமியான்
அரசு
 • ஆளுநர்ஹபீபா சராபி
பரப்பளவு
 • மொத்தம்14,175 km2 (5,473 sq mi)
மக்கள்தொகை
 (2013)[1]
 • மொத்தம்4,25,500
 • அடர்த்தி30/km2 (78/sq mi)
நேர வலயம்UTC+4:30
ஐஎசுஓ 3166 குறியீடுAF-BAM
முதன்மை மொழிகள்பாரசீகம்

பாமியான் மாகாணம் (Bamyan Province; பாரசீகம் بامیان‎) என்பது முப்பத்து நான்கு ஆப்கானிஸ்தானின் மாகாணங்களில் ஒன்று. இது நாட்டின் மத்தியில் உயரமான நிலப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உயர்ந்த மலைகளும் நடுத்தர அளவுமலைகளையும் கொண்டதாக உள்ளது. இந்த மாகாணம் ஆறு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் தலை நகராக பாமியான் நகரம் உள்ளது. மாகாணத்தின் மக்கள் தொகை 425,500 ஆகும்.[1] இதுவே ஆப்கானிஸ்தானின் ஹஜாராஜத் வட்டாரத்தில் பெரிய மாகாணமாகும். மேலும் இது கசாரா மக்களின் கலாச்சார தலைநகராகவும் விளங்குகிறது.

இதன் பெயர் "ஒளி வீசும் இடம்" என மொழிபெயர்க்கப்படுகிறது. பண்டைக் காலத்தில், நடு ஆப்கானிஸ்தான் பகுதி பட்டுப் பாதையின் ஒரு பகுதியாக இருந்தது. உரோமப் பேரரசு, சீனா, நடு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா ஆகியவற்றுக்கு இடையிலான பாதைகள் சந்திக்கும் இடமாக இருந்தது. பாமியான் பல நாட்டுப் பயணிகள் தங்கிச் செல்லக்கூடிய பகுதியாக இருந்தது. இங்கு கிரேக்கம் மற்றும் புத்த கலை அம்சங்கள் ஒரு தனிப்பட்ட பாரம்பரிய பாணியில், ஒருங்கிணைந்து அக்கலை கிரேக்க-புத்த கலை என்று அறியப்பட்டது.

இந்த மாகாணத்தில் பல புகழ்மிக்க வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கதாக உள்ளவை; புகழ்வாய்ந்த பாமியன் புத்தர் சிலைகள் அதைச் சுற்றி உள்ள 3,000 குகைகள், பேண்ட்-இ அமீர் தேசிய பூங்கா, தாரா-இ-அஜ்ஹடார், கோல்கோடா மற்றும் ஜாகாக் ஆகிய பண்டைய நகரங்கள், பெரோஸ் பஹார், அஸ்டோபா, கிளிகான், கஹோர்கின், காஃரின் மற்றும் சில்டுகட்டரன் போன்ற இடங்கள் ஆகும்.

வரலாறு

[தொகு]

மௌரிய பேரரசின் ஆட்சியில் பாமியான் மாகாணம்

[தொகு]

பாமியான் மாகாணம் மௌரிய பேரரசால் வெற்றி கொள்ளப்பட்டது, இவ்வெற்றி சந்திரகுப்த மௌரியரின் தலமையில் நடந்தது. மௌரியர்களால் இப்பிரதேசத்தில் இந்து சமயம் மற்றும் பவுத்த மதம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன, மேலும் அவர்கள் மத்திய ஆசியாவில் இன்னும் பல பிரதேசங்களை உள்ளூர் பாக்டிரியன் படைகளிடம் இருந்து கைப்பற்றும் நோக்கத்துடன் திட்டமிட்டு இருந்தனர். இதனால் செலியூஷியா சந்திரகுப்த மௌரியருடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு, இந்துகுஷ் மலைகளுக்கு தெற்குப் பிரதேசத்தை மௌரியர்கள் கட்டுப்பாட்டில் விடுத்து, 500 யானைகளை பரிசாக அளித்தான்.

மௌரியப் பேரரசு, அசோகர் காலத்தில்
ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தின் மெஸ் அவ்ன்க் பகுதியில் புதியதாக அகழ்வாய்வு மூலம் கண்டறியப்பட்ட பௌத்த தாது கோபத்தின் இடிபாடு. இதேபோன்ற தாது கோபங்கள் அருகிலுள்ள கஜினி மாகாணம், சமங்கன் மாகாணம் போன்ற இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன.

வடமேற்கில் தங்களை வலுப்படுத்திக் கொண்ட, சந்திரகுப்தர் நந்த பேரரசை கிழக்கு நோக்கி நகர்த்தினார். ஆப்கானிஸ்தான் நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் பண்டைய புத்த மத பாரம்பரிய மற்றும் கலை மிச்சங்கள் பரந்த அளவிலான தொல்லியல் கண்டுபிடிப்புகள் மூலம் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. வரலாற்றில் கௌதம புத்தர் (கி.மு 563 முதல் 483) தன் வாழ்நாளில் பால்க் பகுதிக்கு வரவில்லை என, தன் பதிவுகளில் கூறுகிறார் சுவான்சாங்.

இப்பிரதேசம் முன்பு அகாமனிசியப் பேரரசால் ஆளப்பட்டது. கி.மு 330 இல் பேரரசர் அலெக்சாந்தர் இப்பகுதியை வெற்றிகொண்டார், இதனால் செலூக்கிய பேரரசின் ஆட்சியின் கீழ் இப்பிரதேசம் வந்தது. இப்பிராந்தியத்தில் இந்து குஷ் மலைக்கு தெற்கிலுள்ள பகுதிகளை செலுகஸ் மௌரியப் பேரரசுக்கு விட்டுக் கொடுத்தான். மௌரியர்கள் இப்பகுதியில் பௌத்த மதத்தை அறிமுகப்படுத்தினர். இதனால் இங்கு பல பழங்கால பௌத்த பாரம்பரியக் களங்கள் உள்ளன. பாமியான் சமஸ்கிருதத்தில் வர்மயானா ("வண்ணமயமான") என அழைக்கப்பட்டது. பாமியான் நகரை நோக்கி பல பாறைகளில் புத்தர் சிலைகள் செதுக்கப்பட்டன. இதில் இரண்டு புத்தர் சிலைகள் முதன்மையானவை, தற்போது இவை பாமியன் புத்தர் சிலைகள் என அழைக்கப்படுகின்றன. இவை 55 மற்றும் 37 மீட்டர் உயரமுடையதாக உலகின் உயரமான புத்தர் சிலைகளுக்கு எடுத்துக் காட்டாக இருந்தன. இவை கி.பி 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டுகளில் செதுக்கப்பட்டவை. இவை பல ஆண்டுகளாக கலாச்சார முக்கியத்துவம்வாய்ந்த இடமாக இருந்து வந்தது. மேலும் இவை யுனெஸ்கோவால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 2001 மார்சில் இச்சிலைகள் தாலிபான்களால் சிலை வழிபாட்டார்களின் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டு, விமான எதிர்ப்பு பீரங்கி மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு தகர்க்க உத்தரவிட்டனது.

கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் காலத்திய இரு மொழிக் கல்வெட்டு (கிரேக்கம் மற்றும் அரமேயம்) அசோகர் கல்வெட்டுக்கள் காணப்படும் இடம் கந்தகார்

20 ஆம் நூற்றாண்டில் செய்த தொல்லியல் ஆய்வுகள் ஆப்கானிஸ்தானின் புவியியல் பகுதியில் கிழக்கு, மேற்கு, வடக்கு நோக்கி அதன் அண்டை நாடுகளுடன் கலாச்சாரம் மற்றும் வர்த்தகம் மூலம் நெருக்கமாக இணைக்கப்பட்டு இருந்தது என்று கூறுகிறது. பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் ஆகிய காலகட்டங்களைச் சேர்ந்த கைவினைப்பொருட்கள் ஆப்கானிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ளன.[2] கி.மு 3000 க்கு முற்பட்ட நகர நாகரீகம் பழங்கால நகரமான முண்டிகாக்கில் (காந்தகாருக்கு அருகில் நாட்டின் தெற்கில்) இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இது சிந்து சமவெளி நாகரீகத்துக்கு நெருங்கியதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[3]

பாமியான் புத்தர் சிலைகளில் ஒன்று. ஆப்கானிஸ்தானில் இசுலாம் நுழைவதற்கு முன் பௌத்தம் நாட்டில் பரவலாக இருந்தது.

கி.மு 2000 ஆம் ஆண்டிற்குப் பின்னர், மத்திய ஆசியாவில் இருந்து அரை நாடோடி மக்கள் அலையென ஆப்கானிஸ்தானின் தெற்கு நோக்கி நகரத் தொடங்கினர். அவர்களில் பலர் இந்திய-ஐரோப்பிய மொழிகள் பேசிய இந்தோ ஈரானியர்.[4] இந்த பழங்குடியினர் பிறகு, தென் இந்தியா, தற்போதைய மேற்கு ஈரான் அமைந்துள்ள பகுதிகள், மற்றும் வடக்கு காஸ்பியன் கடல் பகுதி வழியாக ஐரோப்பா போன்ற இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.[5] இந்த பிராந்தியம் முழுக்க அரினா என்று அழைக்கப்பட்டது.[4][6][7]

இந்த மக்கள் இந்தோ ஈரானிய கலாச்சாரத்தை பகிர்ந்து கொண்டனர். பண்டைய காஃபிரிஸ்தான் சமயம் இங்கு 19 ஆம் நூற்றாண்டுவரை பிழைத்திருந்தது. இன்னொரு சமயமான, சரத்துஸ்திர சமயம் தற்கால ஆப்கானிஸ்தானில் கி.மு 1800 - கி.மு 800 இடைப்பட்ட காலத்தில் தோன்றியதாகவும், இச்சமயத்தின் நிறுவனரான சரத்துஸ்தர் என்பவர் பால்க் பகுதியில் வாழ்ந்து மறைந்ததாக கருதப்படுகிறது.[8][9][10] பழங்கால கிழக்கு ஈரானிய மொழிகள் இப்பகுதியில் ஜொராஸ்டிர மதம் செல்வாக்கில் உயர்ந்திருந்த காலகட்டத்தில் பேசப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. கி.மு 6 ஆம் நூற்றாண்டின் நடுவில், அகாமனிசியப் பேரரசு இப்பகுதியின் கிழக்குப் பகுதி எல்லைக்குள் நுழைந்து கைப்பற்றியது. பாரசீக மன்னரான முதலாம் தரியு கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு கல்வெட்டில் அவர் வெற்றி கொண்ட 29 நாடுகளின் பட்டியலில் காபூல் பள்ளத்தாக்கு குறிப்பிடப்பட்டுள்ளது.[11]

7 ஆம் நூற்றாண்டில், அரேபியர்கள் முதன்முதலாக வந்தனர், இதன்பிறகு அது 9 ஆம் நூற்றாண்டில் சபாரிய மூலம் இஸ்லாமியத்தின் பெயரில் வெற்றி கொள்ளப்படுவதற்கு முன் காபூலில் ஷாஹி கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இது 13 ஆம் நூற்றாண்டில் மங்கோலிய படையெடுப்பில் அவர்கள் வசம் வந்தது. இப்பகுதி பின்னர் தைமூரிதஸ், முகலாயர்களின், இல்கனடி என்ற அர்கான் கான் போன்றோரால் ஆளப்பட்டது.

அண்மைய வரலாறு

[தொகு]

கர்சாய் நிர்வாகம் உருவான பிறகு, பாமியனை மறு நிர்மானம் செய்ய கவனம் செலுத்தப்பட்டது..

பாமியானின் புத்த நினைவுச் சின்னங்கள் உலக நினைவிடங்கள் நிதியத்தின் 100 அதிக ஆபத்தான பாரம்பரிய தளங்கள் என்று, உலக நினைவிடங்கள் கண்காணிப்பு பட்டியலில் 2008 இல் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டதால் இந்தத் தளங்கள் தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. இவற்றின் பாதுகாப்பை நீண்ட காலத்துக்கு உறுதி செய்யவும், எதிர்கால மறுசீரமைப்பு முயற்சிகள் பராமரிப்பு பணிகள் பொருட்டு தளத்தில் நம்பகத்தன்மையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. மேலும் பாமியான் அதன் இயற்கை அழகுக்காகவும் அறியப்படுகிறது.

இந்த மாகாணம் பொது மறுகட்டுமானத்திற்கு பாதுகாப்பான மாகாணங்களில் ஒன்றாக நாட்டில் கருதப்படுகிறது.[12] பாமியனில் நியூசிலாந்து அமைதி காக்கும் படை அமைதி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்க்கு பணியாற்றியது.

அரசியலும் ஆட்சியும்

[தொகு]
ஆப்கன் தேசிய காவல் துறை (ANP)

மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் ஹபீபா சரபி என்பவராவார். இவர் ஆப்கானிஸ்தானின் முதல் மற்றும், நாளதுவரை உள்ள, ஒரே பெண் ஆளுநர் ஆவார்; இவர் 2005 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.[13] மாகாணத்தின் தலை நகராக பாமியான் நகரம் உள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) மூலம் கையாளப்படுகிறது. மாகாண காவல்துறைத் தலைவர் காபூல் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ANSF) போன்றவற்றிற்க்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.

போக்குவரத்து

[தொகு]

2014 மே முதல் மாகாணத்தில் தலைநகரான பாமியானில் உள்ள பாமியன் வானூர்தி நிலையத்திலிருந்து காபூலுக்கு நேரடி விமான சேவை வழங்க திட்டமிடப்பட்டது.[14]

பொருளாதாரம்

[தொகு]
பேண்ட்-இ அமீர் தேசிய பூங்கா

வேளாண்மை

[தொகு]

பாமியன் மாகாணம் குறிப்பாக உருளைக்கிழங்கு பயிரிடுவதில் பிரபலமன பகுதியாக உள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானின் வெப்பமான பகுதியான ஜலாலாபாத்தில், குளிர்காலத்தில் உருளைக் கிழங்குகளை வளர்க்கப்படுகின்றன, பின்னர் அங்கிருந்து விதை உருளைக் கிழங்குகள் பாமியானுக்கு கொண்டுவரப்பட்டு வசந்தகாலத்தில் மறு நடவு செய்யப்படுகிறது.[15]

சுற்றுலா

[தொகு]

1979 ம் ஆண்டு சோவியத் படையெடுப்பிற்கு முன்பு மாகாணம் பல சுற்றுலா பயணிகளை ஈர்த்தது.[16] இந்த எண்ணிக்கை இப்போது கணிசமான அளவில் குறைந்துள்ளது என்றாலும்,[17] பாமியன் மாகாணமே ஆப்கானிஸ்தான் நாட்டில் முதன் முதலாக சுற்றுலா வாரியத்தை அமைத்த மாகாணமாகும். இங்கு வளரும் சுற்றுலா தொழிலில் ஒரு அம்சமாக பனிச்சறுக்கை அடிப்படையாக கொண்டது. இந்த மாகாணம் உலகின் சிறந்த சில "பாட்டி பனிச்சறுக்கு" விளையாட்டுக்கு உகந்த இடங்களில் ஒன்றாக மாகாணத்தால் கூறப்படுகிறது '[18] மேலும் 2008 ஆண்டு மாகாணத்தில் பனிச்சறுக்கு விளையாட்டை ஊக்குவிக்க $ 1.2 மில்லியன் திட்டத்தில், நியூசிலாந்து அரசாங்கம் மற்றும் சர்வதேச உதவியுடன் அகா கான் அமைப்பு (AKF) தொடங்கப்பட்டது.[16]

கல்வி

[தொகு]

பாமியன் மாகாணத்தின் ஒரே பல்கலைக்கழகமாக பாமியான் நகரத்தில் உள்ள, பாமியன் பல்கலைக்கழகம் உள்ளது. இக்கல்விக்கூடம் 1990 களின் நடுப்பகுதியில் நிறுவப்பட்டது, இது தலிபான் ஆட்சியின்போது அமெரிக்க விமானத் தாக்குதல்கள் மூலம் பெரும்பாலும் அழிக்கப்பட்டது.[19] தாலிபான்களின் வீழ்ச்சிக்குப்பின் இப் பல்கலைக்கழகம் நியூசிலாந்து மாகாண புனரமைப்பு அணிகளால் புனரமைக்கப்பட்டது.[20]

மக்கள் வகைப்பாடு

[தொகு]
ஆப்கானிஸ்தானில் இனக்குழுக்கள்

பாமியான் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 425,500.[1] இது பல்லின மக்கள் வாழும் பகுதியாக உள்ளது. கடற்படை முதுகலை பள்ளி தரவின்படி விவரம் பின்வறுமாறு, மாகாணத்தின் இனக் குழுக்கள் உள்ள விகிதம்: 67.4% கசாரா மக்கள்; 16% சதாத்; 15.7% தாஜிக்; 0.5% டாடார்; 0.2% குய்ஜிபஷ்; 0.1% பஷ்தூன் மக்கள்.[21]

படக் காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Settled Population of Bamyan province by Civil Division, Urban, Rural and Sex-2012-13" பரணிடப்பட்டது 2014-02-26 at the வந்தவழி இயந்திரம் (PDF).
  2. Library of Congress Country Studies on Afghanistan, Pre-Islamic Period, by Craig Baxter (1997).
  3. Nancy H. Dupree (1973): An Historical Guide To Afghanistan, Chapter 3 Sites in Perspective.
  4. 4.0 4.1 "Afghanistan – John Ford Shroder, University of Nebraska".
  5. Bryant, Edwin F. (2001) The quest for the origins of Vedic culture: the Indo-Aryan migration debate Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-513777-4.
  6. Afghanistan: ancient Ariana (1950), Information Bureau, p3.
  7. M. Witzel, "The Vīdẽvdaδ list obviously was composed or redacted by someone who regarded Afghanistan and the lands surrounding it as the home of all Indo-Iranians (airiia), that is of all (eastern) Iranians, with Airiianem Vaẽjah as their center." page 48, "The Home Of The Aryans", Festschrift J. Narten = Münchener Studien zur Sprachwissenschaft, Beihefte NF 19, Dettelbach: J.H. Röll 2000, 283–338.
  8. Library of Congress Country Studies on Afghanistan, Achaemenid Rule, ca. 550-331 B.C.
  9. "Chronological History of Afghanistan – the cradle of Gandharan civilisation" பரணிடப்பட்டது 2013-07-27 at Archive.today.
  10. "Afghanistan: Achaemenid dynasty rule, Ancient Classical History".
  11. Nancy H. Dupree, An Historical Guide to Kabul பரணிடப்பட்டது சூலை 27, 2011 at the வந்தவழி இயந்திரம்
  12. John Pike (2003-09-22).
  13. British Broadcasting Corporation : Putting Bamyan Back on the Map Retrieved 2009-08-18
  14. 2014 Timetable, http://flyeasthorizon.com/flight-schedule/ பரணிடப்பட்டது 2018-10-03 at the வந்தவழி இயந்திரம்
  15. Fueling Growth,health and Prosperity.
  16. 16.0 16.1 6 May 2011 Afghanistan’s Bamiyan hopes to attract skiers Dawn.com
  17. Bamyam tourism
  18. Boone, Jon (27 April 2010) Afghanistan – the new skiing destination guardian.co.uk
  19. Recknagel, Charles (2001-12-31). "Afghanistan: Dream Of Hazara University Destroyed By War (Part 2) – Radio Free Europe / Radio Liberty © 2011". Rferl.org. Retrieved 2011-02-13
  20. John Pike (2003-09-22). "Bamian". Globalsecurity.org. Retrieved 2011-02-13
  21. "Bamyan Province" (PDF).

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bamyan Province
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமியான்_மாகாணம்&oldid=3791630" இலிருந்து மீள்விக்கப்பட்டது